ஒருபோர் என்பது உண்மையில் நம்பிக்கைகளுக்கும் யதார்த்தத்துக்கும் நடுவே நடக்கும் மோதல்தான் என்று சிலசமயம் சொல்லத்தோன்றுகிறது. இந்த எண்ணம் எனக்கு 1962 ஆம் ஆண்டில் நடந்த சீன இந்தியப் போர் குறித்து பிரிகேடியர் ஜான் தல்வி [Brigadier John Dalvi] எழுதிய ‘ஹிமாலயன் பிளண்டர்’ [ Himalayan Blunder] என்ற நூலை இருபதுவருடங்கள் முன்பு விழிபிதுங்க வாசித்தபோது உருவாகியது.
என்ன நடக்கிறது? ஒரு போர் நடக்கும்போது அந்தப்போரில் ஈடுபடும் இரு சமூக ராணுவங்களும் அரசியல்தலைமைகளும் தங்கள் சமூகத்தின் முழு ஆதரவை திரட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த ஆதரவை ஒரு வெறி என்ற அளவுக்கு உச்சப்படுத்த வேண்டியிருக்கிறது. அப்போதுதான் அது போருக்கு உதவும் சக்தி கொண்டிருக்கும்.
அதற்காக அவை அனைத்து விஷயங்களையும் ஒற்றைப்படையாக ஆக்குகின்றன. அதன் பொருட்டு தகவல்களை திரிக்கின்றன, மறைக்கின்றன. அவற்றை உச்சகட்ட பிரச்சாரம் மூலம் சொல்லியபடியே இருக்கின்றன. தங்கள் சமூகங்களை உச்சகட்ட உணர்ச்சிநிலையில் வைத்திருக்கின்றன.
ஆகவே போரில் ஈடுபடும் சமூகங்கள் போரின்போது போரைப்பற்றிய உண்மைகளை அறியவே முடிவதில்லை. என்ன நடக்கிறது என்பது ஒரு பக்கமும் என்ன சொல்லப்படுகிறது என்பது மறுபக்கமும் நின்று சமராடுகின்றன. சராசரி சமூகக்குடிமகன் யதார்த்தம் நோக்கிச் சென்றால் அவனது சமூகப்பொறுப்புணர்வு ஐயத்துக்குள்ளாகும். அவனது மனமும் ஒருசார்பான திரிபுகள் கொண்டிருக்கும். ஆகவே பெரும்பான்மையின் உணர்ச்சிவெறியில் அவனும் பங்குகொள்கிறான்.
இமயமலைகளில் சீனாவிடம் அடிபட்டு, இழிவுபட்டு, பலவீனமான இந்திய ராணுவம் பின்னடைந்துகொண்டிருந்தபோது இந்திய அரசும் ஊடகங்களும் நம் படைகள் உக்கிரமாக போராடி சீனாவை துரத்திக்கொண்டிருப்பதாக மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தன. நாம் சில இடங்களில் போர்தந்திரத்தின்பொருட்டு எதிரியை உள்ளே வரவழைத்து அடிப்பதற்காக பின்னகர்ந்தோம் என்றது இந்திய அரசு.
ஆனால் போரின் முடிவு என்பது நம்பிக்கைகளைக் கீறி யதார்த்தம் வெளியே வந்து கிடக்கும் தருணமாக அமைகிறது. எல்லா பிரச்சாரங்களும், திரிபுகளும் வெளிறுகின்றன. உண்மை கண்கூச திறந்து கிடக்கிறது. சென்றகாலங்களில் அது மெல்லமெல்ல துலங்கியதென்றால் இந்த ஊடகயுகத்தில் சில கணங்களில் வெளுத்துவிடுகிறது
நம் சமகாலகட்டத்துப் பெரும்போர் என்றால் அது ஈழப்போராட்டம். அதன் முடிவு நாம் ஒருபோதும் முகத்துக்கு முகமாகச் சந்திக்க விரும்பாத யதார்த்தத்தின் வெளிப்பாடாக அமைந்தது. ஈழப்போர் முடிந்து எட்டுமாதங்களாகியும்கூட இன்றும் அந்த யதார்த்தங்களைக் காணமுடியாதவர்களை நாம் சந்திக்கிறோம். இன்றும் அது சார்ந்த மூடநம்பிக்கைகளும், மிகையுணர்ச்சிகளும் நம்மிடையே உலவுகின்றன.
நிதின் கோகலே எழுதி கிழக்கு வெளியீடாக வந்திருக்கும் ‘இலங்கை இறுதி யுத்தம்’ அந்தப் போர் எப்படி வெல்லப்பட்டது என்பதை விரிவான தகவல்கள் மூலம் வெளிப்படுத்தும் இதழியல் பதிவு. என்.டி.டி.டி.வி தொலைக்காட்சியின் செய்தியாளரான நிதீன் கோகலே போர்ச்செய்திகளை சேகரிப்பதில் நிபுணர். ஈழ விஷயங்களை பலவருடங்களாக நேரில் அவதானித்து வருபவர்.
நிதீன் கோகலே
ஓரளவு செய்திகளை வாசிப்பவர்கள் அறிந்திருக்கும் தகவல்கள்தான் இவை. ஆனால் நிறைய புள்ளிவிவரங்களுடன் வரிசையாக கோர்வையாக அளிக்கப்பட்டிருக்கின்றன. இலங்கை அரசின் இந்தக்கடைசிப் போர் ஈழத்தில் ராஜபட்சே பதவிக்கு வந்தபோதே ஆரம்பித்துவிட்டது. அவருக்கு தெளிவான இலக்குகள் இருந்தன. பதவிக்கு வந்ததுமே இந்த இறுதிப்போருக்கான துணைவர்களை அவர் சேர்க்க ஆரம்பித்துவிட்டிருந்தார். தன் தம்பியரான பசில் ராஜபட்சே மற்றும் கோத்தபய ராஜபட்சேயை சேர்த்துக்கொண்டார். ராணுவநிபுணரான சரத் ·பொன்சேகாவை தளபதிபதவிக்குக் கொண்டுவந்தார்.
ராஜபட்சே பதவிக்கு வருவதற்குப் ஒருவகையில் புலிகள்தான் காரணம். அவர்கள் அவரை கடைசிவரை குறைத்தே மதிப்பிட்டார்கள். ராஜதந்திரியான ரனில் விக்ரமசிங்கே பதவிக்கு வந்தால் அவர் சர்வதேச அளவில் தங்களை தனிமைப்படுத்தக்கூடும் என்றும், அந்த திறன் ராஜபட்சே போன்ற உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு இல்லை என்றும் புலிகள் எண்ணினார்கள். ஆகவே தமிழ்மக்கள் வாக்களித்திருந்தால் வெல்லும் வாய்ப்பிருந்த ரனிலுக்கு வாக்களிக்காமல் இருக்கும்படி தமிழர்களை புலிகள் விலக்கினார்கள். ரனில் புலிகளை அழித்தொழிப்பதற்குப் பதில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணும் எண்ணம் கொண்டிருந்தார்.
இரண்டாவதாக, செப்டெம்பர் ஆறு 2000த்துக்குப் பின் உலக நாடுகள் சர்வதேச தீவிரவாத வலைப்பின்னலை அறுக்கும் திடமான முடிவுக்கு வந்திருந்தன. அது ராஜபட்சேவுக்கு சாதகமாக அமைந்தது. அந்த மாற்றத்தை உய்த்துணரவோ, அதற்கேற்ப தங்கள் வழிமுறைகளை மாற்றிக்கொள்ளவோ புலிகளால் இயலவில்லை.
ராஜபட்சே பதவி ஏற்றது முதல் இரு தளங்களில் இந்த இறுதிப்போருக்கான தயாரிப்புகளில் இலங்கை அரசு ஈடுபட்டிருந்தது என்று இந்நூல் காட்டுகிறது. ஒன்று சர்வதேச அளவில் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் புலிகளை அன்னியப்படுத்தி விலக்க வைப்பது. அதன் வழியாக புலிகளின் நிதியாதாரங்களை உறையச்செய்வது. அவர்களுக்கு தார்மீக ஆதரவுகள் இல்லாமல் செய்வது.
இரண்டு, பயிற்சியும் மனஉறுதியும் இல்லாமல் இருந்த இலங்கை ராணுவத்தை கடைசிப்போருக்குத் தயார் செய்வது. சீனா மற்றும் பாகிஸ்தானின் தங்குதடையற்ற ஆயுத உதவியும், பயிற்சி உதவியும் இலங்கை ராணுவத்திற்குக் கிடைத்தது. சீனாவையும் பாகிஸ்தானையும் காட்டி இந்தியாவை மிரட்டி இந்திய உதவியையும் பெற்றுக்கொண்டது இலங்கை.
இந்த காலகட்டத்தில் எல்லாம் இலங்கையரசை மிகவும் குறைத்து மதிப்பிட்ட புலிகள் அமைப்பு உரிய எதிர்நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதுடன் தன் செயல்பாடுகள் மூலம் இலங்கைக்குச் சாதகமான விளைவுகளை உருவாக்கி அளித்தார்கள். கருணா தன் படையுடன் பிரிந்து சென்றது புலிகளின் ராணுவ வலிமையை பெரிதும் பாதித்தது. நெடுங்காலமாக யாழ்ப்பாணப்பகுதிகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்தமையால் அங்கிருந்து புலிப்படைக்கு ஆள்சேர்ப்பது சாத்தியமில்லாமலாகியது. ஆகவே புலிப்படைக்கு புதிதாக வந்தவர்கள் கிழக்குப்பகுதியான மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கிழக்கைச் சேர்ந்த கருணாவால் கொண்டுவரப்பட்டவர்கள்
ஈழத்தமிழர்களிடையே வடக்கு-கிழக்கு பிரிவினை எப்போதும் உண்டு. அந்தப் பேதம் புலிப்படையிலும் இருந்தது. வீரர்கள் கிழக்கைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் முக்கியமான தலைவர்கள் அனைவருமே வடக்கைச் சேர்ந்தவர்களாக இருந்தது ஒரு கசப்பை வளர்த்தது. மறுபக்கம், புலித்தலைமை கிழக்கைச் சேர்ந்தவர்களை எப்போதுமே உள்ளூர ஐயப்பட்டது. இந்த சந்தேகம் பகைமையாக ஆகியதனால்தான் கருணா வெளியேற நேர்ந்தது. கருணாவின் படையுடன் புலிகள் நடத்திய போர் புலிகளை பலவீனமாக்கியது என்று இந்நூலில் வாசிக்கிறோம்.
அந்தப் பலவீனத்தை மறைக்க புலிகள் அதிரடியான பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தினார்கள். இந்த தாக்குதல்களை புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கம் என்று முத்திரை குத்த இலங்கை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டதை இந்நூல் காட்டுகிறது. புலிகளின் பயங்கரவாத தாக்குதல்கள் இலங்கை அரசின் தரப்பில் உலகநாடுகள் அனேகமாக அனைத்துமே நிற்பதற்கு வழியமைத்தன. புலிகள் சொன்ன உரிமைப்போராட்டம் சார்ந்த காரணங்கள் அனைத்துமே பின்னுக்கு நகர்ந்தன. இங்கே இலங்கைப்படை தன் முதல் வெற்றியை பெற்றுவிட்டது.
வழக்கமாக ஏதேனும் ஓர் இடத்தில் புலிகளை தாக்குவதே இலங்கைப்படைகளின் வழக்கம். புலிகள் உக்கிரமாக திருப்பித் தாக்கினால் பின்வாங்கிவிடுவார்கள்.ஆனால் இம்முறை இலங்கைப்படைகள் அனைத்துப்பகுதிகளிலும் சூழ்ந்து பலமுனைத்தாக்குதல்களை நிகழ்த்தினார்கள். கருணாவின் படையைச் சேர்ந்த தமிழ்ப்போராளிகளை வழிகாட்டிகளாக வைத்துக்கொண்டார்கள். விடாப்பிடியாக முன்னேறினார்கள்.
அப்போதும்கூட சிங்களப்படையை புலிகள் குறைத்தே மதிப்பிட்டனர் என்கிறார் நிதீன் கோகலே. இம்முறை அவர்கள் சிறந்த ஆயுதம் மற்றும் பயிற்சியுடன் வருவதை அவர்கள் உய்த்துணரவில்லை. அதே போல சர்வதேச சமூகம் தங்களை பொது எதிரியாக கருதுவதையும் அவர்கள் உணரவில்லை. தாங்கள் சூழ்ந்துகொள்ளப்பட்டபோது சர்வதேச சமூகம் முன்வந்து காப்பாற்றும் என நம்பினார்கள். இந்த தவறான புரிதல்களுக்கான விலையாகவே பூரணமான தோல்வி கிடைத்தது.
கடைசிப்போர் நிகழ்ந்த சூழலையும் அதன் வியூகங்களையும் இந்நூல் விவரிக்கிறது. புலிகள் உலகப்போக்கு பற்றிய அறிதலே இல்லாமல் தங்களுக்கு வேண்டியவர்கள் அளித்த பிழையான நம்பிக்கைகளின் பலத்தில் மக்களை பிணையாக வைத்துக்கொண்டு மாட்டிக்கொள்ள, மெல்ல உறுதியாகச் சூழ்ந்துகொண்டு அவர்களை அழித்தது இலங்கை ராணுவம்.
இதில் இந்திய ரடார்கள் மற்றும் சீன ஆளில்லா விமானங்கள் அளித்த பங்களிப்பை இந்நூல் முக்கியமாக குறிப்பிடுகிறது. ஆளில்லா விமானங்கள் மூலம் பார்த்ததில் புலிகள் சூழ்ந்து பிணையாக வைத்திருந்த மக்கள்கூட்டத்தில் ஒரு இடத்தில் புலிகளின் வளையம் பலவீனமாக இருப்பதைக் கண்டு அங்கே தாக்கி உடைத்தார்கள். அதன் வழியாக மக்கள் வெளியேற்றம் ஆரம்பமாகியது. அதுவே புலிகள் எளிதில் விழ காரணமாக அமைந்தது.
இந்நூல் இனிமேல்தான் ராஜபட்சேயின் உண்மையான சவால் உள்ளது என்று சொல்லி முடிகிறது. தான் பயங்கரவாதத்துக்கு எதிராக மக்கள்நலன் சார்ந்து போராடுவதாக ராஜபட்சே உலகிடம் சொன்னார். பாதிக்கப்பட்ட மக்களை உரியமுறையில் மீள்குடியேற்றுவதில்தான் அவரது நம்பத்தன்மை நீடிக்க முடியும் என்கிறார் நிதீன் கோகலே.
இந்நூல் சரளமான மொழியாக்கத்துடன் ஒரே மூச்சில் வாசித்துப்போகத்தக்க இதழியல் ஆக்கமாக உள்ளது. மொழிபெயர்ப்பாளர் பெயர் சுட்டப்படவில்லை.
இந்நூலின் தொனி நம் கவனத்துக்குரியது. ஒரு பயங்கரவாத இயக்கத்தின் இன்றியமையாத அழிவு என்று மட்டுமே ஆசிரியர் புலிகளின் வீழ்ச்சியைப் பார்க்கிறார். அதில் நிகழ்ந்த மானுட அழிவேகூட புலிகளின் போர்வெறியால்தான் என்ற எண்ணம் அவரிடமிருப்பது தெரிகிறது. அதை உரிமைப்போராகவே அவர் எண்ணவில்லை.
கடந்த பதினைந்தாண்டுகளில் எழுதவந்த இந்திய இதழியலாளர்கள் பெரும்பாலும் அனைவரிடமும் இந்த மனநிலையே உள்ளது என்பதைக் காணலாம். இது ஆராயத்தக்கது. இவர்களை தமிழ்விரோதிகள் என்றோ இந்தியவெறியர்கள் என்றோ சொல்வதில் அர்த்தமில்லை. இவர்கள் பொதுவாக அதிகாரத்துக்கு வணங்காதவர்களாக, அடிப்படை நீதியுணர்வு கொண்டவர்களாக, பெரும்பாலான தருணங்களில் பாதிக்கப்பட்ட எளிய மக்களின் குரலாக ஒலிப்பவர்களாகவே இருந்துள்ளார்கள் என்பதே யதார்த்தம்.
இவர்கள் புலிகளைப் பற்றிக் கொண்டிருக்கும் மனப்பதிவு சென்றகாலங்களில் புலிகள் போர்முறையாகக் கொண்டிருந்த பயங்கரவாத நடவடிக்கைகளைச் சார்ந்து உருவான ஒன்று. ஓர் உரிமைப்போராட்டம் எங்கே, எவ்விதம் வெறும் பயங்கரவாதமாக எண்ணத்தக்க தோற்றம் கொண்டது,உலகை நோக்கி ப்பேசுவதில் எங்கே பிழை நிகழ்ந்தது என்பதே நாம் சிந்திக்க வேண்டிய விஷயம்.
இந்நூலை வாசிக்கும்போது ஈழப்போர் நடந்துகொண்டிருக்கும்போது ஆனந்தவிகடன் முதலிய இதழ்கள் அளித்த போர்விவரணைகளை மீண்டும் எடுத்து படிக்கவேண்டும் என்ற எண்ணம் உந்தியது. எத்தனை அப்பட்டமான பொய்கள். எவ்வளவு விருப்பக் கற்பனைகள். சென்னையை விட்டு நீங்காமலே எழுதப்பட்ட உக்கிரமான களவருணனைகள். ஒருமுறை புலிகள் எந்த இடத்தில் இலங்கை ராணுவத்தை ‘உள்ளேவரவிட்டு’ அடிக்கப்போகிறார்கள் என்று விரிவான வரைபடங்களுடன் செய்தி வெளியிட்டது ஆனந்தவிகடன்! அதாவது அந்தப்போரே சிங்கள ராணுவத்தை அழிக்கும்பொருட்டு புலிகள் திட்டமிட்டு நடத்துவது என்ற சித்திரமே நமக்களிக்கப்பட்டது.
இந்நூலில் உள்ள கசப்பான ஓர் உண்மைச்சித்திரத்தை நாம் அந்த பொய்யுரைகளுடன் ஒப்பிடவேண்டும். அது நம்மைப்பற்றி இந்த ஊடகங்கள் என்னதான் நினைக்கின்றன என்பதைக் காட்டும். மேலும் அவர்கள் எழுதுவனவற்றை அப்படியே அள்ளி விழுங்கிச் செரித்துக்கொள்ளும் உணர்ச்சிமந்தைகளாக இப்போதும் நாம் இருந்துகொண்டிருப்பதையும் நமக்குக் காட்டும்.
[இலங்கை இறுதி யுத்தம். இலங்கை ராணுவம் வென்றது எப்படி? நிதீன் கோகலே. கிழக்கு பிரசுரம். ]