ஆகவே கொலைபுரிக!- கடிதம்

126__24656_zoom

சமீபத்தில் தங்களின் ‘ஆகவே கொலை புரிக’ நூலை படித்தேன். [கயல் கவின் பதிப்பக வெளியீடு]

குடும்ப வரலாறு

குடும்ப வரலாற்றை அனைவரும் தெரிந்துவைத்துருக்க வேண்டும் என்று முன்பே எங்கே படித்திருக்கிறேன். அனேகமாக இது எந்தக் குடும்பத்திலும் இல்லை எனலாம். அதிகபட்சம்

இவருடைய மகன்/மகள் இவர் என்று பெயர்களை மட்டும் குறித்துவைத்திருக்கிறார்கள். இதற்கு என்ன செய்யலாம், எப்படித் திரட்டலாம் என யோசித்ததில் விக்கிபீடியா போன்ற இணையதளம் அமைத்தால் சரியாக இருக்கும் எனத் தோன்றியது. குடும்பத்தின் வாரிசிகள் உலகெங்கிலும் எங்கிருந்தாலும் தங்கள் குடும்ப வரலாற்றை Edit செய்யலாம். இதில் என்ன சிக்கல் இருக்கும் என்று யோசித்தால் உண்மைகளை வெளிப்படையாகச் சொல்ல வெளிவருவார்களா என்பதுதான். லா.சா.ரா. போல தஙக்ள் குடும்பத்தில் நிகழ்ந்த எதிர்மறை நிகழ்வுகளையும் வெளிப்படையாகக் கூற முடியாது அல்லவா?

பந்தி
பந்தி கட்டுரையும் தொடர்ந்த விவாதமும் அருமை. buffet முறையில் இருக்கும் வழிமுறைகளை தொடர்வதில் நம்மவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அதேபோல எதற்கு ஸ்பூனைப் பயன்படுத்த வேண்டும் எதற்கு ஃபோர்க்கை பயன்படுத்த வேண்டும் என்பதை table etiquette என்று பாடமாக சொல்லிக்கொடுத்தாலும் ஏற்கத்தயாராக இருக்கிறோம். ஆனால் நம்முடைய பழக்கங்கள் என்றால் அவை தேவையற்ற பழமையான வழக்கங்கள் என்று ஒதுக்கிவிடுகிறோம். இது ஒரு பொதுவான போக்கு அல்லவா? பந்திக்கு மட்டுமே அல்ல!
ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பந்தி மரியாதை உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். இவை நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்லாமல் அன்றாடம் வீடுகளில் கடைப்பிடிக்கப் படும் முறைகளும் உள்ளன அல்லவா? அவை இன்று பெரும்பாலும் சிதைந்து வருகின்றன என நினைக்கிறேன். அதன் நீட்சியாகவே பொது இடத்தில் உண்ணுதலிலும எனலாமா?

மேலும், தற்போது பிறருக்கு தொந்தரவாக இருக்கக்கூடாது என்ற சிந்தனையே இளைஞர்களிடத்தில் இல்லை எனப்படுகிறது. என்னைவிட 6-7 வயது குறைந்த நண்பர்களுடன் சுற்றுலாக்கள் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ரயிலில் செல்கையில் இரவில் பிறர் தூங்கத்தொடங்கியவுடன் சத்தம் போட்டுப் பேசுதல், சீட்டு விளையாடுதல் ஆகியவற்றை நிறுத்திவிடுவதில்லை. நாம் அந்தக் குழுவுடனே இருந்தாலும் அவர்களிடம் இது தவறு தவிர்க்கப் படவேண்டியது என்று சொல்ல முடியாது. அப்படிச் சொல்லத்தொடங்கினால் நம்மை வயதானவர்போல் பார்க்கத்தொடங்கிவிடுவார்களோ/ நம்மை அவர்கள் குழுவில் சேர்த்துக்கொண்டது தவறோ என சிந்திக்கத் தொடங்கிவிடுவார்களோ என்றெல்லாம் நினைத்து அமைதியாகிவிடுவேன். சில சமயம், எனக்கு இப்போது விளையாட விருப்பமில்லை, தூக்கம் வருகிறது என்று சொல்லி அத்தவறிலிருந்து விலகி இருக்க முனைவேன். யாரேனும் சக பயணிகள் தலையிட்டு சற்று அமைதியாக இருக்கச் சொன்னாலும் உடனே நிறுத்திவிட மாட்டார்கள். சற்றே குரலைக் குறைத்துக்கொண்டு, விளக்கை அணைக்காமல் தொடர்வார்கள். ஒருமுறை கீழ்ப்படுக்கை எதுவும் கிடைக்காததால் மேல்படுக்கையில் இருபுறமும் அமர்ந்துகொண்டது விளையாடிக்கொண்டதும் உண்டு. எனக்கு இவர்கள் எந்தச் சூழலில் என்ன சொல்லிக்கொடுக்கப்பட்டு வளர்ந்திருப்பார்கள் என கற்பனையே செய்யமுடியவில்லை. இவர்களை நான் cable TV generation என்பேன். பெரும்பாலும் தங்கள் பொழுதுபோக்காக தனியார் தொலைக்காட்சிகளின் வணிக நிகழ்ச்சிகளை பார்த்தே வளர்ந்த, தனியார் பள்ளிகளில் சுய நல நோக்கோடே படித்து வளர்ந்தவர்கள்.

அகம் மறைத்தலில் அன்பை வெளிக்காடுவதால் இழக்கும் மரியாதை, கையும் தொழிலும்-இல் தொழிலாளியிடமிருந்து படைப்பூக்கத்தின் மகிழ்ச்சி பிடுங்கப்படுதல், சுயபலி மற்றும் தற்கொலை குறித்த கட்டுரையில் அவற்றைத் தியாகமாக பார்க்கும் மாற்றுப் பார்வை, சயன்ஸே சொல்லுதுவில் தூய அறிவியல் வாதத்தின் தவறு என ஒவ்வொன்றிலும் ஒரு பொறி.

எழுத்தாளர்களை எதுவரை ஆதரிப்பது கட்டுரையை என்னால் நேரடியாகத் தொடர்பு படுத்திக்கொள்ள முடிந்தது. உலோகம் நாவல் குறித்து ஒரு வலைப்பதிவில் அப்படி ஒரு விவாதத்தில் நான் நீண்ட விவாதம் செய்திருக்கிறேன்.

நமது சூழலில் ஒரு விவாதம்/சிந்தனை பரிமாற்றம் என்பது என்ன என்றே சாதாரணர்களுக்கு தெரிவதில்லை என்பது புரிந்தது. பிறர் கருத்தைக் கேட்டு, ஒப்புக்கொள்ளும்படி இருந்தால் தன் கருத்தை சிந்தனையை சற்றே மாற்றிக்கொள்ளும் திறந்த மனத்துடன் எதிர்கொள்வதில்லை. பெரும்பாலும் என் கருத்து சரியா/உன் கருத்து சரியா என்ற போட்டியே விவாதங்களில் குடும்பங்களில் கூட நிலவுகிறது என நினைக்கிறேன்.

“நாமறியும் நமது பண்பாடென்பது நம்மைச் சுற்றி இருக்கும் வாழ்க்கையில் இருந்து நாமறியும் சிக்கல்கள் மட்டுமே” என்பது துல்லியாமன் பார்வையைத் தருகிறது. பலரும் உணரத் தவறுவது என்னவென்றால் பண்பாடென்பது பொது நன்மைக்காக உள்ளுணர்வாலும் நடைமுறை அறிவாலும் படிப்படியாக உருவாகி வந்ததே. யாரோ ஒருவர் ஒரு நாளில் பொழுது போகாமல் உட்கார்ந்து வடிவமைத்தது அல்ல என்பது.

‘ஆகவே கொலை புரிக’ என்ற தலைப்பைப் பார்த்தவுடன் விலங்குகளை கோயில்களில் பலியிடுவதன் வரலாற்று உளவியல் பிண்ணனி குறித்த கட்டுரை இருக்கும் என நினைத்தேன், ஆனால் அது இல்லை.

இப்படி இணையத்தில் நிகழ்ந்த விவாதங்கள் நல்ல புத்தகமாக வரமுடியும் என்பதைப் பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்புடன்,
சாணக்கியன்

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 10
அடுத்த கட்டுரைபிரயாகை ஒரு கடிதம்