அசோகமித்திரன்,நீலம்-கடிதம்

அன்புள்ள ஜெ.மோ ஐயா அவர்களுக்கு,

வணக்கம். தங்களின் “அசோகமித்திரனை அவமதித்தல்” என்ற பதிவை வாசித்தேன். அசோகமித்திரன் அவர்களின் பேட்டியை நானும் வாசித்தேன். அதில் “வெண்முரசை” பற்றி தவறாக ஒன்றும் சொல்லியதுபோல் நினைவில்லை. நாகர்களைப் பற்றீ நிங்கள் எழுதியிருப்பதைப் பற்றி பேசியிருந்தார் மற்றும் தன் மனைவிக்கு புரியவில்லை என்றும் சொல்லியிருந்தார். பேஸ்புக்கில் இதுபோன்று நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் ‘பெரிய இலக்கியவாதிகள்’ முதல் ‘பேஸ்புக் இலக்கியாவதிகள்’ வரை பலர் அவ்வப்பொழுது உங்களைப் பற்றி ஏதோ ஒன்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவ்வாறு கூறப்படுபவற்றில் பல எரிச்சல் ஊட்டுபவையாக உள்ளன. தனிப்பட்ட முறையில் உங்களைப் பற்றி எழுதுப்படுபவற்றை எளிதாக புறக்கணிக்க முடிகிறது. அது எழுதுபவரின் விருப்பு , வெறுப்பு சார்ந்தவையாக இருக்கும் என்பதாலும், தனிப்பட்ட முறையில் உங்களைத் தெரியாது என்பதாலும். ஆனால் ஏன் இவர் மகாபாரதத்தை எழுதுகிறார் போன்றவை மிக மிக எரிச்சல் ஊட்டுகின்றன. எழுத்தாளர் எதை எழுத வேண்டும் என்று வாசிப்பவர்களா முடிவு செய்ய வேண்டும்?

ஓரிருமுறை அத்தகைய பதிவுகளில் பின்னூட்டமிட்டேன். பின்பு பேஸ்புக்கில் விவாதங்களில் ஈடுபடுவது வீண் வேலை என்று நீங்கள் சொன்னதே சரி எனப் பட்டது. அது மட்டும் காரணம் அல்ல. உங்கள் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு அந்த சிறிய இடத்தில் எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தக் கொள்ளப் பார்க்கின்றேனோ என்று தோன்றியது. வயதில் பெரியவர் நினைவுப் பிழையில் சொல்லியிருப்பார் என்று நீங்கள் எடுத்துக்கொள்ளும் விதம் உங்களின் மீதுள்ள மதிப்பை அதிகரிக்கச் செய்கிறது.

மேலும் தங்களிடம் கேட்பதற்கு என்னிடம் இரண்டு கேள்விகள் உள்ளன.

1.நீங்கள் தொடர்ந்து உங்களின் படைப்புகளை இணைய தளத்தில் வெளியிடுகிறீர்கள். பலர் படித்து வருகிறார்கள். பின்பு புத்தகமாக வரும்பொழுது இவர்களில் எல்லோரும் வாங்குவார்களா? நான் காசு கொடுத்து புத்தகமாக வாங்கித்தான் படிக்கவேண்டும் என்றிருக்கிறேன். இது என் தனிப்பட்ட எண்ணம் என்றாலும் இணையத்தில் எழுதுவதன் நோக்கமென்ன? ( நீங்கள் முன்னரே இக்கேள்வியை எதிர்கொண்டிருக்கலாம்)

2. ‘நீலம் யாருக்காக’ என்ற பதிவில் இரண்டு வகையான இலக்கிய வாசகர்களைப் பற்றி மிகத் துல்லியமாக குறிப்பிட்டுள்ளீர்கள். நான் இதில் எவ்வகை வாசகன் என்பதைத் திரும்ப திரும்பக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். முதல் வகை வாசகர்கள் மொழியின் அழகை நெருங்காமல் போவதற்கு காரணங்களாக‌ இருப்பது அல்லது இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுவது வலிந்து/ செயற்கையாக‌ எழுதப்பட்டிருக்கும் படைப்புகள் மற்றும் நீங்கள் சொல்வது போல் கூட்டு வாசிப்பு பல பேருக்கு சாத்தியமே இல்லை என்பதனால். இங்கு இருக்கும் இலக்கிய வாசகர்களும் ஒரு வாசிப்புக்கு அல்லது வாசிப்பு அனுபவத்தோடு நெருங்குபொழுது “இது கூட உனக்குத் தெரியாதா? என்றோ இல்லை எனக்குத் தெரியும் இது இப்படித்தான் (எதைப் பார்த்தாலும் இது படிமம், இது குறியீடு என்கிறார்கள். எப்படி என்றால் அது அப்படித்தான் என்கிறார்கள்)” என்றோதான் எதிர்வினையாற்றுகிறார்கள். இலக்கியம் என்பது வழிகாட்டுதல் இன்றி மலையேறுவதுபோல்தான் உள்ளது எனத் தோன்றுகிறது.(எனக்கு வேலைக்கு வந்து மூன்று வருடங்கள் கழித்துதான் தங்களின் அறிமுகம் கிடைத்தது).

என் அலுவலக மேலாளர் ஒருவருடன் தங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்பொழுது ஜெ.மோ always makes lot of sense என்றார். தங்களின்  “அசோகமித்திரனை அவமதித்தல்”பதிவு அதற்கு ஒரு சான்றாக உள்ளது.

நன்றி,
சங்கர்

அன்புள்ள சங்கர்,

ஃபேஸ்புக் போன்றவை அன்றாடக் கவனத்தை ஈட்டியே ஆகவேண்டுமென்ற நிலையில் செயல்படுபவை. ஆகவே அவற்றுக்கு வேறு வழியில்லை.

அத்துடன் எப்போதுமே தமிழில் முக்கியமான முயற்சிகள், பெரிய வெற்றிகள் காழ்ப்புகளையே பெரும்பாலும் உருவாக்குகின்றன. ஏனென்றால் இங்கே பெரும்பாலும் ஒன்றுமே நிகழ்வதில்லை. எவரும் எதுவும் செய்வதில்லை. செய்பவன் சும்மா இருப்பவர்களை, முடியாதுபோனவர்களை எப்படியோ சிறியவர்களாக ஆக்குகிறான். இதை நீங்கள் எல்லா தளங்களிலும் காணமுடியும்

இணையத்தில் இவ்வெழுத்து வருவதனால் நூல்வாசிப்பு குறைவது உண்மை. ஆனால் இணையத்தில் வருவதனால்தான் இத்தனைபேர் வாசிக்கிறார்கள். இந்தமொழிநடைக்கும் புனைவுமொழிக்கும் பழக்கமாகிறார்கள்.

கூட்டுவாசிப்பு என்பது இன்றைய சூழலில் தனிப்பட்டமுறையில் சாத்தியமல்ல. உங்கள் சூழலில் இன்னொரு வாசகனையே நீங்கள் காணமுடியாது. ஆகவே விவாதத் தளங்களில் பிறரது வாசிப்பை கவனிப்பது நம் வாசிப்பைப் பகிர்ந்துகொள்வது மூலமே கூட்டுவாசிப்பு சாத்தியம்

ஜெ

முந்தைய கட்டுரைஅசோகமித்திரன் பேட்டி -ஒருவிளக்கம்
அடுத்த கட்டுரைசத்யார்த்தியின் நோபல் -ஐயங்கள்