அன்புள்ளஜெ
தினமலர் கட்டுரையில் நாத்திக வாதம் என்பது நம் தத்துவமரபை அழித்து சடங்குகளை மட்டும் விட்டு வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள் . தமிழக சூழலில் நாத்திகவாதம் அந்தஅளவு காத்திரமாக இருந்ததாக தெரியவில்லையே . பாற்கடல் எப்ப மோர்ஆகும் . நாவில்வாழும் சரஸ்வதி எங்குடாய்லட் போவாள், என்பது போன்ற எளிய வாதங்கள் எப்படி தத்துவதேடலை அழித்திருக்கமுடியும் உண்மையான நாத்திகவாதம்இங்குஇருந்திருந்தால்அதுகுறித்து சொல்லுமாறுகேட்டுக்கொள்கிறேன்
பிச்சைக்காரன்
அன்புள்ள பிச்சைக்காரன்,
நம் தத்துவக்கல்வி நம்முடைய மதத்துடன் பின்னிப்பிணைந்திருந்தது. அதன் அழிவு எப்படி எப்போது நடந்தது என்று வரலாற்றுரீதியாகப் பார்ப்போம்
இங்கே தத்துவக்கல்வி இரு முறையில் அளிக்கப்பட்டது. ஒன்று அதற்குரிய கல்வியமைப்புகள் வழியாக. இன்னொன்று குடும்பச்சூழலில் இருந்து.
பதினெட்டாம் நூற்றாண்டுக்குப்பின் இந்திய அரசுகள் ஒவ்வொன்றாக வீழ்ச்சி அடைந்தபோது இங்கிருந்த தத்துவக்கல்விக்கான அமைப்புகள் அரச ஆதரவை இழந்தன.சைவ வைணவ மடங்களின் படிப்படியான வீழ்ச்சி ஆரம்பித்தது. பல்வேறு மதக்கல்வி அமைப்புகள், குருகுல முறைகள் பேணுவாரின்றி இல்லாமலாயின
ஆனால் அப்போதுகூட குடும்பப் பின்னணியில் இருந்து அடிப்படைத் தத்துவக் கல்விக்கான ஒரு வாய்ப்பு நமக்கு இருந்தது. கோயில்கள் அதற்கு உதவின
இரு தலைமுறைகளுக்கு முன் ஒருசைவர் சைவசித்தாந்தம் பற்றிய எளிய புரிதலை மிக இளமையிலேயே பெற்றிருப்பார். வைணவர் விசிஷ்டாத்வைதத்தை சற்றேனும் கற்றிருப்பார். நம் தந்தையருக்கு முந்தைய தலைமுறையை இதற்கு ஆதாரமாகக் காட்டலாம். அவர்களுக்கு ராமாயணமும் மகாபாரதமும் புராணங்களும் செவிவழிக் கல்வியாக வந்திருக்கும்
அத்துடன் குழந்தைப்பருவத்தில் மனனம் செய்யப்படும் பாடல்கள் தத்துவக்கல்வியில் முக்கியமான இடம் வகிக்கின்றன. சைவர்கள் திருமுறைப்பாடல்கள், சித்தர்பாடல்கள், திருமூலர் பாடல்கள் இளமையிலேயே செவிவழியாகக் கற்றிருப்பர். வைணவர்கள் பிரபந்தத்தை. அவை நெஞ்சுக்குள் என்றும் அழியாமலிருக்கும்.
அப்பாடல்கள் வாழ்க்கையின் தருணங்களில் இயல்பாக நினைவில் எழுவது ஒரு பெரிய வரம். அது அளிக்கும் தத்துவத்தெளிவை எளிதில் அடையமுடியாது. இந்தத் தலைமுறையில் அப்படி ஓர் அடிப்படை மதக்கல்வி இந்துக்களுக்கு இல்லை. கிறித்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் உள்ளது. ஏனென்றால் இங்கே எழுந்த நாத்திகப்பிரச்சாரம் என்பது முழுக்கமுழுக்க இந்துமதத்தையே குறியாக்கியது. இந்துமதத்தையே பாதித்தது.
உண்மையில் மிக இள்மையில் வளர்ப்பின் ஒரு பகுதியாகவே கிடைக்கும் இந்த கல்வியே தத்துவத்தை நோக்கிய பயணத்துக்கு மிகமிக அவசியமானது.இது தத்துவம் நோக்கிய ஒரு விருப்பத்தை , தத்துவத்தின் அடிப்படைகளை இளம் மனதில் உருவாக்கிவிடுகிறது. மனம் முதிர முதிர தத்துவம் நோக்கிய நோக்கும் கூர்மையாகிறது.
இங்கே நாத்திகம் வந்தபோது முதல் அடி விழுந்தது இந்த ஆதார மதக்கல்வியின்மீதுதான். எந்தக்குடும்பத்திலும் குழந்தைகளுக்கு இவை கற்றுத்தரப்படவில்லை. நாத்திகம் ஒரு ‘மோஸ்தராக’ முன்வைக்கப்பட்டது. வெறும் நிரூபணவாத அறிவியல் அனைத்துக்கும் அடிப்படை என்ற மூநடம்பிக்கை பரவியது.
‘என் பிள்ளைக்கு மதம் தேவையில்லை. வளர்ந்தபிறகு அவனே தேவையான மதத்துக்குள் போகட்டும்’ என்றெல்லாம் வீரப்பேச்சு பேசுபவர்களைப்பார்த்திருப்போம்
ஆனால் அவர்கள் அறியாதது என்னவென்றால் மதம் என்று மேலைநாட்டில் சொல்லும் பொருளில் இங்கே மதம் இல்லை என்பதுதான். மேலைநாட்டில் மதம் என்றால் அது ஒரு தீவிரமான நம்பிக்கை மட்டுமே. அந்த அதிதீவிர நம்பிக்கையை குழந்தையிடம் உருவாக்காமலிருக்கலாமென ஒருவர் நினைப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது
இங்கே இந்துமதம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல. அதில்தான் நம்முடைய பல்லாயிரமாண்டு மரபும் பண்பாடும் மெய்ஞானமும் சிந்தனையும் தொகுக்கப்பட்டுள்ளது. அதை துறக்கும்போது நாம் பிள்ளைகளை பண்பாட்டுப்பின்னணி அற்றவர்களாக வளர்க்கிறோம். நம் மரபையோ தத்துவத்தையோ அவர்கள் பின்னாளில் கற்றுக்கொள்வதற்கான இளம்பருவ அடித்தளம் அமைவதேயில்லை. பின்னாளில் மிகச்சிலர் கடும் உழைப்பால் உள்ளே நுழையக்கூடும். பெரும்பாலானவர்களுக்கு அதற்கான மனநிலையே அமையாது போகிறது.
அதில் முதலில் அடிபட்டுப்போவது நம் சிந்தனைமரபுதான். முதன்மையாக, தத்துவசிந்தனையும் மெய்யியலும் தேவையானவை, பயனுள்ளவை என்ற எண்ணமே உருவாவதில்லை. நேர்மாறாக அது தேவையற்றது, பழைமையானது என்ற ஏளனம் உருவாகிவிடுகிறது. அந்த ஏளனத்தை உடைத்து தத்துவசிந்தனை நோக்கிச் செல்வது எளிதல்ல. நான் கண்டவரை அனேகமாகச் சாத்தியமே அல்ல. மிகச்சிலர் அந்த எல்லையைக் கடப்பார்கள். அது அவர்கள் அசாதாரணமானவர்கள் என்பதனால்தான்.
இரண்டாவதாக, தத்துவத்தையும் மெய்யியியலையும் கற்பதற்கான ஆழ்படிமங்கள் மிக இளம் வயதிலேயே நம்முள் விழவேண்டும். அவை நம் கனவுக்குள் இருக்கவேண்டும். அவற்றைக்கொண்டுதான் நாம் தத்துவத்தைப் பேசமுடியும். மேலைநாடுகளில் தத்துவமும் மதமும் பதினாறாம்நூற்றாண்டிலேயே பிரிந்துவிட்டன. தத்துவத்தின் அடித்தளமான படிமங்கள் அவர்களுக்கு இளமையிலெயே கிடைக்கின்றன. நாம் மதத்துடன் அவற்றையும் கழுவி ஊற்றிவிடுகிறோம். கற்பனை காலியாக இருக்கிறது. அடிப்படையான படிமங்கள் இல்லாமல் தத்துவத்தைப் புரிந்துகொள்ளவோ விவாதிக்கவோ முடியாது
இப்படி மதத்தை விலக்குகிறோம் என்று நம் மரபின் பண்பாட்டையும் சிந்தனையையும் இளமையிலேயே விலக்கி பிள்ளைகளை அதிதூய உழைக்கும் இயந்திரங்களாக, வெறிகொண்ட நுகர்வோராக, எதையும் புரிந்துகொள்ளமுடியாத வீணர்களாக, அதை மறைக்க எள்ளிநகையாட மட்டுமே தெரிந்த அசடுகளாக ‘அறிவியல் முறைப்படி’ வளர்க்கிறோம்.
ஆனால் அவர்களிடமிருந்து மதம் விலகி நிற்பதில்லை. மதத்தின் மிக எளிய பகுதியான சடங்குகளும் நம்பிக்கையும் அவர்களை வந்துசேர்கின்றன. வாழ்க்கையின் நெருக்கடிகளில் அவர்கள் அவற்றை இறுகப்பற்றிக்கொள்கிறார்கள்.
அவ்வாறாக மதத்தில் இருந்து தத்துவம் விலக்கபடுகிறது. வெற்றுச்சடங்கும் நம்பிக்கையும் எஞ்சி நிற்கிறது. காரணம் நம்முடைய அசட்டு நாத்திகம்.
சரி, நாத்திகநோக்குள்ள இளமைப்பருவத்தைக் குழந்தைக்கு அளிக்கவே முடியாதா? முடியும். உண்மையில் மதத்தை அளிப்பதைவிட இருமடங்கு அறிவுத்திறனும் உழைப்பும் அதற்குத் தேவை. மதத்தில் உள்ள இறைநம்பிக்கையை களைந்து எஞ்சிய பண்பாட்டுக்கூறுகளையும் அழகியலையும் தத்துவத்தையும் குழந்தை அடையும்படிச் செய்யவேண்டும். அதற்கு அப்படி பிரித்துப்பார்க்கும் தர்க்கசிந்தனையை அளிக்கவேண்டும். அதைச்செய்யும்போது மரபார்ந்த மதக்கல்வி பெற்ற குழந்தையை விட இன்னும் மேம்பட்ட குழந்தை உருவாகும் என எண்ணமுடியும்
ஆனால் இங்கே நாத்திகம் என்றபேரில் முன்வைக்கப்பட்டது அது அல்ல. அறிவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அது வசைபாடவும் விதண்டாவாதம் பேசவும் மட்டுமே தெரிந்த ஒரு கீழ்மை மட்டுமே
ஜெ