ஒரு கடிதம்

 அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜெயன் அவர்களுக்கு,

நலமா, இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். நான் தங்கள் எழுத்துக்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக படித்து வருபவன். தங்களின் காடு நாவல் படித்து விட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன், பின்பு 2008 ஆம் ஆண்டு எஸ்.ரா நூல் வெளியீடு விழாவிலும் சென்ற மாதம் தங்கள் நூல் வெளியீட்டு விழாவிலும் தங்களை சந்தித்தது நினைவு இருக்கலாம். நான் தற்போது bioinformatics துறையில் மேற்படிப்பிற்கு அமெரிக்க வந்து உள்ளேன்.

நீண்ட நாட்களாய் எழுத நினைத்த கடிதம், சமீபத்தில் படித்த தங்களில் சில நூல்களும் சம்பவங்களும் எழுத வைத்தது. இங்கு வருகையில் மறக்காமல் எடுத்த வந்த புத்தகங்களில் பெரும்பாலும் தங்கள் எழுத்துகளே. எந்த முன்முடிவும் அற்று தேடலோடு உங்கள் எழுத்துகளோடு அறிமுகம் ஆகுபவன் உங்களை நிச்சயம் புரிந்து கொள்வான். அதை விடுத்து தங்கள் கட்டுரையில் இருந்து சில வரிகளை எடுத்து கொண்டு, அதை திரிபு படுத்தி உங்கள் மீது வசையை புரிவதால் பயன் ஒன்றும் இல்லை. என் உடன் பனி புரிந்த நண்பர் ஒருவர் வசைகள் மூலமே உங்களை அறிந்தவர், அவருக்கு அதனை நீக்கும் பொருட்டு சில கட்டுரைகள் பரிந்து செய்தேன், அதன் பின் அவரும் தங்களது தீவிர வாசகர். (நானும் அவருமே உங்களை அன்று புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்தோம்.)

சு.ரா நினைவின் நதியில் ஓரிடத்தில், யோகி ராம்சுரத்குமாரை சந்தித்த பின் அவரது “Goodness leads ” மற்றும் ” writing is nobody ‘s self ” ஆகிய பதிகள் உங்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை சொல்லி இருப்பீர்கள். தங்களது “ஆழ்நதியை தேடி” நூலிலும் நீங்கள் பெரும் தேடலுக்கு பின் வந்த சேர்ந்த இடத்தை திரு.ஜெயகாந்தன் “தோற்றம்” மற்றும் “மறைவு” பற்றி சொன்ன இடங்களை வைத்து அவரை மதிப்பிட்டிருபீர்கள். அவர்களை நீங்கள் மிக தீவிரமாக உள்ளூர அறிந்த இடம் அது என்றே கொள்கிறேன். அதே போல தங்கள் ஆக்கங்களில் பல இடங்களில் உங்களை உணர்ந்த இடங்கள் உள்ளது. அதை மீறி யார் எப்படி பட்ட வசைகள் உருவாகினாலும் அந்த இடத்தை எவராலும் அசைக்க முடியாது என்றே தோன்றுகிறது. உங்கள் சட்டைகளை களைந்து நிர்வாணமாய் உள்ள இடம். இதே போல எண்ணற்ற வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகிறான். எனக்கான வாசகர்களை எனக்கு தெரியும் என்று நீங்கள் சொல்லும் போது எல்லாம் மனம் மகிழ்ச்சி கொள்கிறது.

ஆதவன், தவிர்க்க முடியவில்லை என்ற அவரது கட்டுரை தொகுப்பில் சொல்லி இருப்பார், ” எனது ஆக்கங்கள் எல்லாம் ஒருவகையில் நேர்மையான சம்பாஷனை முயற்சிகளே” என்று.  தங்களது ஆக்கங்களும் நேர்மையான முயற்சிகள் என உள்ளூர உணரும் இடம் பல உள்ளது. ஒரு சாதாரண வாசகனின் கேள்விக்கு பதிலான அரதி பற்றிய கட்டுரை ஆகட்டும் இல்லை தங்கள் மனம் கவர்ந்த மதிபிற்குரிய எழுத்தாளர் அசோகமித்திரன் பற்றியவை ஆகட்டும் எல்லாமே தங்களின் நேர்மையான முயற்சிகளே. மேம்போக்காக என ஒன்று எங்குமே இல்லை.  

தங்களில் ஓயாத உழைப்பு உத்வேகமும் உங்கள் வாசகர்களையும் தொற்ற வைக்க கூடிய எழுத்து உங்களுடையது. எனது தலைமுறையின் ஒரு மாபெரும் எழுத்தாளனுடன் உரையாடுகிறோம் என்று சந்தோசம் கொள்கிறேன். உங்கள் மகன் உங்கள் தோல் மீது கை போட்டு செல்வது போல உங்கள் எழுதும் இதுவரை எனக்கு இருந்து வந்துள்ளது. மேலும் நீங்கள் ஊக்கத்துடன் செயல் பெற இறைவனை பிராத்திக்கிறேன்.

 

சில நினைவூட்டல்களும் சந்தேகங்களும்:

 

1 இலக்கிய முன்னோடிகள் வரிசையில் நீங்கள் “ஆதவன், இந்திர பார்த்தசாரதி” ஆகியோரை பற்றி எழுதுவேன் என சொல்லி இருந்தீர்கள். ஆனால் அவை இன்னும் வரவில்லை என்றே எண்ணுகிறேன்.

 

2 நீங்கள் அங்கெங்கே குறிப்பிடும்  நூல்களை நான் குறிபெடுத்து இருந்தாலும், படிக்க வேண்டிய சிறந்த நாவல்கள் (தமிழ் மற்றும் இந்திய மொழி தவிர்த்து) பட்டியல் ஒன்று தர இயலுமா. மொழிபெயர்ப்பு பற்றிய குறிப்பு இல்லாமல் அதன் ஆங்கில பெயர்களே போதுமானது. இங்கு அவையே கிடைக்கும்.  பெரும்பாலும் உங்கள் சிபாரிசு படியே இதுவரை என் வாசிப்பு இருந்து வந்துள்ளது. அதனால் தான்.

 

3 தங்கள் தளத்தின் கோப்புகள் சென்ற வருடம் வரை சரியாக அமைந்திருந்தது, இப்போது ஒவ்வொரு மாதம் சென்று தான் தேட முடிகிறது, அதை பக்கங்களாக மாற்ற இயலுமா? முன்பு இருந்தது போல?

 

4 படிக்க வேண்டிய தத்துவ நூல்கள் பற்றிய தங்கள் பதிவினை தேடி கொண்டு இருக்கிறேன், அயன் ரான்ட் பற்றிய பத்திற்கு பின் நீங்கள் கொடுத்தீர்கள் என நினைவு.

 

கொஞ்சம் சின்ன கடிதமாக போய் விட்டது, மனிக்கவும். அவ்வளவு இருக்கிறது தங்களிடம் பேச. விரிவாக தங்களது ஆக்கங்களை முன்வைத்து எனது உரையாடலை தொடங்குகிறேன். உங்களோடு உரையாடத்தான் இத்தனை  படிக்க வேண்டி இருக்கிறது.

சும்மா லாம் வந்து உங்ககிட்ட கருத்து சொல்ல முடியாது ஜெயன், உங்களை மறுத்து பேசவே விரிவான தேடல் அவசியம் ஆகிறது.

அன்புடன்,

மதன்.எஸ்

Indianapolis, USA 

அன்புள்ள மதன்,

அமெரிக்காவிலிருந்து என்றபோது ஹார்வார்டு மதன் நினைவுக்கு வந்து சின்ன குழப்பம். இப்போது தெளிவு அடைந்தேன். நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? புதியசூழல் புதிய சவால்கள் நடுவேயும் நீங்கள் தமிழ் வாசிப்பது நிறைவூட்டுகிறது. அது ஓர் அரிய உறவாக நீடிக்கவேண்டும் என வாழ்த்துகிறேன். இலக்கியமளவுக்கு மண்ணுடன் உணர்ச்சிகரத்தொடர்பை உருவாக்கும் பிறிதொரு ஊடகம் இல்லை.

ஆம், நான் சில வரிகளில் அபூர்வமான மன எழுச்சியை அடைந்திருக்கிறேன். அது ஏன் நிகழ்கிறது? ஒரு முழுமைத்தரிசனம் தற்செயலாகவே அதற்கான சொற்களைக் கண்டடைகிறது. அதற்கு அதிக வார்த்தைகள் தேவையில்லை. நாகம்போல அச்சொற்கள் ஆத்மாவைத்தீண்டி விடுகின்றன.

என் சவாலே என் தரிசனங்கள்  அவற்றுக்கான சொற்களை என் வழியாக கண்டடையவேண்டும் என்பதே. அதுவே என் தவம்

1. ஆதவன், இந்திராபார்த்தசாரதி பற்றி எழுதும் திட்டம் உண்டு, தவறித்தவறிச் சென்றுகொண்டே இருக்கிறது.

2. பட்டியல் எளிதில் போடமுடியுமா என்ன? அவ்வப்போது விவாதங்களில் இயல்பாக புத்தகப்பெயர்கள் வந்தபடியேதான் உள்ளன. இருந்தாலும் முயல்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைவடக்குமுகம் [நாடகம்] – 3
அடுத்த கட்டுரைவடக்குமுகம் [நாடகம்] – 4