பகுதி இரண்டு : சொற்கனல் – 2
கங்கையின்மீது பாய்சுருக்கி அலைகளில் ஆடி நின்றிருந்த படகுகளின் மேல் அந்தியிருள் சூழ்ந்து மூடத்தொடங்கியது. ஐந்தாவது படகின் அமரமுனையில் அர்ஜுனன் நீர்விரிவை நோக்கி நின்றிருக்க அருகே தருமன் கையில் பட்டில் சுருட்டப்பட்ட நிலவரைபடத்தை நோக்கியபடி நின்றான். “பார்த்தா, கணக்குகளின்படி நாம் கரையிறங்கும் சோலையிலிருந்து எட்டுநாழிகை தொலைவில் காம்பில்யத்தின் காவல்காடுகள் வருகின்றன. அதுவரைக்கும் புல்வெளி என்பதனால் ரதங்கள் செல்லும். குறுங்காடு ரதங்களைத் தடுப்பதற்கென்றே உருவாக்கப்பட்டது. ஆகவே அங்கே நாம் தடுக்கப்படலாம்” என்றான்.
நுணுக்கமாக ஆராய்வதற்கு ஒரு பொருள்கிடைத்த நிறைவில் தருமன் தத்தளிப்பதாக அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். பிற எவரும் கண்டுசொல்லாத சிலவற்றைச் சொல்வதே தன் பணி என்று எண்ணுகிறார். இந்தப்போரில் அவர் செய்யக்கூடுவதென ஏதுமில்லை என்று அறிவார். ஆகவே இந்த அறிவுப்பங்களிப்பை செய்ய எண்ணுகிறார். நெஞ்சில் எழுந்த புன்னகையுடன், அவர் அந்த வரைபடத்தையும் தத்துவமாக ஆக்கிவிடக்கூடும் என்று அவன் எண்ணியபோதே தருமன் “பார்த்தா, ஒரு நிலவரைபடம் என்பது நிலம் அல்ல. நிலத்தின் நாம் அறிந்த ஒரு சாத்தியம் மட்டும்தான் இல்லையா?” என்றான்.
புன்னகையுடன் “ஆம் மூத்தவரே. எப்போதும் வரைபடத்தை நம்பிச்செல்லும்போது நிலம் அப்படி இல்லை என்பதை நாம் அறிவோம்” என்றான். “ஆம், அதைத்தான் நான் சொல்லவந்தேன். நாம் அங்குசெல்லும்போது இந்த வரைபடம் அளிப்பதைவிட ஏராளமான புதிய சாத்தியங்களை அறியமுடியும்.” அர்ஜுனன் புன்னகையுடன் “நாம் அப்படி நம்பலாம்” என்றான். உள்ளுக்குள் அந்த சாத்தியங்கள் நம்மைக் கொல்வதாகவும் இருக்கலாம் என எண்ணிக்கொண்டான்.
“புன்னகைக்காதே. நம்முடைய படைபலம் மிகக்குறைவு. நாம் ஒரு தொன்மையான ஷத்ரிய தேசம் மீது படைகொண்டுசெல்கிறோம்” என்றான் தருமன். “பாஞ்சாலம் தொன்மையான பதினாறு ஜனபதங்களில் ஒன்று. வேதங்களின் தைத்திரிய மரபும் சௌனக மரபும் அங்கு உதித்தவைதான். நீ அறிந்திருக்கமாட்டாய்.” அர்ஜுனன் புன்னகையை அடக்கி “ஆம், ஆனால் நாம் இளையோர்” என்றான். ”அதுதான் என் அச்சம். நாம் நம்மைப்பற்றி இன்னும் அறியவில்லை. நாமறிந்த போர் எல்லாமே ஏட்டுப்போர்கள், பயிற்சிப்போர்கள். உண்மையான போரில் நாமறியாத எவ்வளவோ இருக்கலாம்.”
“உண்மையானபோரிலும் இதே படைக்கலங்கள்தான் மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் உண்மையானபோரின் உணர்ச்சிகள் உண்மையானவை. நாம் இதுவரை கலந்துகொண்ட எந்தப்போரிலும் நாம் இறக்கும் வாய்ப்பு இருக்கவில்லை. அதை நம் அகம் அறிந்திருந்தது. நாம் படையெடுத்துச் சென்றபோது நம்மை எதிர்த்தவர்கள் நம் எதிரிகள் அல்ல, அதுவும் நாமறிந்ததாகவே இருந்தது. இங்கே தங்கள் மண்ணையும் மானத்தையும் காப்பதற்காக படைக்கலம் எடுக்கும் எதிரிகளை நாம் சந்திக்கவிருக்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்கள் தங்கள் நிலத்தை காப்பாற்றி வந்திருப்பதனால்தான் இப்படி ஒரு தேசமாக இன்றும் இருக்கிறார்கள். அந்த விசை அங்கே இருந்துகொண்டுதான் இருக்கும்.”
அர்ஜுனன் புன்னகையுடன் “அஞ்சுகிறீர்களா மூத்தவரே?” என்றான். “ஆம், அஞ்சுகிறேன். என் இளையோர் இப்போரில் இருப்பதனால்” என்று சொல்லி தருமன் அவன் விழிகளை நோக்கினான். “அதில் எனக்கு நாணமும் இல்லை. என் உயிருக்காக எப்போதும் நான் அஞ்சியதில்லை. வேண்டுமென்றால் என் விழிகளை நோக்கி அதை எவரும் அறியலாம். என் இளையோர் என்னிடம் என் தந்தையால் அளிக்கப்பட்டவர்கள். அவர்களில் ஒருவருக்கு தீங்கு நிகழ்வதைக்கூட என்னால் ஏற்கமுடியாது. அந்தத் தீங்கு நிகழ்வதற்குப்பதில் என் மேல் குருவின் தீச்சொல் விழுமென்றால், அதன் பொருட்டு நான் பழிகொண்டு பாவத்தில் உழல்வேன் என்றால் அதையே நான் தேர்ந்தெடுப்பேன்.”
ஒளிரும் விழிகளுடன் அப்போது அங்கு நிற்பது வேறு தருமன் என்று அர்ஜுனன் எண்ணினான். விழிகளை விலக்கிக்கொண்டு “அப்படி எதுவும் நிகழாது, மூத்தவரே” என்றான். “அவ்வண்ணமெனில் எனக்கு ஓர் உறுதிமொழியைக்கொடு. மாத்ரிதேவியின் மைந்தர் இருவரும் ரதக்காவலர்களாக பின்னணியில் நிற்கட்டும். நீயும் நானும் மந்தனும் களம்காண்போம். அவர்கள் நம்மிடம் நம் தந்தையால் கையளிக்கப்பட்டவர்கள். நம்மைக் கடந்துதான் ஓர் அம்பு அவர்கள் மேல் படவேண்டும்” என்றான் தருமன். அர்ஜுனன் நிமிர்ந்து “ஆம் மூத்தவரே, அவ்வண்ணமே ஆகட்டும்” என்றான்.
கங்கையை ஒட்டியிருந்த காட்டுக்கு அருகே படகுகளை நீரில் மிதக்கவிட்டு அவற்றை இணைத்துக்கட்டி அவற்றின்மேல் மூங்கில்களையும் பலகைகளையும் அடுக்கி உருவாக்கப்பட்ட தற்காலிக படகுத்துறை அது. அங்கே நூற்றியெட்டு படகுகள் வரிசையாக நின்றிருந்தன. கங்கையின் மைய நீரோட்டத்தில் செல்பவர்கள் படகுகளைப் பார்க்கலாகாது என்பதற்காக ஓரத்துப்படகுகள் அடர்த்தியான மரக்கிளைகளாலும் நாணல்களாலும் பச்சைமூங்கில் பின்னிச்செய்த பாய்களாலும் மறைக்கப்பட்டிருந்தன. அயலவர் படகுகளேதும் அப்பகுதியை நெருங்காதபடி கங்கைக்கு நடுவே அஸ்தினபுரியின் சிறிய விரைவுப் படகுகள் காவல் சென்றுகொண்டிருந்தன.
முந்தையநாள் இரவுமுதலே ரதங்களும் குதிரைகளும் படகுகளில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. அவற்றுக்கான உணவுகளும் படைக்கலங்களும் கவசங்களும் சிறிய படகுகளும் என சேவகர்கள் கயிறுகட்டி மேலே தூக்கிக்கொண்டே இருந்தனர். அப்போதுகூட வேலை முடியவில்லை என்பதை அர்ஜுனன் கண்டான். கடைசியாக கயிறுகளையும் மூங்கில்கழைகளையும் ஏற்றிக்கொண்டிருந்தனர். தருமன் “நேரமாகிவிட்டது. நிமித்திகர் குறித்த நற்தருணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது” என்றான். அர்ஜுனன் “எதற்காகக் காத்திருக்கிறார்கள்?” என்றான். “பிதாமகர் வருவதாகச் சொல்லியிருக்கிறார். நாம் முதல் போருக்குச் செல்கிறோம் அல்லவா?” என்றான் தருமன்.
துரோணரின் குருகுலத்திலிருந்து அரண்மனை திரும்பியதும் பீஷ்மர் அவர்களை அழைத்து தெளிவாகவே சொல்லிவிட்டார். “பாஞ்சாலன் மீது அஸ்தினபுரியின் படையெடுப்பு என ஒன்று இருக்காது. அது அரசியல் சிக்கல்களையே உருவாக்கும். நம்முடன் நல்லுறவில் உள்ள சேதிநாடும் மாத்ராவதியும் அங்கமும் வங்கமும் கலக்கம் கொள்வார்கள். மச்சர்களும் கங்கர்களும் நிஷாதர்களும் அஞ்சுவார்கள். அவர்களிடம் முன்னமே மகதம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. அவர்களிடம் ஒரு உளத்திரிபு உருவாவது நல்லதல்ல.”
சகுனி “நாம் பாஞ்சாலன் மேல் ஒரு குற்றச்சாட்டை சுமத்துவோம். அதன்பின் தண்டிப்போம்” என்றார். “இல்லை, இங்கு அதற்கு சில நெறிமுறைகள் உள்ளன. நாம் பாஞ்சாலனிடம் அதற்கான விளக்கம் கேட்கவேண்டும். நம் சிற்றரசர்கள் கூடிய அவையில் விசாரிக்கவேண்டும். தண்டத்தை முரசறைந்தபின்னரே படைகொண்டுசெல்லவேண்டும்” என்றார் பீஷ்மர். “பாஞ்சாலன் நம் இளவரசியரை சிறைகொண்டு சென்றிருந்தால் மட்டுமே விதிவிலக்கு.” சகுனி நிறைவிழந்த முகத்துடன் தலையை அசைத்தார். “ஷத்ரியர்களுக்கு ஏன் இத்தனை தயக்கம்?” என்றார். பீஷ்மர் மெல்ல “ஏனென்றால் நாம் தூயஷத்ரியர்கள் அல்ல” என்றார்.
விதுரர் மெல்ல “பிதாமகர் அறியாதது அல்ல, எனினும் ஒரு வழியை அடியவன் சொல்ல ஒப்பவேண்டும். இளவரசர்கள் கங்கை வழியாக ஒரு நீர்ப்பயணம் செல்லட்டும். காம்பில்யத்தின் கரையில் அவர்கள் வேட்டையாடும்போது ஏதோ சிறுபூசல் நிகழ்ந்து அவர்கள் பாஞ்சாலர்களால் தாக்கப்படுகிறார்கள் என்று வைப்போம். இளவரசர்கள் சினம்கொண்டு பாஞ்சாலனைத் தாக்கி சிறைப்பிடித்துவிடுவது நிகழக்கூடியதல்லவா? அச்செய்தியைக் கேட்டதும் தாங்கள் அகம்பதறி அங்கே சென்று பாஞ்சாலனிடம் மன்னிப்பு கோரலாம். அத்துமீறிய இளவரசர்களுக்கு சிறு தண்டனையையும் அளிக்கலாம்” என்றார்.
பீஷ்மர் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் “ஆம், அனைத்துச் சிற்றரசர்களுக்கும் நடந்தது என்ன என்று தெரிந்திருக்கும். ஆனால் இதை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களெல்லாம் நம் அடிமைகள் என்பதுதான் உண்மை. ஆனால் அவர்கள் ஷத்ரியர் என்பதனால் நட்புநாடுகள் என்ற பாவனை அவர்களுக்கு தேவைப்படுகிறது. அதை நாம் கலைக்கையில்தான் அவர்கள் சினம் கொள்கிறார்கள். அது கலையாதபோது எதையும் ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் நம் நட்புநாடாக இருப்பதற்கு நம்முடைய படைபலமன்றி வேறென்ன காரணம் இருக்கிறது? அந்தப்படைபலம் இளவரசர்களின் வெற்றியால் மேலும் நிறுவப்பட்டுவிடும். சிறு படையுடன் சிறுவர்களே சென்று பாஞ்சாலத்தை வெல்லமுடியும் என்பதைப்போல பிறருக்கு வலுவான எச்சரிக்கையும் வேறில்லை” என்றார் விதுரர்.
“ஆம், இதைவிடச்சிறந்த வழி என எதையும் நான் காணவில்லை” என்றார் சகுனி. பீஷ்மர் “ஆனால் பெரிய படையை நாம் அனுப்பமுடியாது. பெரும்படை கிளம்பினால் அச்செய்தி உடனே பாஞ்சாலத்தைச் சென்றடைந்துவிடும். அவர்களுக்கும் இங்கு ஒற்றர்கள் இருப்பார்கள்” என்றார். அவர் பெரும்பாலும் ஒத்துக்கொண்டதை உணர்ந்த விதுரர் “அதற்கு வழி உள்ளது. நாம் படைகளை சிறு பிரிவுகளாக கங்கைக்கரைக் காட்டுக்குள் கொண்டுசெல்வோம். அங்கே கட்டப்படும் தற்காலிக துறைகளில் இருந்து எவருமறியாமல் படகுகளில் ரதங்களையும் புரவிகளையும் ஏற்றிக்கொள்வோம். மாலையில் கிளம்பினால் அவர்கள் ஒரே இரவில் காம்பில்யத்தை அடையமுடியும். மதியத்திற்குள் காம்பில்யத்தைத் தாக்கலாம்” என்றார்.
“ஆனால் பெரிய படை ஏதும் கொண்டுசெல்லமுடியாது. பாஞ்சாலம் தொன்மையான நாடு” என்றார் பீஷ்மர். “ஆம், ஆனால் சென்ற பல ஆண்டுகளாக பாஞ்சாலன் அவனுடைய படைகளை தொகுத்துக்கொள்ளவில்லை. உத்தரபாஞ்சாலமும் தட்சிணபாஞ்சாலமும் ஒருங்கிணைந்து அஸ்தினபுரியுடன் நட்புநாடாகவும் ஆனபின்னர் தனக்கு எதிரிகளே இல்லை என்ற மனநிலையை அடைந்துவிட்டான். பயிற்சியற்ற படைக்கலமற்ற ஒரு படையே அவனுடன் உள்ளது” என்றார் விதுரர். “அத்துடன் சிருஞ்சயகுலத்தினர் துருபதனின் சோமக குலத்துடன் பிளவுகொண்டு நிற்கின்றனர். சென்ற சில ஆண்டுகளாக அவர்கள் அதிகாரத்திலிருந்து முழுமையாக விலக்கப்பட்டிருக்கிறார்கள்.”
பீஷ்மர் தலையசைத்து “வேண்டுவன நிகழட்டும். ஆனால் மிகச்சிறியபடையே செல்லவேண்டும். ஒருபோதும் அது ஒரு படையெடுப்பு என்று தோன்றக்கூடாது” என்றார். சகுனி “நம் இளையோருக்கும் அது ஒரு அறைகூவலாக அமையட்டும்” என்று நகைத்தார். “அத்துடன் துருபதனை இங்கே கொண்டுவரமுடியாது. ஆகவே துரோணரும் இளவரசர்களுடன் செல்லட்டும். அவர் விரும்பியதெல்லாம் பாஞ்சால மண்ணிலேயே முடியட்டும்” என்று சொல்லி பீஷ்மர் எழுந்துகொண்டார். விதுரர் தலைவணங்கினார். அப்பால் நின்றிருந்த தருமனும் துரியோதனனும் கைகூப்பி வணங்கினர்.
பீஷ்மர் வெளியேறும் முன் ஒருகணம் சிந்தித்து “இப்படையெடுப்பு திருதராஷ்டிரனுக்கு தெரியவேண்டியதில்லை. இதை அவன் அநீதி என நினைக்கக்கூடும்” என்றார். விதுரர் “ஆம், அதை நானும் எண்ணினேன்” என்றார். “அவன் எப்போதும் நேர் போரை விரும்புபவன். அவன் அரண்மனையில் மந்தணங்கள் என்பதே இல்லை” என்றபின் புன்னகையுடன் “விழியற்றவன் என்பதனால் அவனால் ஊடுவழிகளில் நடக்கமுடியவில்லை போலும்” என்றார். அதிலிருந்த சுயநிந்தையை உணர்ந்த விதுரர் மெல்ல புன்னகை புரிந்து விழிகளைத் தாழ்த்தினார்.
சங்கின் ஒலி தொலைவில்கேட்டது. “வந்துவிட்டார்” என்றான் தருமன். “அவர் இங்குவருவதுகூட எவரும் அறியலாகாது என்று நினைக்கிறார். அவர் வருவதைக்கண்டு நம் படைகள் ஒலித்த சங்குதான் கேட்கிறது. அவருடன் படைகளோ சேவகர்களோ இல்லை என்று அதிலிருந்து தெரிகிறது” என்றான். அர்ஜுனன் மெல்லியபுன்னகையுடன் “திருட்டுத்தனம் செய்தால் அதை துல்லியமாகவே செய்யவேண்டும் என்று பிதாமகர் காட்டுகிறார்” என்றான். “பார்த்தா, இது என்ன பித்ருநிந்தை? அவர்செய்வது அரசதந்திரம் மட்டுமே” என்றான் தருமன்.
உண்மையில் பீஷ்மர் தனியாகத்தான் வந்திருந்தார். அவருடன் அவரது முதற்சீடரும் ஆயுதசாலைக் காப்பாளருமான ஹரிசேனரும் வந்திருந்தார். இருபுரவிகளும் காட்டைக்கடந்து கங்கைக்கரை நோக்கி இறங்கின. ஹரிசேனர்தான் முதலில் வந்தார். அவரைப்பார்த்ததும் பீஷ்மர் என்று அர்ஜுனன் சிலகணங்கள் எண்ணிக்கொண்டான். அதே போன்ற உடலசைவுகள் அதே தாடி. அவரது பேச்சும் குரலும்கூட பிதாமகரைப்போன்றே இருக்கும். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக பிதாமகருடன் இருப்பவர். பிதாமகர் கானேகிவிட்டால் மேலெழுந்து பிதாமகராகவே ஆகி படைக்கலப்பயிற்சிநிலையத்தை நிறைத்துவிடுவார். அங்கே பிதாமகர் இல்லை என்றே தெரியாது.
ஹரிசேனர் இறங்கி கடிவாளத்தை சேவகன் கையில் கொடுத்துவிட்டு அவரை நெருங்கிவந்த விதுரரிடம் சிலசொற்கள் சொன்னார். பின்னால் வந்த புரவியிலிருந்து இறங்கிய பீஷ்மர் விதுரரின் வணக்கத்தை சிறு தலையசைவால் ஏற்றுக்கொண்டு அருகே வந்தார். அப்பால் தன் வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்த சகுனி வணங்கியபடி வந்து பீஷ்மர் முன் பணிந்தார். பீஷ்மர் மெல்லிய குரலில் ஏதோ சொல்ல சகுனி புன்னகைசெய்தார்.
முதலில் நின்ற படகில் துரோணரும் அஸ்வத்தாமனும் இருந்தனர். இரண்டாவது படகில் துரியோதனனும் துச்சாதனனும் கர்ணனும் மூத்த கௌரவர்களும் இருந்தனர். பீஷ்மர் முதல்படகை நோக்கிச் சென்றபோது அப்படகின் முகப்பில் தோன்றிய துரோணர் கைகூப்பினார். பீஷ்மர் கைகூப்பி வணங்கி “நலம் திகழ்க! வெற்றியுடன் மீள்க!” என்று கூவினார். “தங்கள் ஆசிகள் துணைவரட்டும்” என்றார் துரோணர். அஸ்வத்தாமன் தலைவணங்கி தந்தையருகிலேயே நின்றான். படகில் துரோணரிடம் பேசிக்கொண்டிருந்த கிருபர் இறங்கி வந்து பீஷ்மர் அருகே நின்றார்.
படகிலிருந்து துரியோதனனும் துச்சாதனனும் இறங்கி பலகைகள் கனத்து ஒலிக்க பீஷ்மரை அணுகி கால்களைத் தொட்டு வணங்கி ஆசிபெற அவர் அருகே நின்ற சேவகனின் தட்டிலிருந்து குங்குமத்தை எடுத்து அவர்களின் நெற்றியில் அணிவித்து வாழ்த்தினார். அவர்கள் கிருபரை வணங்கிவிட்டு சகுனியை வணங்க சகுனி துரியோதனனை மார்புறத் தழுவிக்கொண்டு ஆசியளித்தார். தன் உடைவாளை எடுத்து துரியோதனன் கையில் கொடுத்தார். அவர்கள் ஹரிசேனரையும் விதுரரையும் வணங்கி ஆசிபெற்றனர்.
படகில் நின்று பாத்துக்கொண்டிருந்த தருமன் “மந்தன் எங்கே?” என்றான். “எப்போதும் இதையே செய்கிறான். எந்த முறைமைக்குள்ளும் அடங்குவதில்லை. ஒரு குரங்கைப் பயிற்றுவித்து கொண்டுசெல்வதுபோல நான் தவிக்கிறேன்.” சகதேவன் அண்ணாந்து நோக்கி “மூத்தவரை குரங்கு என்றுதான் நானும் இவனும் சொல்லிக்கொள்கிறோம்” என்றான். “வாயைமூடு” என்று அவன் தலையில் தருமன் தட்டினான். அர்ஜுனன் புன்னகை புரிந்தான்.
இறுதி கௌரவனும் வாழ்த்துபெற்று முடித்தான். அர்ஜுனன் “நாம் செல்வோம், அவர் வரட்டும்” என்றபடி இறங்கிச்சென்றான். நகுலனையும் சகதேவனையும் அழைத்துக்கொண்டு தருமன் பின்னால் வந்தான். நகுலன் “பிதாமகரும் நம்முடன் போருக்கு வருகிறாரா மூத்தவரே?” என்றான். “பேசாமல் வா!” என்றான் தருமன். “அப்படியென்றால் மாதுலர்?” என்றான் நகுலன். சகதேவன் “அவர் வரமாட்டார். வாளில்லாமல் எப்படி வரமுடியும்?” என்றான். “பேசாமல் வாருங்கள்” என்றான் தருமன்.
அர்ஜுனன் வணங்கியபோது “இது உன் முதல்வெற்றி” என்று சொல்லி பீஷ்மர் அவனுக்கு திலகமணிவித்தார். ஹரிசேனரை வணங்கியபோது பீஷ்மரை மீண்டும் வணங்குவதுபோல உணர்ந்தான். “பீமன் எங்கே?” என்றார் பீஷ்மர். தருமன் ஏதோ சொல்வதற்குள் படகு ஒன்றிலிருந்து கீழே குதித்த பீமன் “பிதாமகரே, நான் உணவுப்பொருட்களை அடுக்கிக்கொண்டிருந்தேன்” என்றபடி உடலெங்கும் புழுதியுடன் வந்தான். “சேவகரைப்போல வேலைசெய்கிறான்” என்றார் பீஷ்மர் புன்னகையுடன். “அத்தனை உழைத்தும்கூட அவன் உடல் பருப்பதைத் தடுக்கமுடியவில்லை.”
விதுரர் புன்னகைசெய்து “இங்கே அதிகச் சுமைதூக்கும் யானைதான் பெரியதாக இருக்கிறது” என்றார். பீஷ்மர் உரக்க நகைத்தார். விதுரர் நகுலனின் காதைப்பிடித்து இழுத்து “போருக்குப்போகுமளவுக்கு பெரியவனாகிவிட்டாய்” என்று சிரிக்க அவன் வெட்கி சகதேவனைப் பார்த்தான். பீஷ்மர் “போரா, இவர்களா? பீமன் இருக்கும் வரை இவர்கள் போரே புரியப்போவதில்லை. நிழல் பட்ட செடிகள்தான்” என்றார்.
பீமன் அருகே வந்து பீஷ்மரை வணங்கினான். “இலங்கையை ஆண்ட ராவணப்பிரபுவை வென்றது அனுமனுக்கு ஒரு விளையாட்டு என்கிறது ஆதிகவியின் காவியம். நீ ஆடப்போகும் போர்களில் இது முதலாவது. வென்று வருக!” என்றார் பீஷ்மர். அவன் கிருபரையும் ஹரிசேனரையும் விதுரரையும் வணங்கி விட்டு “நான் செல்கிறேன். கிளம்பும் முன் ஒருமுறை சரிபார்க்கவேண்டும்” என்றான்.
இருள் சூழ்ந்து படகுகளின் நிழலுருக்கள் நீரின் மெல்லிய ஒளியின் பகைப்புலத்தில் தெரிந்தன. விளக்குகளும் பந்தங்களும் ஏற்றப்படவில்லை. முரசு மெல்ல அதிர்ந்ததும் ஒரு சிறு நெய்விளக்கு சைகை காட்டிச் சுழன்றது. படகுகளின் பாய்கள் இருளுக்குள் சரசரத்து மேலேறி காற்றேற்று புடைத்தன. படகுகளின் மரஇணைப்புகள் அசைவில் முனகும் ஒலிகள் எழுந்தன. முதல்படகின் சுக்கான் திருப்பப்படும் ஒலியை கேட்கமுடிந்தது. அதன் அமரம் திரும்பியதும் துறையில் நின்றவர்கள் விளக்கைச் சுழற்றிக்காட்டினர். முதல் படகு அலைகளில் மூக்கு எழுந்து அமிழ்ந்து மைய ஓட்டம் நோக்கிச்செல்ல பிறபடகுகள் அதைத் தொடர்ந்தன.
அர்ஜுனன் அமரமுனையில் சென்று தடிமேல் அமர்ந்துகொண்டான். தலைக்குமேல் எழுந்த பாயிலிருந்து குளிர்ந்த காற்று அருவிபோல அவன் மேல் கொட்டியது. பாய்மரக்கயிறுகள் இறுகி மெல்ல முனகியபடி அதிர்ந்தன. அலைகளின் ஓசை காலடியில் கேட்டுக்கொண்டே இருந்தது. வலப்பக்கம் கங்கையின் கரை நிழல்வரி போல கடந்துசெல்ல இடப்பக்கம் வானிலிருந்து ஊறிவந்த விண்மீன் ஒளியை வாங்கி விரிந்திருந்த கங்கையின் நீர்ப்பரப்பில் அலைகளின் வளைவுகள் மட்டும் பளபளத்தன. நடுவே சென்று கொண்டிருந்த வணிகப்படகுகளின் ஒளிப்புள்ளிகள் மட்டும் தெரிந்தன.
தருமன் வந்து அருகே அமர்ந்துகொண்டான். “என் ஒற்றன் ஒருவன் செய்தியனுப்பியிருக்கிறான் பார்த்தா” என்றான். “துரியோதனனும் கர்ணனும் நம்முடன் இணைந்து போர்புரிய சித்தமாக இல்லை. அவர்கள் தனியாகச்சென்று காம்பில்யத்தை தாக்கப்போகிறார்கள். குருநாதர் கோரிய பரிசை துரியோதனனே வென்று அவர் காலடியில் வைக்கப்போகிறான்” என்றான். அர்ஜுனன் தலையசைத்தான். “அங்கே அதற்கான திட்டங்கள்தான் வகுக்கப்படுகின்றன. மாதுலரின் எண்ணம் அது. அங்கே என் சேவகன் ஒருவன் இருக்கிறான். மதுகொண்டுசென்றவன் அனைத்தையும் கேட்டு மந்தண ஓலையை எனக்குக் கொடுத்தனுப்பினான்.”
“அவர்கள் விரும்பியதைச் செய்யட்டும்” என்றான் அர்ஜுனன். “என்ன உளறுகிறாய் என்று தெரிகிறதா உனக்கு? நீ குருநாதரின் முதல் மாணவன். நீ துருபதனை வென்று குருநாதருக்கு காணிக்கையாக்குவதே முறை. அதை துரியோதனன் செய்தால் என்ன பொருள்? இது ஒன்றும் மந்தணநிகழ்வு அல்ல. எதிர்காலத்தில் சூதர்கள் பாடிப்பாடி விரிக்கப்போகும் வரலாறு. இது உன் முதல் தோல்வி என்றே கொள்ளப்படும்” என்று தருமன் பல்லைக்கடித்துக்கொண்டு சொன்னான்.
“மூத்தவரே, நான் என்ன செய்யமுடியும் அதற்கு?” என்றான் அர்ஜுனன். “அவர்களின் படையெடுப்பு தோற்கவேண்டுமென விழையவேண்டுமா? அல்லது அதற்காக நான் எதையாவது செய்யவேண்டுமா?” சலிப்புடன் தலையை ஆட்டி “நான் அதைச் சொல்லமுடியாது. ஆனால் அவர்கள் வென்றால் நாம் முதல்பெருந்தோல்வியை அடைந்துவிட்டோமென்றே பொருள்” என்றான் தருமன். அர்ஜுனன் ஒன்றும் பேசாமல் குனிந்து நீரலைகளை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் நீரின் ஒளியை நோக்கி சற்றுநேரம் நின்றபின் தருமன் திரும்பிச்சென்றான்.
நகுலனும் சகதேவனும் வந்து அருகே நின்றனர். “என்ன?” என்று அர்ஜுனன் திரும்பி நோக்கிக் கேட்டான். “இந்தப்போரில் எத்தனைபேர் உயிரிழப்பார்கள்?” என்று நகுலன் கேட்டான். “ஏன் கேட்கிறீர்கள்?” என்று அர்ஜுனன் புன்னகையுடன் கேட்டான். “எவருமே உயிரிழக்கமாட்டார்கள் என்று இவன் சொல்கிறான். ஏனென்றால் இது பயிற்சிப்போராம். இல்லையேல் குருநாதர் துரோணர் ஏன் வரவேண்டும் என்கிறான்” என்றான் சகதேவன்.
அர்ஜுனன் சிரித்துக்கொண்டு “இது உண்மையான போர்தான்” என்றான். “அப்படியென்றால் இறப்புகள் இருக்குமா?” என்றான் நகுலன். “ஆம்” என்றான் அர்ஜுனன். சகதேவன் மூச்சை இழுத்தான். நகுலன் “எத்தனைபேர் இறப்பார்கள்?” என்றான். “அதை எப்படிச் சொல்லமுடியும்?” என்றான் அர்ஜுனன். நகுலன் “பீமசேனர் இறக்கமாட்டார். அவரைக்கொல்ல எவராலும் முடியாது” என்றான். சகதேவன் “நீங்களும் இறக்கமாட்டீர்கள் அல்லவா?” என்றான். “நாம் இறக்கமாட்டோம், நம் எதிரிகள்தான் இறப்பார்கள்” என்றான் அர்ஜுனன். இருவரும் சிரித்தனர்.
இன்னொரு ஓலையுடன் தருமன் வந்தான். “இங்கே என்ன வேலை? சென்று துயிலுங்கள். நாளை போர்ப்பயிற்சி இருக்கிறது… செல்லுங்கள்” என்று அவர்களை அனுப்பிவிட்டு அருகே அமர்ந்து “பார்த்தா, இதோ இன்னொரு ஓலை. அவர்களுடைய கணிப்புகள் என்னென்ன தெரியுமா?” என்றான். “பாஞ்சாலத்தில் உள்ள குலங்கள் ஐந்து. கேசினிகள், துர்வாசர்கள், கிருவிகள், சிருஞ்சயர்கள், சோமகர்கள். துருபதன் சோமககுலத்தைச்சேர்ந்தவன். ஐந்து குலச்சபைகளும் அவனை ஆட்சியாளனாக ஏற்றுக்கொண்டிருக்கின்றன. பல ஆண்டுகளாக அங்கே ஒரு குலச்சபை ஆட்சிதான் நடந்துவருகிறது.”
அர்ஜுனன் தலையை அசைத்தான். தருமன் சொன்னான் “இவர்களில் கேசினிகளும் துர்வாசர்களும் ஆளும்குலங்கள் அல்ல, வெறும் மலை இடையர்கள். கிருவிகள்தான் பாஞ்சாலத்தின் பூர்வகுடிகள். அவர்கள் இப்போது வலுக்குறைந்திருக்கிறார்கள். ஆனால் சிருஞ்சயகுலம் இன்றும் வல்லமையுடன் இருக்கிறது. அவர்களுக்கு துருபதன் மேல் கடும் சினம் இருக்கிறது. அவன் குலச்சபையை மதிப்பதில்லை என்று எண்ணுகிறார்கள். சிருஞ்சயர்கள் இப்போது சோமகர்களுடன் சேர்வதில்லை. அவர்கள் பெரும்பாலும் உத்தர பாஞ்சாலத்திலேயே தனித்தனி ஊர்களாக இருந்துகொண்டிருக்கிறார்கள்.”
தருமன் தொடர்ந்தான் “அந்தக் கசப்பு முதலில் உருவானது நம் குருநாதர் அங்கே சென்று துருபதனிடம் நாட்டைக் கோரியபோதுதான் என்கிறார்கள். அன்று குருநாதரை சிருஞ்சயர்களின் குலமூத்தாரான கரவீரர் ஆதரித்தாராம். துருபதன் அன்று தருக்கபூர்வமாக தப்பிவிட்டாலும் அறமுறைப்படி அவன் வாக்குதவறியதாகவே பொருள் என்று கரவீரர் குலச்சபையில் சொல்லியிருக்கிறார். துருபதனின் சோமககுலத்தவர்கள் அவரை கடுமையாக மறுத்து எள்ளிநகையாடியிருக்கிறார்கள். அன்று குலச்சபையில் கைகலப்பு நிகழ்ந்திருக்கிறது. அன்று அவையில் கேசினிகுலத்தின் தலைவரும் துர்வாசகுலத்தின் தலைவரும் துருபதனை ஆதரித்தமையால் ஒன்றும் செய்யமுடியவில்லை.”
“ஆனால் அன்றுமுதல் துருபதன் சிருஞ்சயர்களை அவமதிப்பாக நடத்திவந்திருக்கிறான். கேசினிகளுக்கும் துர்வாசர்களுக்கும் செல்வத்தை அள்ளி வீசி அவர்களின் ஆதரவுடன் குலச்சபையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். சிருஞ்சயகந்த்தின் கரவீரரின் மைந்தர் கருஷரை அவன் சபையில் அவமதித்தபின் குடிச்சபை கூடுவதே நின்றுவிட்டது. சிருஞ்சயர்கள் காம்பில்யத்துக்கு தொடர்பில்லாமலேயே இருந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான் தருமன்.
“அதைத்தான் முக்கியமான செய்தியாக துரியோதனன் எண்ணுகிறான். சோமகர்கள் தோற்றால் சிருஞ்சயர்களிடம் காம்பில்யத்தை ஒப்படைத்துவிடுவதாக கருஷருக்கு ஒரு செய்தியை சென்று இறங்கியதுமே அனுப்பப்போகிறார்கள். அதை ஏற்று இந்தப்போரில் சிருஞ்சயர்கள் கலந்துகொள்ளமாட்டார்கள். சோமகர்களின் படையை எளிதில் வென்றுவிடலாம் என்று திட்டமிடுகிறார்கள். அங்கே ஓர் ஓலை எழுதப்படுகிறது” என்றான் தருமன்.
அர்ஜுனன் புன்னகையுடன் எழுந்துகொண்டு “அவர்கள் விரும்பியபடி முன்னால் சென்று போரிடட்டும் மூத்தவரே, முடிந்தால் அவர்கள் துருபதனை சிறையிடட்டும். நம் வாய்ப்பு வேறுவழியில் வரும் என ஆற்றியிருப்போம்” என்றான். “என்ன சொல்கிறாய்? நாம் இப்போதே திட்டமிட்டாகவேண்டும்” என்றான் தருமன். “இந்தப்போரில் நாம் யாரென்று நாம் காட்டியே ஆகவேண்டும். இல்லையேல் நமக்கு அஸ்தினபுரியில் மதிப்பில்லை” தருமன் சொன்னான். “வரும் நாட்கள் முக்கியமானவை பார்த்தா.”
அர்ஜுனன் புன்னகை செய்தான். தருமனின் முடியாசை உள்ளூர அலையடிக்கிறது. அவருடைய கணித்து அமைக்கப்பட்ட சொற்களை மீறி அதன் திவலைகள் தெறிக்கும் தருணங்களில் ஒன்று அது. அர்ஜுனன் திரும்பி ஒரு சேவகனை கைதட்டி அருகே அழைத்து “பீமசேனர் என்னசெய்கிறார்?” என்றான். அவன் சற்று தயங்கி “அவர் படகுகள் கிளம்பியதுமே துயிலத் தொடங்கிவிட்டார். காம்பில்யம் செல்லும் வரை அழைக்கவேண்டாமென ஆணை” என்றான்.
அர்ஜுனன் புன்னகையுடன் திரும்பி தருமனிடம் “அதுதான் உகந்தது மூத்தவரே. போருக்கு முந்தையநாள் இரவு நன்றாகத் துயின்றிருக்கவேண்டும். அதைத்தவிர அனைத்துமே வீண்வேலைகள்தான். தாங்களும் துயிலுங்கள்” என்றான். “என்னால் துயில முடியாது பார்த்தா” என்றான் தருமன். “அப்படியென்றால் சிந்தியுங்கள். இந்தப் பாய்களைப்போல இரவெல்லாம் புடைத்து நில்லுங்கள்” என்று சொல்லி புன்னகைத்து மெல்ல தலைவணங்கிவிட்டு அர்ஜுனன் அறைக்குள் சென்றான்.
வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்