அசோகமித்திரனின் காலச்சுவடு பேட்டி பற்றி பலர் என்னிடம் சொன்னார்கள். அதில் அவர் வெண்முரசுவை ‘கிழித்துவிட்டார்’ என ஃபேஸ்புக்கில் பலர் மகிழ்ந்தார்கள் என்றார்கள். அவர் தமிழில் என்னை புகழ்ந்ததுபோல எவரையும் புகழ்ந்ததில்லை. ஆகவே ஒரு படைப்பை முற்றிலும் நிராகரித்தாலும் அதுவும் நியாயமே. ஆனால் அதில் அவர் தன் மனைவிக்கு அது புரியவில்லை என்றுதான் சொல்லியிருக்கிறார்.
நற்றிணை யுகனைச் சந்தித்தபோது குமுறினார். நற்றிணை அசோகமித்திரனுக்கு அனுப்பிய பதிப்புரிமைத் தொகைக்கான காசோலைகளின் ரசீதுகளைக் காட்டி ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்திருக்கிறேன், நான் பணம் தரவில்லை என்று பேட்டியில் சொல்லியிருக்கிறார் என்றார். காலச்சுவடுக்கு எழுதுவதாகச் சொன்னார்.
‘வேண்டாம் விடுங்கள், அவர் பெரியவர், நினைவில்லாமல் சொல்லியிருப்பார்’ என்று நான் அவரை சமாதானம்செய்தேன். எண்பது வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவரை நேர்ப்பேச்சில் பேட்டி கண்டு அவர் சொன்னதையும், சொன்னதாக இவர்கள் புரிந்துகொண்டதையும், இவர்கள் அவரிடம் சொல்லவைத்ததையும் சேர்த்து பேட்டி எடுத்துப் போட்டிருக்கிறார்கள். காலச்சுவடுக்கு பலவருடக்கால எதிரியான க்ரியா ராமகிருஷ்ணனையும் இப்போதைய போட்டியாளர்களான நற்றிணை யுகன், கவிதா சொக்கலிங்கம் ஆகியோரையும் சிறுமை செய்ய அதை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
முதியவர்களின் பேட்டி எப்போதுமே நினைவுப்பிழைகள் நிறைந்ததாக இருக்கும். அவர்கள் அப்போதிருக்கும் மனநிலையை பிரதிபலிப்பதாக இருக்கும். அவர்களின் உடல்நிலை முக்கியமாகக் கருத்தில்கொள்ளவேண்டியது.
அத்துடன் ஆச்சரியமான இன்னொன்றும் உண்டு. பேட்டி ஆரம்பிக்கும்போது சுமுகமாகவும் உற்சாகமாகவும் இருப்பார்கள். பேட்டி ஒருமணிநேரம் ஆயிற்று என்றால் மெல்லமெல்ல சலிப்புகொள்வார்கள். அச்சலிப்பு கருத்துக்களில் வெளிப்படும். அனைத்தையும் நிராகரிக்க ஆரம்பிப்பார்கள். அங்கலாய்ப்பார்கள். கசந்துபேசுவார்கள். நெருக்கமான உறவினர்களை மட்டுமல்ல மிக அணுக்கமாக இருந்து உதவிசெய்பவர்களக்கூட நிந்தனைசெய்துவிடுவார்கள். அப்பேட்டி வழியாக அவர்களின் மொத்தக் குடும்பத்தையும் நாம் இரக்கமற்றவர்களாக காட்டிவிடமுடியும்!
அந்த எரிச்சலில் கருத்துக்கள் திரிந்து போகும். பேட்டியாளர் அவரை எங்குவேண்டுமானாலும் கொண்டுசெல்லலாம். உதாரணமாக வாழ்நாளெல்லாம் சாதிக்கு எதிராகப் போராடி, அதற்காக வாழ்க்கையை இழந்த ஒரு முதியவரைப் பேட்டிகாணும்போது அவர் களைத்து சலித்து எதிர்மனநிலை அடைந்தபின் ‘சாதி ஒழிந்தால்தான் நாடு உருப்படும் என்கிறீர்களா?’ என்று கேட்டால் கேட்டு முடிப்பதற்குள்ளாகவே ’யார் சொன்னது? முட்டாள்தனம். சாதியெல்லாம் தேவைதான்’ என்று அவர் சொல்லிவிடக்கூடும்.
இந்நிலையில் பேட்டி எடுப்பவரின் பொறுப்பு மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாக ஆகிறது. அவருக்கு அந்த முதிய எழுத்தாளர் மீது உண்மையிலேயே நல்லெண்ணம் இருக்கவேண்டும். அத்துடன் முதுமை என்பது மானுடநிலைமைகளில் மிகமிக மென்மையான ஒன்று, ஒருபோதும் அதை நம் சில்லறை நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது என்ற விவேகம் அவருக்கு இருக்கவேண்டும்
காலச்சுவடு எப்போதுமே ஒரு தனி வரலாறு கொண்டது. கண்ணன் அதன் சர்வாதிகாரியாக ஆனபின்னர் அவருக்கு சாமரம் வீசும் நபர்களால் மட்டுமே அதன் ஆசிரியர்களாகவும் பணியாளர்களாகவும் இருக்கமுடிந்துள்ளது. வாசிப்போ நுண்ணுணர்வோ இலக்கியம் மீதான அடிப்படை மரியாதையோ இல்லாத வெறும் பிழைப்புவாதிகள். விக்கிரமாதித்யன் மொழியில் ‘முதலாளி மனசுக்குப் பிடித்ததைப்பேசும் மத்தியவர்க்க ஜாலக்காரர்கள்’.
சென்றகாலத்தில் இவர்கள் எழுதிக்குவித்த கீழ்த்தர வம்புகள் காலச்சுவடின் பக்கங்களில் காணக்கிடைக்கின்றன. ஒருகாலத்தில் எல்லா இதழிலும் என்னைப்பற்றி வம்புகளையும் அவதூறுகளையும் டி.ஐ.அரவிந்தன் போன்ற ஆசாமிகள் எழுதிக்கொண்டிருந்தனர். டி.ஐ.அரவிந்தன், பௌத்த அய்யனார், தேவிபாரதி போன்றவர்களுக்கு இலக்கியம் என்பது வம்புகளின் தொகை மட்டுமே.இந்தப்பட்டியலில் நான் விரும்பியிருந்த கவிஞர் சுகுமாரனையும் சேர்த்துக்கொள்வதுதான் எனக்கு மனவலி தரும் அனுபவமாக இருக்கிறது. சமகால இலக்கியத்தின் பெரிய மானுட வீழ்ச்சிகளில் ஒன்று சுகுமாரன் இன்றிருக்கும் இந்த இடம்.
அவர்களுக்கு அசோகமித்திரன் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் பேட்டி எடுப்பது காலச்சுவடின் வம்பு அரசியலை அதன்வழியாக நிலைநாட்டுவதற்காக மட்டுமே. வெண்முரசு வெளிவரத் தொடங்கியதுமே நான் எதிர்பார்த்ததுதான், அது ஓர் இலக்கியமே அல்ல என்று பல்வேறு தொண்டைகளைக் கொண்டு சொல்லவைப்பார்கள்.நம்மூரில் தொண்டையைக் கொடுக்கவும் பலர் தயாராகத்தான் இருப்பார்கள். அசோகமித்திரன் சொன்ன பொதுவான பதில்களில் இருந்து சுற்றிச்சுழற்றி தங்களுக்கான அனைத்து பதில்களையும் அவதூறுகளையும் தொகுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
[அரவிந்தன் காலச்சுவடு ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் அவர் அமர இலக்கியங்களைப் படைக்க அதை வானளாவப்புகழ்ந்து கடிதங்கள் அதில் பிரசுரமாகும். முதலாளி அளிக்கும் பரிசு அது. காலச்சுவடை விட்டு விலகியதும் அரவிந்தனுக்கு இலக்கிய உபாதை குறைந்துவிட்டது. இப்போது தேவிபாரதி தெய்வீக இலக்கியங்களை அதில் படைக்கிறார், வாசகப்புல்லரிப்புகளுடன். இந்த இதழிலும் ஒரு கதை. கடவுளே!]
இதை எழுதத் தோன்றியது அசோகமித்திரன் இந்த இதழ் காலச்சுவடில் எழுதியிருக்கும் பரிதாபகரமான பதிலைக் கண்டு. கவிதா சொக்கலிங்கமும் க்ரியா ராமகிருஷ்ணனும் அசோகமித்திரனின் பேட்டிக்காக அவரை மறுத்து பக்கம் பக்கமாகத் தாக்குகிறார்கள். அதற்கான உரிமையும் அவர்களுக்கு உள்ளது [நல்லவேளை நற்றிணை யுகனை கடிதமெழுதவேண்டாம் என்று நான் தடுத்தேன்.]
அசோகமித்திரனுக்கு ஒன்றுமே சொல்வதற்கில்லை, தன் முதுமையைத் தவிர. தனக்குக் காது கேட்கவில்லை என்கிறார். சொக்கலிங்கம் என்பவர் கவிதா சொக்கலிங்கம் அல்ல என்கிறார் – அவர் நூல்களை வேறெந்த சொக்கலிங்கம் பதிப்பித்திருக்கிறார்? அகராதி பற்றி பேட்டியாளர்களே சொன்னதை தன் வார்த்தையாக பேட்டியில் எழுதிவிட்டார்கள் என்கிறார்.பேட்டியை தன்னிடமிருந்து பிடுங்கிவிட்டார்கள், இனிமேல் எழுதித்தான் கொடுப்பேன் என்று புலம்புகிறார்.அவரை திட்டமிட்டு அவமதித்துவிட்டது காலச்சுவடு என்பதே உண்மை.
அசோகமித்திரன் காலச்சுவடுக்கு வருந்தி எழுதிய கடிதத்தில் இதுநாள் வரை அவரை எடுத்த மிகச்சிறந்த பேட்டிகளாக இரண்டைத்தான் சொல்கிறார். சுபமங்களா பேட்டிக்கு வினாக்களை நான் தயாரித்து கோமலுக்கு அனுப்பியிருந்தேன். கோமல் பேட்டியின் இறுதிவடிவை எனக்கு அனுப்பி நான் அதைச் செப்பனிடவும் செய்தேன். இன்னொரு பேட்டி சொல்புதிதுக்காக நானே எடுத்தது. மொத்தபேட்டியையும் எழுத்துவடிவில் அவரிடம் காட்டினேன். கணிசமான வினாக்களுக்கு அசோகமித்திரன் பொதுவாகவே பதில் சொல்லியிருந்தார். அது அவரது இயல்பு.
இருந்தும் அவர் சொன்ன சில விடைகள் சிலரை சீண்டக்கூடியவையாக இருந்தன. ஒருவகை எரிச்சலில் சொல்லியிருந்தார். காரணம் நான் மேலே சொன்னதுதான். அவற்றுக்கு இன்னின்ன விளைவுகள் வரும் என நான் சொன்னேன். அவரே அவற்றை தேவையில்லை என்று சொல்லிவிட்டார். அந்தப்பேட்டி வழியாக அசோகமித்திரனின் தனிப்பட்ட ஆளுமையை, அவர் சிந்திக்கும் முறையை மட்டுமே வாசகர்களுக்குச் சொல்ல விரும்பினேன்.
காலச்சுவடுக்கு ஒரு வேண்டுகோள். வம்பின்றி நீங்கள் வாழமுடியாது. நீங்கள் வேலைக்கு வைத்திருக்கும் வம்பாளர்களுக்கு செய்ய வேலையும் வேண்டும். ஆனால் முதுமை என்பது உங்கள் வம்புவிளையாட்டுக்கான கருவி அல்ல என்பதையாவது தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.
அத்துடன் மற்ற எழுத்தாளர்களை சிறுமைசெய்து சுந்தர ராமசாமியின் பிம்பத்தை ஊதிப்பெருக்கமுடியாதென்பதையும் புரிந்துகொள்ளுங்கள். சுரா அவரது கருத்துக்களுக்காக, நூல்களுக்காக வாழட்டும். அவரது எழுத்துக்களுடன் சம்பந்தமேயற்ற உங்கள் சில்லறை வம்புகளால் அவர் வாழமுடியாது
முதுமையை வைத்து இலக்கிய விளையாட்டு விளையாடுவதை தமிழ் சிற்றிதழ் இலக்கியவாதிகள் எப்போதுமே செய்துவருகிறார்கள். மௌனியின் இறுதிக்கட்ட வாழ்க்கை துயர்மிக்கது. அவரது மகன்களில் ஒருவருக்கு மனச்சிக்கல். இன்னொருவர் இறந்துவிட்டார். நடமாடமுடியாமல் தவழ்ந்துசெல்லும் அளவுக்கு உடல்நிலை சீர்கெட்டிருந்தது. அந்த நிலையை பேட்டிகள் மூலம் கொண்டாடினர் நம்மவர்கள். அவர் சலிப்பிலும் சினத்திலும் சொன்னவற்றை எல்லாம் விவாதமாக்கினர்
நகுலன் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் அல்ஷைமர் நோயின் வகைமாதிரி ஒன்றால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர் நினைவு அவருக்கு இருக்கவில்லை. அந்நிலையை தங்களுக்குப் பிடித்ததுபோலச் சித்தரித்தது தமிழ்ச் சிற்றிதழ்ச்சூழல். பையைப்போட்டுக்கொண்டு அவரை பேட்டிகாணச்செல்லும் இடத்தில் ஆரம்பித்து அவர் நோயின் விளைவாக முன்பின் தொடர்பின்றிச் சொல்லும் சொற்களை வம்புகளாகவும் மர்மமான ஞானமாகவும் மாற்றி நீள் கட்டுரைகளை எழுதிக் கொண்டாடினார்கள்
உதாரணமாக நகுலன் அவரது மறதியின் கட்டத்தில் பதினைந்து நிமிடங்களுக்குமேல் நினைவை நீட்டிக்கமுடியாதவராக இருந்தார். வீட்டுக்கு வந்த எவரையும் மீண்டும் மீண்டும் ‘நீ யார்?’ என்பார். ஒரே பொருளை தொடர்ந்து ஆச்சரியமாகப் பார்ப்பார். ஒரே பூனைக்குட்டியை மீண்டும் மீண்டும் புதிதாகப் பார்ப்பது அவரது பொழுதுபோக்கு. அதற்கெல்லாம் ஒரு தமிழ் எழுத்தாளர் அளித்த தத்துவ விளக்கம் இருக்கிறதே! ‘சுந்தர ராமசாமி யார்?’ என்று நகுலன் ஒருமுறை கேட்டார். அது அவ்வருடத்திய மாபெரும் இலக்கிய வம்பாகக் கொண்டாடப்பட்டது
அபாரமான உலகியல் விவேகம் கொண்டவர் அசோகமித்திரன். சமநிலையும் கனிவும் கொண்ட மனிதராகவே அவரை இன்றுவரை நாம் அறிந்திருக்கிறோம். தமிழிலக்கியவாதிகளில் பலருக்கு அவர்களின் துயரநாட்களில் அசோகமித்திரன் செய்த பேருதவிகளை நான் அறிவேன். அந்த மனிதரை அந்தப் பிம்பத்துடன் இருக்கவிடுவோம். இதை சுகுமாரன் முதலியவர்களிடம் சொல்லிப்பயனில்லை. இது சுந்தர ராமசாமியின் மகனிடம் என் கோரிக்கை
அசோகமித்திரன் பற்றிய என் பழையபதிவுகள்
சுந்தர ராமசாமி அசோகமித்திரன்
அசோகமித்திரன் இரு கதைகள்
இருநகரங்களுக்கு நடுவே -அசோகமித்திரன்