திருக்குறள் பற்றிய விவாதங்களை [கீதை கடிதங்கள்,விளக்கங்கள்] படித்தேன். சிந்தனைக்கு உகந்ததாக இருந்தது. நன்றி.
திருக்குறளை நீதி நூலாக அல்லது தத்துவ நூலாக காண்பதில், ஒரு எளிய நோக்கும் சுலபமான அணுகுமுறையும் கைக்கூடுகிறது. இந்த சுலபம், மற்ற பரிமாணங்களை தேட வாய்ப்பு அளிப்பதில்லை.
கலாசாரத்தின் புராதன இலக்கியங்களை அனுபவிக்க, சற்று நேரமும், கலாச்சாரத்தின் உள்ளே வாழ வேண்டிய அவகாசமும், இந்த உள்வாங்கிய புரிதலை விஸ்தரிக்கும். சில நேரங்களில் ஆழ்ந்த படிப்பையும் புரிதலையும் இணைத்துக் கொண்ட வாசகர்களும் உள்ளனர். (இது வாசகர்களை எடை போடும் முயற்சி அல்ல )
பல பரிமாணங்களின் அச்சுகோடுகள் மூலம் வரையறுக்கப் படும் இலக்கியத்தின் பொருண்மை, இலக்கியத்தின் விரிவை உள்ளடக்கிய பிம்பம் மட்டுமே. உண்மை தரிசனம் இப்-பொருண்மைக்கு அருகே இருந்தாலும், அப்பாற்பட்டது. பீரங்கியிலிருந்து புறப்படும் குண்டை பௌதீக விதி முறைகளின் மூலம் (projectile track) காகிதத்திலோ கணினியிலோ வரையலாம் என்றாலும், செயல்பாட்டு அனுபவம் (நிஜத்திலோ அல்லது simulation-இல்) வேறொரு புரிதலை உள்ளடக்கியது .
தவிர, பதினென்கீழ்-கணக்கு நூல்களில் திருக்குறள் மட்டுமே நீதி நூல்களை தாண்டிய பரிமாணம் உள்ளதோ என்று நாம் சிந்திக்கிறோம்.
திருக்குறளில் பல இடங்களில், நன்மை தீமைகளை தாண்டிய உயிர் சார்ந்த அன்பு பிரகாசிக்கிறது. பல விதமான உலக அறம்-களில் அறத்தை சார்ந்த கொள்கைகளும், அதன் முக்கியத்வமும் அடிக்கடி உயிர்கள் போனால் பரவாயில்லை என சாய்ந்து விடும். திருக்குறளில் அடிக்கடி, உயிர்களும், அவை பற்றிய அன்பும் கரிசனமும் இன்றியமையாத ஜீவனாக முன்வைக்கிறது.
நான் எழுதியது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்.
திருக்குறள் தியான முறையில் அணுகக் கூடிய, வாழ்வை நிரப்பும் ஊற்று.
ஒருவிதத்தில், எனது பாட்டி போன்றவள். நல்லது – கெட்டது சொன்னாலும், எப்போதும், அன்பும் கரிசனமும் ஊறிக்கொண்டே இருக்கும்.
அன்புடன் முரளி
****
திருக்குறளை பற்றிய விவாதக்குறிப்பைப் படித்து கீழ்க்கண்டவற்றைச் சொல்லவேண்டுமென விழைகிறேன். திருக்குறளை நம் நாட்டில் ஒரு நீதிநூலாக மட்டுமே அணுகுவது மரபாக இருந்துள்ளது. அப்படியே கற்பிக்கப்பட்டு அப்படியே நாம் எண்ணியும் வருகிறோம். ஆனால் இது உண்மைதானா? பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுந்து பெயின் — இது என்ன நீதி? எதையும் அதிகமாக ஆக்கினால் தீங்குதான். ஆனால் அது மட்டும்தானா? அது ஒரு தவக்கோட்பாடாகக் கொள்ளத்தக்கதல்லவா? சமணர்களைப்பொறுத்தவரை அதை எப்போதும் தவத்துடன் தொடர்புடைய ஒரு குறளாகவே கண்டு வருகிறார்கள். அவ்வாறு பல்வேறு திருக்குறள்கள் உள்ளன.
திருக்குறளை மூன்று வகையில் பார்க்கலாம். நெறிகள். அறங்கள். மெய்யறிதல்கள். நெறிகளாக மட்டுமே நாம் கண்டு வருகிறோம். பல குறள்கள் அவ்வகைப்பட்டவை. ஆனால் குறள் ஒருபோதும் இதைச்செய்தாகவேண்டும் என்று சொல்வதில்லை. இதைச்செய்யாவிட்டால் உனக்கு இன்ன தண்டனை என்று சொல்வதில்லை. மனுநீதி அல்லது குரான் போன்ற நூல்களுடன் ஒப்பிட்டுநோக்கினால் இதைக் காணமுடியும். குறள் கனிந்த குரலில் பேசுகிறது. அந்தக் கனிவு எங்ஙனம் வந்தது? அது அறத்தில் வேரூன்றியதாக இருப்பதனால்தான். அறவாழி அந்தணன் என்றே அது இறைவனைக் காண்கிறது. இது சரி இது தவறு என்ற இறுதி கூறும் அதிகார நிலையில் நின்றபடி குறள்பேசுவதில்லை. வாழ்க்கையின் போக்கு இவ்வாறு இருக்கிறது, இதில் நீ இவ்வாறு இருப்பது நலம் பயக்கும் என்று சொல்கிறது. இந்த அறநோக்குதான் குறளின் நெறிகளுக்கு அடிப்படையாகும். அன்றி மதமோ அதிகாரமோ அல்ல.
அந்த அறநோக்கு எங்ஙனம் வருகிறது? அது குறளில் உள்ள மெய்யறிதலில் இருந்தே. நுண்மையான புடவிப்பேரியக்கம் குறித்த மறையறிதல் குறளாசிரியருக்கு உள்ளது. ஆகவேதான் அவர் அறிவருக்கு அறிவர் என்று சொல்லப்படுகிறார். அந்த மெய்யறிவை நாம் குறளின் பல பாடல்களில் அறியமுடியும். அதிலிருந்தே வாழ்க்கைப்பேரியக்கம் குறித்த அறிதலை அவர் அறிந்தார்.
இந்தமூன்று தளங்களிலும் நிற்கும் குறளை அணுகுவதற்கு நுண்தத்துவநோக்கு தேவை. அதை சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் நுண்ணறிவால் நீங்கள் குறளைப்பற்றி எழுதலாம். எழுத வேண்டும். வாழ்த்துக்கள்
அரங்கராசன்
சென்னை