பகுதி இரண்டு : சொற்கனல் – 3
முகப்பில் சென்ற படகிலிருந்து எழுந்த கொம்பொலி கேட்டு அர்ஜுனன் எழுந்துகொண்டான். சால்வையை நன்றாக இழுத்துப்போர்த்தியிருந்தான். எழுந்தபோது அது காலைச்சுற்றியது. படுக்கும்போது சால்வையுடன் படுக்கவில்லை என்பது நினைவுக்கு வந்ததும் கைகளை விரித்து சோம்பல்முறித்தபடி புன்னகைசெய்தான். வெளியே படகின் அமரமுனையில் தருமன் ஆடைபறக்க நின்றிருந்தான். பெரிய வெண்பறவை அமர்ந்திருப்பதைப்போல. அவனருகே சென்று “மூத்தவரே, தாங்கள் துயிலவில்லையா?” என்றான்.
“இல்லை” என்று சுருக்கமாகச் சொன்ன தருமன் “அற்புதமான விடியல். இருளுக்குள் விடிவெள்ளி எழுவதை சதசிருங்கத்திற்குப்பின் இப்போதுதான் பார்க்கிறேன்” என்றான் பெருமூச்சுடன் அமர்ந்தபடி. “அப்போது எந்தை என்னை தோளில் சுமந்திருப்பார். விடியற்காலையில் ஏரிக்கரைக்குக் கொண்டுசென்று சுட்டிக்காட்டுவார். ஏன் அது கீழே விழாமலிருக்கிறது என்று கேட்பேன். அதற்குச் சிறகுகள் இருக்கின்றன என்பார். அது ஒரு ஒளிவிடும் செவ்வைரம் என்று ஒருமுறை சொன்னார். எரிந்துகொண்டிருக்கும் ஒரு கனலுருளை என்று இன்னொருநாள் சொன்னார். ஒருமுறை அது விண்ணில் வாழும் தெய்வமொன்றின் விழி என்று சொன்னார்.”
“அது சூரியனின் தூதன் என ஒருநாள் சொன்னார்” என்றான் தருமன். “அவன் வந்து மண்ணைப்பார்க்கிறான். சூரியன் உதிக்குமளவுக்கு பூமி அறத்துடன் இருக்கிறது என்றால் அச்செய்தியை அறிவிப்பான். அதைக்கேட்டபின்னரே கிழக்கின் ஆழத்தில் கடலுக்குள் இருக்கும் தன் அணியறையில் சூரியன் ஆடையணிகள் பூணத்தொடங்குவான். மணிக்குண்டலங்களும் பொற்கவசமும் அணிவான். அவன் புரவிகள் மணிகளைச் சூடி அழகு கொள்ளும். அவன் சாரதி அருணன் தன் மின்னல்சவுக்கைச் சொடுக்கியதும் ஏழு புரவிகளின் இருபத்தெட்டு குளம்புகளும் மேகங்களில் ஓசையின்றி பதியத்தொடங்கும்.”
“என்றோ ஒருநாள் மண்ணில் அறம் முற்றாக அழியும். விடிவெள்ளியாக வந்த தெய்வம் சூரியனுக்கு வரவேண்டியதில்லை என்ற செய்தியை அனுப்பும். அந்தக்காலையில் சூரியன் எழமாட்டான். மண்ணிலுள்ள உயிர்களெல்லாம் பரிதவிக்கும். அஞ்சி அழுது முறையிட்டு இறைஞ்சும். ஆனால் ஒருமுறை பாதை பிழைத்த கதிரவன் பின்னர் பிரம்மத்தின் ஆணையின்றி வரவே முடியாது. மண்ணுலகின் அத்தனை உயிர்களும் ஒருவரோடு ஒருவர் முட்டிக்கொண்டு கதறுவார்கள். அதுவரை பேணிக்கொண்ட பகைமையை முற்றாக மறப்பார்கள். அக்கணம்வரை தேடிய செல்வங்களை எல்லாம் அள்ளி வீசி சூரிய ஒளி மட்டுமே போதுமென்று கூவுவார்கள். ஆனால் அந்தக்குரல்களைக் கேட்க விண்ணில் சூரியன் இருக்கமாட்டான். ஒவ்வொருவரும் தங்கள் குலதெய்வங்களிடம் மன்றாடுவார்கள். அத்தெய்வங்களோ விண்ணளக்கும் சூரியன் இல்லையேல் நாங்களும் இல்லாதவர்களே என்றுதான் பதில் சொல்வார்கள். பூமி அழியும். இருளில் அது அழிவதை அதுகூட பார்க்கமுடியாது” என்றான் தருமன்.
“பார்த்தா, நீ நம் தந்தை கதை சொல்வதைக் கேட்டு அறியும் நல்லூழ் அற்றவனாகப்போய்விட்டாய். அவரது குரல் உன் நினைவில் இருக்கின்றதா என்றே தெரியவில்லை. என் செவிகளில் ஒருநாளும் அழியாமலிருக்கும் குரல் அது” என்றான் தருமன். “அவர் கதைசொல்லும்போது அதிலேயே மூழ்கிவிடுவார். நமக்காக அவர் கதைசொல்வதாகத் தோன்றாது, அவருக்காகவே சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றும். விடிவெள்ளியைப்பற்றிய இந்தக்கதையை அவர் பலமுறை சொல்லியிருக்கிறார். ஒவ்வொருமுறை அதிகாலையில் என்னைத் தூக்கிக்கொண்டு ஏரிக்கரைக்குச் செல்லும்போதும் இந்தக்கதையை சொல்லிக்கொண்டே வருவார். நான் அஞ்சி அவர் தலையைப்பற்றிக்கொள்வேன். விடிவெள்ளி அங்கே இருக்கவேண்டுமே என்று வேண்டிக்கொள்வேன். சிலசமயம் என் உடல் நடுங்கும். கண்ணீர் பெருகி கன்னங்களில் வழியும்.”
“மரங்களில்லாத ஏரிக்கரைக்குச் சென்றதுமே விடிவெள்ளியைத்தான் தேடுவேன். என் பதற்றத்தில் நான் அதை கண்டுபிடிக்கமுடியாது பதறுவேன். தந்தையே காணவில்லை தந்தையே என அழுவேன். சிரித்துக்கொண்டு அதோ என்பார். விடிவெள்ளியைக் காணும்போது என்ன ஒரு ஆனந்தம். உடல் எங்கும் பரவசம் கொந்தளிக்க எம்பி எம்பி குதிப்பேன். கைநீட்டி சுட்டிக்காட்டிக் கூவுவேன். மண்ணில் வாழும் அறத்தின் சான்றாகவே அது விண்ணில் நின்றிருக்கும்” தருமன் சொன்னான். “ஒவ்வொருநாளும் மண்ணில் அறம் வாழ்கிறது என நானும் என் தந்தையும் உறுதிசெய்துகொண்டோம். ஒவ்வொருநாள் புலரியையும் அறத்தரிசனத்துடன் தொடங்கினோம்.”
“நான் ஒருமுறை அவரிடம் கேட்டேன், எது அறம் என்று, எப்படி அறிவது என்று. அவர் எனக்கு துருவனைச் சுட்டிக்காட்டினார். விண்ணிலிருந்து மின்னும் அந்த ஒற்றைவிண்மீனை அச்சாகக் கொண்டுதான் இப்புவியே சுழல்கிறது என்றார். அறம் அதைப்போன்றது. எது நிலைபெயராததோ அதுவே அறம் என்றார். ஒன்று இப்போது இச்சூழலுக்குச் சரி என்று தோன்றலாம். அது எப்போதும் எச்சூழலுக்கும் சரியென்று நிலைகொள்ளுமா என்று பார், நிலைகொள்ளுமென்றால் அதுவே அறம் என்றார்.”
தருமன் பெருமூச்சுவிட்டான். “அறத்தில் வாழ நினைப்பவன் முடிந்தபோதெல்லாம் துருவனைப் பார்க்கவேண்டும் என்பார் என் தந்தை. அறக்குழப்பம் வரும்போதெல்லாம் தனித்துவந்து வான் நோக்கி நின்றால்போதும், துருவன் அதைத் தெளியச்செய்வான் என்றார். இவ்விரவில் நான் துருவனின் ஒளிமிக்க விழியை நோக்கிக்கொண்டு இங்கே நின்றேன். நான் என்ன நினைக்கிறேன் என்றே தெரியவில்லை. ஆனால் விடிவெள்ளியைக் கண்டதும் நிறைவடைந்தேன்.”
தருமன் சிறிதுநேரம் அமைதியாக இருந்தான். கங்கையின் நீர் படகின் விலாவை அறைந்துகொண்டிருந்தது. அர்ஜுனன் அதை நோக்கி அமர்ந்திருந்தான். தருமன் சொன்னான் “பார்த்தா, நம் தந்தை நூல்களை அதிகம் கற்றவரல்ல. அவரது ஆர்வமும் பயிற்சியும் ஓவியத்தில்தான். ஆனால் சதசிருங்கம் வந்தபின் ஓவியம் வரைவதை விட்டுவிட்டார். எனக்கு அரண்மனையில் வானும் பூமியும் மரங்களும் மலர்களும் இல்லை. ஆகவே நான் அவற்றை வரைந்து உருவாக்கினேன். இங்கு நான் பிரம்மத்தின் தூரிகை வரைந்த மாபெரும் ஒவியத்திற்குள் அல்லவா வாழ்கிறேன் என்று சொல்வார்.”
“அவரது அன்னை அவரை குழந்தையாகவே வளர்த்தாள். அவர் வளர அவள் ஒப்பவே இல்லை. அவளை மீறி சதசிருங்கம் வந்ததனால்தான் அவருக்கு வளர்ந்த மனிதர்களின் வாழ்க்கை சிலநாட்களேனும் கிடைத்தது. மைந்தர்களாக நாம் அமைந்தோம்.” அவன் குரல் உணர்ச்சியால் தழைந்தது. “நமக்கு இப்புவியில் எந்த நற்செயலுக்கான பலன் கிடைக்காவிட்டாலும் நம் தந்தையின் வாழ்க்கையை நிறைவடையச்செய்தமைக்கான பலன் உண்டு. அதன்பொருட்டே நாம் விண்ணுலகு செல்வோம்.”
தன்னை அடக்கிக்கொள்ள அவன் சற்றுநேரம் கங்கைநீரை நோக்கினான். பாய் அவிழ்ந்த படகுகள் விரைவழிந்து மெதுவாக கரையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. நிழல்குவைகளாகத் தெரிந்த காடுகள் அசைந்தாடி நெருங்கி வந்தன. “இன்று எண்ணும்போது என் தந்தையின் வெளிறிய நோயுற்ற முகம் நினைவில் எழுகிறது. அவரைப்பற்றி இங்கு எவருக்கும் உயர்ந்த கருத்து இல்லை. அவரைப்போன்ற வலிமையற்றவர் அஸ்தினபுரியின் குலத்தில் உதித்ததை இழுக்கு என்றே அவர்களின் ஆழம் எண்ணுகிறது. ஆகவேதான் அவர் மறைந்ததுமே சூதர்களைக்கொண்டு கதைகளை உருவாக்கத்தொடங்கிவிட்டார்கள். அவர் மாவீரர் என்றும் அங்கத்தையும் வங்கத்தையும் கலிங்கத்தையும் மகதத்தையும்கூட போரில் வென்றவர் என்றும் சூதர்களைக்கொண்டு பாடவைத்தார்கள். அவர் எவரோ அந்நிலையில் அவரை மதிக்கவோ ஏற்கவோ அவர்கள் சித்தமாக இல்லை.”
“பாவம், எந்தை. அதை அவர் அறிந்திருந்தார். மீண்டும் வரவேகூடாது என்று உறுதிகொண்டு இந்த அஸ்தினபுரி விட்டு அவர் கிளம்பிச்சென்றதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. அது ஒருவகையான தற்கொலை. சதசிருங்கத்தில் அவர் உயிர்த்தெழுந்தார். அங்கே வாழ்ந்த அவரை பிதாமகரோ விதுரரோ அறியமாட்டார்கள். அஸ்தினபுரியில் எவரும் அறியமாட்டார்கள். பாண்டு என அவர்கள் உருவாக்கிக்கொண்ட ஒரு புராணத்தை வரலாற்றில் நிறுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அதையே நினைத்துக்கொள்ளவும் தொடங்கிவிட்டார்கள். பாண்டு முழுமையாகவே மறக்கப்பட்டுவிட்டார்” என்றான் தருமன். “இப்புவி இறந்தவர்களை மறப்பதில் இருக்கும் ஈவிரக்கமற்ற தன்மை அச்சமூட்டுகிறது பார்த்தா. நம் அன்னையின் உள்ளத்தில்கூட அவர் இல்லை. அவள் சதசிருங்கத்தில் இருந்த நாட்களிலேயே கணவனை நினைத்திருந்தவள் அல்ல. அவளுடைய அகம் அஸ்தினபுரியிலேயே இருந்தது.”
“தந்தை அதை அறிந்திருந்தார். ஆகவேதான் அவர் ஒருநாள் கூட இல்லத்தில் இருந்ததில்லை. விடிவெள்ளியைக் காண என்னைத் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் சென்றாரென்றால் இரவில் விண்மீன்கள் எழுந்தபின்னரே திரும்பிவருவார். சற்றேனும் அவரை அறிந்தவர்கள் சிற்றன்னை மாத்ரியும் நானுமே. இன்று நான் மட்டுமே இருக்கிறேன். பாண்டு என்ற மனிதர் இப்புவியில் வாழ்ந்தார் என்பதற்கு எஞ்சியிருக்கும் சான்று நான் மட்டுமே” என்றான் தருமன். அவன் முகம் இருளிலிருந்தாலும் நிழலுருவிலேயே உணர்ச்சிகளை தெளிவாகக் காணமுடிந்ததை அர்ஜுனன் வியப்புடன் எண்ணிக்கொண்டான்.
“பார்த்தா, சற்றுமுன் விடிவெள்ளியை நோக்கியபடி அதை எண்ணிக்கொண்டேன். அகம் ஏக்கம் தாளாமல் தவித்தது. அதன்பின் தோன்றியது, நான் ஒருவன் இருக்கிறேன் என்பதே எத்தனை மகத்தானது என. பார்த்தா, நான் ஒருநாள்கூட அவரை எண்ணாமலிருந்ததில்லை. அவரில்லாத உலகில் அரைநாழிகை நேரம்கூட வாழ்ந்ததில்லை. தன் மைந்தனின் உள்ளத்தில் அப்படி ஓர் அழியா இடம்பெற்றவன் அல்லவா இம்மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்தவன்? அவனல்லவா அமரன்?” தருமன் அச்சொற்களின் எழுச்சியால் முகம் சிவந்து மூச்சிரைத்து அதைவெல்ல முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
“பார்த்தா, இங்கே தட்சிணவனம் என்னும் ஓர் இடமிருக்கிறது, அறிவாயா?” என்றான் தருமன். “இல்லை” என்று அர்ஜுனன் தலையசைத்தான். “முழுக்கமுழுக்க துரோணவனத்துக்குள்ளேயே வாழ்ந்துவிட்டாய். ஒருநாள் தட்சிணவனம் செல்வோம்” என்றான் தருமன். “அங்கே ஒரு சிறிய பாறை உச்சியில் குஹ்யமானசம் என்னும் சுனை ஒன்று உள்ளது. நம் மூத்தபாட்டனாரான சித்ராங்கதர் அந்த சுனைக்குள் விழுந்து இறந்துவிட்டார் என்கிறார்கள். அந்தச்சுனையில் குனிந்து தன் முகத்தை நோக்கியபோது அவரைப்போன்றே இருந்த சித்ராங்கதன் என்னும் பெயருள்ள கந்தர்வன் அவரை நீருக்குள் இழுத்துச்சென்றுவிட்டான் என்கிறார்கள். அவரது சடலம் கிடைக்கவில்லை.”
அர்ஜுனன் “மலைச்சுனைகள் பலசமயம் மிகமிக ஆழமான பிலங்களின் வாயில்களாக இருக்கும். உள்ளே பல நாழிகைதொலைவுக்கு ஆழம் இருக்கலாம்” என்றான். “தெரியவில்லை. ஆனால் அந்த மலைச்சுனை மிக வியப்புக்குரியது. அங்கே சுற்றிலும் மரங்களோ பாறைகளோ இல்லை. ஆனால் தூரத்துப்பாறைகள் முழுமையாகவே மறைத்திருப்பதனால் அங்கே காற்றே வீசுவதில்லை. ஆகவே அந்தச்சுனைநீர் அசைவதில்லை. ஒரு மாபெரும் ஆடிபோல அப்படியே கிடக்கிறது” என்றான் தருமன். அர்ஜுனன் வியப்புடன் “தாங்கள் பார்த்தீர்களா?” என்றான்.
“ஆம், அசைவற்ற அந்த நீரை நோக்கினேன். அதில் முகம் நோக்கினால் நாம் யார் என்று நமக்குக் காட்டும் என்றனர். நான் பார்க்கவில்லை. அது விரும்பத்தகாத எதையோதான் காட்டும் என்று தோன்றியது. அதைத்தான் சௌனகரும் சொன்னார். அங்கே முகம் பார்த்த எவரும் மகிழ்ச்சியுடன் எழுந்துகொண்டதில்லை என்றார்” தருமன் சொன்னான். “அப்படித்தான் இருக்கமுடியும். இங்கு நாம் மாபெரும் மாயையால் கட்டப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உறவாக, உணர்ச்சிகளாக நம்மைச் சூழ்ந்திருப்பது மாயையின் அலைகளே. நம் தெய்வங்களும் மாயையின் தோற்றங்களே. மாயை இல்லையேல் நாம் வெட்டவெளியில் நிற்கவேண்டியிருக்கும். தெய்வங்களின் துணைகூட இல்லாமல் தனித்து நிற்கவேண்டியிருக்கும். யோகிகள் மாயையைக் களைந்து வெறும்வெளியில் நிற்கலாம். நம்மைப்போன்ற எளியோர் நிற்கலாகாது. நம்மைச்சூழ்ந்திருக்கும் இந்த மாயையைக் களைந்து உண்மையை நமக்குக் காட்டும் ஒவ்வொன்றும் இந்த வாழ்க்கையில் தீங்கையே அளிக்கும்.”
அர்ஜுனன் “ஆம்” என்றான், அவனுக்கு அந்த இடத்தைக் கற்பனைசெய்தபோது நெஞ்சில் புரியாத ஓர் அச்சம் எழுந்தது. தருமன் “பார்த்தா, நான் சொல்லவந்தது வேறு. அங்கே கீழே ஒரு குடிலில் ஸ்தானகர் என்னும் ரிஷி வாழ்கிறார். நம் பாட்டனார் விசித்திரவீரியரின் அணுக்கச்சேவகராக இருந்தவர். ஐம்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் விசித்திரவீரியர் இறப்பதற்கு முந்தையநாளில் அங்கே வந்தாராம். அவரை அங்கே இருக்கச்சொல்லிவிட்டுச் சென்றாராம். ஸ்தானகர் அங்கேயே அமர்ந்துவிட்டார். அவர் இறுதியாகப்பேசியது விசித்திரவீரியரிடம்தான். அவரைச்சென்று பார்த்தேன். முதிர்ந்து பழுத்துவிட்டார். கண்கள் எவரையும் பார்ப்பதில்லை. பலநாட்களுக்கு ஒருமுறை அவரை வழிபடுபவர் அளிக்கும் எளிய உணவைமட்டும் அருந்துகிறார். அவர் காலடியில் பணிந்தபோது அவர் புன்னகை செய்தார். ஆம், என்னை நோக்கியல்ல, ஆனால் புன்னகைசெய்தார்.”
“நான் அதைப்பற்றி முதுசூதர்களிடம் கேட்டேன்” என்றான் தருமன். “விசித்திரவீரியருக்கு அவர் நகைப்புத்தோழர் என்றார்கள். எந்நேரமும் ஒருவரை ஒருவர் கேலிசெய்து நகைத்துக்கொண்டிருப்பார்களாம். வாழ்க்கையை, அரசை, நோயை, இறப்பை. அங்கே அப்படி அவர் அமர்ந்திருப்பதை விசித்திரவீரியர் எங்கோ இருந்து கேலிசெய்திருக்கலாம். அவர் பதிலுக்கு நகைத்திருக்கலாம். அப்படி ஒரு மனிதரை தனக்கென விட்டுச்சென்ற விசித்திரவீரியர் எத்தனை மாமனிதர். இன்று அத்தனைபேரும் அவரை மறந்துவிட்டனர். வருடம்தோறும் நீர்க்கடன் அன்றுமட்டும் பிதாமகரும் மூத்த தந்தையாரும் எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் அவரைத்தவிர வேறெதையுமே நினையாமல் ஒரு மனம் அங்கே அமர்ந்திருக்கிறது. நானும் அவரல்லவா என எண்ணிக்கொண்டேன். அதை எண்ணித்தான் ஸ்தானகர் நகைத்தாரா என்றும் தோன்றியது.”
சட்டென்று திரும்பி அர்ஜுனனை நோக்கி வெண்பற்கள் தெரிய புன்னகைசெய்து தருமன் சொன்னான் “நீ எண்ணுவது சரி. போர் நிகழவிருக்கிறது. நாம் காணப்போகும் முதல்போர். அந்த அச்சத்தால் என் அகம் நிலைகுலைந்திருக்கிறது. ஆகவேதான் ஏதேதோ எண்ணங்கள் எழுகின்றன. நான் பேசுவதில் ஒன்றுடனொன்று தொடர்பே இல்லாமலிருக்கிறது. ஆனால் இச்சொற்களுக்கு நடுவே ஏதோ ஒன்று உள்ளது. மையச்சரடாக… அதை இப்படிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.” தருமன் சிலகணங்கள் விழிகள் அலைபாய அமர்ந்திருந்தான். பின்பு “நான் இரண்டு நிலைகளில் உறுதியாக இருக்கிறேன். ஒன்று என் உடன்பிறந்தார். இன்னொன்று அறம். இரண்டுமே என் தந்தை எனக்குக் காட்டியவை. என் உடன்பிறந்தாரில் எவர் இறந்தாலும் நான் உயிர்தரிக்கமாட்டேன். அறம் பிழைத்த எதை நாம் செய்ய நேர்ந்தாலும் வாழமாட்டேன்” என்றான்.
“ஆம் மூத்தவரே, அவ்வுறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “பார்த்தா, இந்தப்போர்முனையில் நாம் நின்றிருக்கையில் எனக்கு தெளிவாகவே தெரிகிறது, இது ஒரு பெரும் தொடக்கம். நாம் பல போர்களில் ஈடுபடப்போகிறோம். ஒருவேளை…” என்று தயங்கியபின் “என் மனமயக்காக இருக்கலாம் அது. நேற்றிரவு எப்போதோ அந்த எண்ணம் வந்து என்னுள் குடியேறியது. இரவெல்லாம் ஒரு தீயதெய்வம் போல என்னுடன் இருந்தது. அதன் இருப்பை என்னருகே உணர்ந்து என் மயிர்க்கால்கள் சிலிர்த்து நின்றன. ஆம் பார்த்தா, இப்புவியில் நிகழ்ந்த எவற்றையும் விடப்பெரிய போர் ஒன்றை நாம் நிகழ்த்தவிருக்கிறோம்.”
அர்ஜுனன் ஒருகணம் மயிர்சிலிர்த்துப்போனான். உடனே என்ன மூடத்தனம் இது என அவன் அகம் நகைத்தது. “நீ உள்ளுக்குள் நகைக்கிறாய். நகைப்புக்குரியதுதான். ஆனால் இது என் உண்மையான உணர்வு” என்றான் தருமன். “அந்தப்போர் விதியின் விளையாட்டாக இருக்கலாம். நம்மால் தடுக்கமுடியாததாக இருக்கலாம். நான் இப்போது சொல்லும் இவ்விரு விதிகளும் இந்தப்போருக்கு மட்டும் அல்ல.” எழுந்து சால்வையைப் போர்த்திக்கொண்டு தருமன் நடந்து உள்ளே சென்று மறைந்தான்.
படகுகள் கரையை நெருங்கிவிட்டிருந்தன. கரையில் நாணலும் கோரையும் செறிந்த பெரிய சதுப்பு நிலம் நெடுந்தூரத்திற்கு தெரிந்தது. கங்கையில் இமயம் நோக்கி மேலே செல்லுந்தோறும் கரை நீருக்கு மிக அண்மையானதாகவும் மரங்களடர்ந்ததாகவும் இருக்கையில் கீழ்நோக்கி வர வர விரிந்த கரைச்சதுப்பும் மணற்பரப்பும் கொண்டதாக ஆவதை அர்ஜுனன் கண்டான். படகுகள் கரையை அணுகியதும் படகோட்டிகள் கழிகளை விட்டு நீரில் ஆழம் நோக்கினர். அடித்தட்டு மணலில் சிக்காத எல்லைவரை சென்றதும் நெய்விளக்குகளை ஆட்டி படகுகளை நிறுத்தினார்கள்.
படகுகளுக்குள் இருந்து மிதவைகள் கட்டப்பட்ட கயிறுகள் வீசப்பட்டன. அக்கயிற்றைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கிச்சென்ற சூத்ராகிகள் நீரில் மிதந்தபடி நின்றனர். மேலிருந்து படகுகளை கயிற்றில் கட்டி ஒன்றன் பின் ஒன்றாக இறக்க அவற்றை ஒன்றுடன் ஒன்று சேர்த்துக்கட்டியபடி சதுப்புக்கரைவரை சென்றனர். அவற்றின் மேல் பலகைகள் இறக்கி அடுக்கப்பட்டு துறை கட்டப்பட்டது. சிலந்திவலைபோலப் பின்னிய மெல்லிய கயிறுகளில் கட்டப்பட்ட ரதங்களும் புரவிகளும் பறந்து இறங்குபவை போல படகுகளாலான அந்தத் துறைமேல் இறங்கி கரைநோக்கிச் சென்றன.
அருகே வந்து நின்ற நகுலன் “யானையை இறக்கமுடியுமா மூத்தவரே?” என்றான். “மிக எளிதாக இறக்கமுடியும். கயிறுகளின் பின்னல் சரிவர அமையுமென்றால் அச்சக்கரத்தைச் சுழற்றி ஒரே ஒருவர் யானையை தூக்கி மேலே எடுக்கவும் முடியும்” என்றான். “அவர்கள் கலிங்கத்துச் சூத்ராகிகள். கயிற்றால் எடையை தூக்கும் கலை கலிங்கத்தில் ஆயிரமாண்டுகளாக வளர்ந்து வந்துள்ளது. தாம்ரலிப்தி பாரதவர்ஷத்தின் மாபெரும் துறைமுகம். அங்கே பெரும் எடைகொண்ட தாமிரக்கற்களை தூக்கி கப்பல்களில் ஏற்றுகிறார்கள் என்று சூதர்கள் சொல்கிறார்கள்.”
துணைப்படைத்தலைவன் பிரதீபன் வந்து வணங்கி “படைகளை இறக்கத் தொடங்கிவிட்டோம்” என்றான். “பீமசேனர் முன்னின்று இறக்குகிறார்.” அர்ஜுனன் பார்த்துவிட்டு “பிரதீபரே, நம் படைகள் சற்று மெதுவாகவே கரையிறங்கினால் போதும்” என்றான். பிரதீபனின் விழிகள் ஒருகணம் மின்னியபின் “ஆணை” என்று தலை வணங்கி நடந்தான். மறைந்த தளகர்த்தர் சத்ருஞ்சயரின் மைந்தன் பிரதீபன். அவனுக்கு அவருடைய உடலசைவுகளும் விழிமொழியும் இருந்தன.
அவன் சென்ற சற்று நேரத்திலேயே தருமன் வந்து “நாம் பின்னால் சென்றால்போதுமென நினைக்கிறாயா?” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் “அல்ல, அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறேன்” என்றான். தருமன் தத்தளிப்புடன் “என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றான். படகிலிருந்து கர்ணனும் துரியோதனும் கயிறுவழியாக இறங்கினர். தொடர்ந்து கௌரவர்கள் இறங்கிக்கொண்டிருந்தனர். “அவர்களின் படைகள் அணிவகுத்துவிட்டன” என்றான் தருமன் “அவர்களின் தேர்களும் குதிரைகளும் நிரைகொண்டுவிட்டன. எக்கணமும் அவர்களால் கிளம்ப முடியும்… இத்தனை விரைவாக அவர்களால் கிளம்பமுடியுமென நான் எண்ணவேயில்லை.”
கௌரவர்கள் இறங்கி முடிப்பதற்குள் கரையிறங்கிய வீரர்கள் கடலாமை ஓடுகளாலும் யானைத்தோலாலும் எருமைத்தோலாலும் ஆன மார்புக்கவசங்களையும் இரும்பாலான தலைக்கவசங்களையும் அணிந்தபடி மேலேறி சென்றனர். பத்துபத்துபேராக படைக்கலங்களுடன் ஓடிச்சென்று சேர்ந்துகொண்டே இருந்தனர். ஒவ்வொரு பத்துபேருக்கும் கையில் கொடியுடன் ஒருவன் தலைமைதாங்கினான். பத்து குழுக்கள் இணைந்து நூற்றுவர் குழுவாக அதற்கு ஒரு கொடிவீரனும் ஒரு கொம்பூதியும் நடுவே தலைவனும் நின்றனர். தலைவனுக்குப்பின்னால் அவன் களத்தில் விழுந்தால் தலைமை ஏற்கும் வரிசைகொண்ட மூன்று துணைத்தலைவர்கள் நின்றனர். கொடிவீரனுக்கும் கொம்பூதிக்கும் பின்னால் அவர்களுக்கான மாற்று வீரர்கள் நின்றனர். மூன்று நூற்றுவர்குழுவுக்கு ஒரு முரசும் கொடிவீரனும் கொம்பூதியும் தலைவனும் நின்றனர். ஒன்பது நூற்றுவர் குழுக்கள் இணைந்த படை மெல்ல உருவாகி ஓருருவாகி நின்றது.
எண்பது குதிரைகள் குஞ்சிமயிர் சிலிர்த்து அசைய குளம்புகள் மணலைக் கிளற வால்சுழற்றி நடந்துசென்று நின்றன. சதுப்பு உலர்ந்த மணலில் பலகைகளைப்போட்டு அதன்மேல் ரதங்களை உருட்டிக் கொண்டுசென்று காலாள்படைகளுக்கு முன்னால் நிறுத்தி குதிரைகளைப்பூட்டினர். இரட்டைக்குதிரைகள் பூட்டப்பட்ட இருபது ரதங்கள் வலப்பக்கமும் இருபது ரதங்கள் இடப்பக்கமும் ஒன்றன் பின் ஒன்றாக நின்றன. “கடக வியூகம்” என்றான் நகுலன். “நான் இதை படித்திருக்கிறேன். ரதங்கள் வில்லாளிகளுடன் நண்டின் முன்கொடுக்குகளைப்போல முதலில் சென்று எதிரிப்படையைத் தாக்கும். எதிரிகள் சிதறியதும் நடுவே செல்லும் காலாள்படையினர் நேருக்கு நேராக தாக்கி சிதைப்பார்கள்.”
சகதேவன் நகுலனை பிரமிப்புடன் பார்த்தான். நகுலன் அர்ஜுனனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அவன் ஒன்றும் சொல்லவில்லை என்பதை உணர்ந்தபின் “நண்டு தன் கொடுக்குகளை கால்களாக ஊன்றி எழமுடியும். பக்கவாட்டிலும் செல்லமுடியும்” என்றான். தருமன் மேலே வந்து “நம்முடைய படைகளும் இறங்கிவிட்டன பார்த்தா” என்றான். அர்ஜுனன் தலையசைத்து பார்த்துக்கொண்டு நின்றான். “துரோணரும் அஸ்வத்தாமனும் படகிலேயே இருக்கிறார்கள்” என்றான் தருமன்.
நண்டின் வலக்கொடுக்கில் துரியோதனன் முதல் ரதத்தில் அமர்ந்தான். அவனுக்குப்பின்னால் வந்த ரதத்தில் துச்சாதனனும் அவனுக்குப்பின்னால் விகர்ணனும் அமர்ந்துகொண்டனர். துரியோதனன் ரதத்தை துச்சலன் ஓட்டினான். துச்சாதனன் ரதத்தை சுவீரியவான் ஓட்டினான். விகர்ணனின் ரதத்தை அப்ரமாதி ஓட்டினான். இடப்பக்க கொடுக்கில் கர்ணன் முதலிலும் ஜலசந்தனும் சுரோசனனும் பின்னாலும் ரதங்களில் ஏறினர். கர்ணனின் ரதத்தை தீர்க்கபாகுவும் ஜலசந்தனின் ரதத்தை தீர்க்கரோமனும் ஓட்டினர். இளைய கௌரவர்கள் ஒரு ரதத்தில் நால்வர் வீதம் ஏறிக்கொண்டனர்.
துச்சாதனன் எழுந்து தன் இடையிலிருந்த சங்கை ஊதியதும் கடிவாளங்கள் இழுக்கப்பட்டு ரதங்களின் சக்கரங்கள் திடுக்கிட்டன. ரதங்களாலான ஒற்றை உடல் உயிர்கொள்வதுபோலிருந்தது. கொக்குக்கூட்டம்போல ரதங்கள் பாய்ந்தோடின. அவற்றின் கொடிகள் தழல்கள் போல படபடத்துச் செல்வதை அர்ஜுனன் நோக்கி நின்றான். அவை புல்வெளியில் சென்ற வடுக்களின் மேல் காலாள்படை பெருநடையில் விரைந்தது. ஆயிரம்காலட்டை போல அது ஒரே உடலாகச் சென்று மரங்களுக்கப்பால் மறைந்தது.
பீமன் மேலே வந்தான். “இளையவனே, சற்றுப்பொறுத்தால் நாங்களும் வருவோமே என ஒரு செய்தியை துரியோதனனுக்கு முறைப்படி அனுப்பினேன்” என்றான் பீமன் உரக்க நகைத்தபடி. “அந்த வரியை மீண்டும் சொல்லவேண்டும், நினைவுபடுத்து” என்றபின் மேலும் நகைத்து குரலை மாற்றி “என்ன விரைவு? சற்று பொறுத்திருந்தால் நாங்களும் வந்திருப்போமே” என்றான்.
“மந்தா, நம்மிடமிருப்பவர்கள் இருநூறு காலாள்படையினர், இருபது ரதங்கள்” என்றான் தருமன். பீமன் “போதும். அதிகம்பேர் வந்தால் அவர்களையும் சேர்த்து நான் பாதுகாக்கவேண்டியிருக்கும்” என்றான். தருமன் “அவர்களுக்கு சிருஞ்சயர்களிடமிருந்து ஓலைவந்திருக்கிறது. அவர்கள் போரில் கலந்துகொள்ளமாட்டார்கள். அப்படியென்றால் இன்னும் சற்று நேரத்தில் துரியோதனன் துருபதனை தேர்க்காலில் கட்டி இழுத்துக் கொண்டுவருவான்” என்றான். “மூத்தவரே, துருபதன் அக்னிவேசரின் மாணவன்” என்றான் அர்ஜுனன். தருமன் கவலையுடன் திரும்பிப் பார்த்தான். பீமன் நகைத்து “ஆம், அதைத்தான் நானும் நம்பியிருக்கிறேன்” என்றபின் உரக்க நகைத்தான்.
கரையில் பாண்டவர்களின் படைகள் அணிவகுத்து நின்றன. “நம்முடையது கஜராஜ வியூகம்” என்றான் அர்ஜுனன். தருமன் “ஆம், நானும் அதையே எண்ணினேன். நானும் நீயும் யானையின் கொம்புகள். மந்தன் துதிக்கை. போரை அவன் நடத்தட்டும். நாம் அவனை மட்டும் பாதுகாத்தால் போதும்” என்றான். அர்ஜுனன் “தம்பியர் நம் ரதச்சக்கரங்களைக் காக்கட்டும்” என்றான். பீமன் தன் கதாயுதத்தை எடுத்து ஒருமுறை சுழற்றிக்கொண்டான். “இந்தக் கதாயுதம் உடைக்கப்போகும் முதல் மண்டை எது என இப்போது எமனுக்குத்தெரியும்” என்றான். தருமனின் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை அர்ஜுனன் கண்டான்.
வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்