பகுதி இரண்டு : சொற்கனல் – 6
ரதத்தின் தட்டில் நின்ற அர்ஜுனன் தனக்குப்பின்னால் எழுந்த ஒலிகளை முதுகுத்தோலே செவிப்பறையாக மாற கேட்டுக்கொண்டிருந்தான். மெல்ல ஓசைகள் அடங்கி படைகள் ஆழ்ந்த அமைதிகொண்டன. ரதச் சகடங்களின் ஒலியும் குதிரைகளால் மிதிபட்ட காயமடைந்தவர்களின் முனகல்களும் ஒலித்தன. காயம்பட்ட ஒரு குதிரை செருக்கடித்து காலால் தரையை உதைத்து மூச்சு சீறியது. எங்கோ ஒரு குதிரையின் சேணத்தின் மணி ஒலித்தது.
சகடத்தில் கட்டப்பட்டிருந்த துருபதன் அது அசைந்ததும் நிலைதடுமாறி முன்சரிந்து விழுந்து முழங்காலை ஊன்றி எழுந்துகொண்டான். தோளை சகடத்தில் ஊன்றி நிமிர்ந்து பின்னால் திரும்பிப்பார்த்தான். அதுவரை நிகழ்வதென்ன என்றே உணராதபடி அவன் அகம் பிரமித்திருந்தது. சட்டென்று திகைத்தவன் போல “பாண்டவரே, இது பெரும்பாவம்… அஸ்தினபுரிக்கே பழி!” என்று கூவினான்.
அந்தச்சொற்கள் பொருட்களைப்போல வந்து தன் மேல் விழுவதாக உணர்ந்தான் அர்ஜுனன். அவன் தலையை திருப்பாமல் உடலை இறுகச்செய்துகொண்டான். தன் கரங்களால் வில்லின் நாணை நீவிக்கொண்டு சாரதியிடம் “செல்!” என்றான். சகடம் மேலும் உருண்டு இரு பிணங்கள் மேல் ஏறி மறுபக்கம் விழுந்து சென்றது. கால்தடுமாறி பிணங்கள் மேல் விழுந்த துருபதன் எழுந்து கொண்டபோது சக்கரம் அவன் மேல் உரசிச்செல்ல அவன் வலியுடன் முனகினான்.
“பார்த்தா, இது அநீதி. நீ நம் குலத்தையே அவமதிக்கிறாய்” என்று தருமன் நடுங்கும் குரலில் கூவியபடி பின்னால் ஓடிவந்தான். அர்ஜுனன் திரும்பாமல் நின்றிருக்க ரதம் சென்றுகொண்டிருந்தது. “மந்தா, அவனைப்பிடி. அவனை நிறுத்து!” என்று தருமன் உடைந்த குரலில் பதறிய கையை நீட்டி கூவினான். “என்ன நிகழ்கிறது இங்கே? பார்த்தா… பீமா நிறுத்துங்கள்!”
கதையைச் சுழற்றி நிலத்தில் ஊன்றியபடி “களத்தில் நெறியென ஏதுமில்லை மூத்தவரே, நாம் வெறும் விலங்குகள் இங்கு” என்றான் பீமன். அவன் உடலில் இருந்து உறைந்து கருமைகொண்ட குருதி சிறிய கட்டிகளாக இரும்புக் கவசத்தில் வழுக்கி உதிர்ந்தது. சளிபோல வெண்ணிறமாக மூளைத்திவலைகள் ஒட்டியிருந்தன.
அப்போது ஒரு முதிய பாஞ்சாலவீரன் “பழிகொள்பவர்களே! வீணர்களே!” என்று கூவியபடி தன் ஈட்டியைத் தூக்கி வீசும்பொருட்டு ஓடிவந்தான். திரும்பாமலேயே பீமன் தன் கதாயுதத்தால் அவன் மண்டையை சிதறடித்தான். குருதி வெடித்து தெறிக்க அவன் நின்று ஆடி கீழே விழுந்து துடிக்க அவனைத் தொடர்ந்து ஓடிவந்த பாஞ்சால வீர்ர்கள் கால்கள் உறைந்து அசையாமல் நின்றனர்.
தன் கதையைச் சுழற்றி இடையுடன் கட்டியபடி தேரில் ஏறிக்கொண்டான் பீமன். “மூத்தவரே, போரென்றால் போர். அங்கே வெற்றிமட்டுமே அறம். வெற்றியும் வேண்டும், அதில் அறமென்ற பாவனையும் வேண்டும். இந்த மூடத்தனம்தான் எனக்குப்புரியவில்லை” என்றான்.
“தம்பி…” என்றான் தருமன். பீமன் கண்களில் கசப்புடன் உரக்க நகைத்து “இன்று காலையில் உங்கள் விடிவெள்ளிப் பேச்சை நானும் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். அறத்தைப்பற்றிய அந்த பெரும் நாடக உரை. இதோ நம் வாழ்வின் முதல் போர் தொடங்கி நான்குநாழிகை ஆகவில்லை. கடைசி அறமும் பறந்துவிட்டது” என்றான். தருமன் ஏதோ சொல்ல வாயெடுக்க “நீங்கள் இன்னும் உங்கள் வாளை நெஞ்சில் பாய்ச்சிக்கொள்ளவில்லை மூத்தவரே” என்றான். “என்ன சொல்கிறாய்?” என்று தருமன் கூவினான். “மாட்டீர்கள். அதுதான் நீதிநூல்கள் அனைத்திலும் உள்ள பொய்மை.”
சொற்களில்லாமல் இரு கைகளையும் விரித்த தருமனிடம் பீமன் சொன்னான் “மூத்தவரே, இதோ மூளை சிதறிக்கிடக்கிறார்களே இவர்களை விடவா அதிக துயரை அறிகிறார் பாஞ்சால மன்னர்? இவர்களை இப்படி உடைத்துப்போடுவது அறம் என்றால் அவரை அப்படி இழுத்துச்செல்வதும் அறமே.” மூக்கிலிருந்து ஒழுகி உதட்டில் பட்ட கொழுங்குருதியை துப்பிவிட்டு சாரதியிடம் அர்ஜுனனைத் தொடர ஆணையிட்டான். ரதம் குலுங்கி முன்னகர்ந்தது.
“மந்தா, எப்போது வந்தது இந்த மூர்க்கம் உனக்கு?” என்று பின்னால் நின்ற தருமன் கூவினான். “சற்றுமுன் மூர்க்கமாக இவர்களைக் கொன்று போட்டேனே, அப்போது அது வீரம் என்றல்லவா உங்களுக்குப்பட்டது?” என்று இகழ்ச்சியுடன் திரும்பக் கூவினான் பீமன் . ரதமோட்டியின் முதுகை தன் காலால் தொட அவன் சவுக்கைச் சுண்டினான். ரதம் அசைந்து முன்னகர்ந்தது. திரும்பி நோக்கிய பீமனின் முகத்தில் சிரிப்பா அழுகையா என்று சொல்லமுடியாத உணர்ச்சி தெரிந்தது.
“மூத்தவரே, இதோ இவர்களைக் கொன்றதற்காக நான் வருந்தவில்லை. ஏனென்றால் அவர்கள் என்னைக்கொன்றிருந்தால் நான் அதில் பிழைகண்டிருக்கமாட்டேன். ஆனால் நான் தலை உடைத்துக்கொன்ற அத்தனைபேரிடமும் மன்னிப்பு கோருவேன். அவர்களை எங்காவது விண்ணுலகில் சந்திக்க நேர்ந்தால் காலைத் தொட்டு வணங்குவேன். நானும் அவர்களில் ஒருவன் என்பதனால் அவர்கள் என்னை மன்னித்து புன்னகை செய்வார்கள். அவர்களை அள்ளி மார்போடு அணைத்துக்கொள்வேன். ஆனால் எந்த மன்னனிடமும் எனக்கு கருணை இல்லை” என்றபின் திரும்பிக்கொண்டான். அவன் ரதம் அர்ஜுனன் ரதத்தைத் தொடர்ந்து ஓடியது.
அவன் சென்றதும் பெருமூச்சுடன் இயல்பான துரியோதனன் திரும்பி “காயமடைந்தவர்களை ரதங்களில் ஏற்றுங்கள்” என்று ஆணையிட்டான். “துருபதரின் மைந்தர்களை உடனடியாக தூக்கி ரதத்திலேற்றுங்கள். காயங்களுக்கு கட்டுபோட்டு காம்பில்யத்துக்குக் கொண்டுசெல்லுங்கள்.” கௌரவப்படையினர் அவன் ஆணையை ஏற்று கீழே விழுந்து கிடந்த சுமித்ரனையும் சித்ரகேதுவையும் பிரியதர்சனையும் தூக்கினர். பிரியதர்சனின் நெஞ்சில் அம்பு பாய்ந்திருந்தது. கடினமான எருமைத்தோல் கவசத்தில் அது பெரும்பாலும் தைத்திருந்தமையால் உயிர் போகும் காயம் இருக்கவில்லை. சித்ரகேதுவின் தொடை எலும்பு சகடம் ஏறி முறிந்திருந்தது.
கர்ணன் “கௌரவர்களை ரதத்தில் ஏற்றுங்கள்” என்றான். காயம் பட்டவர்கள் முனகியபடி கைகளை அசைத்து அவர்கள் உயிரோடிருப்பதைக் காட்டினர். குருதி கருகி உறையத்தொடங்கிய உடல்கள் தோள்களைப்பற்றிக்கொண்டு எழுந்தன. காயம்பட்டதுமே அவர்கள் வீரத்தையும் வெறியையும் இழந்து நோயாளிகளாக ஆகி ஆதரவு தேடினர். ஆதரவளித்துத் தூக்கியவர்களையே வசைபாடினர்.
வீரர்கள் சிலர் வாள்களுடன் சென்று காயம்பட்டு துடித்துக்கொண்டிருந்த குதிரைகளின் மோவாயைப்பிடித்து கழுத்தை வளைத்து குரல்குழாயின் இறுக்கத்தில் ஓங்கி வெட்டி அவற்றைக் கொன்றனர். துருத்தி அணைவதுபோல குருதித்துளிகள் சிதற பீரிட்டு வெளிவந்த மூச்சுடன் அவை குளம்புக்கால்களை உதைத்து மண்ணிலேயே ஓடுவதுபோல துடித்தன. வால்கள் புழுதியில் கீரிப்பிள்ளைகள் போலப் புரண்டன. அக்குதிரைகளை வளர்த்த ரதமோட்டிகள் அதைப் பார்க்கமுடியாமல் திரும்பிக்கொண்டனர்.
சுற்றிச்சுற்றி நோக்கியபடி திகைத்து நின்றபின் தருமன் தன் ரதத்தில் ஏறி அர்ஜுனனைப் பின்தொடர்ந்துசெல்லும்படி ஆணையிட்டான். ரதமோட்டி அர்ஜுனனை மறிக்கவா என்று கண்களால் கேட்க அவன் பார்வையை விலக்கிக்கொண்டான். கர்ணனும் துரியோதனனும் அவனுக்குப் பின்னால் ரதங்களில் ஏறிக்கொண்டனர். அவன் திரும்பியபோது துரியோதனனின் விழிகளைச் சந்தித்தான். தளர்ந்து தலைகுனிந்து தேர்த்தட்டில் அமர்ந்துகொண்டான்.
புல்வெளிப்பாதையில் அர்ஜுனன் ரதம் மெதுவாகச் சென்றது. சக்கரங்களில் கால்சிக்கி தடுமாறி மண்ணில் விழுந்த துருபதன் சிறிதுதூரம் புழுதியிலும் புல்லிலும் இழுபட்டுச் சென்றான். அவன் முனகியதை அர்ஜுனன் கேட்கவில்லை. துருபதன் மீண்டும் முழங்காலை ஊன்றி எழுந்தான். மண்ணில் உரசிய அவன் தோல் உரிந்து குருதி வழிந்து மண்ணுடன் கலந்து சேறாகியது. அவன் எழுந்து ஆரக்காலை ஒட்டியபடி ஓடத்தொடங்கினான். ரதம் மேடேறுகையில் மீண்டும் விழுந்தான்.
புல்மேடேறியபின் அர்ஜுனன் திரும்பி நோக்கினான். பாஞ்சால வீரர்கள் அப்போதும் அசையாமல் அவனையே நோக்கி நிற்பதைக் கண்டான். விதவிதமான முகங்கள். திகைப்பும் பதற்றமும் உருக்கமும் சினமும் கொண்டவை. நெஞ்சில் கைவைத்து ஏங்கியவை. தலையில் கை வைத்து உடைந்தவை. காற்றில் விரித்த கைகளுடன் இறைஞ்சுபவை. அவன் பார்வையை திருப்பிக்கொண்டபோதுதான் அவற்றில் பாஞ்சாலர்களுடன் அஸ்தினபுரியின் வீரர்களும் இருந்தனர் என்பதை உணர்ந்தான். இதுவும் எனக்கு ஆசிரியர் வைத்த தேர்வு, இங்கும் நான் ஒன்றைமட்டுமே நோக்குவேன்.
அவனுக்குப்பின்னால் மொத்தப்படையும் ஒற்றை ஒலியுடன் உடல்தளர்வதை அவனால் கேட்கமுடிந்தது. புண்பட்ட விலங்கொன்றின் பெருமூச்சு போல அதன் ஒலி எழுந்து வந்தது. தனக்குப்பின்னால் ரதங்கள் வரும் ஒலியைக் கேட்டான். அவை வரும் ஒலியிலேயே எவரும் தன்னை மறிக்க எண்ணவில்லை என்று உணர்ந்தான். ரதத்தில் நிமிர்ந்து தொடுவானை நோக்கியபடி நின்றான். இது வரலாறு. சூதர்களின் சொல்வெளி. இங்கே அர்ஜுனன் எப்போதும் ஐயமற்றவனாகவே நின்றிருப்பான். ஒருபோதும் தலைகுனியமாட்டான்.
அவன் ரதம் புல்வெளியைத் தாண்டி கிராமங்களின் நடுவே நுழைந்தது. நாய்கள் குரைத்தபடி பாய்ந்து ஓடிவந்தன. அணைந்து கருகி அப்போதும் புகைவிட்டுக்கொண்டிருந்த வீடுகளின் முன்னால் கூடி அமர்ந்து அழுதுகொண்டிருந்த மக்கள் அஞ்சி எழுந்தனர். அவர்களில் ஒருவன் சற்றுநேரம் கழித்துத்தான் தேர்க்காலில் கட்டப்பட்ட துருபதனை நோக்கினான். அவன் கைசுட்டி கூவ பிறர் நோக்கி திகைத்தனர். அமர்ந்திருந்தவர்கள் ஓடிவந்து கூடினர்.
சிலகணங்களுக்குப்பின்னர்தான் என்ன நடக்கிறதென்று அவர்களுக்குத் தெரிந்தது. ஒருபெண் கூவி அலறியபடி ஓடிவந்து அப்படியே மண்ணில் விழுந்து மண்ணை அள்ளி வீசி மார்பிலறைந்துகொண்டு கதறினாள். அந்த ஒலி தீக்காயம்பட்ட விலங்கொன்றின் ஓலம் போல எழுந்தது. அதைக்கேட்டு ஒருகணம் உறைந்த கிராமத்தினர் பின்னர் ஒரேகுரலில் கதறி அழுதபடி பின்னால் ஓடிவந்தனர். அதற்குப்பின்னால் வந்த ரதங்களைக் கண்டு அஞ்சி அமர்ந்துகொண்டு மார்பிலும் வயிற்றிலும் அறைந்துகொண்டு கதறினர்.
ரதசக்கரத்தில் கட்டப்பட்டிருந்த துருபதன் எப்போதோ விழுந்து பின் எழமுடியாமல் மண்ணில் இழுபட்டுக்கொண்டே வந்திருந்தான். ரதம் விரைவுகுறைந்தபோதுகூட அவனால் எழமுடியவில்லை. அவன் ஆடைகள் விலகிப்போய் போருக்காகக் கட்டப்பட்ட தோலாலான அடிக்கச்சை மட்டும் உடலில் இருந்தது. அவன் உடல் களைத்து தரையில் இழுபட்டு தோலுரிந்து புழுதியும் சேறும் மண்ணும் கலந்து மூடி சடலம்போல ஆகிவிட்டிருந்தது. அவன் உடலில் உயிர் இருப்பதாகவே தோன்றவில்லை. இருமுறை அவன் கால்கள் மீதே ரதசக்கரம் ஏறிச் சென்றபோதுகூட அவனிடமிருந்து ஒலி ஏதும் எழவில்லை.
குரல்வளை உடைய எழுந்த தீச்சொற்களைக் கேட்டுக்கொண்டே சென்றான் அர்ஜுனன். ஒரு கிழவர் கற்களை எடுத்து அர்த்தமில்லாமல் ரதத்தை நோக்கி வீசியபடி பின்னால் ஓடிவந்து முழங்கால் மடிந்து விழுந்து கூச்சலிட்டார். பின்னால் நெருங்கிவந்த பீமனின் குதிரைகளின் குளம்புகள் அவரை சிதறடிப்பதற்குள் அவன் தன் கதையால் மெல்லத்தட்டி அவரை பக்கவாட்டில் தெறிக்கச் செய்தான்.
தூரத்தில் கங்கையின் ஒளி தெரிந்தபோது அர்ஜுனன் மெல்ல தளர்ந்தான். அதுவரை ஒலித்த பழிச்சொற்களை சுமக்கத்தான் தன் தோள்கள் அத்தனை இறுகியிருந்தனவா என எண்ணிக்கொண்டான். தீச்சொற்களின் எடை. சரிந்திருந்த சால்வையை இழுத்துபோட்டான். மீண்டும் உடலை நிமிர்த்தி தொடுவானை நோக்கும் பார்வையை அடைந்தான். சாரதியிடம் “மென்னடை” என ஆணையிட்டான். சீரான தாளத்துடன் குதிரை சென்றது.
அவன் கங்கைக்கரையை அடைந்தபோது அங்கே துரோணர் அவன் வரும் ஒலியைக்கேட்டு படகிலிருந்து இறங்கிவந்து கரையில் நின்றிருப்பதைக் கண்டான். அவரருகே அஸ்வத்தாமன் வில்லுடன் நின்றான். அவரை நோக்கியதுமே அவனில் அதுவரை பேணப்பட்ட சமநிலை மறையத் தொடங்கியது. அவன் கால்கள் தளர்ந்தன. அவர் விழிகளில் என்ன நிகழ்கிறது என்பதையே அவன் நோக்கிக்கொண்டிருந்தான்.
துரோணர் கண்கள்மேல் கையை வைத்து நோக்கினார். அவரது இன்னொரு கை நிலையழிந்து தாடிக்கும் தொடைக்குமாக அலைமோதியது. அவர் சில எட்டுக்கள் எடுத்து முன்வைத்தார். ரதம் நெருங்க நெருங்க மேலும் அருகே வந்தார். அவரது விழிகளை தொலைவிலேயே அர்ஜுனன் கண்டான். அவரது கண்கள் மெல்லச் சுருங்கின. தலை ஆடிக்கொண்டிருந்தது.
அவன் தனக்குப்பின்னால் கௌரவர்களும் கர்ணனும் பீமனும் தருமனும் ரதங்களில் வருவதை கேட்டுக்கொண்டிருந்தான். ஆனால் துரோணர் துருபதனை மட்டும்தான் நோக்கினார். அஸ்வத்தாமனின் விழிகள் அர்ஜுனனையே நோக்கின.
துரோணரின் முகம் சுருங்குவதை, தாளமுடியாத வலிகொண்டதைப்போல இழுபடுவதை அர்ஜுனன் கண்டான். ஒரு கணம் அவனுள் ஐயம் ஒன்று எழுந்து கடும்குளிர் போல உணரச்செய்தது. அவர் உளம் கொதித்து தன்னை தீச்சொல்லிடப்போவதாக எண்ணினான். துருபதன் இறந்துவிட்டிருக்கிறானா என்ற எண்ணம் வந்து சென்றது. அக்கணத்தில் வாய்திறந்து கண்கள் வெறித்துக்கிடக்கும் துருபதனை அவன் கண்டுவிட்டான். மறுகணமே அவன் இறக்கவில்லை என அவனறிந்திருப்பதையும் அகத்தால் அறிந்தான்.
ஆனால் துரோணரின் முகத்தில் ஒரு புன்னகை விரிந்தது. முதல்கணம் அர்ஜுனன் அதை நம்பவில்லை. அப்புன்னகையை அவன் அகம் அறிந்துகொண்டதும் கடும் கசப்பு ஒன்று எழுந்தது. தாளமுடியாத சினம் கொண்டவன் போல, அடியற்ற ஆழத்தில் விழுந்துகொண்டிருப்பவன்போல உணர்ந்தான்.
அவர்கள் நெருங்க துரோணரின் புன்னகை மேலும் விரிந்தது. நடுங்கும் கைகளுடன் அவர் தன் தாடியை நீவுவதை அர்ஜுனன் கண்டான். இவரா? இவர்தானா? அச்சொற்களை தன் அகமாக உணர்ந்தபின் அதை மேலும் தெளிவான சொற்களாக ஆக்கிக்கொண்டான். இதோ இக்கணத்தில் துரோணரின் பாதம் என் நெஞ்சிலிருந்து அகல்கிறது. இதோ அவர் இறந்து என்னிலிருந்து உதிர்கிறார். இதோ நான் இறந்து மீண்டும் பிறக்கிறேன். உடனே என்ன பொருளற்ற சொற்கள் என அகம் எண்ணியதும் அலை அடங்கியது. பெருமூச்சுவிட்டு ரதத்தை நிறுத்த உறுமலால் சாரதியிடம் ஆணையிட்டான்.
முதியவர் நடுங்கும் நடையுடன் அருகே வந்தார். கையை தூக்கி செயற்கையான ஆணவத்துடன் துருபதனை அவிழ்த்துவிடும்படி சைகை காட்டினார். அவரது ஒவ்வொரு அசைவையும் அர்ஜுனன் வெறுத்தான். அவரை நோக்கி பார்வையைத் திருப்பவே அவனால் முடியவில்லை. நடிக்கிறார். ஆம். இது வரலாற்றுத்தருணம். அதில் அவர் நடிக்கிறார்.
அவன் ரதத்திலிருந்து குதித்தான். அப்போது தோன்றியது அவனும் நடிப்பதாக. கால்தளர்ந்திருந்ததை மறைக்கவே அவன் குதித்தான். இத்தகைய தருணங்களில் இயற்கையாக இருப்பவர்கள் உண்டா? அத்தனைபேரும் நடிக்கத்தானே செய்கிறார்கள்? இயல்வதே அதுமட்டுமல்லவா? அப்படியென்றால் வரலாற்றுத்தருணங்களெல்லாமே இப்படிப்பட்ட நாடகங்கள்தாமா? யாருக்காக நடிக்கப்படுகின்றன அவை? சூழ்ந்திருக்கும் இவ்விழிகளுக்காக. பாடப்போகும் சூதர்களுக்காக. பொய்யை நம்ப விரும்பும் எதிர்காலத் தலைமுறைகளுக்காக.
உள்ளே எண்ணங்கள் சிதறி ஓடிக்கொண்டிருக்க அவன் எதையும் காட்டாதவனாக மிடுக்குடன் நடந்து சென்று ரதச்சகடத்தை அணுகி குனிந்து துருபதனின் கட்டுகளை அவிழ்த்தான். எழமுடியாமல் துருபதன் புழுதியில் குப்புறக்கிடந்தான். சேற்றில் புதைந்து மீட்கப்பட்ட மட்கிய சடலம் போலிருந்தான். அர்ஜுனன் அமர்ந்து அவன் கையின் கட்டுகளை அவிழ்த்தான். அவிழ்க்கப்பட்ட கைகள் இருபக்கமும் விழுந்தன.
அவனுக்குப் பின்பக்கம் வந்து நின்ற ரதங்களில் இருந்து பீமனும் தருமனும் துரியோதனனும் கௌரவர்களும் இறங்கி வந்து நின்ற ஒலி கேட்டது. அர்ஜுனன் நடந்து வந்த அவர்களின் முழங்கால்களைக் கண்டு விழிதூக்கினான். அவர்களுக்குப்பின்னால் ரதங்களில் வந்த பாஞ்சாலத்தின் இரு தளபதிகள் விழிகளில் நீர் வழிய கைகளைக் கூப்பியபடி தள்ளாடும் கால்களுடன் நடந்து நெருங்கிவந்தனர்.
துருபதனின் தலையருகே தன் கால்கள் அமையுமாறு துரோணர் வந்து நின்றார். “யக்ஞசேனா, எழுக! நான் உன் பழைய தோழன் துரோணன்” என்றார். துருபதன் உயிரற்றவை போல துவண்டிருந்த கைகளைத் தூக்கி ஊன்றி தலையைத் தூக்கி அவரை நோக்கினான். அவன் முகத்தை மூடிய புழுதியைக் கரைத்தபடி கண்ணீர் வழிந்தது. உதடுகள் மரணமூச்சை வெளியிடுபவை போல இழுபட்டு வலிப்பு கொண்டன. கிட்டித்த பற்களும் இறுகிய கழுத்துச்சதைகளுமாக அவன் வெறுமனே நோக்கினான். இருபுண்கள் போல சிவந்து நீர்வழிந்தன கண்கள்.
“அன்று ஏந்திய கரங்களுடன் உன் வாசலில் நான் வந்து நின்றேன் யக்ஞசேனா. ஆணவத்துடன் என்னை உன் நண்பனல்ல என்று சொன்னாய்” என்றார் துரோணர். “ஆனால் நான் உன்னை என்றும் என் நண்பனாகவே எண்ணுகிறேன்.” அவர் உதடுகளின் புன்னகை கோணலாகியது. “ஆகவேதான் நீ உயிருடன் திரும்பிச்செல்லப்போகிறாய்.”
துருபதன் நடுநடுங்கும் கைகளை இறுக்கி ஊன்றி முனகியபடி எழுந்து அமர்ந்தான். ரதசக்கரத்தில் சாய்ந்து கொண்டு கண்களை மெல்ல மூடித்திறந்தான். நெடுந்தூரம் இழுபட்டமையால் அவன் தலையின் சமநிலை குலைந்துவிட்டிருந்தது. தளர்ந்து பின்னோக்கி விழப்போனவன் இரு கரங்களாலும் சக்கரத்தை இறுகப்பற்றி கண்களை மூடிக்கொண்டான். தலைகுனிந்தபோது மயிர்க்கற்றைகள் முகத்தில் விழுந்தன. மார்பு ஏறியிறங்கியது.
“நீ சொன்ன வார்த்தையை நம்பி உன் வாசலுக்கு வந்தேன். என் மகனுக்கு பால் கொடுக்க ஒரு பசுவை வாங்குவதற்காக. நீ என்னை அவமதித்தாய். கொடைகொள்ள நான் பிராமணனா என்று கேட்டாய். நான் ஷத்ரியன் என்றால் படைகொண்டுவந்து உன் நாட்டை வெல்லும்படி சொன்னாய்” என்றார் துரோணர். “எதைச் சொன்னால் நான் அக்கணமே பற்றி எரிவேன் என நீ அறிந்திருந்தாய். ஏனென்றால் நீ என் நண்பனாக இருந்தாய்… அந்த நட்பையே படைக்கலமாக்கி என்னை தாக்கினாய்.”
அர்த்தமே இல்லாத சொற்கள். துருபதன் அதைக்கேட்கிறானா என்ற எண்ணம் அர்ஜுனனுக்கு வந்தது. அவன் மூடிய இமைகள் துடித்தன. நெற்றியின் இருபக்கமும் நரம்புகள் புடைத்து அசைந்தன. துரோணர் உரக்க “விழி திறந்து பார் நீசா. இதோ…” என்று அர்ஜுனனை நோக்கி கைவீசி சொன்னார் “இதோ நான் உன் நாட்டை வென்றிருக்கிறேன். இவன் என் மாணவன். பாஞ்சாலத்தை என் காலடியில் கொண்டு போட்டிருக்கிறான்.”
துரோணரின் குரலில் உண்மையான உணர்ச்சிகளே இல்லை என அர்ஜுனன் எண்ணினான். அவர் அந்தக்காட்சியை எத்தனையோ முறை அகத்தில் நடித்திருக்கவேண்டும். அச்சொற்களை பல்லாயிரம் முறை சொல்லிக்கொண்டிருக்கலாம். வன்மத்துடன், கண்ணீருடன், ஆங்காரத்துடன்.
ஆனால் அச்சொற்கள் இப்போது ஏன் இத்தனை ஆழமற்றிருக்கின்றன, ஓர் எளிய கூத்துக்காட்சி போல? சொல்லிச்சொல்லி அவற்றின் அனைத்து உண்மையான உணர்வுகளும் காலப்போக்கில் உலர்ந்துவிட்டிருக்கலாம். தொன்மையான ஒரு காவியத்தின் பழகிப்போன காட்சியாக அது ஆகிவிட்டிருக்கலாம். இப்போது துரோணர் வெளிப்படுத்திக்கொண்டிருப்பது அவரை அல்ல. அவர் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தக் காட்சியை நிறைவுசெய்துகொண்டிருக்கிறார். சூழ்ந்து நின்றிருக்கிறது எதிர்காலம்.
“நிமிர்ந்து பார் யக்ஞசேனா, பாஞ்சாலத்தின் அரசனும் ஷத்ரியனுமாகிய துரோணனை பார்” என்றார் துரோணர். “நான் என்றும் உன்னை என் நண்பனாகவே நினைத்தேன். இப்போதும் அப்படியே எண்ணுகிறேன். ஆனால் நீ அன்று சொன்னாயே அது உண்மை. நிகரானவர்களே நட்புகொள்ளமுடியும். இப்போது நீ நாடற்றவன். பாஞ்சால மன்னனாகிய என்னுடன் நட்புடனிருக்கும் தகுதியற்றவன்.”
அவர் வெண்பற்கள் தெரியும் புன்னகையுடன் குனிந்து அவன் தோளில் கையை வைத்தார். “ஆனால் நீ என் நண்பனாகவே நீடிக்கவேண்டுமென எண்ணுகிறேன். அதற்கு நீ எனக்கு சமானமானவன் ஆகவேண்டும். எனவே பாஞ்சாலத்தின் பாதியை உனக்கு அளிக்கிறேன். கங்கை முதல் சர்மாவதி வரையிலான தட்சிணபாஞ்சாலத்தை உனக்குரிய நாடாகக் கொள். காம்பில்யமும் மாகந்தியும் உனக்குரியவை. சத்ராவதியும் உத்தரபாஞ்சாலமும் எனக்குரியவை. என் மகன் அதற்கு அரசனாவான். என்ன சொல்கிறாய்?”
துருபதன் அவரை நிமிர்ந்துநோக்காமல் கைகளைக் கூப்பினான். துரோணர் நிமிர்ந்து அகன்று நின்ற பாஞ்சாலத் தளபதிகளை நோக்கி கையசைத்து துருபதனை வந்து பிடிக்கும்படி சொன்னார். “துருபதனே, உன் நகர் கொடி நாடு அனைத்தையும் நான் உனக்களிக்கிறேன். நாமிருவரும் இளைஞர்களாக மகிழ்ந்து வாழ்ந்த அந்த நன்னாட்களின் நினைவுக்காக.” துருபதன் நிமிர்ந்து நோக்கினான்.
பார்வையை விலக்கிக்கொண்ட துரோணரின் குரல் தழுதழுத்தது. “என் வாழ்க்கையில் இனி அதைப்போன்ற மகிழ்ச்சியான நாட்கள் எனக்கு அமையப்போவதில்லை… அக்னிவேசரின் குருகுலமும் கங்கைக்கரையின் இனிய நிழல்சோலைகளும். அங்கே நாம் அமர்ந்து இரவு முழுக்க பேசிய சொற்களும்…” குரல் உடைய நிறுத்திக்கொண்டார்.
அந்த உண்மையான உணர்ச்சியில் அவர் சூழ்ந்திருப்பவர்களை மறந்து தான் மட்டுமானார். “மானுடம் மீது நம்பிக்கை இருக்கும் வரைதான் மனிதன் வாழ்கிறான்.” அவரை மீறி அவர் சொன்ன சொற்கள் அவை. அதை அவரே முழுதுணர்ந்ததும் சினம் கொண்டு பற்களைக் கடித்து “நீ என்னைக் கொன்றுவிட்டாய்” என்றார். அந்த உண்மையான உணர்ச்சியும் அந்தத் தருணத்தின் நாடகத்தின் பகுதியாகவே ஆவதை அர்ஜுனன் உணர்ந்தான்.
வருடக்கணக்காக அவரை ஆண்ட அந்த பேய்த்தெய்வம் அவரிலிருந்து மெல்ல விலகுவதை அசைவுகள் காட்டின. அவரது தோள்கள் தொய்ந்தன. கைகால்கள் தளர்ந்தன. திரும்பி அவனை நோக்கி தளர்ந்த மென்குரலில் “எனக்கு நண்பனென நீ ஒருவன்தான் துருபதா. உன்னை ஒருகணமேனும் என்னால் மறக்கமுடியவில்லை” என்றார்.
“துரோணரே, அப்படியென்றால் ஏன் இதை எனக்குச் செய்தீர்கள்?” என உடைந்து வெளிவருவதுபோன்ற குரலில் துருபதன் கேட்டான். சக்கரத்தைப்பிடித்த கைகள் அதிர தலைதூக்கி “ஆம், நான் செய்ததெல்லாம் பிழை… நான் இழிமகன். ஆணவமும் சிறுமதியும் கொண்டவன். நீங்கள் கற்காத கல்வியா? உங்களுக்குத் தெரியாத நெறியா? ஆசிரியரான நீங்கள் இதைச்செய்யலாமா?”
அந்த நேரடி வினா துரோணரை வலிமையான காற்றுபோல தள்ளி பின்னடையச்செய்தது. துடிக்கும் உதடுகளுடன் தரையை கையால் அறைந்தபடி துருபதன் கூவினான் “ஏன் இதைச்செய்தீர்கள் உத்தமரே? சொல்லுங்கள்!” அடக்கப்பட்ட அகவிரைவால் அவன் தோள்கள் அதிர்ந்தன.
நீர்த்துளிகள் நின்ற இமைமுடிகளுடன் துரோணர் ஏறிட்டு நோக்கினார். முகம் சுருங்கி விரிந்தது. உதடுகள் இறுக பற்களை கிட்டித்து சீறும் ஒலியில் சொன்னார் “ஏன் என்றா கேட்கிறாய்? உன் அரண்மனை வாயிலில் நான் நின்று உடல் பற்றி எரிந்தேன் தெரியுமா? உள்ளமும் ஆன்மாவும் கொழுந்துவிட்டு எரிந்தபடியே ஓடினேன். என் அன்னைமடியில் முகம் புதைத்து கதறி அழுதேன்.”
அதைச் சொன்னதுமே அச்சொற்களுக்காக அவர் கூசியதுபோல தயங்கினார். பின்னர் அகத்தை உந்தி முன் தள்ளி மேலும் பேசினார் “துருபதா, இத்தனை ஆண்டுகளாக ஒருநாள் கூட நான் நிறைவுடன் துயின்றதில்லை. என் அகத்திலெரிந்த அந்த அனலில் ஒவ்வொரு கணமும் வெந்துருகிக்கொண்டிருந்தேன்… இதோ…” என தன் நெஞ்சில் கைவைத்தார். “இதோ, என் அனல் அடங்கியிருக்கிறது. ஆனாலும் நான் எரிந்த அந்த வருடங்களை நினைத்தால் என் உள்ளம் பதறுகிறது.”
அவர் குற்றவுணர்வுகொண்டு தன்னை நியாயப்படுத்த முயல்கிறார் என்று அர்ஜுனன் நினைத்தான். துருபதனே உணர்ந்துகொண்டு தன் செயலை ஏற்கவேண்டுமென எண்ணுகிறாரா என்ன? “நீ என்னை அவமதித்தாய். என் ஆன்மாவைக் கொன்றாய். நீ… நீ…” என துரோணர் மூச்சிரைத்தார்.
“ஆம், அவமதிப்பின் கொடுந்துயரை இப்போது நானும் அறிகிறேன். உங்களைவிடவும் அறிகிறேன்” என்றான் துருபதன். “துரோணரே, அத்தனை பெரும் துயரை அடைந்த நீங்கள் அதை மறந்தும் இன்னொருவருக்கு அளிக்கலாமா? உங்கள் நண்பனாகிய எனக்கு அதை அளித்துவிட்டீர்களே. இனி எஞ்சிய வாழ்நாள் முழுக்க நான் எரிந்துகொண்டிருப்பேன் அல்லவா? இனி ஒருநாளேனும் என்னால் துயிலமுடியுமா?”
துரோணர் திகைத்தவர் போல நின்றபின் ஏதோ சொல்லவந்தார். “வணங்குகிறேன் துரோணரே” என்றபின் துருபதன் வலக்காலை ஊன்றி அதன் மேல் கையை வைத்து முழு மூச்சால் உந்தி எழுந்தான். தேரைப்பற்றியபடி நின்று சிலகணங்கள் கண்களை மூடிக்கொண்டான். நீர்த்துளிகள் நின்ற இமைகளைத் திறந்து பெருமூச்சுவிட்டு கைகூப்பினான். “எனக்கு கற்றுத்தந்துவிட்டீர்கள் துரோணரே. நீங்கள் என் குரு.”
திரும்பி தன் படைத்தலைவர்களை நோக்கினான். அவர்கள் ஓடிவந்து அவன் தோள்களைப்பிடித்தார்கள். அவன் எவரையும் நோக்காமல் திரும்பி தள்ளாடும் கால்களுடன் நடந்தான். அவர்கள் அவனை மெல்ல ஏந்தி கொண்டுசென்று தேரில் ஏற்றினர். ரதம் அவன் அமர்ந்தபோது அச்சு ஒலிக்க அசைந்தது. அந்த ஒலி அமைதியில் உரக்க ஒலித்தது.
துரியோதனன் பொருளற்ற நோக்குடன் துருபதனையே பார்த்திருந்தான். கர்ணனின் விழிகள் பாதி மூடியதுபோல தெரிந்தன. பீமன் ஏளனப்புன்னகையில் வளைந்த உதடுகளுடன் துருபதனை நோக்கியபின் அருகே நடந்துவந்தான். அர்ஜுனன் தன்னருகே அசைவை உணர்ந்து நோக்கினான். அஸ்வத்தாமன் வந்து துரோணரின் அருகே நின்றான். அவரும் விழப்போகிறவர் போல அவன் தோள்களை பற்றிக்கொண்டார்.
வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்