இந்தியப் பயணம் 3 – லெபாக்ஷி

செப்டம்பர் நான்காம்தேதி முன்மாலைக்குள் லெபாக்ஷியை அடைந்துவிடவேண்டுமென்பது எங்கள் திட்டம். அங்கேயே தங்கலாமென்று வசந்தகுமார் சொல்லியிருந்தார். ஆனால் தருமபுரி தாண்டி பாலக்கோடு வழியாக ஓசூர் வந்ததுமே பிரம்மாண்டமான போக்குவரத்துச் சிக்கலில் மாட்டிக் கொண்டோம். பெங்களூர் வட்டச்சுற்றுபாதையில் நுழைந்து ஹைதராபாத் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஏழி நுழைய மணி இரண்டு ஆகிவிட்டது.

நான் பாலக்கோட்டில் பணியாற்றிய நாட்களில் அடிக்கடி பெங்களூர் சென்று சினிமா பார்ப்பதுண்டு. பதினாறு வருடம் கழித்து ஓச்சூர் பெங்களூர் சாலையில் நுழைந்த நான் பிரமித்தே போனேன். அது ஏதோ மேலைநாடு போலிருந்தது. எங்கு நோக்கினாலும் அதிபிரம்மாண்டமான கட்டுமானங்கள். புத்தம் புதிய கட்டிடங்கள். இந்தியாவில் இத்தனை அசுர வளர்ச்சி எந்த நகரத்துக்காவது இருக்குமா என்பதே ஆச்சரியம்தான். ராட்சதர்கள் போல எழுந்து நின்ற குடியிருப்புக் கட்டிடங்கள். அம்பாசிடர் காரே கண்ணில் படவில்லை என்று ஆச்ச்சரியத்துடன் சொன்னேன். அப்போது பார்த்து ஒரே ஒரு கார் குறுக்காகச் சென்றது.

கர்நாடகா ஆந்திரா எல்லை நோக்கிசென்றால் ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டத்தில்  இந்துபூர் அருகே லெபாக்ஷி வருகிறது.  மூன்றுமணிக்கு பெங்களூர் எல்லைக்குள்ளேயே சாப்பிட்டோம். சாலையில் இருபக்கமும் விரிந்த ராயலசீமாவின் உருளைக்கல் குவிந்த மலைகளைப் பார்த்தபடி மாலைவெயில் மங்கியபடியே வந்துகொண்டிருந்தபோதுதான் லெபாக்ஷியை அடைய முடிந்தது. லெபாக்ஷிக்கு ஒரு சிறுசாலை வழியாக மீண்டும் திரும்பிச் செல்லவேண்டும். சமீபத்தில் நிறைய மழைபெய்திருக்க வேண்டும். எங்கும் மென்மையான பசுமை இருந்ந்து. ஏரிகளில் கலங்கலான செந்நிற தண்ணீர் ஓரளவு காணப்பட்டது.

லெபாக்ஷி வரலாற்றுரீதியாக மிக முக்கியமான ஓர் ஊர். விஜயநகர வரலாற்றில் லெபாக்ஷிக்கு முக்கியமான இடம் உண்டு.லெபாக்ஷியை ஒருநடுத்தரமான கிராமம் என்று சொல்லலாம். அதிகநீர்வளமில்லாத நிலம். இங்கே சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் வீரபத்ரருக்கும் தனித்தனியான கோயில்கள் உள்ளன. இங்குள்ள கோயில்களை பிற்கால விஜயநகர கட்டிடக்கலையின் சிறந்த உதாரணங்களாகச் சொல்வது ஆய்வாலர்களின் வழக்கம்.  கூர்மசைலம் என்று அழைக்கப்படும் சிறிய குன்றுமீது [ஆமைமலை] ஒரே வளைப்புக்குள் பாபனதீஸ்வர, ரகுநாதர், ஸ்ரீராமர்,வீரபத்ரர் ஆலயங்கள் உள்ளன. இங்குள்ள வீரபத்ரர் ஆலயம்தான் கலைமுக்கியத்துவம் கொண்டது.மற்ற கோயில்களை சிறிய சன்னிதிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

லெபாக்ஷியின் முக்கியமான கவற்சியே இங்குள்ள மாபெரும் நந்தி மற்றும் சேடன் சிலைகள்தான். குறிப்பாக ஒற்றைக்கல் நந்திசிலைதான் இந்தியாவின் மிகப்பெரிய நந்தி என்றார்கள். கோயிலுக்கு வெளியே சாலையோரமாக நம்மை இது வரவேற்கிறது. கோயிலைப்பற்றிய ஒரு பிரமிப்பை இது உருவாக்குகிறது. போகிற வழியிலேயே இறங்கி அதைப்பார்த்தோம். அதன் வால் அடிவயிறு வழியாக மறுபக்கம் வந்து கிடப்பதுபோலச் செதுக்கப்பட்டிருப்பது அழகாக இருந்தது. 

லெபாக்ஷி நூற்றெட்டு சைவத்தலங்களுள் ஒன்று என்று ஸ்கந்தபுராணத்தில் குறிப்பு இருக்கிறதாம். இக்கோயிலை அகத்தியர் நிறுவியதாக ஐதீகம் உள்ளது. இங்கிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெனுகொண்டாவின் ஆளுநர்களாக் இருந்த வீரண்ணா விரூபண்ணா சகோதரர்களால் உருவாக்கப்பட்டவை லெபாக்ஷி கோயில்கள். விருபண்ணா இங்கே ஆமைக்குன்றுமீது குகைக்குள் இருந்த வீரபத்ரர் சிலையைக் கண்டடைந்தாராம். அதை அவர் அங்கே பிரதிஷ்டைசெய்து பெரும் ஆலயம் ஒன்றை கட்ட ஆரம்பித்தாராம்.

ஆலயப்பணிக்காக விரூபண்ணா அரசாங்கக் கருவூலத்தை பயன்படுத்தினார். விஜயநகர மன்னருக்குரிய கப்பத்தைச் செலுத்தவில்லை. அவர் கோயில் கட்டுவதை அறிந்து அதைப்பார்வையிட வந்த விஜயநகர மன்னர் கருவூலம் காலியாக இருப்பதை கண்டு கோபம்கொண்டு விரூபண்ணாவிடம் அவரது கையாலேயே அவரது கண்களை குத்திக்கொள்ள ஆணையிட்டாராம். விரூபண்ணாவும் அப்படியே செய்தார். லெபாக்ஷி என்றபெயர் இதனால்தான் வந்ததாம் லோப + அக்ஷி என்றால் குருட்டுவிழி என்று பொருள். கோயில்வேலை முழுமையடையாமலேயே நின்றுவிட்டது.

விரூபண்ணாவைப்பற்றி எண்ணிக் கொண்டேன். வரலாறு விசித்திரமான மீறல்களும் குரூரங்களும் தியாகங்களும் நிறைந்தது. விரூபண்ணா செய்தது ஒருவகையில் பிழை. அவருக்கு உரிமையில்லாத பணத்தை அவர் செலவிட்டார். ஆனால் வீரபத்ரசாமி கோயிலின் பிரம்மாண்டமான கலையழகைப் பார்த்து நடக்கும்போது அந்த தவறு ஒரு மாபெரும் சரியினால் சூழப்பட்டுள்ளது என்று தோன்றுகிறது. ஒரு கலைப்படைப்பு அவர் வழியாக தன்னை நிகழ்த்திக் கொண்டது. அவர் ஒரு வரலாறுக் கருவி. அவர் செய்தது சரியோ தவறோ அதன்மூலம் அவரது வாழ்க்கை முழுமை அடைந்தது. அவருள் இருந்து அவரை உந்தி அச்செயலை நோக்கிக் கொண்டுவந்த சக்தி என்ன? கலைத்தாகமா, பக்தியா? எளிதில் அக்கேள்விக்குப் பதில் சொல்லிவிடமுடியாது. வரலாறு மனிதர்கள் வழியாக தன்னை நிகழ்த்திக் கொள்கிறது என்று மட்டுமே காலத்தின் இக்கரையில் நின்று நோக்கும்போது சொல்லத்தோன்றுகிறது

வீரபத்ரசாமி கோயில் மணற்கல்லால் கட்டபப்ட்டது. கருங்கல்லின் மினுமினுப்பு வரவில்லை என்றாலும் இந்தக்கல்லில் சில நுண்ணிய குழைவுகளைக் கொண்டுவரமுடியும். இக்கோயில் மூன்று பகுதிகளாக உள்ளது. முக்தமண்ட்பம் அல்லது ரங்கமகால் முதலில். மையக்கோயிலில் இருந்து தனித்து நிற்பது இது. பின்னர் அர்த்தமண்டபம். அதற்கு அப்பால் கருவறையும் அதன்முன் கல்யாணமண்டபமும். கல்யாணமண்டபத்தில் சிற்பப்பணிமுடிவடையாத  முப்பத்தெட்டு ஒற்றைக்கல்தூண்கள் சிற்பநுட்பத்துடன் கூரையைத்தாங்கி நிற்கின்றன. ஒரு வழிபாட்டுத்தலம் என்பதைவிடவும் ஒரு அற்புதமான கலைக்கூடம் என்ற எண்ணமே இக்கோயிலைக் கண்டதும் எழுகிறது.

கோயிலின் ஐதீகமும் அதற்கேற்றதுபோலத்தான் உள்ளது. இந்த தலத்தில்தான் சிவபார்வதி திருமணம் நிகழ்ந்தது என்பது ஸ்தலபுராணம். அதற்கேற்ப எங்கும் அழகு ததும்பி நிற்கும் செதுக்குத்தூண்கள். நாட்டிய மண்டபத்தில் இசைக்கலைஞர்களும் நடனமாதர்களும் களியாட்டநிலையில் காலத்தில் பிரமித்து நிற்கின்றார்கள். கல்யாணமண்டபம் பணிமுடிவடையாத நிலையில் உள்ளது. தும்புரு நாரத நடனம் அனந்தசயனம், ததாத்ரேயர் ,நான்முகபிரம்மன், ரம்பா போன்ற சிலைகள் மணற்கல்லுக்கு உரிய நுட்பமான செதுக்கல்களுடன் மனதைக் கவர்கின்றன. 

ஆழமான ஒரு ஈர்ப்பு இக்கோயிலுக்கு உள்ளது. சற்றே பாழடைந்த புராதனமான கோயில்கள் உருவாக்கும் கால உணர்வுதான் இது. மைய ஆலயமான வீரபத்ரர் கோயிலில் தேவன் கையில் டஹ்ட்சனின் தலையுடன் பொன்னிற காப்பும் கவசமும் அணிந்து நின்றிருக்கிறார்.கார்ச்சகர் தமிழிலேயே விளக்கி தரிசனம்செய்து வைத்தார். நேர் முன்னார் முழு கவசமணிந்த துர்க்கையின் சிலை ஒரு தூணில் உள்ளது. அதை ஒரு சன்னிதியாக ஆக்கியிருக்கிறார்கள். அதிகபேர் வணங்கும் பொருட்டு நேர் முன்னால் கண்ணாடி வைக்கபப்ட்டுள்ளது.

நாட்டிய மண்டபத்தையும் கல்யாண மண்டபத்தையும் பார்த்து முடிக்கவே முடியாது. மிக அற்புதமான சிலைகள் வரிசையாக இருக்கின்றன. குறிப்பாக ஒரே தூணில் உள்ள யட்சனும் புஷ்ப யட்சியும் ஆண்மைக்கும் பெண்மைக்கும் மிகச்சிறந்த உதாரணங்கள். பலநிமிட நேரம் அச்சிலைகள் முன்னால் பிரமித்து நின்றுவிட்டோம். குறிப்பாக இருசிலைகளின் மூக்குகளையும் ஒரே பார்வையில் பார்க்கலாம். யட்சனின் மூக்கு ஆண்மையுடன் தடித்துக் கூர்மையாக இருக்கையில் யட்சியின் மூக்கு செதுக்கபப்ட்டது போல மென்மையான கூர்மையுடன் உள்ளது

நாட்டியமண்டபத்திலும் கல்யாணமண்டபத்திலும் மேலே கூரையில் உள்ள சுவரோவியங்களும் புகழ்பெற்றவை. மகாபாரத ராமாயண காட்சிகளுடன் வீரண்ணா, விரூபண்ணா ஆகியோர் தங்கள் பரிவாரங்களுடன் இறைவனை வணங்கும் காட்சிகள் உள்ளன. இங்குள்ள சிற்பங்களும் சரி  ஓவியங்களும் சரி இந்திய மரபுக்கலையின் பாணியில் ஒரு சிறு இடத்தைக்கூட விடாமல் வரைதளத்தை முழுக்கவே நிரப்பும் வகையில் நுட்பங்களுடன் உள்ளன. ஓவியங்கள் இரட்டைப்பரிமாணத்தில் அலங்காரக் கலைகளின் தர்க்கத்தைக் கொண்டவையாக உள்ளன. ஆனால் பெரும்பாலும் அழிந்த நிலையில் கூர்ந்து நோக்கினால் மட்டுமே உருவங்கள் தெரியும் வகையில் உள்ளன.

இந்தக்கோயிலின் சிறப்பு என்று என்னுடைய நோக்குக்கு பட்ட ஒன்று உண்டு. கோயிலுக்குள்ளேயே பெரும்பாறை ஒன்று வருகிறது.  அதாவது பழைய கூர்ம சைலத்தின் குகைச்சன்னிதியை உள்ளே வைத்து கட்டப்பட்டுள்ளது கோயில். கருவறைக்குறாப்பால் காலியாக இருண்டு கிடக்கும் அந்த சிறு அறையை சென்று பார்த்தபோது ஓர் மன அசைவு ஏற்பட்டது.

கோயிலின் பக்கவாட்டில் கட்டிமுடிக்கப்படாத ஒரு மண்டபம் சிற்பங்கள் மண்டியதூண்களாக மட்டும் நின்று கொண்டிருக்கிறது. முகப்பில் அகத்தியர் முதலிய ரிஷிகளின் அற்புதமான சிலைகள் வரிசையாக நிற்கின்றன. உள்ளே நின்ற திருக்கோலத்தில் விஷ்ணுவின் சிலை உள்ளது. விஷ்ணுகோயிலுக்குரிய மண்டபமான இது முடிக்கபப்டவேயில்லை. உள்ளே உள்ள சிலைகள் எல்லாமே அசாதாரணமான முழுமையுடன் உள்ளன.
  
கோயிலுக்கு வெளியே இயற்கையான பாறை ஒன்றை செதுக்கி உருவாக்கப்பட்டுள்ள மாபெரும் நாகச்சிலை கீழே இருக்கும் சிவலிங்கத்துக்குக் காவலாக பத்தி விரித்து நிற்கிறது. லெபாக்ஷியில் மிகவும் பிரபலமாக இருக்கும் சிலை இதுதான். பிரமிப்பூட்டுமளவு பெரிது என்பதற்கு அப்பால் இதில் சிற்ப அழகேதும் இல்லை. ஆனால் அந்தப்பாறையின் பக்கவாட்டில் உள்ள பெரிய புடைப்புப் பிள்ளையார்சிலை — உண்மையில் அது ஒரு பிள்ளையார்க்குழந்தை- அழகானது.

லெபாக்ஷியில் விஜயநகரக் கட்டிடக்கலையின் எல்லா வகைபேதங்களையும் பார்க்க முடியும். விஜயநகரக் கட்டிடக்கலையானது அதன் கலைச்சோதனைகளை தூண்களில் நிகழ்த்திப்பார்த்தது. ஆறுபட்டைவடிவத்தூண்கள் வட்டத்தூண்களில் ஆரம்பித்து சிற்பங்களின் கூட்டுவடிவமாகவே நிற்கும் தூண்களை அது அடைந்தது. வீரபத்ரசாமி கோயிலின் ரங்கமண்டபத்தூண்கள் ஒவ்வொன்றும் ஒரு தனிக் கலைக்கூடங்கள் போல சிற்பம்செறிந்தவை. 

கோயிலைச்சுற்றி ஏராளமான பிராகாரங்களும் மண்டபங்களும் இடிந்தும் முழுமைகொள்ளாமலும் நீர் கசிந்தும் கைவிடப்பட்ட்டு கிடக்கின்றன. அந்த கல்வனத்துக்குள் நிற்கும்போது  சென்றகாலத்தில் ஏதோ ஒரு கணத்தில் விழித்துக்கொண்டு திகைத்து நிற்பதுபோன்ற பிரமிப்பும் மௌனமும் உருவாகியது. ஆறரை மணிக்கு கோயிலைப்பூட்டி விடுவார்கள் என்றார்கள். ஆகவே அரை இருட்டு பரவும் நேரத்தில் வெளியே வந்தோம்

லெபாக்ஷியில் இரவு தங்கமுடியுமா என்று தேடிபபர்த்தோம். அரசு விடுதி ஒன்று இருந்ததை கண்டுபிடித்தேன். வினாயகர் பூஜை வைத்து சிறுவர்சிறுமிகள் உற்சாகமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். விடுதி பூட்டப்பட்டிருந்தது. இந்துபூருக்குச் சென்றுவிடலாமென்று எண்ணி காரை திருப்பினோம். ஆனால் ஓர் எண்ணம் வந்து விசாரித்தோம். வாட்ச்மேன் அருகேதான் இருக்கிறார் என்றார்கள். இரு இளைஞர்கள் வந்து கேட்டை தள்ளி வழிசெய்து கொடுத்தார்கள்

பிள்ளையாருக்கு பெரிய பிளாஸ்டர் ஆ·ப் பாரீஸ் சிலை வைத்து பாட்டு போட்டு ஊரே கொண்டாடிக்கொண்டிருந்தது. கிராமத்தெருவில்ந் ஆனும் கிருஷ்ணனும் சிவாவும் செந்திலும் சென்று வாட்ச்மேன் வீட்டைக் கண்டுபிடித்தோம். அவரது அம்மா வந்து ஒரு பையனை அனுப்பி கூட்டிவரச்சொன்னார். சின்னப்பையன். இரு அறைகள் மொத்தம் முந்நூறு ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்தோம். அகலமான அறைகள். மூன்றுபேர் படுக்கும் கட்டில்கள். வெளியே போய் சாப்பிட்டோம். நானும் கிருஷ்ணனும் சிவாவும்  பழங்கள். திரும்பி வந்து தூங்கப்போகிற நேரத்தில் இதை எழுதுகிறோம். கிட்டத்தட்ட நாநூறு கிலோமீட்டர் வந்துவிட்டிருக்கிறோம். நல்ல களைப்பு. அதிகாலையில் எழுந்திருக்கவேண்டும்.

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

முந்தைய கட்டுரைஇந்தியப் பயணம் 2 – தாரமங்கலம்
அடுத்த கட்டுரைஇந்தியப் பயணம் 4 – பெனுகொண்டா