திரு. ஜெயமோகன் அவர்களுக்கு…
‘காடு’ – நாவலைப் படித்தபோதும், முடித்தபோதும் ஏற்பட்ட பரவச உற்பத்தியால், என்னை மறந்து, உங்களை அதீதமாய்ப் புகழ்ந்து நான் உச்சரித்தது -‘ஒக்காளி’! இப்படிச் சுருக்கியும் சொல்லவில்லை. தெளிவாய் விவரித்து உச்சரித்துத்தான் பலமுறை சொன்னேன். வேற எந்த வார்த்தையும்விட இயல்பாய்ச் சொல்கிற இந்த வார்த்தைத்தான் எனக்குப் பெரிதாய்ப் படுகிறது. இதை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்வீர்களோ என்கிற ஒருவித தயக்கம் இருந்தாலும் ‘அய்யர்’ சிவஞான போதத்தைப் படிக்கிறபோது, ‘தாயோளி’ என்று மெய்மறந்து சொல்கிறக் கட்டம் கொடுக்கிற தைரியத்திலும், இதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்கிற அடிப்படையிலுமே சொல்கிறேன்.
எழுத்து என்னும் காட்டில் மதம் பிடித்த யானையாக அதம் புரிந்திருக்கிறீர்கள். அந்த அதம் காட்டின் பசுமை எதனையும் அழித்துவிடாமலும், காட்டின் ஓயாத புதிர்த் தன்மைக்குள் புகுந்து வந்ததுடன், சங்கப் பாடல்களுக்குப் புது பச்சையம் கொடுத்த வாறும் வந்துள்ளது. பூத்துக்கிடக்கும் பூக்களையும், கனிந்து கிடக்கவும் கனிகளையும் விரும்பியவாறு பறித்துக் கொள்வதுபோல பருகுவதுபோல பிஞ்சுக் காதலே மலையாக (நீலி), காமமே காடாக விரிக்கப்பட்டிருக்கிறது.
‘மோகமுள்’ – யமுனாவைக் காதலிக்காதவர்கள் குறைவு என்பார்கள். எல்லோரும் யமுனாவைக் காதலித்துவிட்டதாலோ என்னவோ அவளை அதிகம் காதல் கொள்ள இயலவில்லை. நீலியைக் கிரிதரனைவிட நெருங்கி நின்று பார்த்தேன். ‘அனகோண்டா’ படத்தின் இறுதிக் காட்சியில் படகில் வரும் ஒரு பெண்ணைக் கடத்திக் கொண்டு வந்து, நீலியாகப் பொருத்திக் கொண்டு அவளோடு உலவினேன். உங்கள் எழுத்தின் வல்லமையாலும் இயலாமல் போன ஒன்று நீலியைச் சாகடிக்க முடியாமல் போனதுதான். (இறுதி அத்தியாயத்தின் இறுதிப் பகுதியைப் படிக்கிறபோது நீங்களும் அவளைச் சாகடிக்க விருப்பப்பட வில்லை என்றே தெரிகிறது.) நாவலைப் படித்தவர்களின் வீடுகளில் நீலி, நிரந்தரமாய் குடியேறி, ‘அய்யோ ஞாக்கு நேரமாயி… அச்சன் வருந்ந சமயமாயி’ என்று ஓயாது சொல்லிக் கொண்டிருப்பாள் என்றே நினைக்கிறேன். இதைப் பதிவு செய்யும் நேரமும் எனக்குப் பின்னால் நின்று, ‘அச்சன் வருந்த சமயமாயி’ என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். நீலிக்குச் சமமான இடமே மிளா, தேவாங்கு, கீறிக்காதனக்கும் என்னிடம் இருக்கிறது.
கிறிஸ்துமஸ் தின இரவு அன்று திருடன் மனைவி காட்டும் காட்டின் விழிப்பாக மலர்கள் பூத்துக் குலுங்கும் ùஸல்மா லாகர்லேவ் தேவமலர் சிறுகதை மீது எனக்கிருந்த இன்பம், காடு – நாவல் முன் அது சிற்றின்பத்தின் சிற்றின்பமாகச் சுருங்கிவிட்டது.
‘இலைக் கடலை’க் கொண்டு அலையும் நாவல் இது என்பதால் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’ முதியவரின் அலைதலும் கிரிதரன் அலைதலும் ஒன்றாகப்பட்டது. அதைப்போல சமீபத்தில் படித்ததாலோ என்னவோ சிங்கிஸ் ஐத்மாத்தவ் குல்சாரியை மையப்படுத்திச் சூழலவிட்ட சுழற்சியையும் இந் நாவலில் உணர்ந்தேன். இருப்பினும், ‘இந் நாவல்’களை விடவும் ‘காடு’ நாவல் மரத்தின் உயரம் பல அடி அதிகம் என்றே உறுதியாக உணர்கிறேன்.
திரு. எம்.வேதசகாயகுமார் அவர்கள் / ‘நாவலின் அமைப்பு ஒரு வீணை, தேர்ந்த விரல்களே இசையை அடைய முடியும். வாழ்க்கையின் எத்தனையோ தளங்களைத் தொட்டுத் தாவிச் செல்லும் இந்நாவலை வாசகன் மிகுந்த கவனத்துடன் வாசித்துத்தான் முன்னெடுத்துச் செல்ல முடியும்’ / என்கிறார். இதில் வீணை என்பதை மட்டும் யாழ் என்று மாற்றிக் கொண்டேன். அதிகக் கவனத்துடன்தான் படித்தேன், இருப்பினும், தொடர் மழைக்குப் பிறகான காட்டாற்றைக் கடக்க முடியாமல் கீறிக்காதன் பிளிறிக்கொண்டே நிற்பதுபோல ஏதோவொன்றின் அழைப்பு ஒவ்வோர் அத்தியாத்திலும் தொக்கி நிற்கவே செய்கிறது. காட்டில் வேரூன்றப்பட்டிருந்த சங்கப்பாடல்கள் பலவற்றை நான் படித்ததில்லை என்பதால் மட்டுமல்ல; அதையும் மீறி மறுவாசிப்புக்கு… மறுவாசிப்புக்கு… தேவைப்படும் புதிர்மை அம்சங்கள் நிறைய இருக்கின்றன. பூரணமான இசையை அடைய தேர்ந்த விரல்களுக்கும் இது தேவைப்படும் என்றே கருதுகிறேன்.
த.அரவிந்தன்
அன்புள்ள அரவிந்தன்,
‘காடு’ குறித்த உங்கள் கடிதம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. என்னுடைய நாவல்களில் விஷ்ணுபுரமும் காடும் மட்டுமே அதிகமான வாசகர்களால் வாசிக்கப்பட்டிருக்கின்றன, ரசிக்கப்பட்டிருக்கின்றன. ஏன் என்று அடிக்கடி நான் சிந்திப்பதுண்டு. இரண்டிலும் உள்ள பொதுவான அம்சம் என்ன? அதை ‘மறுபக்கம்’ என்று சொல்லலாம். நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் யதார்த்த உலகின் மறுபக்கமாக அமையும் ஓர் உலகை அவை புனைந்து காட்டுகின்றன. அது நனவுக்கு மாற்றாக ஒரு கனவுத்தன்மை கொண்ட உல்கம். ஊருக்கு மாற்றாக உள்ள காடு. நிகழ்காலத்துக்கு மாற்றான இறந்தகாலம்… இந்த உலகில் இருந்து சொற்கள் உருவாக்கும் கற்பனைமூலம் விடுபட்டு வேறெங்கோ சென்று ஒரு தனியுலகை கண்டு அங்கே வாழ்ந்து மீள முடிகிறது.
அங்கே நீலி இருப்பது அதனால்தான். நீலி என்னுடைய கனவில் வாழும் ஓர் அழியாத கதாபாத்திரம். அதன் ஏதோ ஓரு வடிவத்தை நான் எல்லா கனவுலகிலும் உருவாக்கிக்கொள்கிறேன் போலும்
ஆனால் இந்தக் கனவுலகம் அந்தரவெளியில் உள்ளது அல்ல. அது இந்த யதார்த்த உலகின் சிருஷ்டிதான். இந்த யதார்த்த உலகில் இருந்து சென்றவற்றால் ஆனது அந்த அடித்தளம். அங்கே அவை வேறு ஓர் ஒழுங்கில் அமைகின்றன, அவ்வளவுதான்
ஜெ
பதிலுக்கு நன்றி. தங்களுடைய நாவல்களில் ‘ரப்பர்’, ‘கன்னியாகுமரி’, ‘ஏழாம் உலகம்’, ‘அனல் காற்று’ படித்திருக்கிறேன். ‘கொற்றவை’ இந்த முறை புத்தகக் கண்காட்சியில் வாங்க முயற்சித்தேன். ‘தமிழினி’யில் இருப்பு இல்லை. கொற்றவையை முடித்துவிட்டுத்தான் ‘விஷ்ணுபுரத்’தையும், ‘பின் தொடரும் நிழலை’யும் படிக்க வேண்டும் என்று ஏனோ உறுதியாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
குறிப்பு: அனல் காற்று – குறுநாவலில் ஒரு முன் குறிப்பு இருந்தது. பாலு மகேந்திரா அதைப் படமாக எடுக்கத் திட்டமிட்டிருந்தார் என்றும், அதை அவர் எவ்வாறு காட்சிப் படுத்தப் போகிறார் என்பது குறித்து தங்களுக்கு ஆவல் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள். படம் கைவிடப்பட்டதில் உண்மையில் எனக்கு வருத்தம்தான். ஆனால் அவர் எப்படிக் காட்சிப்படுத்தி இருப்பார் என்று நான் யோசித்தபோது அவருடைய “மறுபடியும்’ படம்தான் நினைவு வந்தது. அனல் காற்றும் அப்படம் சற்று நெருங்கிய வெவ்வேறு சரடுகளைக் கொண்டவை. பிற்பகுதியில் சந்திரா நடந்துகொள்ளும் வெறித்தனக் காட்சிகளை அந்தப் படத்தில் ரோகிணி செய்திருப்பார். என்னைப் பொறுத்தவரை அனல் காற்றை பின் வருமாறு காட்சிப் படுத்திக் கொண்டேன். நீண்ட போகிற வீராணம் இரும்புக் குழாய் மேல் (விமானமாக மாற்றிக்கொண்டேன்) சுசியை விரட்டிக் கொண்டு நாயகன் போகிறான். இதற்கிடையில் சந்திரா வருகிறாள். நாயகன் அம்மா வருகிறாள். தகப்பன் (செம்மணி வளையலில் பரிசுகளை அனுப்பும் நாயகன் வீட்டைத் தேடிப்போகிற நினைவு வந்தது. அப்பாவை முதலில் அறிமுகப்படுத்தியபோது) வருகிறான் ஒருவர் மாற்றி ஒருவர் விரட்டிச் செல்ல அந்த இரும்புக் குழாய் நீண்டதொரு அரிவாளாக மாறுகிறது. இரத்தம் சொட்டச் சொட்ட சந்திராவும், நாயகனும் (கடைசியில் ஓரிடத்தில் நாயகன் பெயர் வருவதால் பெயர் நினைவில் இல்லை – மன்னிக்கவும்) பயணிக்கிறார்கள் என்பதாக மாற்றிக் கொண்டேன். என் வீட்டில் இருந்து அலுவலகம் செல்லும் வழியில் இரும்புக் குழாய்கள் புதைக்கப்பட்டிருப்பதால் இப்படியொரு வீபரித உருவகம் ஏற்பட்டது.
நன்றி
த.அரவிந்தன்.