[ 5 ]
மாமரம் செடியாகி மரமாகி நிழல்விரிக்கும் காலத்திலும் மலைமீதுதான் இருந்தார் பிள்ளை. மழையிருக்கும் காலத்தில் கொடுப்பைக்கீரையும் குப்பைக்கீரையும் காச்சில்கிழங்கும் சேனைக்கிழங்கும் பறித்துத் தின்றார். கானல் எரிந்த கோடையில் காரையிலையும் கூவைப்புல் கிழங்கும் தின்றார். கொட்டகையில் ஒவ்வொருநாளும் தன்னுடன் தான் மட்டுமாக சிறுதகரக்குடிலில் வாழ்ந்தார். தகரக்கொட்டகை காற்றில் பிய்ந்து சென்றபோது இன்னும் மேலே சென்று ஒரு நரிக்குகைக்குள் ஒதுங்கிக் கொண்டார். அக்குகையைத் தோண்டி விரிவாக்கி கல்லடுக்கிச் சுவர் கட்டி உள்ளே வாழ்ந்தார். அவர் பெயரை அறிந்த கோனார்கள் காலமாகி அடுத்த தலைமுறை உருவாகி வந்து அவரை குகைச்சித்தர் என்றது.
அவ்வப்போது ஊரில் இருந்து யாராவது சோறும் பழங்களும் கொண்டுவந்து குகைச்சித்தருக்குப் படைப்பதுண்டு. பெரும்பாலும் ஏதாவது மாடுமேய்க்கும் பையனின் கையில் கொடுத்தனுப்புவார்கள். குகைக்குள் இராப்பகல் அற்ற இடத்தே இருந்து பராக்கு அற ஆனந்த தேறல் புளித்துப் புளித்துப் பருகும் பிள்ளைவாளை மெல்ல “சாமீ சாமீ” என்று அழைப்பார்கள். அவர் மெல்ல எழுந்து கண் மலர்ந்தால் கைகூப்பி வளைந்து கும்பிட்டு “சாமி… படைப்பு இருக்கு” என்பார்கள். அவர் ரத்தவிழிகளால் அந்த மானுட நிழல்களைக் கூர்ந்து பார்த்தபின் மெல்ல எழுந்து வந்து அமர்ந்துகொண்டதும் வாழையிலை விரித்து சோற்றை அள்ளி வைப்பார்கள். பெரும்பாலும் உப்பில்லாத சித்ரான்னம். மூன்றுவகைப் பழங்கள். அவர் மௌனமாக சாப்பிட்டுவிட்டு அவர்களுக்கு என்ன மொழியென்றே புரியாத சொல்லால் ஆசியளித்துவிட்டு குகையிருளுக்குள் சென்று அமர்ந்துகொள்வார்.
வெளியே நின்று கையேந்தி ”சாமி, வரம்குடுக்கணும்” என்று இரப்பார்கள். பீடிருக்க ஊணிருக்க பிள்ளைகளுந்தாமிருக்க மாடிருக்க கன்றிருக்க வைத்தபொருளிருக்க ஏதில்லாது நிற்கும் அவர்களை அவர் திடீரென்று திகைத்துப் பார்ப்பார். ”சாமீ, கண்பார்க்கணும்… ஏழைச்சனங்க சாமி.” என்ன சொல்கிறார்கள்? அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே… சட்டென்று சிரிப்பு பீரிட்டுவந்து அவரது உடலை உலுக்கும். மெலிந்த மார்பு அதிர தாடி அதில் உரசும். வெளியே நிற்பவர் மேலும் கூசி வளைந்து கைகூப்புவார். தாளமுடியாத சிரிப்புடன் பிள்ளைவாள் ஆசி போல கையாட்டி “போ… போடா” என்று சொன்னதும் பயந்தவர் போல ஓடி மலைச்சரிவிறங்குவார் பக்தர்.
ஒன்பது வருடம் பிள்ளைவாள் குகைச்சாமியாக இருந்தார். அவர் நட்ட மாமரம் நாற்புறமும் கிளை பரப்பி இலைதழைத்து அந்த பொட்டல் வெறுமைபடர்ந்த மலைச் சரிவில் தன்னதனித்திருப்பது தானொன்றறியாத நிலை என்ன அங்கே நின்றது. கீழே பாறையடி கணியாகுளம் பார்வதிபுரம் வடசேரி வரைக்கூட மலைச்சரிவில் பச்சைப்புள்ளியாக அந்த மரம் தெரிந்தது. அங்கே சித்தர் இருக்கும் தகவல் செவிவழிக்கதையாகப் பரவியது. “எளவு, சித்தன்லாவே அங்கிண இருக்கான்… காத்தைக் குடிக்கானாம்வே” என்றார் வாழைக்கு அருகுபிடிக்க அதிகாலையில் மண்வெட்டிகளுடன் சென்ற நேசமணி.
“அவனுக்கு ஒரு பத்துதலை நாகம்லா கொடைபுடிக்குவு… உம்மாணைவே, நம்ம கோலப்பனுக்க சொக்காரன் கொமரேசன் ரண்டு கண்ணால பாத்திருக்கான்…” என்றார் கபிரியேல். சித்தரின் ஆண்குறி ஒரு பெரிய மலைப்பாம்பாக மாறி தரையில் ஊன்றி நிற்க அதன் மேல் ஏறி அமர்ந்து அவர் தவம்செய்வதாக நாட்டுவைத்தியர் ராசமணி சொன்னார். ”அதுக்குள்ள இருக்கப்பட்டது ராசகலையில்லா… அமிருதம்வே… நானாழி நஞ்சு நாற்கழஞ்சானா நஞ்சும் அமுதமாமே நாகமணியேண்ணாக்கும் பாட்டு, ஏது?” “குப்பியிலே பிடிச்சுவச்சா மணியா ஆவுமாவே?” என்று கேட்டு அடிவாங்காதொழிந்தார் புல்லுவிளை அருமைநாயகம்.
மாமரத்தடியில் கால்கொண்டு கட்டி கனல்கொண்டு மேலேற்றி பால்கொண்டு சோமன் முகம்பற்றி அமர்ந்து தன்னுள் இருந்தார் பிள்ளைவாள். மாமரத்தின் அடியில் நீரும் நெருப்பும் காலும் ககனமும் சுழிக்கும் சுழிமுனையிருப்பதை தன் உடலையே வேம்புக்குச்சியாக ஆக்கி உணர்ந்து கொண்டிருந்தார். ஆனால் ஒருநாளும் அதனுள் இறங்க அவரால் முடியவில்லை. நீரை வென்றவர் நெருப்பை வெல்லவில்லை. நீரகத்து இன்பம் பிறந்ததென்றாலும் நெருப்பிடை காயத்தில் சோதி பிறக்கவில்லை என்று அவர் மட்டுமே உணர்ந்தார். ஒவ்வொருநாளும் தலையால் முட்ட, முட்டுந்தோறும் சுவர் கனத்து வருவதையே அறிந்தார்.
இருட்டுக்குள் நடப்பவன் இருட்டைப்பழகியபின் ஒளியை அஞ்சும் நிலை ஏற்பட்டது போல. பற்றறியா முத்தர்தமை வாழைப்பழம்போல விழுங்குகிற பரமும் கண்பார்க்கவில்லை. ஏற்கனவே பேதி போலும். கரிச்சா இஞ்சி காஞ்சா சுக்கு என்ற பழமொழி பிள்ளைவாளின் நெஞ்சுக்குள் எப்போதோ குடியேறி அதுவே ஒரு அர்த்தமும் இல்லாமல் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. சுக்கென உடல் நொய்ய சிக்கென எழுந்து மனம் பேருருவம் கொள்ள அகம் மட்டுமே தானாக அவிந்த உடலில் நின்று கொழுந்தாடுவதை கண்டுகொண்டிருந்தார். முத்தி முடிவில்லீதென்று முன்னூலும் பின்னூலும் மற்றநூலெல்லாம் மறந்து மெய்யெனப்படுவதே பொய்யாக இருந்தபோது அப்படி இருப்பது அவராகவும் பிறிதொருவர் வேறெங்கோ அலைவதாகவும் மாயம் காட்டிய மனமெனும் ஒருபாவி மயங்கிச்சிரித்து உடன்வந்தது.
அந்நாளில் ஓரிரிரவில் பிள்ளைவாள் ஒரு கனவு கண்டார். கனவிலும் ஒரு கனவே காணலானார். அக்கனவினுள் ஒரு பிள்ளைவாள் விசாலமான வீட்டுத்திண்ணைமேல் கனத்த தொந்தி தம்மதென்று தாமிருந்து பட்டினத்துப்பிள்ளைவாளின் பழைய நூலொன்றை வாசித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு சொல்லும் காதுக்குள் கோழியிறகால் குடைவதுபோல் பேரின்பமூட்டியது. அடிக்கடி கிக்கிளி பூண்டு சிரித்தும் யாராவது பார்க்கிறார்களா என்று ஓரக்கண் எய்து கவனித்தும் எழுத்தெண்ணி தமிழ்நறவு மாந்திக்கொண்டிருந்தார். மங்கையர் யோனி மிசை வைத்திருக்குமாசைதனை பங்குசெய்து நூற்றிலொரு பங்கெடுத்து கங்கைமதி வேணியான் பாதார விந்தத்தில் வைத்தக்கால்….
“எளவு, அத எப்டிப்போட்டு பங்கு வைக்கியது? பங்குவச்சா ஒண்ணு நூறாட்டுல்லா ஆவும்” என்று சிந்தாந்தமாக விரித்தபோது நெல் காயப்போட நாகம்மை வெளியே வந்து முற்றத்தில் பனம்பாயை விரிக்க ஒருபக்கம் அவள் விரித்துச்செல்ல மறுபக்கம் அது சுருண்டுவந்தது “செத்த இந்த எளவை வந்து பிடியுங்கோ… ராப்பகலா அந்த எளவெடுத்த சனியன வச்சு மாரடிக்காம” என்றாள் நாகம்மை. “ஏட்டி அது கன்ம மலமுல்லா? விட்டா விடுமா, சுட்டா சுடுமா? நட்டா முளைக்கும், நாலூர் தேடிவரும் பட்டாங்கில் பாட்டாவும்… மலம்னா என்னாண்ணு நெனைக்கே..?” “ஓ, வாயெடுத்தா மலம்… நினைச்சு ஒருவாய் சோறு உண்ண முடியாம ஆயாச்சு இந்த வீட்டிலே” பிள்ளை, “இது வேற மலமுல்லா” என்றார். “ஆமா, போயி ஓரோ மலமாட்டு எடுத்து மோந்து பாத்து கண்டுபிடியுங்கோ…”
பிள்ளைவாள் எழுந்து வந்து பாயைப்பிடிக்க அவள் அதை விரித்து கட்டுத்தறியை எடைவைத்தாள். பிள்ளைவாளின் பேதை மடநெஞ்சு பிறந்திடத்தை தேட, கறந்திடத்தை கண் தேடியது. “ஏட்டி , உங்க மாமியாக்காரி என்ன செய்யா?” ரோகம் பிடிகிடைத்த நாகம்மை “அய்யே, இது என்ன கார்த்திகை மாசத்து பைரவசாமி மாதிரி எப்ப பாத்தாலும் பென்சிலு மொனையோட…? வெக்கமில்லை?” என்றாள். “உருவின வாளை உறையில போடாத வம்சமுல்லா நாங்க…” “வெளங்கும்” என்று அவள் நொடித்துச் சிரிக்க “கண்ணுதப்பினா சட்டியும் கலயமுமாட்டு போயிடுவா சிறுக்கி மூளி புருசனுக்கு வாடை குடுக்கதுக்கு… ஏட்டி சவத்துமட்டை, பசுவுக்கு கூளம் போடச்சொன்னா அங்க என்ன செய்யுகே?” என்றது உள்ளே குரல். பிள்ளைவாள் கணத்தில் திண்ணையில் பாய்ந்து அன்னையெத்தனை எத்தனை எத்தனையோ என்ற விசாரத்தில் மூழ்கினார்.
கண்விழித்த பிள்ளை காற்றில் அரசிலைபோல நடுநடுங்கி அப்படியே அமர்ந்திருந்தார். மெய்போலும்மே மெய்போலும்மே. பொய்யே என்றும் மெய்போலும்மே. எதிரே நிலவெழுந்த பெருவெளி. கால்கள் களைத்தாட எழுந்து மெல்ல குகைவிட்டு வந்து பாலில் குளித்த யானை என நின்ற கரும்பாறை ஏறி அமர்ந்து விரிந்த காட்டைப் பார்த்தார். நிலவை அளைந்த மரங்கள் மேல் காற்று ஓடிக்கொண்டிருந்தது. பூத்த மரங்கள். காய்விட்ட கனிமரங்கள். பச்சைவாசனையும் பனிமலர்வாசனையும் நிறைந்த காற்று வந்து தாடியை அளைந்து சென்றது.
நிலவில் குளிர்ந்து கூழாங்கற்கள் நிழல்மீது அமர்ந்து தவமிருந்த மண்ணில் தன்னுடலை வைத்து விலகி அதைப்பற்றி நீர் நோட்டமென நிலநோட்டமிட்டார். பூமி சூல்கொண்ட பெருவெளியின் வெறுமை நெருப்பாகி நெருப்பின் மேல் நீராகி நீர் மொள்ளும் வேராகி வேர்நீர் விழுங்கிய இலைவெளியாகி இலைவெளிமேல் காற்றாகி காற்றுபரந்த ககனமாகி ககனம் சுமந்த வெறுமையாகி நின்றதைக் கண்டு பிரமித்து சொல்லிறந்து சுழியழிந்து ஒன்பதும் ஒன்றாகி ஒன்று மேலெழுந்து ஒன்றிலாதாகி அமர்ந்திருந்தார்.
பின்திரும்பி தன் குகையை, அங்கே முற்கணம் வரை இருந்த அவனை, உப்பு தேடி அவன் நட்ட புளிப்பை சிவந்து பழுத்த கண்களால் பார்த்தார். பூவும்பிஞ்சும் விடாமல் பச்சை தழைத்து மலட்டுப்பேரழகுடன் நின்றது மாமரம். அந்நிலையில் ஆவிபிரிந்ததென்றால் அந்த மாமரத்தடி எத்தனை நூற்றாண்டுகளுக்கு சித்தர் சமாதியென வழிபடப்படும் என்று எண்ணிக்கொண்டார். எத்தனை சித்தர்கள், எத்தனை யோகிகள். அறிந்தவை கோடிகோடியென்று அறிந்து சிரிக்கிறது அறியவொண்ணாமை. நிலா நிறைந்த இரவில் மலைச்சரிவில் அந்த மரத்தடியின் தனிமையில் அப்பால் நின்ற நரி வெருண்டு நோக்க கக் கக் கக் என்று குலுங்கிச் சிரித்துச் சிரித்து மெல்ல அடங்கி கண்ணீர் மல்கி பின் மெல்ல அழலானார்.
அழுவது அவரா என்று அவரே எண்ணிக்கொண்டார். அழுது எத்தனை காலம் என்று உள்ளூர எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பவன் எண்ணிக்கொள்ள இன்னொருவன் மேலும் மேலும் உடைந்து உருகிச் சிதறி அழுதுகொண்டிருந்தான். கண்ணீர் தாடியை நனைக்க மெலிந்த மார்பு குலுங்க தலையில் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டு கதறியழுதார். அழுது ஓய்ந்து அங்கேயே படுத்து கண்ணீர் உலர கண்ணயர்ந்தார். பின்பு எழுந்தபோது நிலா கிழக்கே சரிந்திருந்தது.
அவர் குளிர்ந்த நீலநிலவையே நெடுநேரம் நோக்கியபடி இருந்தார். பின்பு மெல்ல எழுந்து உடலை நெளித்து சோம்பல் முறித்தபின் மலைச்சரிவிறங்கினார். நெடுநாட்களாக நடைக்குப் பழகாத கால்கள் தடுமாறின. கூழாங்கற்கள் இடற பாம்புக்குஞ்சுகள் பதறி நெளிந்தோட குள்ளநரிகள் முனகியபடி புதருக்குள் இருந்து எட்டிப்பார்க்க நடந்து களைத்து பாறைகளில் அமர்ந்து மீண்டும் களைத்து கீழிறங்கி வந்தார்.
ஓடையில் நீரள்ளிப் பருகி இளைப்பாறியபோது காலை மெல்ல வெளுத்து வருவதைக் கண்டார். மண்சாலையில் காளைகளுடன் நுகம் தூக்கிச்சென்ற ஏசுவடியான் ”என்னவே, ராத்திரி மாம்பட்டைவெள்ளம் நெத்திக்குக் கேறிப்போச்சோ? போவும் வே, வீட்டுக்கு போயி வல்ல மோரோ எளநீரோ மற்றோ குடியும்…” என்றபடி கடந்துசென்றான். “வயசான காலத்திலே வீடடங்கிக் கெடக்காம…” என்று அவன் முணுமுணுத்துச் செல்வது தெரிந்தது.
அவரை எவருமே அடையாளம் காணவில்லை. புழுதியில் பனியீரம் படிந்திருப்பதன்மீது களைத்த கால்களை தூக்கி வைத்து, ஆழத்து நீர் காட்டியவழியில் சென்று, இளவெயில் எழுந்த நேரத்தில் ஞானமுத்தனின் இல்லத்தை அடைந்தார். சிமிண்ட் போட்டு ஓடு வேய்ந்த வீட்டு முகப்பில் அவித்த நெல்லை பனம்பாயில் காயவைத்துக்கொண்டிருந்த மரியாள் “ஆருவே? பண்டாரமா? நாடு நல்லா வெளங்கும். வே, நேரம் வெளுக்கேல்ல அதுக்குள்ள பண்டாரமும் பரதேசியுமா படியேறி வந்தாப்பின்ன வீட்டுலே லெச்சுமி மயிராட்டா இருப்பா..? போவும்வே” என்றாள்.
இரும்புக்கதவைப் பற்றியபடி பிள்ளைவாள் அப்படியே நின்றார். மரியாள் ஏறிட்டுப்பார்த்து “ஏட்டி, எளவெடுத்தானுக்கு வல்ல கஞ்சியோ பழஞ்சியோ இருந்தா கொண்டுவந்து குடுட்டீ… படப்புகேக்குத மாடன் மாதிரில்லா வந்து நிக்கான்!” என்றாள். உள்ளிருந்து உருண்டை முகமுள்ள கரிய இளம்பெண் அலுமினியச் சட்டியில் நிறைய குளிர்ந்த பழையதுடன் வந்தாள். அதில் மயக்கிய மரச்சீனி மிதந்தது. “இஞ்சேருங்க சாமி…” என்றாள் பெண்.
நிமிர்ந்து அந்த முகத்தைப் பார்த்தார் பிள்ளைவாள். இளமையே அதுவான கரிய மென்சருமம், கழுத்தும் தோள்களும் எங்கும் எண்ணைபூசிய இலை போல ஒரு மெருகு. கருணையுடன் விரிந்த புன்னகையும், கனிந்து இனித்த பார்வையும். உயிர் உயிரென ஒருகணமும் நில்லாமல் கொப்பளிக்கும் இந்த பெருங்கடலின் அலைநுரை அள்ளி வீடுகட்டும் பிரக்ஞை… அவரது மனம் எல்லாவற்றையும் அறுத்து மீண்டு வந்தது. கண்களை அவள் மேலிருந்து விலக்காமல் இரு கைகளையும் விரித்து அந்தச் சட்டியை வாங்கி வாய் எடுக்காமல் மொத்தப் பழையதையும் குடித்தார். வயிறும் உடலும் உடலாகி நின்றதும் எல்லாம் குளிர்ந்து நிலத்தில் அமர்ந்தன. காற்றில் பாறிப்பதறிய பஞ்சுத்துகளொன்று மழை நனைந்து மண்ணில் அமர்ந்தது.
தாடி சொட்ட நிமிர்ந்து சட்டியை நீட்டியபோது “இன்னும் வேணுமா சாமி?” என்றாள். வேண்டாம் என்று தலையசைத்து தாடியை துடைத்தபின் “அன்னலச்சுமியாக்கும்.. சந்தானலெச்சுமியா இருப்பே” என்றார். அவள் முகத்தின் கருமைக்குள் செம்மை பாய கண்கள் சிரிப்பில் ஒளிவிட்டன. முகம் மலர்ந்து இடுப்பில் கைவைத்து எழுந்த மரியாள் “வந்து இரியுங்க சாமி… சீணம் இருக்கும்லா?” என்றாள். பிள்ளை மெல்லச்சென்று ஒட்டுத்திண்ணையில் அமர்ந்தார்.
“இவ எனக்க மருமொவளாக்கும்… சென்சிண்ணு பேரு.” என்றாள். உள்ளே மெல்லிய பெண்குரல் “ஜென்ஸி” என்றது. “ஓ…! அதாக்கும்” என்ற மரியாள், “சாமிக்கு தூரமா?” என்று கேட்டாள். மெல்லப் புன்னகைசெய்த பிள்ளைவாள், “ரொம்பதூரம் அம்மா…” என்றபின் “உனக்க கெட்டினவன் எங்கே?” என்றார். “அது இங்கிணதான் கெடக்கும்… அந்திக்கு கள்ளு உள்ள போனா காலம்பர எந்திரிச்சதுமே வடக்கவெளைக்கு ஓடணுமே” என்றபின் மரியாள் நெல்லை காலால் பரப்பும் மென்மையான நடனத்தை ஆரம்பித்தாள். உள்ளே இருந்த ஜென்ஸி “மாமா இப்பம் வந்திருவாரு… வயலுக்கு போயிப் பாத்துட்டு ஓடையில குளிச்சிட்டுதான் வருவாரு” என்றாள்.
வீட்டுக்கு வலப்பக்கம் பெரிய மாட்டுத்தொழுவில் இரு பசுமாடுகள் நின்றன. மடிபெருத்த கராம்பசுவின் அருகே கன்றுக்குட்டி சலிக்காமல் சப்பிக்கொண்டிருந்தது. அங்கே சாணியை வழித்து குட்டையில் வைத்திருந்ததன் அருகே ஒரு சிறிய நாய்க்குட்டி கட்டப்பட்டு ‘வள் வள்’ என்று பிள்ளையைப் பார்த்து குரைத்தது. பக்கவாட்டில் புதிய வைக்கோல் வாசத்துடன் போர். தூரத்தில் ஒரு சிறிய பைக் நின்றது.
குளித்து தலைதுவட்டாமல் முடியை நீவி மேலேற்றி விட்டு ஈரம் காயா உடலுடன் காதுக்குள் கையை விட்டு ஆட்டியபடி ஞானமுத்தன் வந்தான். தலைமயிர் நன்றாக நரைத்திருந்தாலும் பண்டு போல கட்டுமஸ்தாகத்தான் இருந்தான். உள்ளே வந்து அவரைப் பார்த்ததும் ஒருகணம் நின்றபின் சிரித்தபடி, “இல்ல இதாரு பிள்ளவாளா? என்னவே உம்ம மாமரம் பூத்துதா?” என்றான். அடிபட்டவர் போல பிள்ளை எழுந்து நின்றுவிட்டார். “என்னவே?” என்றான் ஞானமுத்தன். மெல்லத்தணிந்த பின்னர் “பூக்கல்லை” என்றார் பிள்ளைவாள். “அதுசெரி… அப்ப அடியூற்று ஓடினா மட்டும் போராது…” என்றபின் “வாரும்” என்று உள்ளே அழைத்துச் சென்றான்.
“மாமாவுக்கு இவரைத் தெரியுமா?” என்றாள் ஜென்ஸி. “பின்ன? நம்ம பழைய குருவாக்குமே? மண்ணுக்குள்ள மழை இருக்கப்பட்ட விஷயத்தை இவருல்லா சொல்லித்தந்தாரு… இரியும் வே” என்றான் ஞானமுத்தன். பிள்ளை தயங்கியபடி அமர்ந்துகொண்டார். “வெள்ளம் வல்லதும் குடிக்கேரா?” பிள்ளை மெல்ல “இப்பம்தான் குடிச்சேன்” என்றார். ஞானமுத்தன் மருமகள் ஓட்டுச்செம்பில் அளித்த எருமைப்பால் விட்ட காப்பியை ஒரே மூச்சில் கொதிக்கக் கொதிக்கக் குடித்து செம்பை திருப்பிக் கொடுத்துவிட்டு அமர்ந்தான்.
“கண்டீராவே… இப்பம் இதாக்கும் நம்ம செட்டப்பு. நாலு பெட்டைக்குட்டியள கெட்டிக்குடுத்தாச்சு. நல்லா இருக்காளுக. பெயலுக்கு இந்த கறுத்த ரெத்தினத்தை கூட்டிட்டும் வந்தாச்சு… நம்ம குட்டிய பாருங்க, சுந்தரியில்லா?” பிள்ளை திரும்பி ஜென்ஸியைப் பார்த்து “பின்னே?” என்றார். அவள் மேலுதட்டை இழுத்துக் கடித்தபடி வெட்கிச் சிரித்தாள். “பீயேக்காரியாக்கும்… இங்கிலீஸ¤ மணிமணியா பேசுவா” என்றான் ஞானமுத்தன். “சொல்லுட்டி, இங்கிலீஷு சொல்லிக் காட்டு பாப்பம்” அவள் சிரித்து “அய்யோ” என்றாள். “ஒருகொறையும் இல்ல… மாடு கண்ணு வீடு மனை எல்லாம் இருக்கு. சுபம் மங்களம்…” பிள்ளைவாள் சிரித்து “நல்லா இரு” என்றார்.
“எல்லாம் உமக்க ஆசீர்வாதமுல்லா… ஆனா நீருல்லாவே சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்க வெற்றம்பலம் தேடிப்போய் உக்காந்துபோட்டீர்” பிள்ளைவாள் கைகூப்பியபடி அமர்ந்திருந்தார். “செரி இரும், பேசுவோம். எனக்கு குறெ சோலி கிடக்கு… செட்டித்தெருவிலே ஒரு வீடு வைக்குததுக்கு இடம் பாத்து சொல்லணும்… வீட்டுக்கு வட்டி எங்கன்னு தேடுகவனுக செட்டிமாரு… வட்டியில்லேன்னா செட்டி இல்லல்லா… இப்பம் வந்திருதேன்” என்று எழுந்து வெள்ளை வேட்டி கட்டி கையில்லாத சட்டை போட்டு குடையும் செருப்பும் பட்டைபெல்ட்டில் பர்சுமாக கிளம்பிப் போனான். பிள்ளைவாள் அங்கே திண்ணையில் படுத்துக் கொஞ்ச நேரம் தூங்கினார்.
ஞானமுத்தன் வந்து மதியம் சாப்பிட்டபின் அவன் அவரை வெளியே தோட்டத்துக்கு அழைத்துச் சென்றான். அங்கே தென்னை மரங்களுக்கு நடுவே ஓலைவேய்ந்து ஓர் அறையும் திண்ணையும் கொண்ட சிறிய குடில் இருந்தது. “இது நமக்கு வல்லப்பமும் தனிச்சிருக்கணுமெண்ணு தோணினா வாற இடமாக்கும்” என்றான். திண்ணையில் பிள்ளைவாள் அமர்ந்துகொண்டார். ஞானமுத்தன் கயிற்றுக்கட்டிலை எடுத்துப்போட்டு அமர்ந்து வெற்றிலை பொட்டலத்தை பிரித்தபடி “முறுக்குதீரா?” என்றான். “வேண்டாம்” “ஊனப்பால் உறவெதுக்கு ஞானப்பால் லாகிரி போருமே எண்ணு சொல்றீரு…” என்று சிரித்தபடி அவன் பொட்டலத்தைப் பிரித்து வெற்றிலை போட்டுக்கொண்டான்.
“ம்ம்..பிறவு?” என்றான் வாயில் சிவப்புடன். “இப்பம் என்னவாக்கும் பிளான்?” “ஒண்ணும் தெரியல்லை… நான் தோண்டுற இடத்திலே தண்ணி இல்லை…” ஞானமுத்தன் கடகடவென்று சிரித்து “எப்பிடி இருக்கும் வேய்? நீரு அகங்காரத்த வச்சுல்லாவே தோண்டுதீரு?” என்றான். பிள்ளைவாள் குனிந்த தலையுடன் அப்படியே அமர்ந்திருந்தார். “வாசிய அடக்கி வலஞ்சுழிபோக்கி இருந்தீராக்கும்?” என்றான் ஞானமுத்தன் மேலும் சிரித்தபடி. சட்டென்று பிள்ளை நெடுங்காலம் முன்பு சாமித்தோப்பு அய்யாவுநாடாரை சந்திக்கச் சென்றதை நினைவுகூர்ந்தார். அக்கணமே அவரது மனம் கட்டவிழ்ந்தது. கைகூப்பியபடி “எனக்கொரு வழிகாட்டணும்… எனக்கு ஒண்ணும் புரியல்லை… ஒண்ணுமில்லா மண்ணா இருக்கேன்… எனக்கொரு வழியக்காட்டணும்…” என்றபோது சட்டென்று உடைந்து கண்ணீர் விட ஆரம்பித்தார்.
ஞானமுத்தன் எழுந்து வந்து அவர் அருகே அமர்ந்தான். “எனக்கு வழியக் காட்டினவரு நீராக்கும். அதனால நீரு எனக்கு குரு… பின்ன நான் எங்கயும் நிக்கல்ல. வெள்ளத்திலே போற வித்து மாதிரி போனேன். பதிஞ்ச எடத்திலே முளைச்சேன். அதாக்கும்வே வழி… நீரு நெருஞ்சிமுள்ளாக்கும். உடம்பெங்கும் கொக்கி. போற எடத்திலயெல்லாம் கொளுத்துதீரு… இத்தனை வருசத்திலே உடைப்பெடுத்த மடைவழியா வெளியசாடுத குளத்துவெள்ளம் கணக்காட்டுல்லாவே இருந்திருக்கேரு… ஓடும்நீர்தான்வே கங்கை….” பிள்ளைவாள் பெருமூச்சுகள் விட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். வெளியே ஏதோ காக்கை பிடிவாதமாக கிரா கிரா என்று சொல்லிக்கொண்டிருந்தது. ஜெபமோ தவமோ செய்து தொலைகிறதா அது என எண்ணிக்கொண்டார்.
ஞானமுத்தன் அருகே படுத்துத் தூங்கிவிட பிள்ளைவாள் விழித்திருந்தார். தன்னையே தன்முன் பார்த்துக்கொண்டு கிடந்தார். உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமன் இல்லை என்று எங்கோ ஒரு மூலை சொல்லிக்கொண்டது. உச்சியில் ஓங்கவேண்டுமே. நச்சி நச்சி நாட்கள் நகர்ந்தன என்றாலும்… என்ன பிழை என்னிடம்? கைப்பிடிக்குள் சிக்கியதை விடமுடியாத குரங்கு. ரசலிங்கம் கனத்தது கையில் மனத்தில் சித்ததில் பித்தத்தில். கல் ஒளிபோல கலந்து உள் இருந்திடும் அதை அறிந்திருக்கவேயில்லை. கல்லைக் கைப்பற்றலாம், கலவறையில் சேர்க்கலாம். கல்லின் ஒளியை எப்படி கைப்பற்றுவது. ஒளியைக் கைப்பற்றியவனுக்கு கல் எதற்காக? ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வான்வெளிமீதும் அலைதானடிக்குமோ பரவெளியாடும் பரமா!
எப்போதோ தூங்கி எப்போதோ விழித்தபோது இரவாகியிருந்தது. நல்ல காற்று வீசிக்கொண்டிருந்தது. எழுந்து வேட்டியைக் கட்டி தாடியில் வழிந்திருந்த எச்சிலைத் துடைத்தபடி வெளியே சென்றார் பிள்ளைவாள். இளம்குளிர் கலந்த இருட்டுக்குள் தென்னையும் மாமரங்களும் சலசலத்து மூச்சுவிட ஒரு ஊருயிர் சருகு கலைத்து ஓடியது. வெளியே வந்து முற்றத்தில் நின்றவர் ஒருகணம் அப்படியே நின்றார். எதிரே கவிழ்த்துப்போட்ட பழைய உரலொன்றில் அமர்ந்தவனாக இருந்தும் இல்லையென வான்நோக்கி அமர்ந்திருந்த ஞானமுத்தனைக் கண்டார்.