பகுதி மூன்று : இருகூர்வாள் – 3
பிற்பகல் முழுக்க அர்ஜுனன் நிலைகொள்ளாமலேயே இருந்தான். சேவகர்களிடம் பொருளின்றியே சினம்கொண்டு கூச்சலிட்டான். அறைக்குள் இருக்க முடியவில்லை. ஆனால் வெளியே சென்று முகங்களை நோக்கவும் தோன்றவில்லை. அறைகளுக்குள் சுற்றி நடந்துகொண்டிருந்தவன் ஏன் இப்படி நடக்கிறோம் என்று உணர்ந்ததும் அமர்ந்துகொண்டான். பின்னர் தலையை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு கண்களை மூடி கண்ணுக்குள் சுழன்றுகொண்டிருந்த ஒளிப்பொட்டுகளை நோக்கிக்கொண்டிருந்தான். தொடைகளை அடித்தபடி எழுந்து “சுடுகாட்டுக்குப்போகட்டும் அனைத்தும்” என்றான். என்ன சொல் அது என அவனே செவிகூர்ந்தபின் சலிப்புடன் தலையை அசைத்தான்.
சேவகன் வந்து நின்றான். அவன் விழிதூக்கியதும் “தங்களை அழைத்துவரச்சொன்னார் மூத்தவர்” என்றான். “ம்” என்றபின் அவன் பெருமூச்சு விட்டு உடலைத் தளர்த்தினான். பின்பு கடுங்குளிருக்கு இறுகியவை போலிருந்த முகத்தசைகளை தளர்த்துபவன்போல கைகளால் கன்னங்களை வருடிக்கொண்டான். சட்டென்று சால்வையை எடுத்துப்போட்டுக்கொண்டு “செல்வோம்” என்றான். சேவகன் “தாங்கள்…” என்று ஏதோ சொல்லவந்தபின் சரி என்று தலையை அசைத்தபடி முன்னால் ஓடினான்.
இடைநாழியில் சாளரங்கள் வழியாக காற்று உள்ளே பீரிட்டுக்கொண்டிருந்தது. அது சால்வையையும் தலைமுடியையும் அசைத்தது. அர்ஜுனன் மெல்ல அகம் எளிதாவதை உணர்ந்தான். வெறும் காற்றே அகச்சுமையை குறைக்கமுடியுமா என எண்ணிக்கொண்டான். ஏதாவது ஒன்றை அகமே எதிர்பார்த்திருந்திருக்கலாம். எண்ணங்களை வேறெங்காவது செலுத்தமுடிந்தால் நன்று. ஆனால் எங்கே? அம்புக்குவியல்கள் அன்றி அவனறிந்தது ஏதுமில்லை. பீமனைப்போல யானைகளிலும் சமையலிலும் காட்டிலும் அவன் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டிருக்கலாம். அம்புகள் சலிப்பூட்டுகின்றன. அவை அளவுகள் கொண்டவை. உயிரற்றவை. புதியதாகி வியப்பூட்ட அவற்றால் முடிவதில்லை. தங்களைத் தாங்களே அவை கடந்துசெல்வதில்லை.
என்ன எண்ணங்கள் இவை என அவனே வியந்துகொண்டான். ஓர் அழுத்தமேறிய அகத்தருணத்தை சந்திக்கையில் உள்ளே சொற்கள் உருகிவளைந்துவிடுகின்றனவா என்ன? சுடுகாட்டில் சிதையில் வைக்கப்பட்ட படைக்கலங்கள் உருகி வளைந்து போயிருப்பதைக் கண்டிருக்கிறான். அவை அதுவரை சொல்லிக்கொண்டிருந்த ஒன்றை இழந்துவிட்டிருக்கும். இல்லை, அதுவரை சொன்னவற்றை அவையே கேலிசெய்துகொண்டிருக்கும். படைக்கலங்களுக்கு பித்தெடுத்து நடமிடுவதுபோல.
தன்னுள் ஓடிக்கொண்டே இருக்கும் எண்ணங்களை அவன் அக்கணம் வெறுத்தான். அவனுக்குள் இருந்தபடி அவை தங்களுக்கான தனிப்பாதை ஒன்றில் சென்றன. அவன் திரும்பி நோக்கினால் அனைத்தும் அடங்கி அசைவற்று காத்திருந்தன. அவன் திரும்பிக்கொண்டதும் உயிர்கொண்டெழுந்தன. எண்ணங்களெனும் பேய்வெளி ஒன்று தன்னுள் உறைவதை மனிதன் எப்போது காணத் தொடங்கினானோ அப்போதுதான் பாதாளத்தையும் கண்டிருப்பான். மீண்டும் பொருளற்ற சொற்றொடர். சூதர்கள்தான் பொருளற்ற சொற்களை கவிதை என்பார்கள். ஆனால் தெற்குவாயிலில் அவர்களின் தெருக்களில் அப்படி பேசிக்கொண்டிருக்கமாட்டர்கள்.
தருமன் அறைக்கு வெளியே பீமனின் பாதுகைகளைக் கண்டான். சேவகன் தலைவணங்கி உள்ளே அழைத்துச்சென்றான். உள்ளறைக்குள் பீமன் கால்களை அகலவிரித்து மஞ்சத்தில் அமர்ந்திருக்க தருமன் அவனைக்கண்டதும் எழுந்து வந்தான். “அன்னையைப் பார்த்தாயா? என்ன சொன்னார்?” என்றான். “நீங்கள் எதிர்பார்த்ததைத்தான் மூத்தவரே. நீங்கள் உயிர்வாழ்வதென்றால் அஸ்தினபுரியின் மன்னராகவே இருந்தாகவேண்டும் என்கிறார் அன்னை. இல்லையேல் நீங்கள் உயிர்துறப்பதே மேல் என்கிறார்.”
தருமன் திகைத்த விழிகளைத் தூக்கினான். “நீங்கள் உயிர்துறந்தால் அதன் விளைவாக எஞ்சிய பாண்டவர்களை பைசாசிக வழிக்கு இட்டுச்செல்கிறீர்கள் என்றார் அன்னை. பெரியதந்தையையும் பிதாமகரையும் கௌரவர்களையும் கொன்று ஆட்சியை கைப்பற்றும்படி சொல்கிறார்” என்று சொன்னபோது தன்னுள் எழுந்த கசப்பை அர்ஜுனன் உணர்ந்தான். தன்னை வதைத்துக்கொள்பவர்களே பிறரையும் வதைக்கிறார்கள் என்று எண்ணியதுமே தருமன் மேல் கனிவு எழுந்தது அவனுள்.
தளர்ந்து தருமன் இருக்கையில் அமர்ந்தான். அர்ஜுனன் அமர்ந்தபடி “அதை அவர் வெறுமனே சொல்லவில்லை என நீங்கள் அறிவீர்கள்” என்றான். தருமன் “ஆம், அவர் வீண் சொல் சொல்பவரல்ல” என்றான். சிலகணங்கள் பீமனை நோக்கியபின் “நான் செய்யவேண்டியது ஒன்றே. நான் உன்னிடம் சொன்னது” என்றான். பதற்றத்துடன் “மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “வேண்டாம். நான் வாழ்வதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை. இறந்தபின் சிலநாட்களிலேயே மறக்கவும்படுவேன். ஆனால் மூத்தோரை மீறி வாழ்வதன் பெருவதையை நான் தவிர்க்கமுடியும்” என்ற தருமன் “அவ்வண்ணமே ஆகட்டும்” என்றான்.
பீமன் வாயை சப்புக்கொட்டியபடி அசைந்து அமர்ந்தான். அவன் மதுவருந்தியிருப்பது வாசனையால் தெரிந்தது. “மூத்தவரே, இம்முறை நீங்கள் இறப்பீர்கள் என்றுதான் தோன்றுகிறது” என்று எடைமிகுந்த நாக்குடன் சொல்லி கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தான். “அதில் நான் செய்வதற்கேதுமில்லை.” தருமன் “மந்தா, இந்தத் தருணத்தில் நீ என்னை கைவிடலாமா?” என்றான். “நான் எப்போதும் பிறரது அரசியலில் கருவிதானே மூத்தவரே” என்றான் பீமன் நகைத்தபடி.
தருமன் மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாதவனாக அமர்ந்திருந்தான். பீமன் “நீங்கள் இப்போது அவசரப்படவேண்டியதில்லை மூத்தவரே. இதெல்லாம் எங்கு சென்று முடிகிறது என்று பார்ப்போம்” என்றான். “பெரும்பாலான உலகநிகழ்வுகள் அவையே முட்டிமோதி ஒரு சமநிலையை கண்டடைந்துவிடும். நாம் பொறுமையாகக் காத்திருந்தாலே போதும்.” தருமன் பெருமூச்சுடன் “அறமென்றால் உடனே உங்கள் இருவரிடமும் உருவாகும் கசப்பு ஏன் என்றே எனக்குப்புரியவில்லை” என்றான்.
பீமன் கனத்த கைகளை மடியில் ஊன்றி முன்னால் சரிந்தான். “ஏனென்று உங்களுக்குத் தெரியவில்லையா மூத்தவரே? உண்மையிலேயே உங்கள் அகம் அதை அறியாதா?” என்றான். தருமன் “என்ன சொல்கிறாய்?” என்றான். “சரி, உங்களுக்குத் தெரியவில்லை என்றே கொள்கிறேன். மூத்தவரே, நாம் பேடியின் மைந்தர்கள். நீங்கள் ஓயாமல் அறம்பற்றிப்பேசுவதும் நானும் இவனும் ஆற்றலைப்பற்றிப் பேசுவதும் அதனால்தான்.”
“மந்தா, என்ன சொல்கிறாய்?” என்றான் தருமன் சினத்துடன். பீமன் சிரித்து “அதுதான் உண்மை. நமது தந்தை ஆண்மையற்றவர் என்பதை இந்த நாடே அறியும். நாம் எப்படிப்பிறந்தோம் என்றும் அனைவரும் அறிவர்.” தருமன் “மந்தா…” என்று ஏதோ சொல்லவர பீமன் கையை நீட்டி “நம் தந்தையின் வலிமையில்லாத வெளிறிய உடலை நாம் மூவருமே கண்டிருக்கிறோம். அந்தச் சித்திரம் நமக்குள் இருந்துகொண்டேதான் இருக்கும். எனக்குள் ஒரு கணமும் அது ஓய்ந்ததில்லை. என் தோள்களை மேலும் மேலும் வலிமைகொண்டதாக ஆக்குவது அதுதான். வலிமை ஒன்றைத்தவிர வேறெதையும் நான் நாடவில்லை. இவனுடைய கண்களில் கூர்மையாகவும் கைகளில் விரைவாகவும் திகழ்வதும் அதுவே.”
தருமன் பார்வையை திருப்பிக்கொண்டான். “அது உலக இயல்பு மூத்தவரே. எங்கும் வல்லமையற்ற தந்தையரின் மைந்தர்களே வாழ்க்கையை வெல்கிறார்கள். அது இப்புவியை இயக்கும் ஆதிவல்லமைகள் வகுத்த விதியாக இருக்கலாம். அதன்மூலம் அவை எதையோ சமன்செய்துகொண்டிருக்கலாம். எளியோனின் மைந்தர்கள் பிறப்பிலேயே அறைகூவலை எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொரு கணமும் போராடவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அதன் வழியாக அவர்களின் ஆற்றல் வளர்கிறது. தடைகளை கடந்து செல்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் வென்றாக வேண்டும். தங்களை நிறுவிக்கொண்டாகவேண்டும். நம்முள் இருப்பது அந்த விழைவே. அது இருக்கும்வரை நாம் உலகையே அள்ளிக்கொள்ளத் துடிப்போம். எதை அடைந்தாலும் நிறைவுறமாட்டோம்” என்றான் பீமன்.
“நான் அப்படி நினைக்கவில்லை” என்றான் தருமன் மெல்லிய குரலில். பீமன் உரக்க “அந்த விடிவெள்ளிப் பேச்சை நினைவுறுகிறேன் மூத்தவரே. இளமையிலேயே அறிந்துவிட்டீர்கள் உங்களால் ஆற்றலை அடையமுடியாதென்று. ஆகவே அறத்தைப்பற்றிக்கொண்டுவிட்டீர்கள். அன்று நம் தந்தையை ஓர் அறச்செல்வனாக பேசிப்பேசி உருவாக்கினீர்கள். அவரது வழித்தோன்றலாக உங்களை வைத்துக்கொண்டீர்கள். மிகவிரிவான ஒரு அகநாடகம் வழியாக அன்று நீங்கள் நடிக்கவேண்டிய வேடத்தை வகுத்துக்கொண்டீர்கள்.”
“நீ என்னை அவமதிக்க விரும்பினால் அதை நேரடியாகவே செய்யலாம்” என்றான் தருமன். “உங்களை அவமதிப்பது என்னை அவமதிப்பதேதான்” என்றான் பீமன். “நான் உங்களை அறியமுயல்கிறேன். அது என்னை அறிவதற்குச் சமம்” என்றபடி எழுந்து தருமன் அருகே வந்து ஓங்கிய உடலுடன் நின்றான். கனத்த கைகளை நீட்டி “இப்போது இந்தப்பாவனை எதற்கு? அரசைத் துறந்து அறத்தில் நிலைப்பதன் வழியாக நீங்கள் பாண்டுவின் மைந்தன் என்ற சிறுமையை வென்று செல்ல நினைக்கிறீர்களா?” என்றான்.
தருமன் ஏதோ சொல்வதற்குள் பீமன் “அது மூடத்தனம் மூத்தவரே. நீங்கள் அரசு துறந்து காட்டுக்குச் சென்றால் நீங்களும் ஒரு பாண்டுவாகவே அறியப்படுவீர்கள். இறந்தால் அஞ்சி மறைந்தவராகவே நினைவுகூரப்படுவீர்கள்” என்றான். தருமன் உரக்க “வேறென்ன செய்யவேண்டும்? உங்கள் இருவரைப்போல கொலைவெறிகொண்டு எழவேண்டுமா?” என்றான். “ஆம், பேடியான பாண்டுவின் மைந்தர்கள் என்ற அடையாளத்தை நாங்கள் எங்கள் ஆற்றலால் வெல்வோம். எங்கள் தமையன் என்பதன் வழியாக நீங்களும் அதை வெல்வீர்கள். அதுவே உண்மை” என்றான் பீமன்.
தருமன் சீறி எழுந்து விரல்சுட்டி “மந்தா” என்று கூவினான். அவன் உதடுகள் துடித்தன. அர்ஜுனன் “மூத்தவரே, இதென்ன அர்த்தமில்லாத பேச்சு?” என்றான். “இந்தப்பூசலுக்காகவா என்னை வரச்சொன்னீர்கள்?” என்று தருமனின் தோள்களைப்பற்றினான். “இவனை எனக்குத்துணையாக வரச்சொன்னேன். என்னை அவமதித்துக்கொண்டே இருக்கிறான். என்னை வேடதாரி என்கிறான். பொய்யன் என்கிறான்” என்று தழுதழுத்த குரலில் தருமன் சொன்னான்.
“நான் அப்படிச் சொல்லவில்லை” என்றான் பீமன். “மூத்தவரே, நான் ஒருபோதும் அப்படிச் சொல்லவில்லை. நாங்கள் எங்கள் பிறப்பின் அடையாளத்தைக் கடக்க எங்கள் வழியில் முயல்கிறோம். நீங்கள் உங்கள் வழியில் முயல்கிறீர்கள். இருசாராருமே தத்தளிக்கிறோம். அதையே சொன்னேன்.” தருமன் சலிப்புடன் தலையசைத்தான்.
“நான் தத்தளிக்கவில்லை” என்றான் தருமன். “எந்தையின் அடையாளத்தை ஒருபோதும் நான் துறக்கப்போவதில்லை. எங்கும் எவரிடமும் அவரது மைந்தனென்றே நான் சொல்லிக்கொள்வேன்.” பீமன் “நாம் சொல்லாவிட்டாலும் அப்படித்தானே?” என்றான். “நீ விஷமயமாகிவிட்டாய் மந்தா. உன் ஆன்மா முழுக்க விஷம் நிறைந்துவிட்டது” என்றான் தருமன். “ஆம், அந்த விஷத்தின் ஆற்றலே நான். அதைக்கொண்டுதான் நீங்கள் விரும்பியதையெல்லாம் அடைகிறீர்கள்” என்றான் பீமன்.
“போதும், எதற்காக இப்படி பூசலிடுகிறோமென்றே புரியவில்லை” என்றான் அர்ஜுனன். தருமன் பெருமூச்சுடன் “என்னை எவருமே புரிந்துகொள்வதில்லை. இப்புவியில் என்னைப்போல தனியன் எவருமில்லை” என்றான். “தர்மம் தனித்துத்தானே செல்லவேண்டும்?” என்றான் பீமன். “மூத்தவரே, தாங்கள் சற்று பேசாமலிருக்கமுடியுமா?” என்றான் அர்ஜுனன். “அவ்வளவுதானே, நான் இனி பேசவேபோவதில்லை. இளையவனே, நான் பேசவிழைபவனே அல்ல” என்றபின் பீமன் அமர்ந்துகொண்டான்.
அறைக்குள் அமைதி நிலவியது. ஒருவரை ஒருவர் உடலால் உணர்ந்தபடி விழிதாழ்த்தி அமர்ந்திருந்தனர். பேசாமலிருக்கையில் பிறரது இருப்பு எத்தனை அழுத்தம் கொண்டுவிடுகிறது என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். அந்த அழுத்தத்தை வெல்லத்தான் பேசிக்கொள்கிறார்களா? மனிதர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதுமில்லை. பேச்சு என்பது பிறருடன் இருக்கையில் அந்த இடத்தை இயல்பாக வைத்திருக்கும் வழிமுறை மட்டுமே. அதற்கப்பால் ஒன்றுமில்லை.
தருமன் மெல்ல அசைந்தபோது பீமனும் அர்ஜுனனும் விழிதூக்கி நோக்கினர். அவன் பெருமூச்சுடன் தன் சால்வையை இழுத்துப்போட்டபடி பொதுவாக “அமைச்சரை வரச்சொல்லியிருந்தேன்” என்றான். இருவரும் ஒன்றும் சொல்லவில்லை. “அவர் ஏதேனும் வழியைச் சொல்லட்டும். எப்போதும் வெளியே நிற்பவர் என்பதனால் அவரால் உகந்ததைச் சொல்லமுடியும்” என்றான் தருமன். “ஆம், அவர் நம்மவர் என்பதனால் நமக்குகந்ததைச் சொல்வார். ஆகவே அது சரியாகத்தானே இருக்கும்?” என்றான் பீமன். தருமன் தலையில் கையை வைத்துக்கொண்டான்.
மீண்டும் அமைதி ஏற்பட்டது. பீமன் தன் கைவிரல்களை சொடுக்கெடுத்தான். அந்த ஒலி சுள்ளிகள் ஒடிவதுபோல உரக்கக் கேட்டது. ஒவ்வொருமுறையும் அந்த அதிர்வை வாங்கியபடி தருமன் முகம் சுளித்தான். சேவகன் வந்து “அமைச்சர் விதுரர்” என்று சொன்னதும் அர்ஜுனன் பெரிய விடுதலையை உணர்ந்தான். தருமன் எழுந்தான். அர்ஜுனனும் எழுந்துகொண்டான். பீமனைநோக்கி “மந்தா, அவர் நம் தந்தைக்கு நிகரானவர். நீ எழுந்து நின்று அவரை வரவேற்கவேண்டும்” என்றான். “அவர் வரும்போது எழுந்தால்போதாதா?” என்றபடி பீமன் எழுந்தான்.
உள்ளே வணங்கிக்கொண்டே வந்த விதுரரின் கண்களை அர்ஜுனன் கவனித்தான். ஒருகணத்தில் மூவரையும் தொட்டு அங்கே நிலவும் மனநிலையை அவர் உணர்ந்துகொண்டார். இளநரை ஓடிய சுருள்தாடியும் பிடரியில் சரிந்த குழல்கற்றைகளும் குறுகிய கரிய உடலும் கரியவைரங்கள் போல ஒளிவிட்ட கண்களும் கொண்டவர். கிருஷ்ணதுவைபாயன மகாவியாசரின் தோற்றம் அது என்று சூதர்கள் பாடுவதுண்டு. ஆனால் சூதர்களின் தெற்குத்தெருவுடன் அவருக்குத் தொடர்பில்லை. மதுராவின் அரசனின் மகளை மணந்தவர். ஒருமுறையேனும் அவர் தெற்குத்தெருவுக்குச் சென்றிருக்கிறாரா?
சீரான சிறிய வெண்பற்கள் மின்னும் இனிய புன்னகையுடன் வந்தார். தருமன் “வணங்குகிறேன் அமைச்சரே” என்றான். அர்ஜுனனும் பீமனும் வணங்கினர். அவர் ஆசியளித்தபின் அமர்ந்துகொண்டார். அவரது பார்வை அர்ஜுனனை வந்து தொட்டு மீண்டது. எப்போதும் போல அதில் ஓர் அச்சம் மின்னி அணைந்தது.
“நான் சொன்னதை அன்னை ஏற்றுக்கொள்ளவில்லை அமைச்சரே” என்றான் தருமன். விதுரர் புன்னகைத்து “நான் அதை அப்போதே சொன்னேன்” என்றார். “ஆம், அவர்…” என்று தருமன் சொல்லத் தொடங்க விதுரர் மறித்து “அவர் என்னசொல்வார் என நான் நன்கறிவேன்” என்றார். “நீங்கள் இறப்பினும் அவர் பொருட்படுத்தப்போவதில்லை என்றார் அல்லவா?” தருமன் தத்தளிப்பு நிறைந்த விழிகளுடன் “ஆம்” என்றான்.
“உண்மையிலேயே அவர் சற்றும் பொருட்படுத்தமாட்டார். அவரது உள்ளம் இலக்குகொண்டுவிட்டது. இனி அதை மாற்றமுடியாது” என்றார் விதுரர். “பெண்கள் அப்படித்தான். சின்னஞ்சிறுமியரில்கூட அதைக் காணலாம். அவர்கள் ஒன்றை விரும்பிவிட்டால் அதை அவர்கள் அடையவேண்டும், இல்லையேல் இறக்கவேண்டும்.” புன்னகையுடன் “அந்த விழைவு நீடிக்கட்டும். அது உங்களுக்கு பெரும் படைக்கலமாகவே ஆகும்” என்றார். தருமன் ஒருகணம் அர்ஜுனனை நோக்கியபின் மீண்டான்.
“நான் என்ன செய்வது அமைச்சரே?” என்றான் தருமன். “இக்கணம் அனைவரும் செய்யக்கூடுவது ஒன்றே, காத்திருப்பது” என்றார் விதுரர். பீமன் தன்னையறியாமல் நகைக்க விதுரர் அவனை திரும்பி நோக்கியபின் புன்னகையுடன் “இளையவர் அவ்வழியையே சொல்லியிருப்பார் போலும்” என்றார். அர்ஜுனன் “ஆம்” என்றான். “எந்த ஒரு ஆடலிலும் நிகழ்வுகளை நாம் நமக்குகந்த வகையிலேயே புரிந்துகொள்கிறோம். அதையொட்டி உணர்வுக்கொந்தளிப்பை அடைகிறோம். அக்கொந்தளிப்புகள் சற்று தணிவதற்காகக் காத்திருந்தபின் சிந்திப்போம் என்றால் மாற்றுவழிகள் தென்படும். ஆகவே, அரசு சூழ்தலின் முதல் விதியே பொறுத்திருத்தல், காத்திருத்தல்தான்.”
“நான் அதை வேட்டையிலிருந்து கற்றுக்கொண்டேன்” என்றான் பீமன். “இதுவும் வேட்டைதான்” என்றார் விதுரர். “ஆனால் அன்னை…” என தருமன் சொல்லத்தொடங்கியதும் விதுரர் “முடிவு எடுக்கவேண்டியவர் மாமன்னர் திருதராஷ்டிரர். அவர் என்ன முடிவெடுக்கிறார் என்று பார்ப்போம். அவரது முடிவை ஒட்டி நாம் மேலே சிந்திப்போம்” என்றார். “அதற்குமுன் நாம் பேசிக்கொள்பவை எதற்குமே பொருளில்லை. அவை நம் கற்பனைகள் மட்டுமே.”
“நான் பீஷ்மரின் வார்த்தையை மீறி முடிசூட விழையவில்லை” என்றான் தருமன். “தேவையில்லை. மாமன்னர் நீங்கள் இளவரசாகவேண்டுமென முடிவெடுத்தால் அதை ஏற்றுக்கொள்வதில் பிழையில்லை. ஏனென்றால் அங்கே நீங்கள் பீஷ்மபிதாமகரின் வாக்கை மீறவில்லை. முடியை பாண்டுவுக்கு அளித்தவரே உங்களுக்கு அளிக்கிறார். மாறாக தன் மைந்தன் முடிசூடவேண்டுமென அவர் முடிவெடுக்கலாம். அதை நாமனைவருமே ஏற்றாகவேண்டியதுதான். ஏனென்றால் அவரே அஸ்தினபுரிக்கு அதிபர். நம் குலமூதாதை.”
“அன்னை ஏற்கமாட்டார்” என்றான் அர்ஜுனன். “ஆம். அது இன்னொரு வினா. இதனுடன் தொடர்புடையது அல்ல. அதை தனியாக சந்திப்போம். அன்னை விழைவதென்ன என்று கேட்போம். அவர் சந்திக்கவேண்டியிருக்கும் தடைகளை விளக்குவோம். இருபக்கத்தையும் சுட்டிக்காட்டியபின் ஒரு சமநிலைப்புள்ளியை நோக்கிச் செல்வோம்.” அர்ஜுனன் வியப்புடன் விதுரரை நோக்கினான். இரு தனி பேசுபொருட்களாக அவற்றைப்பிரித்ததுமே அவை மிக எளிமையாக ஆகிவிட்டன. அவன் எண்ணத்தை அறிந்ததுபோல விதுரர் “இக்கட்டுகளை தனித்தனி வினாக்களாகப் பிரித்துக்கொள்வதே அவற்றைப் புரிந்துகொண்டு கையாள்வதற்கான முதல் வழி” என்றார்.
அதுவரை சூழ்காற்றில் இருந்த அனைத்து அழுத்தமும் விலக எதற்காக அத்தனை உணர்வெழுச்சிகள் என்று அர்ஜுனன் எண்ணினான். இளையவர்களாக இருப்பதன் விளைவா அது? அவன் புன்னகையுடன் “இத்தனை நேரம் இந்த இக்கட்டைப்பற்றி பேசும்பொருட்டு இதனுடன் தொடர்பில்லாத உணர்ச்சிகளை அடைந்துகொண்டிருந்தோம் அமைச்சரே” என்றான். “ஆம், அதுதான் இளையோரின் வழி. புரிந்துகொண்டபின் உணர்வுகளை அடையமாட்டார்கள். உணர்வுகள் வழியாகவே புரிந்துகொள்ள முயல்வார்கள்” என்று விதுரர் மெல்ல நகைத்தார்.
“அமைச்சரே, அவர்கள் என்னதான் செய்கிறார்கள்?” என்றான் தருமன். “நேற்று முன்தினம் காந்தார இளவரசர் வந்து திருதராஷ்டிர மாமன்னரைச் சந்தித்தார். அனைத்து முறைமைகளின்படியும் துரியோதனனே இளவரசாக பட்டம்சூட்டப்படவேண்டும் என்றும் அதுவே பீஷ்மரின் வாக்கு என்றும் விளக்கினார். பீஷ்மபிதாமகர் எண்ணுவதென்ன என்று திருதராஷ்டிர மாமன்னர் கேட்டார். முடிவெடுக்கும் உரிமை திருதராஷ்டிரரின் கைகளுக்கு வந்தபோதே மணிமுடியும் வந்துவிட்டது. அதை அவர் எவருக்கு வேண்டுமென்றாலும் அளிக்கலாம் என்றார் பிதாமகர் என்று சகுனி சொன்னார்” என்றார் விதுரர்.
“உங்களிடம் அவர் என்னசெய்வதென்று கேட்கவில்லையா?” என்றான் பீமன். அந்த நேரடிக் கேள்வியால் தருமன் மட்டுமல்லாமல் அர்ஜுனனும் திகைக்க விதுரர் புன்னகை மாறாமல் “கேட்டார். ஏனென்றால் நான் அவரது அமைச்சன். நான் சொன்னேன், அவர் முறைமையை மட்டுமே நோக்கவேண்டும். துரியோதனன் அவர் மைந்தன் என்பதனால் பரிவு காட்டலாகாது. மைந்தனுக்கே மணிமுடியைக் கொடுத்துவிட்டார் என்று எவரேனும் சொல்லிவிடுவார்களோ என்றெண்ணி கடுமையும் காட்டலாகாது என்று” என்றார். “அனைத்து அமைச்சர்களிடமும் அவர் பேசலாம் என்றேன். இன்று இரவில் அவர் பேசவிருக்கிறார். அனேகமாக நாளை முடிவெடுப்பார்.”
நாளை என்ற சொல் தனியாக வந்து விழுந்தது. அதுவரை பேசியவை அனைத்தும் பொருளற்றுப்போய் அச்சொல் மட்டுமே நின்றது. அதைச்சுற்றி நால்வரும் அமைதியாக நின்றனர். “நாளைவரை காத்திருப்போம், வேறென்ன?” என்றான் பீமன். விதுரர் எழுந்துகொண்டு “நான் அமைச்சகம் செல்லவேண்டும். எல்லைப்புற பொறுப்பாளர் தம்ஷ்ட்ரர் எனக்காகக் காத்திருக்கிறார்” என்றார்.
“எல்லையில் ஏதேனும் தாக்குதலா?” என்றான் தருமன். “ஒருநாட்டில் அதிகாரப்பரிமாற்றம் நிகழும்போதெல்லாம் எல்லையில் சிறிய பூசல்கள் வெடிக்கும்” என்றார் விதுரர். “நாம் நமது ஒற்றர்களை அங்கே அனுப்பும்போது நாட்டுக்குள் உளவறிவதில் தளர்வு ஏற்படும். மாற்றார் தங்கள் ஒற்றர்களை இங்கே நிறைக்கமுடியும்.” புன்னகையுடன் “இதெல்லாம் அனைவருக்குமே தெரியும். இருந்தாலும் ஒரு சடங்குபோல செய்துவருகிறோம்” என்றபின் வெளியே சென்றார்.
பீமன் “இளையவனே, நான் சற்று ஓய்வெடுக்கவிருக்கிறேன். நீ என்னுடன் வருகிறாயா?” என்றான். அர்ஜுனன் தலையசைத்துவிட்டு எழுந்தான். தருமனை வணங்கிவிட்டு வெளியே சென்றார்கள். காலைமுதல் தன்னை நிலைகொள்ளாமல் அலைக்கழியச்செய்த இக்கட்டுகளெல்லாம் பொருளிழந்துவிட்டிருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். ஆனால் நிம்மதிக்கு மாறாக உள்ளம் ஏமாற்றமே அடைந்தது. ஏனென்றால் அந்த இக்கட்டுகள் என்பவை அவற்றுக்கும் அடியில் இருந்த ஒன்றின் விளையாட்டுக்கருவிகள். இக்கட்டுகள் விலகியபோது அது மேலும் திடமாக எழுந்து வந்து நின்றது. அவன் உள்ளம் மேலும் நிலையழியத் தொடங்கியது.
பீமன் “நான் காட்டுக்குச்செல்கிறேன்” என்றான். “ஓய்வெடுப்பதாகச் சொன்னீர்கள்?” என்றான் அர்ஜுனன். “ஓய்வெடுக்கத்தான். காட்டில் நான் ஒரு நல்ல தொட்டில் கட்டிவைத்திருக்கிறேன். அங்கே படுத்துத் துயின்றால்தான் நாளை நான் புதியமனிதனாக எழமுடியும்…” என்றபின் கண்களைச் சிமிட்டியபடி “என்னை குரங்கின் மைந்தன் என்கிறார்கள். கிஷ்கிந்தையின் அனுமனுக்கு இளையவன் நான் என்று ஒரு சூதன் பாடினான். அவனை அழைத்து பத்துகழஞ்சு பொன் கொடுத்தேன். கனிகளை உண்டு மரங்களில் வாழ்வதுபோல் பேரின்பம் ஏதுமில்லை.”
பீமன் திரும்பி அரண்மனையை நோக்கினான். “இளையவனே, இந்தக் கட்டடங்கள்! இவற்றைப்போல நான் வெறுப்பது பிறிதில்லை. சதுரங்கள் செவ்வகங்கள்… பார்க்கப்பார்க்க சலிப்பேறுகிறது. எத்தனை செயற்கையான மடத்தனமான வடிவங்கள். அங்கே காட்டில் இந்த வடிவங்கள் எவற்றையுமே காணமுடியாது. மலைகள் மரங்கள் எல்லாமே அவற்றுக்கான முழுமையில்தான் உள்ளன. இங்குள்ளவர்களின் அகமும் இதேபோல குறைபட்ட வடிவங்களாகவே உள்ளன பார்த்தாயா? இவர்கள் ஆடும் ஓலைகளும் சதுரங்கக் கட்டங்களும் எல்லாம் சதுரங்கள்தான்.” மீண்டும் கண்களைச் சிமிட்டி “அங்கே உன் தமையன் சதுரங்கப்பலகையை விரித்து வைத்து அமர்ந்திருப்பார் இந்நேரம்… இளைப்பாறலுக்காக” என்றான்.
அர்ஜுனன் புன்னகைசெய்தான். “வருகிறாயா? நல்ல காற்றில் படுத்துத் தூங்கு. அங்கே அரைநாழிகை இருந்தால் இங்கே இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் இந்த அற்பச்சதிகள் சிறுமைத்தந்திரங்கள் அனைத்தையும் மறந்துவிடுவாய். நம் மேல் இந்த அரண்மனையும் நகரமும் பொழிந்த அத்தனை சொற்களும் காற்றில் பறந்துபோய் அகம் வெறுமைகொள்ளும். நீயும் ஒரு ஆற்றல்மிக்க குரங்காக ஆகிவிடுவாய்!”
“நான் ஆயுதசாலைக்குச் செல்கிறேன் மூத்தவரே” என்றான் அர்ஜுனன். பீமன் நகைத்து “ஆம், வேறெங்கு நீ செல்லமுடியும்? பார்ப்போம்” என்றபின் விரைந்து இறங்கி ஓடி முற்றத்தை நோக்கிச் சென்றான். அவன் அங்கே குதிரைமேல் ஏறிக்கொள்ளும் ஒலி கேட்டது. அர்ஜுனன் மெல்ல நடந்து சென்று முற்றத்தில் நின்றான். ரதம் வந்து நின்றது. ஒருகணம் சிந்தனைசெய்தபின் “புரவி” என்றான். வெண்புரவியைக் கொண்டு நிறுத்திய சூதன் சம்மட்டியை நீட்டினான். அர்ஜுனன் ஏறிக்கொண்டு மெல்லத் தட்டியதுமே புரவி பெருநடையில் முகவீதி நோக்கிச் சென்றது.
அவன் ஆயுதசாலைக்குத்தான் செல்ல நினைத்தான். ஆனால் புரவியைச் செலுத்த மறந்து அமர்ந்திருந்தான். அது வழக்கமாகச் செல்லும் பாதையில் சிறுநடையில் தலையை அசைத்தபடி சென்றது. நகர்த்தெருவில் மாலை சிவந்து இருண்டுகொண்டிருந்தது. இருபக்கமும் மக்கள் தோளோடு தோள்முட்டி சென்றுகொண்டிருந்தனர். சந்தைகளில் இருந்து திரும்புபவர்கள், கோயில்களுக்குச் செல்பவர்கள். நான்கு யானைகள் வரிசையாக ஈரமான கரிய உடலுடன் கைகளில் சங்கிலியை எடுத்துக்கொண்டு அசைந்தாடிச்சென்றன. ஒரு பல்லக்கு சிவந்த திரைச்சீலைகள் நெளிய மிதந்துசென்றது. அதற்குள் இருந்த வணிகனின் கொடி முன்னால் பறந்தது. கதிர் அடையாளம். கூலவணிகன்.
மாலையில் ஒவ்வொருவரும் துடிப்புடன் இருப்பதுபோலத் தோன்றுவதைப்பற்றி எண்ணிக்கொண்டான். உவகையளிக்கும் எதையோ எதிர்நோக்கிச் செல்பவர்கள் போலிருந்தனர். ஒருவரோடொருவர் கூவிப்பேசினர். சகடங்கள் கூட உரக்க ஒலித்தன. அத்தனை சுவர்களிலிருந்தும் நகரோசை எதிரொலி செய்தது. கண்ணில்பட்ட அத்தனை வண்ணங்களும் அடர்ந்து கொண்டே சென்றன. மாடமுகடுகளில் பொன்னொளி வழிந்தது. கடந்துசென்ற ரதம் ஒன்று எழுப்பிய புழுதி பொன்னிறப்புகையாக தயங்கியது. புரவியின் தோல் மாந்தளிர் போல் ஒளிவிட்டது.
கூடணையும் பறவைகள் வானில் கூவியபடி வடக்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. முச்சந்தியின் பெரிய வாகைமரம் துயின்றுவிட்டிருந்தது. அதில் அணைந்திருந்த காகங்கள் கலைந்து எழுந்து பூசலிட்டன. கரிய புள்ளிகளாக வடக்கிலிருந்து வௌவால்கூட்டம் ஏறி வானை நிரப்பியது. இருண்டதும் அவை ஓசையின்றி நகர்மேல் பரவி அத்தனை மரங்களையும் சூழ்ந்துகொள்ளும்.
அவனை சிலரே அடையாளம் கண்டனர். அவர்களின் வணக்கங்களை அவன் சற்றே தலைதாழ்த்தி ஏற்றுக்கொண்டான். கிழக்குக்கோட்டை முகப்பு நோக்கிச் செல்லுமிடத்தில் அவன் தயங்க அவன் உள்ளத்தை அறிந்து புரவியும் தயங்கியது. அவன் கோட்டையை நோக்கிக்கொண்டு நின்றான். அதன்மேல் பந்தங்கள் ஒவ்வொன்றாக எரியத்தொடங்கின. செம்மைபடர்ந்த வானில் பந்தங்கள் கலந்துவிட்டன என்று தோன்றியது. அரண்மனைமுகப்பில் காஞ்சனத்தின் ஒலி எழுந்தது. தொடர்ந்து கிழக்குக்கோட்டை முகப்பில் பெருமுரசு ஒலித்தது. காவல்கோபுரங்கள் தோறும் முரசுகளும் கொம்புகளும் ஒலியெழுப்பின.
பெருமூச்சுடன் அவன் மீண்டான். ஆயுதசாலைக்குச் செல்ல நினைத்தபோதே அகம் திமிறிப் பின்வாங்கியது. வேறெங்கே செல்வது என எண்ணி துழாவியபோது துரோணரின் குருகுலம் நினைவிலெழுந்து ஒருகணம் அகம் மலர்ந்தான். மறுகணமே கசப்புடன் விலக்கிக்கொண்டான். குதிரையை அவனை அறியாமலேயே குதிமுள்ளால் குத்தினான். அது கனைத்தபடி கால்தூக்கி எழுந்து வால்சுழற்றியபடி குளம்புகள் ஒலிக்க பாய்ந்து சென்றது. உண்மையில் அதன் விரைவு அவன் அக இறுக்கத்தை எளிதாக்கியது. அந்தத் தாளத்தில் அகம் பொருந்திக்கொண்டது.
என்னுள் என்னதான் இருக்கிறது என எண்ணிக்கொண்டான். எதை அஞ்சுகிறேன்? அல்லது எதை வெறுக்கிறேன்? அகத்தைத் திரும்பி நோக்கினால் ஏதுமில்லை. எண்ணிக்கொள்ளக்கூட ஏதுமில்லை. ஆனால் அவன் பார்வை அகன்றதுமே அங்கு ஒன்று வந்தமர்ந்துகொண்டது. எடைமிக்கது, கசப்பானது. அதை ஒருநாளும் திரும்பி நோக்க முடியாது என்று பட்டது. அங்கிருந்து என்னை ஆட்டிவைக்கும் பாதாளநாகம். அதன் வளைவுகளின் கரிய நெளிவு. அதன் மின்னும் விழிகள்.
அவனறிந்திராத இடமொன்றுக்கு வந்து விட்டிருந்தான். அந்தி நன்றாக இருட்டிவிட்டிருந்தது சற்று அப்பால் பெருஞ்சாலையில் மக்கள் தொடர்ச்சியாக சென்றுகொண்டிருப்பதன் ஒலியும் பந்தங்களின் ஒளியில் எழுந்த அவர்களின் நிழல்கள் ஆடும் சுவர்களும் தெரிந்தன. ஆனால் அவன் நின்றிருந்த சிறிய துணைச்சாலை கைவிடப்பட்டதுபோல அரையிருளில் கிடந்தது. சாலையில் எங்கும் விளக்குத்தூண்கள் இல்லை. உயரமற்ற கூரைகளுடன் கூடிய சிறிய புற்கூரைவீடுகளுக்கு முன்னால் சுவரில் பிறைகளில் ஏற்றிவைக்கப்பட்ட அகல்விளக்குகளின் மெல்லிய ஒளிமட்டும் கசிந்து ஊறி நீண்டு கிடந்தது.
அவன் மெல்ல குதிரையை நடத்தி அந்த வீடுகளை நோக்கிக்கொண்டு சென்றான். அது தெற்குக் கோட்டைவாயிலுக்குச் செல்லும் பாதை. வலப்பக்கம் சிற்பியர் வீதிகளும் சூதர்வீதிகளும் வரும். அப்பால் தென்கிழக்கு மூலையில் இந்திரவிழாக்களம். அந்தச் சிறிய தெரு சூதர்வீதிகளுக்கும் நிமித்திகர் வீதிகளுக்கும் நடுவே ஒளித்துவைக்கப்பட்டதுபோல இருந்தது. அங்குள்ள சிலவீடுகளிலேயே அகல்விளக்குகள் எரிந்தன. எரியாத வீடுகளுக்கு முன்னால் குதிரைகள் நின்றிருந்தன. அதைக் கண்டபின்னர்தான் அகல்விளக்குகளுக்கு அப்பால் பாதி திறந்த கதவுகளினூடாகத் தெரிந்த பெண்முகங்களை அவன் கண்டான்.
அவன் பார்வை தொட்டதும் கதவைத்திறந்து இடையாடை மட்டும் அணிந்த ஓர் இளம்பெண் திண்ணைக்கு வந்தாள். அவன் கை கடிவாளத்தை இழுக்க குதிரை மூச்சு சீறியபடி தலையை வளைத்தது. அவள் அவனைநோக்கியபடி வந்து அகல்விளக்கு எரிந்த பிறையருகே இடை வளைத்து நின்றாள். கரிய கூர்முனைகளுடன் கனத்த மாந்தளிர் நிற மார்பகங்கள் ஒசிந்தன. இறுக்கமான சிறிய இடையின் வளைவும் வயிற்றின் குழைவும் செவ்வொளியில் மின்னின. வெண்ணிறப்பற்களும் வெண்விழிகளும் அரை இருளில் ஒளிவிட அவள் அவனை நோக்கி புன்னகை செய்தாள்.
அவன் புரவியில் இருந்து இறங்கியதும் அவள் ஓடிவந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டு “உள்ளே வருக!” என்றாள். அர்ஜுனன் “நான்…” என்று ஏதோ சொல்லத்தொடங்க “உள்ளே அன்னையன்றி எவருமில்லை. தங்களுக்காக அனைத்தும் சித்தமாக உள்ளன” என்று சொல்லிக்கொண்டே தன் மென்மையான இடது மார்பால் அவன் தோளை உரசினாள். அவன் அவள் இடையை தன் கைகளால் சுழற்றிப்பிடித்துக்கொண்டான். அவள் மெல்லிய பறவை ஒலியுடன் நகைத்து “இது தெரு… வாருங்கள்… உள்ளே மஞ்சமே இருக்கிறது” என்று அவனிடமிருந்து திமிறி விடுவித்துக்கொண்டாள். கதவை விரியத்திறந்து “வாருங்கள்” என்றபின் அகல் விளக்கை ஊதியணைத்தாள். அவன் கைகளைப்பற்றி உள்ளே கொண்டுசென்றாள்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும் கடிதங்களும்