பயணர் ஜெவிற்கு,
தாங்கள் ஒரு பயணப்பதிவில் வழக்கமாக அனைவரும் செல்லும் சுற்றுலாப் புள்ளிகளைக் கடந்து, அவ்வளவாக யாரும் எட்டிப் பார்க்காத இடங்களுக்கு செல்லுதலே, அவ்விடங்கள் ஒளித்து வைத்திருக்கும் (கடை விரித்தேன்,கொள்வாரில்லை) அனுபவங்களைச் சுவைக்கும் வாய்ப்பை நமக்கு நல்கும் எனும்
வகையில் குறிப்பிட்டிருந்தீர்கள்.
மலையாளக் கரை தங்களுக்கு மீப் பழக்கமாக இருக்க வேண்டும் என்பதால், கடவுளின் சொந்த தேசத்தில் இருக்கும் மறைந்திருக்கும் அழகு மர்மப் பிரதேசங்களை ஒரு பட்டியல் இட்டுக் காட்டுங்களேன்.
பொதுவான சுற்றுலாத் தளங்களால் அலுத்துள்ளேன்.
நன்றி.
இரா.வசந்த குமார்.
அன்புள்ள வசந்தகுமார்
எந்தப்பயணத்துக்கும் கூடவே கூடாத ஒன்று உண்டு, சுற்றுலாமையங்கள் சுற்றுலா விடுதிகளை முழுக்கவே தவிர்த்துவிடுதல். அந்த இடங்கள் மேலோட்டமான மனநிலை கொண்டவர்களால் நிரம்பியிருக்கும். வணிக மையங்களாக இருக்கும். கேரளத்தைப் பார்ப்பதற்கு சிறந்த வழி கேரளத்தில் சுதந்திரமாகச் செல்வதே.
கேரளத்தை இரண்டுவகையில் பார்க்கலாம். பண்பாட்டுச் சின்னங்களை பார்ப்பது ஒன்று, இயற்கைச்சின்னங்களைப் பார்ப்பது ஒன்று. பண்பாட்டுச்சின்னங்கள் என்றால் கோட்டைகள் கோயில்கள். வடக்கே இருந்து 1. பேக்கல் கோட்டை [காசர்கோடு அருகே. முக்கியமான கடல்கோட்டை] 2. பய்யன்னூர் முருகன் கோயில் 3. தலைச்சேரி லோகனார்காவு கோயில் 3. மாலிக் ட்ஜீனார் மசூதி காசர்கோடு 4 கண்ணூர் கோட்டை 5. மாடாயி பகவதி கோயில் [கண்ணகி ஆலயம்] 6. திரிச்சூர் வடக்குநாதன் ஆலயம் 7. திருநெல்லி மல்லிகார்ஜுனசுவாமி கோயில் 8. திருவாலத்தூர் பகவதி [கண்ணகி] 9. கொடுங்கல்லூர் பகவதி [சேரன் செங்குட்டுவன் உருவாக்கிய முதல் கண்ணகி கோயில்] 10. திருவஞ்சிகுளம் கோயில் கொடுங்கல்லூர் 11. ஏற்றுமானூர் சிவன் கோயில் 12. வைக்கம் சிவன் கோயில் 13. மட்டாஞ்சேரி யூத சினகாக் 14. பரசினிக்கடவு முத்தப்பன் கோயில் 15.செங்கன்னூர் பகவதி கோயில் [கண்ணகி]
இவை கூட்டம் குறைவான வரலாற்று இடங்கள்தான். திருவனந்தபுரம் பத்மநாபசாமிகோயில் மட்டுமே சுற்றுலாத்தன்மையுடன் இருக்கும்.
இயற்கைசார்ந்த இடங்கள் என்றால் கேரளத்தில் இடுக்கி வயநாடு மாவட்டங்களில் உள்ள அனேகமாக எல்லா இடங்களும்தான். ஆனால் ரிசார்ட்டுகளுக்குச் செல்லக் கூடாது. பறம்பிக்குளம், வாகமண், பீர்மேடு, கல்பற்றா, மானந்தவாடி சைலன்ட் வேலி போன்ற இடங்களில் கேரள வனத்துறையே சிறந்த தங்குமிடங்களை ஏற்பாடு செய்து காட்டுக்குள் கூட்டிச்செல்கிறார்கள். இணையத்தில் அவற்றை தேடிக் கண்டடையலாம். மலைப்பயணம் போகவேண்டும் என்று கோரி சிறப்பு அனுமதி பெற வேண்டும். கேரளத்தின் காடுகள் மிக அழகானவை, ஆபத்தானவை என்றாலும் கூட.
ஜெ
***
ஜெ..
பயணம் எனக்கு இப்போது பெரும்பாலும் அலுவலகப் பயணமே. சீனம் சென்று வந்தேன். அந்தப் பயணத்தில் என்னுள் நிரம்பியது சீன தேசத்தின் உணவு மற்றும் சாலைகளே. சீன உணவைப் பற்றிய ஒரு சரியான புரிதல் ஏற்பட்டது. பயணங்களின் போது கிடைக்கும் நேரம் என்னை நானே மறுபரிசீலனை செய்துகொள்ள உதவும் வாய்ப்பாகவே கருதுகிறேன். அந்த வெளிகள் என்னை எனது வழக்கமான கூண்டுக்குள் இருந்து விடுவித்து, எனது வாழ்க்கையின் நோக்கங்களை இதுவரை பார்த்திராத கோணத்திலிருந்து பார்க்க வைக்கின்றன. பாரிஸுக்குச் சென்ற போது, Eiffel Tower விட டயானா மரித்துப் போன அந்தச் சாலையில் வைக்கப் பட்டிருந்த பூங்கொத்துக்கள் என்னை மிகவும் ஈர்த்தன. டயானா என்னும் அந்த cinderalla வை நினைவுக்குக் கொண்டு வந்து என்னை அவற்றுள் நீணட நேரம் மூழ்கடித்தன.
ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் சுற்றுலாத் தலங்கள் மனித அகங்காரம் (Eiffel tower) அல்லது அறியாமையையே(great wall of china) நினைவுறுத்துகின்றன. அவற்றை விட சாலையில் தென்படும் மனிதர்கள், நம்மிடம் நட்புக் காட்டும் முகம் தெரியாத மனிதர்கள், மனிதக் கரம் படாத இயற்கையின் தரிசனங்கள் மிக அழகாக இருக்கின்றன. ஒவ்வொரு ஊரிலும் ஓரிரு தினங்கள் தூங்கி எழுந்தால்தான் அவற்றோடு உறவு கொள்வது போல் உணர்கிறேன்.
வாழ்த்துக்கள். உங்களுடன் வரலாம் என்ற ஆசை இருந்தாலும், நான் ஒரு சிறந்த சக பயணி அல்ல என்பதால், உங்கள் எழுத்துகளோடு பயணிப்பதே சரி. எனினும், அணில் போல் உதவிகள் ஏதும் சென்னையில் தேவையெனில் சொல்லுங்கள் –
அன்புடன் பாலா
இந்திய சுற்றுப்பயணம்:கடிதங்கள்