புராவதியும் சுநீதியும்

7

அன்பான ஜெயமோகன்

“ஆகவேதான் பீமதேவன் அவள்மேல் அதுவரை பொழிந்த காதலனைத்தையும் அவள்வயிற்றின்மேல் மாற்றிக்கொண்டதை அவள் ஏற்றுக்கொண்டாள். அவள் வயிறு சுமந்த குழந்தையை எண்ணி அவன் கொண்ட பரவசமும் கவலையும் கொந்தளிப்பும் மோனமும் அவளைஉவகையிலாழ்த்தின.

ஒருநாள் புராவதி ஒரு கனவு கண்டாள். . தவழும் குழந்தையான அம்பை இடையில் கிண்கிணி மட்டுமே அணிந்தவளாக விரைந்து செல்லக்கண்டு அவள் கூவியழைத்தபடி பின்னால் சென்றாள்.படியிறங்கி உள்முற்றம் சென்ற குழந்தை அங்கே புகைவிட்டெரிந்த தூப யானத்தின் செங்கனலை அள்ளி அள்ளி வாயிலிட்டு உண்ணத்தொடங்கியது. ஓடிச்சென்று அதை அள்ளி எடுத்து வாயைத்திறந்து பார்த்தாள். வாய்க்குள் வேள்விக்குளமென செந்நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.

புராவதி “நான் அரசி அல்ல” என்றாள். “உன் கண்களைப்பார்த்தேன் தேவி . இன்னும் உன் அனல் அவியவில்லையா என்ன?” என்று பீமதேவன் கண்ணீருடன் கேட்டார். “என் சிதையெரிந்தாலும் எரியாத அனல் அது” என்று புராவதி சொன்னாள். . தாடை உரசி பற்கள் ஒலிக்க “என் குழந்தை மாளிகை வாயிலில் வந்து நின்றாள் என அறிந்த நாளில் என்னுள் அது குடியேறியது” என்றாள்.” (முதற்கனல் பகுதி 4, அணையாச்சிதை 5, பக்கம் 203-214)


“ஒவ்வொருவரும் அவளுடைய முடிவிலா ஆற்றலை உணர்ந்தனர். அவளறியாத ஏதும் எங்குமிருக்க இயலாதென்பதுபோல. ஆடையில்லாது மட்டுமே அவள் முன் சென்று நிற்கமுடியும் என்பதுபோல. உத்தானபாதன் அவள் கூர்மையை அஞ்சினான். பேருருவை சுருக்கி ஓர் எளிய அன்னையாக அவள் தன் முன் வந்து நிற்கலாகாதா என ஏங்கினான். இடைநாழியில் அவள் நடந்து செல்கையில் அறியாது எதிரே வந்த சுருசி அஞ்சி சுவரோடு சாய்ந்து நின்று கைகூப்பினாள்.

ஒருநாள் சுநீதி ஒரு கனவு கண்டாள். காட்டில் பிறந்த உடலுடன் குருதி வழியும் தொப்புள்கொடியை தன் வாயில் வைத்து சுவைத்தபடி நின்றிருக்கும் துருவனை. “மைந்தா” என அவள் கூவ அவன்சிரித்துக்கொண்டே காட்டுக்குள் ஓடினான். அவள் கைநீட்டிப்பதறியபடி அவன் பின் ஓட அந்தக்காட்டின் அத்தனை இலைகளிலிருந்தும் குருதி ததும்பிச் சொட்டியது.

விழித்துக்கொண்ட சுநீதி எழுந்து தன் அரச உடைகளை உடலில் இருந்து கிழித்து வீசியபடியே அரண்மனை விட்டு ஓடினாள். அவள் சென்ற வழியெங்கும் ஆடைகளும் அணிகளும் பின்பு குருதியும்
சிந்திக்கிடந்தன. .அரசியல்லாமலானாள்.குலமகளல்லாமலானாள். பின் பெண்ணென்றே அல்லாமலானாள். பேதை அன்னை மட்டுமாகி காடெங்கும் அழுதுகொண்டே அலைந்தாள்.”
(பிரயாகை 3, பெருநிலை 3)

புராவதி அம்பைக்கு இழைக்கப்பட்ட அநீதி தாங்காமல் துயர் கொள்கிறாள். அந்த அநீதியில் அவளுக்கும் பங்கு உண்டு. ஆயிரம் பயணிகளுக்கு அன்னமிட்டுப் பசி போக்குகிறாள். துறவு கொள்கிறாள். எதுவுமே அவளுக்கு அமைதி அளிக்கவில்லை. நெருப்பில் வெந்து மரணம் கொண்டே அதை அடைகிறாள்.

சுநீதி துருவனைத் தேடி நாடு நீங்குகிறாள். அவனைத் தேடியலைந்து பித்தியாகிறாள். அவனே அவளை அறியாதபோது அதுதான் தன் விதி எனத் தெளிந்து அவன் அருகே அமர்கிறாள்.

புராவதி, சுநீதி இருவருமே இழந்த தமது குழந்தைகளைக் கனவில் காண்கிறார்கள். அக்கனவுகள் அனலும் குருதியுமாக எரிகின்றன. எரிக்கின்றன.

இரு குழந்தைகளுக்கும் அவர்கள் தந்தையர்களே அநீதி இழைக்கிறார்கள். தந்தையர்கள் மகவுகளுக்கு இழைக்கும் அநீதி போலத் தாய்மாரைக் கொதித்தெழச் செய்வது வேறொன்றும் இல்லை.

சங்கச்சித்திரங்கள், பெற்ற நெருப்பு பகுதியில் யோகாவின் மனைவியின் கனவில் குலம் வருகிறான். “கையில் புத்தகக் கட்டும் அரை டிராயருமாக வருவான். துக்கத்துடன் ஏதோ சொல்ல ஆரம்பிப்பான். அதற்குள் கனவு கலைந்து விடும். என் குழந்தைக்கு என்னிடம் ஏதோ சொல்ல வேண்டும். அது என்ன என்று அவனிடம் நான் கேட்க வேண்டும்….” குலம் இயக்கத்தில் களப்பலியான மகன்.

தாம் பெற்ற பிள்ளைகள் என்கிற போது அன்னையரால் தர்க்கபூர்வமாகச் சிந்திக்க முடிவதில்லை. தந்தையர் கூறும் தர்க்கங்களில் சில சமயம் மறுக்க முடியாத நியாயங்கள் இருப்பினும் கூட அது அங்கே எடுபடுவதில்லை.

பெண்கள் மனைவிகளாக, எளிய தாய்மாராக இருக்க வேண்டும் என்று ஆண்கள் விரும்புகிறார்கள். இத்தனை மூர்க்கம் கொண்டு அன்னைகளாக மட்டுமே அவர்கள் ஆவதை கணவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை, அங்கே அவர்களுக்கு இடமில்லை. அது அவர்களை அச்சப் படுத்துகிறது. அத்தனை ஆற்றலுடன் வெளிப்படுகிற அன்னை என்கிற சக்தி இயல்பானது அல்ல போலத் தோன்றுகிறது. அப்போது அவள் அரசியல்ல, குலமகள் அல்ல, பெண்ணுமே அல்ல. அன்னை மட்டுமே.

இதன் நகைமுரண் என்னவென்றால் கணவன் பொழிந்த காதல் அனைத்தும்தான் அக்குழந்தையாகிறது. அது அவனை விட உறுதியான இடத்தை அவன் மனைவியிடம் அமைத்துக் கொள்கிறது.

இதை வேறு இடங்களில் “அவள் அன்னை விலங்காக மட்டுமே கிடந்தாள்” “பெண்கள் கருப்பையால் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள், ஆண்கள் சித்தத்தால் கட்டப் பட்டிருக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறீர்கள்.

ஆனால் அதுதான் இயல்பானது, எப்போதும் இருக்கிறது. அவசியம் இல்லாதபோது அது வெளிப்படுவதில்லை என்றுதான் கொள்ள வேண்டும்.

ரவிச்சந்திரிகா

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 11
அடுத்த கட்டுரைகலைஞனின் உடல்