நமது கலை நமது இலக்கியம்

h

ஜெ,

நம்முடைய கலை மரபின் உச்சமென்று நாம் மதிக்கக் கூடிய படைப்புகளுக்கு மட்டுமே உரிய தனித் தன்மை என்பது மகத்தான தரிசனமும் அதை வெளிபடுத்தும் கவித்துவ வெளிப்பாடும், அதை நிலை நிறுத்தும் தத்துவ அடித்தளமும் இவை அனைத்தும் சரியாக ஒருங்கமைந்து வெளிப்படும் கலைத் திறனும் ஒரே படைப்பில் வெளியாவது.

மேற்கத்திய நவீனத்துவ மனமும் அதை அப்படியே இங்கே பிரதி செய்யும் கலைஞர்களும் பெரும்பாலும் முயல்வது இவை அனைத்தையும் அறுத்து ஒவ்வொன்றிலும் எங்கே இருக்கிறது உயிர் என்று தேடுவதைப் போலவே இயங்குகிறார்கள். இந்த செயற்பாட்டில் உயிரே அற்று போய்விட்ட, வெறும் உத்திகளையே கலை என்று படைக்கும் சூழல் நிலவுகிறது.

இவற்றுக்கு நடுவே தஞ்சையின் நடராஜரையும், கைலாச நாதரின் அம்மையப்பனையும், ராவணன் கைலாயத்தை உயர்த்தும் சிற்பத்தையும், கோனார்க்கின் ரதக் கோவிலையும் செதுக்கிய ஒருவரை நேரில் சந்திப்பது போல இருக்கிறது இன்று உங்களுடன் உரையாடலில் இருப்பது.

வெண்முரசிற்கு முன், குறிப்பாக நீலத்திற்கு முன்பு இது சாத்தியமா என்று கேட்டுக் கொண்டிருந்தால் அந்த தரத்தில் இன்றைய வாழ்வைப் பேசும் ஒரு படைப்பு என்பது சாத்தியம் இல்லையோ என்றே எண்ணி இருப்பேன். நீங்கள் அதை செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

கண்ணெதிரே ஒரு மகத்தான படைப்பு ஹொய்சால, சோழ ஆலயங்களில் ஓன்று கட்டி எழுப்பப் பட்டு வருவதைப் போல இருக்கிறது.

தமிழின் திணை மரபையும், வடக்கிசை மரபின் ராக ராகினி வகைபாட்டையும் , பரத நாட்டிய மரபின் பாவனைகளையும், ராக மாலாவின் வண்ணங்களையும் உள்ளடக்கி ஒற்றை பெரும் படைப்பாக உருவாகி வருகிறது நீலம். ஒரு நாவலே பெரும் படிமமாகி இருக்கிறது.

ஒரு பண்பாட்டின் மொத்த கலை, ஞான, கவித்துவ, தத்துவ தரிசனங்களை ஒற்றை சரடில் கோர்த்து எடுத்து விட முடியுமா என்ன?
அதை செய்து முடித்திருக்கிறீர்கள். இந்தக் கடிதம் நீலத்தின் நுட்பங்களை சிலாகிக்க அல்ல, அவற்றை விரித்து வாசிக்க காலங்கள் ஆகும். பேலூரிலோ, பாதாமியிலோ உள்ள சிற்பங்களை மொத்தமாக பார்த்து முடித்தவர்கள் இருக்கக் கூடுமா என்ன?

இப்பொழுது அப்படி ஒரு ஆலயத்தை பார்க்கும் போது எழும் முதல் வியப்பொலியான “ஹா” தான் இந்தக் கடிதம்.

கண்ணன் இன்று இங்கே வரக் கூடுமெனில் உங்களுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்திருப்பான்.

மணிகண்டன்

8

அன்புள்ள ஜெ சார்

நான் பலமுறை நினைத்ததுண்டு. எனக்கு பிடித்தமான பாடகர் உஸ்தாத் படே குலாம் அலிகான், பண்டிட் டி.வி.பாலுஸகர். இப்போது குண்டேச்சா சகோதரர்கள். இசையைக் கேட்கும்போது இந்த இசை என்பது முக்கியமாக இந்தியத்தன்மை [பாரதத் தன்மை என்று சொல்லவேண்டுமோ?] கொண்டது என நினைப்பேன்.முழுக்கமுழுக்க நம்முடைய சென்ஸிலிபிலிட்டி சார்ந்தது. நம்முடைய மரபில் உருவாகிவந்து நம்முடையதாக நிற்பது. மேற்கே உள்ள ஒரு அசலான ரசிகனுக்கு இதைத்தான் நாம் முன்வைக்கமுடியும். அவன் கொஞ்சம் முயற்சி எடுத்தால்தான் இங்கே வரவும் முடியும்

ஆனால இலக்கியத்திலே மட்டும் ஏன் இது சாத்தியமாக இல்லை. மிகச்சில நூல்களையே அப்படி அசலான இந்தியப் படைப்பு என்று சொல்லமுடியும். பாதேர் பாஞ்சாலி, நீல்கண்டபறவையைத் தேடி. தமிழில் லா.ச.ரா. இங்கே பெரும்பாலும் எல்லா எழுத்துமே வெஸ்டர்ன் தான். வெஸ்டர்ன் மாஸ்டர்களை வாசிக்க வாசிக்க மௌனி, நகுலன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் எல்லாரும் அதன் துளிகள் என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது

ஆனால் ஒரிஜினாலிட்டி இங்கே இசையில் இருக்கிறதே. இங்கே சஞ்சய், டி.எம்.கிருஷ்ணா இருவருமே இந்தியக்கலைஞர்கள்தான்.ஏன் எழுத்து எல்லாமே வெஸ்டர்ன் மோட் கொண்டதாக இருக்கிறது. அந்த எண்ணம் என்னை குழப்பிக்கொண்டே இருந்திருக்கிறது.

அதை நான் விஷ்ணுபுரம் வாசித்தபோது உணர்ந்தேன். அது இந்தியத்தன்மை கொண்டது. இந்தியமனம்தான் அதை முழுதாக உள்வாங்கமுடியும். அதை உள்வாங்கினால் இந்தியாவை உள்வாங்குவதுபோல.அதன்பிறகு கொற்றவை. அதன்பிறகு வெண்முரசு. அதில் நீலம் உச்சம். ஒரு தூய்மையான ஆலாபனை போல. அதை நீங்களே எழுதியிருந்தீர்கள். உஸ்தாதின் ஆலாபனையை சட்டென்று கேட்பவர்கள் இது என்ன மிருகத்தின் சத்தம் என்று கேட்டுவிடுவார்கள். அந்த இசையை அறிந்தவர்களுக்கு அது அழகின் ஒலிவடிவம்

நீலம் அப்படித்தான். ஒரு மாஸ்டர்பீஸ்

ஜெயராமன்

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

மழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி


வியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்

முந்தைய கட்டுரைசத்யார்த்தி- அமெரிக்கா- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇலக்கியமும் நோபலும்