செப்டம்பர் ஐந்தாம் தேதி லெபாக்ஷ¢ விடுதியில் கண்விழித்தேன். காலை ஐந்து மணிக்கே கிருஷ்ணன் செல் •போனில் அலார்ம் வைத்து எழுப்பிவிட்டார். அவர் அதிலெல்லாம் எப்போதுமே கச்சிதம். அதிலும் குறிப்பாக பிறர் அதன் மூலம் தொந்தரவுகொள்வார்கள் என்றால் இரட்டிப்பு. முந்தினநாள் இரவில் நல்ல இறுக்கம் இருந்தது. எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை. நானும் வசந்த குமாரும் கல்பற்றா நாராயணனும் செந்திலும் இறங்கி வெளியே சென்றோம். பையன்கள் பிள்ளையார் சிலை முன்னால் கூடிய கூட்டத்தின் நடுவே குத்து பாட்டுக்கு நடனம் ஆடினார்கள். சிறு பையன்கள் பூவிதழ்களை அள்ளி வீசினார்கள். அந்த மக்கள் அந்த நடனத்தை மிகவும் ரசிப்பது தெரிந்தது. ”ஆடுறவன் மனசில அவன் சிரஞ்சீவிஆ இருககன் ஜெயன்”என்றார் வசந்தகுமார்.
நானும் வசந்தகுமாரும் கல்பற்றா நாராயணனும் ஒரே அறையில் படுத்துக் கொண்டோம். எப்போதோ கண்விழித்தபோது கடுமையான மழை கொட்டிக் கொண்டிருந்தது. இடியோசை வானில் உருண்டது. காலையில் நல்ல குளிர். சுருண்டு தூங்கும்போது கிருஷ்ணன் ” சார் மணி அஞ்சரை” என்றார். மின்சாரம் இல்லாமல் நல்ல இருட்டு வேறு… எழுந்து என்ன செய்வது? ஆனால் அவரால் அமர முடியாது. இருட்டுக்குள் மெழுகுவத்தியுடன் அலைந்து கொண்டிருந்தார். நான் ஆறுமணிக்குத்தான் எழுந்தேன்.
ஆறரைக்கு மழை சற்றே விட்டுவிட்டது. விடுதிக்குப் பின் ஒரு டாங்கர் வண்டியிதான் நீர். அதை பிடித்துக் கொண்டுவந்து குளியலறையில் வைத்துக் குளித்தோம். முந்தைய நாளே நான் என் பாண்ட் சட்டையை துவைத்து கூடத்தில் காயப்போட்டிருந்தேன். அவசரமாக அதை அணிந்துகொண்டிருந்தபோது வசந்தகுமார் மீண்டும் லெபாக்ஷ¢ கோயிலுக்குச் செல்லலாம் என்று அழைத்தார். முந்தைய நாள் நல்ல புகைப்படங்களை எடுக்கவில்லை என்றார். நானும் அவரும் சென்று ஒரு டீக்கடையில் டீ குடித்தோம். இப்பகுதியில் டீ என்பது தமிழ் நாட்டு டீயின் அரைப்பங்குதான். அப்படியானால் கேரள டீக்கு நாலில் ஒரு பங்கு.
மீண்டும் லெபாக்ஷ¢ கோயிலுக்குள் சென்று புகைப்படங்கள் எடுத்தோம். கல்கோபுரங்களுக்குள் மழை ஊறிச் சொட்டிக்கொண்டிருந்தது. சிற்பங்கள் ஈரமாக நின்றன. அங்கிருந்த சிற்பங்களில் கையில் கமண்டலத்துடன் நிற்கும் அகத்தியர் சிலையை புதிய ஆர்வத்துடன் மீண்டும் மீண்டும் பார்த்தேன். விரிந்த பிராகாரங்கள் இடிந்து சரிந்து வரலாற்றின் அமைதியுடன் வரலாற்றின் பாசி மணத்துடன் வரலாற்றின் ஈரத்துடன் நின்றுகொண்டிருந்தன. மூலவிக்ரஹம் அணிகள் இல்லாமல் கன்னங்கரிய மேனி துலங்க கையில் வாளுடன் விழித்து நோக்கி உக்கிரக் கோலத்தில் நின்றது.
லெபாக்ஷ¢யில் காலையூனவை முடித்துவிட்டு ஈரமான சாலைவழியாக இந்துபூருக்குச் சென்றோம். ராயலசீமா வழக்கமாக வரண்டு வெந்தமண்ணும் கனலுமிழும் பாறைகளுமாகக் கிடக்கும். இந்த பருவத்தை நான் அனுபவம் மூலம் தேர்வுசெய்திருந்தேன். எங்கு பார்த்தாலும் பசுமை. விளைநிலங்களில் பளபளக்கும் மக்காச்சோள இலைகள். கொத்துமல்லி வயல்கள். கரும்புக்கொல்லைகள். சாலையோரம் செழித்து அடர்ந்த புல்விளிம்புகள்.
பெனுகொண்டா வழியாக தர்மாவரம்சென்று அங்கிருந்து அகோபிலம் சென்று இரவுதங்கவேண்டுமென்று திட்டம். லெபாக்ஷியில் கொஞ்சம் தமிழ்மண்ணின் சாயல் மிச்சமிருந்தது . அங்கிருந்து கிளம்பி தேசிய நெடுஞ்சாலையில் விரையும்போது பின்பக்கம் தமிழகம் மூழ்கி மறையும் உணர்வை அடைய முடிந்தது. விரிந்த நிலம். தொலைதூரத்தில் வளைந்து மண்ணைத்தொட்ட மேகமில்லாத வானம். புதுமழையின் பசுமைத்தீற்றிய மண். நட்டுவைத்த சிறிய குடைகள் போலவோ, பசுமையான குமிழ்கள் போலவோ நிற்கும் தொலைதூர மரங்கள். ராயலசீமாவின் பாறைகள் உடைந்த செங்கல்கப்பிகளும் சுண்ணாம்புக்கற்களும் கலந்து அள்ளிக்கொட்டியதுபோல இருக்கும். மலைகள் எல்லாமே செம்பழுப்புநிறமான பாறைகளை குவித்தது போல. உடைந்து சரிந்துகொண்டிருக்கும் பெரும்பாறைகளை மேலேற்றிய மொட்டைக்குன்றுகள். சரிவெங்கும் பாறைகளின் உடைசல்கள்.
காரின் வேகத்தில் தொடுவான் வரை விரிந்து பரந்த நிலம் மெல்லத் திரும்பிச் சுழன்றது.
பெனுகோண்டாவை மதியம் வந்தடைந்தோம். வழியெங்கும் ஆந்திரமாநிலத்தின் காட்சிகள். பொதுவாக ஆந்திராவின் இப்பகுதிதான் மிகவரண்டது. பாறைகள் மிகுந்திருப்பதனால் இதற்கு ராயலசீமா என்று பெயர்– ராய என்றால் பாறை. இங்கே நெடுநாட்களாக மேய்ச்சல் சமூகங்களே இருந்துவந்திருக்கின்றன. டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளகர்த்தரான மாலிக் காபூர் படையெடுத்துவந்து தென்னாட்டை சூறையாடி இங்கிருந்த அரசுகளை சிதைத்துவிட்டுச் சென்றபின் அரைநூற்றாண்டுக்காலம் இங்கே அராஜகம் நிலவியது. அந்த நிலையைக் கண்டு மனம் நொந்த வித்யாரண்ய ஸ்வாமிகள் அல்லது மாதவர் என்ற துறவி அப்பகுதியின் சிற்றரசர்களாக விளங்கிய ஹரிஹரர் புக்கர் என்ற இரு சகோதரர்களுக்கு ஒரு அரசை நிறுவும் ஊக்கத்தை அளித்தார். 1336ல் அவ்வாறு உருவான அரசே விஜயநகரம். இது இங்கிருந்து இருநூறு கிலோமீட்டர் தள்ளி கர்நாடக எல்லைக்குள் ஹோஸ்பேட் அருகே உள்ளது.
விஜயநகரம் பேரரசாக எழுந்து தென்னகத்தை முழுக்க தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இருநூறு வருடம் நீடித்தது. தென்னகத்தில் இந்துப் பண்பாடும் கலையும் அழியாமல் பாதுகாத்தது விஜயநகரமேயாகும். விஜயநகரத்தின் செல்வாக்கால்தான் தஞ்சையிலும் செஞ்சியிலும் மதுரையிலும் நாயக்கர் ஆட்சி உருவானது. தென்னகத்தில் இன்றுள்ள பிரம்மாண்டமான கோயில்களில் பெரும்பகுதி நாயக்கர் காலகட்டத்தில் கட்டப்பட்டவையோ விரிவாக்கப்பட்டவையோ ஆகும். 1565 ல் தென்னகத்தில் இருந்த ஐந்து சுல்தான்கள் [பிரார் ,பிதார் அகமதுநகர், கோல்கொண்டா, பீஜப்பூர்] ஒன்றுசேர்ந்து விஜயநகரத்தை போரில் வென்றார்கள். தலைக்கோட்டை என்ற இடத்தில் நடந்த அந்தப்போரில் விஜயநகரப்படைகளில் இருந்த இஸ்லாமியப்படைப்பிரிவுகள் களத்தில் பிரிந்துசென்று எதிர்ப்பக்கம் சேர்ந்துகொண்டார்கள். போரைநடத்திய ராமராயர் என்ற பேரமைச்சர் கொல்லப்பட்டார். விஜயநகரம் அழிக்கப்பட்டது. ஆனால் அதன்பின்னரும் அதன் செல்வாக்கு தென்னகத்தில் மேலும் இருநூறுவருடம் நீடித்தது. விஜயநகர வம்சாவளியினரான மன்னர்கள் சிலர் ஆங்கில ஆட்சிக்காலம்வரைக்கும் இருந்தனர்.
மேய்ச்சல் சமூகத்தவர்களான தொட்டியரும் கம்பளத்தாரும் கொண்ட எழுச்சியும் அவர்கள் பேரரசுகளை உருவாக்கி தென்னாட்டையே ஆண்டதும் இந்திய வரலாற்றின் பெரும் வியப்புகளில் ஒன்று. இந்த மண்ணைப் பார்த்துக் கொண்டு செல்லும்போது இந்த வெற்றுப்பொட்டலில் மனிதர்கள் வாழ்கிறார்களா என்ற ஐயமே கூட உருவாகும். நெடுந்தொலைவுக்கு கிராமங்களே கண்ணுக்குப் படுவதில்லை. ஆங்காங்கே விளைநிலங்கள். பெரிய உருளைப்பாறைகள் சிதறிக்கிடக்கும் நிலஎழுச்சிகள், நிலவீழ்ச்சிகள். ஆனால் உலகவரலாற்றில் பெரும்பாலும் வரண்டநிலத்து மக்களே பெரிய சாம்ராஜ்யங்களை உருவாக்கியிருக்கிறார்கள். மெசபடோமியர், எகிப்தியர், அரேபியர், மங்கோலியர். இந்தியவரலாற்றில்கூட ராஜபுத்திரர்களின் இடம் முக்கியமானது. இந்திய வரலாற்றில் மூன்றுமுறை மேய்ச்சல்நிலமக்களின் எழுச்சி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சந்திரகுப்த மௌரியர் மேய்ச்சல் சாதியைச் சேர்ந்தவர். சிவாஜியின்கீழ் எழுந்த மராட்டியர்கள் மேய்ச்சல்மக்கள். நாயக்கர்கள் மேய்ச்சல் நிலத்தவர்.
நீர் நிறைந்த நிலத்து மரத்தைவிட பாலைநிலத்து மரம் உறுதியானது. கடுமையான வாழ்க்கைச்சூழல்களால் மேய்ச்சல்நிலமக்கள் எதற்கும் துணிந்தவர்களாக இருக்கிறார்கள். மேலும் இடம்பெயர்வதும் புதிய வாய்ப்புகளைத் தேடிச்செல்வதும் அவர்களுக்கு இயல்பாக உள்ளது. காவேரிகக்ரை மக்கள் எங்கும் சென்று குடியேறியதாக வரலாறில்லை. ஆனால் தொட்டியரும் கம்பளத்தாரும் தமிழகத்தில் பெரும் சமூகங்களாக வந்து குடியேறினார்கள். இந்த அம்சம் வரலாற்றின் முக்கியமான ஒரு இயங்குவிசை என்று எனக்குப்படுகிறது.
விஜயநகர வரலாற்றின் முக்கியமான இடம் உடையது பெனுகொண்டா. விஜயநகரத்தின் இரண்டாம் தலைநகர் இது. பெனுகோண்டா என்றால் பெரிய குன்று என்று பொருள். கர்நூல்-பெங்களூர் சாலையில் அனந்தபூரிலிருந்து எழுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பெனுகொண்டா என்று சொல்லப்பட்ட பழையநகரம் அங்குள்ள பெரிய குன்றின் மீதிருக்கும் கோட்டைக்குள் இருந்தது. தலைகோட்டைபோரில் விஜயநகரம் அழிக்கப்பட்டபோது விஜயநகர மன்னர்கள் அங்கிருந்து பின்வாங்கி பெனுகொண்டாவுக்கு வந்து அதைதலைநகராகக் கொண்டு 1646 வரை ஆண்டிருக்கிறார்கள். இன்று அக்கோட்டை பல இடங்களில் இடிந்துகிடக்கிறது. மலைக்கோட்டைக்கு கீழே புதிய பெனுகொண்டா நகரம் உருவாகியிருக்கிறது.
பெனுகொண்டாவுக்கு ஞானகிரி என்று ஞானாத்ரி என்றும் பெயர் உண்டு. விஜயநகரத்தை ஸ்தாபித்த ஹரிஹரர், புக்கர் சகோதரர்களில் முதலாம் புக்கர் அவரது மகன் வீரவிரூபண்ண உடையாரை பெனுகொண்டாவின் ஆளுநராக நியமித்ததைப்பற்றி பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இன்றைய பெனுகொண்டா கோட்டை வீர விரூபண்ண உடையாரால் கட்டப்பட்டது. மலைமீதிருந்த காரணத்தால் இந்தக்கோட்டையை கடைசிவரை பிறரால் கைப்பற்ற முடியவில்லை. விஜயநகர ஆட்சி மேலும் பல தலைமுறைக்காலம் நீடித்தமைக்கு இந்தக் கோட்டையே காரணம். பெண்ணீருவிலிருந்து இந்தக்கோட்டைக்கு குடிநீர் கொண்டுவர ஒரு கால்வாயை புக்கராயர் உருவாக்கினார் என்று மைசூர் கல்லோடி கல்வெட்டு சொல்கிறது.
காரிலிருக்கும்போதே நம்மால் உடைந்து சிதிலமான கோட்டையைக் காணமுடிகிறது. கோட்டைக்குள் உடைசல்பாறைகளினாலான ஓங்கிய குன்று. கோட்டை சிதிலமான துண்டுகளாக பல இடங்களில் பரவிக்கிடக்கிறது. உள்ளே இப்போதும் இடிபாடுகளுக்குள் எழுந்த ஒரு சிற்றூர் உள்ளது. காரை மண்ணில் பாதி புதைந்த ஒரு கோயிலின் அருகே நிறுத்திவிட்டு சாலைவழியாகச் சென்றோம். அங்கே ஒரு மடம் இருக்கிறது. அத வலப்பக்கம் காகன்மகால் என்ற கட்டிடம் உள்ளது 1775 ல் கட்டப்பட்டது. அதன் அடித்தளமும் தூண்களும் இந்துகட்டிடக்கலைப் பாணியிலும் மேல்முகடுகள் இஸ்லாமியக் கட்டிடக்கலைப் பாணியிலும் அமைந்திருக்கிறது. ஹம்பியில் உள்ள தாமரைமகாலை இந்து நினைவுறுத்துகிறது. பொதுவாக சுதையை சிறப்பாக பயன்படுத்தும் தொழில்நுட்பம் இஸ்லாமியக் கட்டிடக்கலை வழியாகவே இந்தியா வந்தது என்று தோன்றுகிறது.
பாபையா தர்கா என்ற மசூதி பெனுகொண்டா நகரின் முக்கியமான கட்டிடமாகும். இஸ்லாமியசக்திகளுடன் ஓயாது போரிட்டுவந்த நிலையிலும்கூட இஸ்லாமிய வழிபாட்டுக்கு விஜயநகரப் பண்பாட்டில் முழு அனுமதி இருந்தது என்பதற்கான ஆதாரம் இது. அதேபோல இங்குள்ள முக்கியமான மசூதியான ஷெர் கான் மசூதியில் தெலுங்கில் அதை 1564ல் சதாசிவராயர் கட்டினார் என்ற கல்வெட்டு உள்ளது என்று தகவல். ஒரு பெரிய நெற் குதிர்– சுதையாலானது- தனியாக நின்றது. அதனருகே ஒரு கோபுரம் மட்டும் கோயில் எதுவும் இல்லாமல் நின்றது. யோகநரசிம்மசாமி கோயில், யோகராமர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில் ஆகியவை இங்குள்ள கோயில்களில் முக்கியமானவை. யோகராமர் கோயிலில் ஒரே சேறு. தாவிச்சென்றால் உள்ளே கோயில் சரிந்து நின்றது. உள் பிராகாரங்கள் பூட்டியிருந்தன. காசி விஸ்வநாதர் கோயிலிலும் நடை சாத்திவிட்டிருந்தார்கள். வெளியே பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். சிவா ஒரு ஆலமரக்கிளையில் ஏறி அமர்ந்து ஆடினார். நல்ல வெயில். முந்தைய மழையின் நீராவி இருந்தமையால் வெக்கை.
திரும்பிவரும்வழியில் மடத்துப்பாதைக்குச் சென்று மேலேறி சிவன் கோயில் ஒன்றை அடைந்தோம். ராமேஸ்வரலிங்க சாமிகோயில் திறந்திருந்தது. காரணம் இரு இளைஞர்கள் உள்ளே அமர்ந்து ஏதோ போட்டித்தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்தார்கள். உள்ளே ஒரு நந்திசிலை மட்டும் மிக அழகாக இருந்தது. மிகத்டஹழ்வான லிங்கத்தின் மீது தாராகலசத்தில் வில்வநீரின் வடிவில் காலம் துளித்துளியாகச் சொட்டிக்கொண்டிருந்தது. பிராகாரம் எங்கும் மழைநீர் தேங்கிக்கிடந்தது. 1406ல் வேமன யோகி என்பவர் கண்டெடுத்த இலிங்கம் அது என்று அங்கே எழுதியிருந்தது.
பெனுகொண்டா கிட்டத்தட்ட ஹம்பியை நினைவுறுத்துகிறது. எங்கும் இடிபாடுகளையே காணமுடிகிறது. கோட்டைகளின் இடிபாடுகள் பிற்பாடு வீடுகள் கட்ட பயன்படுத்தப்பட்டிருக்கலாம். செதுக்குதூண்கள் கற்பலகைகள் உடைந்த சிற்பங்கள் ஆகியவற்றை நினைக்காத இடங்களில் எல்லாம் காண முடிகிறது. பதினொன்று அடி உயரமுள்ள அனுமார்சிலை இங்கே புகழ்பெற்ற ஒன்று. இச்சிலை இருக்கும் பிரதான வாசலுக்கு யெர்ரமஞ்சி வாசல் என்று பெயர். சிவப்பாகவும் அழகாகவும் இருந்திருக்கலாம். இப்போது குப்பைகள் சாக்கடைகள் மண்டிய ஒரு தெரு. பள்ளிவிட்டு மதியச்சாப்பாட்டுக்காக சீருடை அணிந்த குழந்தைகள் சென்றுகொண்டிருந்தார்கள்.
mural at lebakshi