அத்வைதம் ஒரு விவாதம்

கசிரங்கா ஞானசபையில் அத்வைதத்தை நிலைநாட்டிய பேரறிஞரும் கவிஞரும் கலை விமரிசகருமான டாக்டர். யதீந்திரநாத் கோத்தாரி அவர்களுக்கு கொல்லம் ஸ்ரீ நாராயண சத்குரு தர்ம சமாஜம் சார்பில் ஒரு வரவேற்பு அளிக்கவேண்டும் என்று தீர்மானமாகியது. தீர்மானத்தை தலைவர் முச்சுள்ளி கேசவன் முன்வைக்க துணைத்தலைவர் பெரும்பாடன் நீலகண்டன் ஆதரித்தமையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்பின் மூத்த உறுப்பினர் நரிமடையில் நாராயணன் வைத்தியர் ”இந்த கோத்தாரி என்பவன் என்ன ஆள்?” என்றார். கேசவன் ”நல்ல ஆள்தான்” என்றார். ”அப்படி ஒரே வார்த்தையில் சொல்லிவிடமுடியாதல்லவா? நல்ல ஆள் என்றான் அந்த நல்ல தன்மைகள் வந்த வழி என்று ஒன்று இருக்கவேண்டுமே?” என்றார் வைத்தியர்.

வைத்தியர் சொல்ல வந்ததை முச்சுள்ளி கேசவன் உடனே புரிந்துகொண்டார். நாராயணகுருவின் ஆணித்தரமான இரு உபதேசங்களை அவர்கள் பின்பற்றிவந்தார்கள். ‘ஒன்று கள்ளு செத்தக்கூடாது, விற்கக் கூடாது, குடிக்கக் கூடாது’ முச்சுள்ளி கேசவன் எப்போதுமே டீச்சர்ஸ் விஸ்கிதான். பெரும்பாடன் நீலகண்டனுக்கு அப்படி பிராண்ட் ஏதும் இல்லை. வாங்கிக்கொடுப்பவர்களின் தேர்வு அது. கள்ளை மட்டும் தொடமாட்டார். வைத்தியர் ஆயுர்வேத அரிஷ்டங்களில் நம்பிக்கை கொண்டவர். இரண்டாவது கட்டளையான ‘ஜாதி கேட்கக்கூடாது சொல்லக்கூடாது நினைக்கக் கூடாது’ என்ற சொற்களும் மீறமுடியாதவையே. ஆகவே பல்வெறு இடக்கரடக்கல்களும் நுண்சொற்களும் புழக்கத்தில் வந்திருந்தன. ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட ஒரு முகபாவனையுடன் எந்தச்சொல்லை பயன்படுத்தினாலும் பொருள் விளங்கும் என்ற அளவு வரை அவர்களின் நுண்ணுணர்வுகள் வளர்ச்சி கொண்டிருந்தன.

முச்சுள்ளி கேசவன் புன்னகையுடன் ”நான் அவரிடம் கேட்டேன். நம்முடைய கேள்வியை புரிந்துகொள்ள அவருக்குக் கொஞ்சம் தாமதமாகியது. கடைசியில் புரிந்துகொண்டார். அவருக்கு அப்படி ஒன்றும் பேதம் இல்லை, நாணுகுரு சொன்னதையே அவரும் சொன்னார். ஒருசாதி ஒருமதம் ஒருதெய்வம்…”என்று சொல்லி முடிப்பதற்குள் அவை கைதட்டியது. ”கோத்தாரன் யதீந்திரநாதன் நம்முடைய ஆள் என்று ஆன நிலையில் அவனுக்கு நாம் கம்பீரமான ஒரு வரவேற்பு கொடுப்பதில் தவறில்லை. மட்டுமல்ல அவனுக்கு அத்வைதமும் ஆயுர்வேதமும் தெரிந்திருக்கிறது…”என்றார் வைத்தியர். ”ஆயுர்வேதம் அவருக்கு தெரியுமா?”என்று ஒரு குரல் கேட்க வைத்தியர் திரும்பி ”ஆரடா அவன், சும்பன்? அத்வைதமும் ஆயுர்வேதமும் ஒன்றுதான்…”என்றார். குறிப்பிட்ட ஒரு வேர் கிடைக்கவில்லை என்றால் எந்த வேரையும் பதிலுக்குப் பயன்படுத்தலாம், அனைத்தும் ஒன்றே என்பதே வைத்தியரின் ஆயுர்வேத-அத்வைத அடிப்படை. பேதபுத்தியே அறியாமை. அறியாமையே நரகம்.

அறிவிப்பு கேரளகௌமுதியில் வெளியாகிய அன்றே கொல்லம் சட்டம்பி சுவாமிகள் தர்மசம்ஸ்தாபன சங்கம் தலைவர் ‘பிரசிடெண்ட்’ கொச்சு குஞ்ஞப்பன் நாயர் அவசரமாக கோமணத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டிருக்கும்போது செயலாலர் கங்காதரன் பிள்ளை வியர்வையுடன் ”உ·ப்!” என்று வந்துசேர்ந்தார். ”கொஞ்சம் சீக்கிரம் கிளம்புங்கள் ஆசானே….நான் வயிற்றிலெ தீயோடு வந்திருக்கிறேன்….” ‘பிரசிடெண்ட்’ கொச்சு குஞ்ஞப்பன் நாயர் கிட்டத்தட்ட பதிமூன்று அமைப்புகளின் தலைமைப்பொறுப்பில் இருந்தார். அவரைக் கண்டால் எந்த குருடனும் சுத்த நாயர் என்று சொல்லிவிட முடியும் என்பதே அதற்குக் காரணம். ”இருடே மக்களே…நல்ல நாயருக்கு லட்சணம் நாலு. தாரணம் நாலு. சிந்தை நாலு…தெரியுமாடே?”என்றார் ‘பிரசிடெண்ட்’ கொச்சு குஞ்ஞப்பன் நாயர். ”சொல்லுங்கள்”என்றான் கங்காதரன்பிள்ளை சலிப்புடன். எண்ணற்ற மேடைகளில் சொல்லிய அந்த விஷயத்தை ‘பிரசிடெண்ட்’ கொச்சு குஞ்ஞப்பன் நாயர் மீண்டும் சொல்லாமல் விடமாட்டார் என்று அவருக்கு தெரியும்.

தொந்தி, வழுக்கை,காதில்மயிர்,வெட்டுக்காயம் என்பவை லட்சணங்கள். தலைப்பாகை, மேல்துண்டு, வெற்றிலை, கோமணம் ஆகியவை தாரணங்கள்– பழங்காலத்தில் வேட்டி கட்டாயமல்ல. சாப்பாடு, ஸ்திரீசம்பந்தம்,கோர்ட், குடும்பபாரம்பரியப்பேச்சு ஆகியவை சிந்தனைகள்.’பிரசிடெண்ட்’ கொச்சு குஞ்ஞப்பன் நாயர் ”டே மோனே, இந்தக்கோமணம் நாயர்களுக்கு ஜென்மசொத்து. அந்தக்காலத்திலே மருமக்கத்தாயம் இருந்ததனாலே நாயர்களுக்கு சொத்துரிமை கிடையாது. அதாவது ஸ்தாவரம் இல்லை. ஜங்கமம் மட்டும்தான். அதை பத்திரமாக பாதுகாக்கத்தான் நாயர்கள் கோமணத்தைக் கண்டுபிடித்தார்கள்…” என்றார். நல்ல கதகளி காணும்போது நாயர்கள் அதை நுட்பமாக ரசிக்கும்திறன் கொண்டிருந்தார்கள் என்பதை ‘கோமணம் எடுத்து அவன் சாமரம் வீசி !’ என்ற ஓட்டன்துள்ளல் பாடல்வரியில் இருந்து அறிகிறோம்.

ஒருவழியாக ‘பிரசிடெண்ட்’ கொச்சு குஞ்ஞப்பன் நாயர் கிளம்பினார். நல்லநாயர் நாழிகைக்கு நாற்பதடிதான் எடுத்து வைக்கவேண்டும் என்று கணக்கு இருப்பதனால் நடை மெதுவாகத்தான். ‘மந்தகமனம்’ என்று சம்ஸ்கிருதம். காலில் மந்து ரோகம் இருப்பது உபரி காரணம். சட்டம்பி சுவாமிகள் தர்ம சம்ஸ்தாபன சங்க அலுவலகத்துக்கு வந்தபோது அங்கே கூடியிருந்தவர்கள் கொதிநிலையில் இருந்தார்கள். ‘பிரசிடெண்ட்’ கொச்சு குஞ்ஞப்பன் நாயர் அவர்களைக் கண்டதுமே மேலேபுரைக்கல் சங்கரன்நாயர் ஓடிவந்து உரக்க கூவினார் ”அத்வைதம் செத்துப்போச்சு பிரசிடெண்டே!! சோவன்மார் அதை புதைக்கப்போகிறார்கள்!”

‘பிரசிடெண்ட்’ கொச்சு குஞ்ஞப்பன் நாயர் சரியாகக் கேட்காமல் ”சஞ்சயன கர்மம் என்றைக்கு வைத்திருக்கிறார்கள்?”என்றார். இந்த கிழத்துக்கு எப்போதும் சாவுச்சடங்குச்சாப்பாடு நினைப்புதான் என்று எண்ணிக்கொண்ட கங்காதரன்பிள்ளை ”இது அத்வைதம் பிரசிடென்றே…. சட்டம்பி சுவாமிகள் சொன்ன தத்வசாஸ்திரம்..” என்றார். ”ஓ!” என்று சொன்ன ‘பிரசிடெண்ட்’ கொச்சு குஞ்ஞப்பன் நாயர் ”அத்வைதத்திலே சாவடியந்தரம் பற்றி என்ன சொல்லியிருக்கிறது? சஞ்சயன கர்மத்தை பத்தாம்நாள் நடத்துவதா இல்லை ஏழாம் நாளே நடத்திவிடலாமா?”என்றார்.

குசும்பன் என்று புகழ்பெற்ற திருவல்லபபுரம் பார்கவன் கர்த்தா தீவிரமாக ”..அத்வைதப்பிரகாரம் சஞ்சயனம் ஐந்தாம்நாள்தான். பகவத்கீதையிலே கிருஷ்ணபகவான் ”மாமகா பாண்டவாஞ்சைவ கிமகுர்வத சஞ்சய: ” என்றுதானே சொல்லியிருக்கிறார். அதாவது, பாண்டவர்கள் அஞ்சாம் நாள்தான் சஞ்சயனம் செய்தார்களாம்…” ‘பிரசிடெண்ட்’ கொச்சு குஞ்ஞப்பன் நாயர் அப்படியே நின்று ”ஓகோ?” என்றார். ”ஆனா பாலடைப்பிரதமன் விளம்பிய பிறகுதான் மோருக்குச் சோறு போடவேண்டும் என்று சங்கரர் அடித்துச் சொல்கிறார்!” ‘பிரசிடெண்ட்’ கொச்சு குஞ்ஞப்பன் நாயர் மகிழ்ந்து சிரித்து, ”நான் சொன்னேனே? அவன் நம்பூதிரியாக்கும். சாப்பாட்டைப்பற்றி கடைசி வார்த்தையை சொல்ல ஒரு நம்பூதிரியால் மட்டும்தான் முடியும். யோக்யன்,பரம யோக்யன்!”என்று மகிழ்ந்துகொண்டார்.

சபை கூடியது. ‘பிரசிடெண்ட்’ கொச்சு குஞ்ஞப்பன் நாயர் அமர்ந்து கோமணத்தை சற்றே இளக்கிவிட்டு பலத்த ஏப்பம் விட்டு ”வாயு….”என்று பக்கத்திலிருப்பவர்களிடம் சொன்னார்.நல்ல நாயர்களுக்கு கண்டிப்பாக வாயுப்பிரச்சினை இருக்கும். இலைபோட்டு உண்டால் இல்லாமலிருக்குமா என்ன? நாயர் மகாத்மியம் வாழ்ந்த பழைய காலத்தில் நாயர்களுக்கு இதற்காகவே இன்னொரு துளை இருந்ததாக சொல்லப்படுவதில் சற்றே மிகை இருக்கலாம், ஆனால் புராணத்த்தில் அனுமன்,பீமன் போன்றவர்கள் வாயுபுத்திரர்கள் என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறார்கள்? உடனே எல்லாரும் ஏப்பங்கள் விட்டு அவரவர் வாயுக்களின் கலவைவிகிதாச்சாரம் பற்றிபேசியபின் சிங்ஙம்பள்ளி ஸ்ரீதரன் நாயர் மெல்ல விஷயத்துக்கு வந்தார். அவரை ஸ்திரீதரன் நாயர் என்று சொல்வதுண்டு. மெல்லிய குரல். முலைகளும் உண்டு.

”அப்போ நாம் என்ன செய்யப்போகிறோம்? யதீந்திரநாதன் வந்து அத்வைதத்தைப்பற்றி பேசிவிட்டுப்போனால் நாம் பிறகு எந்த முகத்தை வைத்துக்கொண்டு கொல்லத்தில் வாழ்வது? ஈழவர்கள் நம்மைப்பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரிக்க மாட்டார்களா?” என்றார் சிங்ஙம்பள்ளி ஸ்ரீதரன் நாயர். ”இப்போதே சிரிக்கத்தானே செய்கிறார்கள் சிங்ஙம்பள்ளியே?”என்று ஒரு குரல் கேட்டது.”தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாம்”என்றார் ‘பிரசிடெண்ட்’ கொச்சு குஞ்ஞப்பன் நாயர்.

”யதீந்திரநாதா முட்டாளா, நின்னெ ஞங்கள் எடுத்தோளாம்’ என்று ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினால் என்ன?” என்றார் தோழர் ராமச்சந்திரன் நாயர். ”அது கடைசியாக. வேறு வழி ஏதாவது பார்ப்போம்”. அச்சுதக்குறுப்பு ”கோத்தாரி என்று சொன்னால் வட இந்தியன்தானே? பண்டு என் பாட்டியை ஒரு வட இந்தியன் சம்பந்தம் செய்திருக்கிறார். அவன் ஒரு மகாராஜா. ஓலை இருக்கிறது?”என்றார். கொஞ்சநேர அமைதிக்குப் பின் ”என்ன ஓலை?”என்றார் சாலூர் ராகவன் தம்பி. ”காதிலோலை[2]தான். அந்த வடக்கன் வாங்கிக் கொடுத்தது. பொன் என்று சொல்லி கொடுத்திருக்கிறான். ஆனால் செம்பு”என்றார் அச்சுதக்குறுப்பு.

”என்னுடைய முப்பாட்டியை முன்பு மூலம்திருநாள் மகாராஜாவின் மருமகனின் தம்பியின் மாமன் சம்பந்தம் செய்திருந்தபோது இப்படித்தான்…”என்று கேசவன் தம்பி ஆரம்பித்தபோது ”சம்பந்தகாரியங்களைப் பேச நாம் இங்கே வரவில்லை…”என்றார் தலைவர். ”பிரசிடெண்டே எந்தச் சடங்கு என்றாலும் இந்தமுறை கண்டிப்பாக கடலைப்பாயசம் வேண்டாம். போனதடவை தேங்காய்ப்பாலில் கடலை இழையவில்லை” என்றார் கருணாகரன்நாயர்.

”பொட்டுக்கடலையைப்போட்டு வெல்லம்காய்ச்சி ஊற்றி ஒரு பாயசம் செய்வார்கள். அதிலே வாழைப்பழம் போட்டு பிசைந்து சாப்பிடலாம்”என்றார் சிவகுருநாதபிள்ளை. அவரது முன்னோர்கள் தென்காசியிலிருந்து வந்து நாயருலகில் கலந்தவர்கள். ”அது அங்கே பாண்டியிலே. நல்ல நாயர் பொட்டுக்கடலையை பாயசத்திலே போடுவானா ?” என்றார் சதானந்தன். கங்காதரன் பிள்ளை ”சம்பந்தத்தைவிட்டா சாப்பாடு….சேச்சே…என்றைக்குதான் நாம் திருந்துவது? அத்வைதத்தைப்பற்றி நாம் பேசவந்தோம்…அதைப்பற்றி சொல்லுங்கள்” என்று அதட்டினார்.

சற்றுநேரம் ஆழமான அமைதி நிலவியது. அதன்பின் பார்கவன்பிள்ளை தன் குடும்பத்தின் கோர்ட் வழக்கு பற்றி ஏதோ சொல்ல பேச்சு அங்கே திரும்பி குமாரபிள்ளையின் பாட்டா செய்த அடிதடிகளைப்பற்றி விளக்கி மீண்டும் சாப்பாட்டில் வந்து நின்றது. மூன்றரை மணிநேர விரிவான சர்ச்சைக்குப் பின்னர் பருப்புவடையும் சாயாவும் அருந்தி அடுத்த கூட்டத்தில் முடிவெடுக்கலாம் என்று ஏகமனதாக முடிவெடுத்து அவர்கள் பிரிந்தார்கள். செல்லும்வழியில் பார்கவன்பிள்ளை ”இந்த கோத்தாரியை நாமே கூப்பிட்டு ஒரு வரவேற்பு கொடுத்தால் என்ன?”என்றார். கங்காதரன் பிள்ளை அப்படியே திகைத்து நின்றுவிட்டார். என்ன ஒரு அருமையான எண்ணம்! இது ஏன் தோன்றாமல் போயிற்று?

உடனடியாக தீர்மானம் எடுக்கப்பட்டு பிரசிடெண்ட் ஆணையின்படி கங்காதரன் பிள்ளை அலஹாபாத்துக்குகிளம்பினார். கோத்தாரியை சந்தித்து விழாவுக்கு அழைத்தார். ஆனால் அவர் நாடெங்கும் நாள்தோறும் பாராட்டப்பட்டுக் கொண்டிருந்தமையால் நாள் இல்லை. ஏற்கனவே கொடுத்த ஒரேநாள்தான் கொல்லத்திற்கு. அதுவும் காலையில் எர்ணாகுளத்தில் ஒரு பாராட்டுக்கூட்டம் முடிந்து காரில் மாலையில் வந்து சேர்ந்துபேசிவிட்டு உடனே கிளம்பி திருவனந்தபுரம்போய் மறுநாள் காலையில் மகாராஜாவை பார்க்கவேண்டும்.

வேறுவழியில்லாமல் இருதரப்பும் இணைந்தே வரவேற்பை நிகழ்த்துவது என்று முடிவயிற்று. கொல்லம் அமிர்தா கலையரங்கில் மாலை ஏழுமணிக்கு கலாச்சார அமைச்சர் கெ.வி.தோமா தலைமையில் விழா. கோத்தாரி கிளம்பிவிட்டார் என்று தகவல் கிடைத்தது. அரங்கமே பரபரத்தது. வழக்கம்போல ‘பிரசிடெண்ட்’ கொச்சு குஞ்ஞப்பன் நாயர் தலைமை. சமநிலைக்காக நரிமடையில் நாராயணன் வைத்தியர் முன்னிலை. கங்காதரன் நாயர் வரவேற்புரை. அமைச்சர் வரவேற்புரை. ‘நாராயண தர்மகாகளம்’ ஆசிரியர் சிவானந்தன் தத்துவப்பேருரை. ‘ஞானமேரு’ குஞ்ஞன்பிள்ளை இன்னொரு வரவேற்புப் பேருரை. இரண்டு அத்வைத முரசுகள் அதன்பின் கோத்தாரி ஏற்புரை.

கே.வி.தோமா செல் போனில் பேசியபடியே வந்து செல்போனில்பேசியபடியே அனைவரையும் வணங்கிச் சிரித்து செல்போனில்பேசியபடியே சீ குடித்து செல்போனில்பேசியபடியே மேடை ஏறி அமர்ந்து செல்போனில்பேசியபடியே காத்திருந்தபோது கோத்தாரி ஆறடி உயர உடலில் மிகப்பெரிய பட்டு ஜிப்பாவும் மார்புவரை வெண்தாடியும் பிடரியில் வழிந்த வெண்மயிரும் சிரிப்புமாக கும்பிட்டபடியேயே வரவும் செல்போனில்பேசியபடியே எழுந்து செல்போனில்பேசியபடியே வணங்கினார். கங்காதரன் பிள்ளை மைக்கருகே வந்து காசிரங்கா காட்டில் நடந்த விவாதத்தில் அத்வைதம் வெற்றிமுரசு கொட்டுவதற்குக் காரணமாக அமைந்த டாக்டர். யதீந்திரநாத் கோத்தாரி அவர்களை பாராட்டியே தீர வேண்டும் என்று கொல்லத்தை சேர்ந்த இரு அமைப்புகளும் ஏன் ஒரே மனதாக முடிவெடுக்க நேர்ந்தது என்று விளக்கி அவரை வரவேற்றார்.

தலைவர் ‘பிரசிடெண்ட்’ கொச்சு குஞ்ஞப்பன் நாயர் அத்வைதம் சட்டம்பிசாமிகள் நாயர்களுக்கு கொடுத்துவிட்டுப்போன குலச்சொத்து என்று சொல்லி நரிமடையில் நாராயணன் வைத்தியர் அவர்களைப் பார்த்த போது சபையில் மென்சிரிப்பு ஒலித்தது. தன்னுடைய தறவாட்டு வீட்டில் அந்தக்காலத்தில் அத்வைதத்துக்காகவே ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது என்று சொன்னதோடு நிற்காமல் அத்வைதம் உடம்புக்கு மிகவும் நல்லது, புத்துணர்ச்சியும் உத்வேகமும் அளிப்பது என்று அவர் சொன்னபோது சபையில் சிறிய குழப்பம் நிலவியது உண்மை. இளைஞர்கள் மட்டுமல்லாமல் முதியவர்களும் அத்வைதத்தில் தயக்கமில்லாமல் ஈடுபடவேண்டும் என்று அவர் சொன்னபோது தெளிவு உருவானது. கூட்டத்துக்கு சற்றுமுன்னால் ‘இரண்டும் ஒன்றாவதே அத்வைதம்’ என்று தலைவருக்கு விளக்கிய செயலாலர் கங்காதரன் பிள்ளை பின்னால் நின்று கண்ணீர் மல்கினார்.

முன்னிலை வகித்த நரிமடையில் நாராயணன் வைத்தியர் நாணுகுரு அத்வைதத்தை ஈழவர்களிடம் ஒப்படைத்தது அவர்கள் ஒத்தி பாட்டம் அடங்கல் ஈறாக சர்வ சுதந்திரத்துடன் அதை அனுபவிப்பதுடன் சந்ததிகளுக்கு கொடுக்கவோ விலையாதாரம் பதிக்கவோ செய்யும் உரிமையுடன் உரியமுறையில் தீர்வைகட்டி, இண்டாஸ் செய்து கைவசம் வைத்து பாத்தியதை கொள்ளவும் ஆகலாம் என்பதற்காகவே என்றும், மேலதிகமாக அதில் விளையும் எல்லா ஸ்தாவரங்களும் அவர்களுக்கு மட்டுமே உரியதாகும் என்றும் விளக்கமாகச் சொன்னார். அவரிடம் அத்வைதம் என்பது ‘எல்லாவற்றுக்கும் ஆதாரமாக நிற்கக் கூடியது’ என்று சொல்லப்பட்டிருந்தது.

கே.வி.தோமா செல்போனை அணைத்து பின்னால்நின்றவரிடம் கொடுத்து விட்டு மைக் முன்னல வந்து தன்னம்பிக்கை மிளிரும் சிரிப்புடன் அவையினரைப் பார்த்து புன்னகைசெய்தார். முகமன்களை முணுமுணுப்பாகச் சொன்னபின் உரத்த குரலில் ‘அத்வைதம் இந்தநாட்டின் தத்துவ சொத்து!”என்றார்.”…இந்த நாட்டின் கோடிக்கணக்கான ஏழைகளின், பட்டினிப்பாவங்களின் துயரை துடைக்கும் வழிமுறைதான் அத்வைதம். அவர்களுக்கு ஒருவேளை கஞ்சியாவது அளிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் உருவான சிந்தனை அது. உழைக்கும் மக்களுக்காக ஸ்ரீசங்கரர் உருவாக்கிய கோட்பாடு!. மார்க்ஸியமும் அத்வைதமும் இருகண்களைப்போன்றவை. நாராயணகுருவும் கார்ல்மார்க்ஸ¤ம் உடலும் தலையும் போல பிரிக்கமுடியாதவர்கள்” [கைதட்டல்] எங்கள் முதல்பேராசான் இ.எம்.எஸ்ஸின் பெயரும் சங்கரன் என்பது ரகசியமல்ல [நமட்டுச்சிரிப்புடன் அவையை நோக்குதல்] ஆகவே அத்வைதமும் எங்கள் செங்கொடிக்குக் கிழே நின்று இங்குலாப் சிந்தாபாத் என முழங்கும்!” [பலத்த கைதட்டல்]

அதன்பின் பேசவந்த ‘நாராயண தர்மகாகளம்’ ஆசிரியர் சிவானந்தன் நாராயணகுருவின் ‘தெய்வமே காத்துகொள்க நீ’ என்ற நற்றாயணகுருவின் பாடலை உரக்க கைகூப்பி பாடியபோது தலைவர் ‘பிரசிடெண்ட்’ கொச்சு குஞ்ஞப்பன் நாயர் தன் இடது காலைத்தூக்கி வலதுகால்மேல் போட்டு மேல்துண்டை முறுக்கி காதைக்குடைய ஆரம்பித்தார். நரிமடையில் நாராயணன் வைத்தியர் கைகூப்பி கண்மூடி பிரார்த்தனைசெய்தார். சிவானந்தன் வாழ்த்துரைக்குப் பின் நேரடியாகவே தத்துவத்துக்கு வந்தார்.

அவித்யை என்றால் என்ன? [ஸ்ரீவித்யையின் தங்கை என்று அவையில் ஒரு பின்குரல்] அத்யாரோபம் மூலம் நாம் பிரம்மத்தில் பிரபஞ்சத்தை ஏற்றிக் கூறுகிறோம். பரப்பிரம்மத்தை பிரபஞ்சமாக நமது ஞானத்தால் உருவகித்துக் கொள்கிறோம். அத்வைதத்தின்படி அனைத்து ஞானமும் உண்மையில் பிரம்மத்தை தவறாகப் புரிந்துகொள்ளச் செய்யும் அஞ்ஞானமே ஆகும். ஞானத்தை விலக்கினால் நீரில் பாசி விலகுவதுபோல தெளிந்த அடித்தளமாக உள்ள பிரம்மம் தெரியும். இதை பிரதிபிம்ப வாதம் என்று சொல்லலாம். நாம் பார்க்கும் எல்லாமே பிரம்மத்தின் தோற்றங்களே. நானும் பிரம்மம். தலைவரும் பிரம்மம். தலைவர் சுத்த பரப்பிரம்மம். அவர் மேல் நாம் தலைவர் பதவியை அத்யாரோபம் செய்திருக்கிறோம். இதுவே அவித்யை என்பது. [கைதட்டல்] அவித்யை விலகினால் துணி உருவப்பட்டு சுத்த துலாம்பரமான தலைவரை நாம் காணமுடியும் [பலத்த கைதட்டல்]

அசக்யாதி என்று இதை அத்வைதம் சொல்கிறது. இல்லாத ஒன்றை உள்ளதாக அறிவது. நம் அறிதல் மூலமே அனைத்தும் உருவாகி வருகின்றன, உள்ளதென நாம் அறிவதெல்லாமே நம்மால் நம் புலன்கள் மற்றும் உணர்வுகளுக்கு ஏற்ப திரித்து அறியப்படுபவையே. இங்கே நமக்கு தலைவர் அமர்ந்திருக்கிறார் என்று எண்ணுகிறோம். ஆனால் அவர் உண்மையில் இங்கே இல்லை. அது ஜடம். வெறும் ஜடத்தை ஆத்மாவாக எண்ணுவதும் ஆத்மாவை பரப்பிரம்மமாக எண்ணுவதும்தான் அசக்யாதி என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக நாற்பதடி தூரத்தில் வரும் நல்லநாயர் நம்பூதிரியின் சாயலைக் கொண்டிருப்பார் என்று ஒரு சொலவடை உண்டு. நெருங்கி வரும்தோறும் அவர் நாயராக ஆகி நம்மை கடந்துபோகும் போது வேறு பலவாக ஆகிறார். பரிணாமத்தின் எல்லா படிக்கட்டுகளையும் நாம் இவ்வாறு காணமுடிகிறது, இதை அத்வைதத்தில் விவர்த்த வாதம் என்கிறார்கள். அதவது உருமயக்க வாதம். தலைவரைப்பற்றி பேசுவதானால் அதை நாம் வியர்த்தவாதம் என்றும் சொல்லலாம் [கைதட்டல்]

அத்வைதம் நம்முடைய ஞானத்தின் சிகரம். அதை வைத்து நம்மால் எல்லாவித சிந்தனைகளையும் ஆற்றமுடியும். ஏன் கார் ரிப்பேர் கூட செய்யமுடியும் [பயங்கரமான கைதட்டல்] நானே மிக்ஸி ரிப்பேர் செய்து பார்த்திருக்கிறேன். அதை நாணுகுரு நமக்கெல்லாம் கற்பித்திருக்கிறார். அத்தகைய அத்வைதத்தை வைத்து யானையைஅடக்கம் செய்வதற்கான சாத்திரங்களை கோத்தாரி அவர்கள் உருவாக்கியது ஆச்சரியமல்ல. ஏன், யானைக்கு பதினாறாம் நாள் காடாத்து, நாற்பதாம் நாள் நீரூற்று, ஆண்டு முடிவு சிராத்தம் வருடம்தோறும் பலிதர்ப்பணம் எல்லாவற்றுக்கும் நாம் அத்வைதத்தையே பயன்படுத்த முடியும். வாழ்க அத்வைதம்.வாழ்க சங்கர பகவத் மாதர் வாழ்க நாணுகுரு. ”என்று சொல்லி ‘நாராயண தர்மகாகளம்’ ஆசிரியர் சிவானந்தன் அமைந்தார். அவர் அருகே வந்ததும் தலைவர் அவருக்கு கைகொடுத்து நெகிழ்ந்து நன்றிசொன்னார். ஒரு ஈழவர் தன்னை இந்த அளவுக்கு பொருட்படுத்திப் பாராட்டுவார் என்று அவரே எதிர்பார்க்கவில்லை.

நாலடி உயரமே இருந்த ‘ஞானமேரு’ குஞ்ஞன்பிள்ளை மைக்கை தாழ்த்தி வைத்தபின்னும்கூட எம்பி எம்பி பேசும் தன்மையை கொண்டிருந்தார். ஸ்பிரிங் குஞ்ஞன்பிள்ளை என்று அவருக்கு பெயர் உண்டு. அவர் சட்டம்பி ஸ்வாமிகளின் சுலோகம் ஒன்றை உரக்க பாடியபோது நரிமடை நாராயணன் வைத்தியர் ஏப்பம் விட்டு வாயருகே ஒருசில சொடக்குகள் போட்டார். ”சதசத் பேதஞானமே ஞானத்தின் அடிப்படை”என்றார் ‘ஞானமேரு’ குஞ்ஞன்பிள்ளை. சத் அசத் என்று இரண்டையும் பிரித்து அறியவேண்டும். சத்புருஷர்கள் சாத்வீக பாவம் கொண்டவர்கள். நமது தலைவரைப்போல. சத் ரூபம் என்றால் அதுதான். அதேசமயம் நமது நாட்டில் பல அசத்துக்கள்[3] நடமாடுகிறார்கள். அசத் என்ற சொல்லையே பிராமணர்கள் அஷடு என்றும் பிறதமிழர் அசடு என்றும் சொல்கிறார்கள். அசத்துக்கள் வைக்கவேண்டிய இடங்களில் வைக்கப்படவேண்டியவர்கள். அதற்காக நான் நாணுகுருவை குற்றம் சொல்லவில்லை. அவர் மகான்.

அனுபலப்தி பிரமாணம் என்பது பட்டமீமாம்ஸையின் அடிப்படையான ஒன்று. ஒன்று இல்லாவிட்டால் அதன் இல்லாமையை நாம் உடனடியாக உணர்கிறோமே. இப்போது இங்கே என் ஆருயிர் நண்பர் ‘நாராயண தர்மகாகளம்’ ஆசிரியர் சிவானந்தன் பேசியதே அனுலப்திக்கு சரியான உதாரணம். அவரை நாம் ஒரு சரியான பிரதிநிதியாகவே காணவேண்டும். அனுலப்தியை நாம் அவரைப்போன்றவர்களை எங்கே கண்டாலும் உணரலாம் [டேய்! டேய்!] நான் சாதாரணமாக ஒரு உதாரணம்தான் சொன்னேன் [உட்காருடா சோற்றுப்பொறுக்கி நாயரே] அவர் என் ஆருயிர் நண்பர். நாங்கள் ஒரே வகுப்பில் சேர்ந்து படித்தவர்கள். அப்போது அவர் வட்டக்குடுமி வைத்திருபபர். நாங்கள் அவரைக் கொட்டி என்று கூப்பிடுவோம். [அடிடா அவனை] பிரபஞ்சம் மாயையால் ஆனது என்றாலும் பிரம்மம் அதற்கான நிமித்திக காரணமாக நிலை நிற்கிறது. [உட்காருடா…உட்காருடா] இந்த கலவரத்துக்கு நிமித்திக காரணம் என்ன என்பதை நான் அறிவேன்.

ஒரு நாற்காலி வந்து ‘ஞானமேரு’ குஞ்ஞன்பிள்ளையின் பேச்சை நிறுத்தியது. தொடர்ந்து நாயர்களுக்கும் ஈழவர்களுக்கும் நடுவே தொன்று தொட்டு நடந்துவரும் வீரவிளையாட்டுகள் நடந்தன. தலைவர் ‘பிரசிடெண்ட்’ கொச்சு குஞ்ஞப்பன் நாயர் மேடையில் நின்று உரத்த குரலில் ”ஓதிரம் கடகம்…வலத்து சவிட்டி வலிஞ்š வெட்டி எட்டு முன் வச்சு எட்டு பின்வச்சு எடுத்தடிச்சு மலர்த்திக்கெட்டி நின்னு சுற்றி வந்நடிச்சு வைச்சடி எடுத்து அடிடா…டே அடிடா” என்று களரிப்பயற்றுக்கான வாய்த்தாரிகளைச் சொல்லி ஊக்கமூட்டினார். நரிமடையில்நாராயணன் வைத்தியரும் மேடையில் நின்றபடி ”சுரிதகத்தில் குத்து…கீழே அவனுடைய கீழ்மர்மத்தில் அப்படி…”என்று வர்மக்கலை நுட்பங்களை எடுத்தோதினார்

பதினொருபேர் சரிந்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லப்பட்டபின் மெல்லமெல்ல அமைதி நிலவியது. ஒருங்கிணைப்பாளரான கங்காதரன் பிள்ளை உரத்த குரலில் ”சேச்சே என்ன இது?நாமெல்லாம் மலையாளிகள். பூரண எழுத்தறிவு பெற்ற மக்கள். நம்மிடையே சண்டையா? வெட்கம்!” என்று கூவியபோது பலருக்கு பண்பாடு, வேட்டி ஆகியவற்றின் நினைவு வந்தது. அவை அமைந்தபின் யதீந்திர நாத் கோத்தாரியைக் காணவில்லை என்று அறிந்து தேடியபோது அவர் சரிந்துகிடந்த மேஜைக்குப் பின் நடுங்கிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஆறுதல் செய்யப்பட்டு சோடா கொடுக்கப்பட்டு மலையாளப் பண்பாட்டு வழிமுறைகள் சுருக்கமாக விளக்கப்பட்ட பின்னர் ஏற்புரை வழங்கும்படி கோரப்பட்டார்.

யதீந்திரநாத் கோத்தாரி ஏழெட்டுமுறை தாடியை நீவியபோது அவரில் மீண்டும் ஞானப்புன்னகை மிளிர ஆரம்பித்தது. நேரடியாகவே அவர் ஒரு சம்ஸ்கிருத சுலோகத்தை சொன்னார். கிலியடித்துப்போன ஈழவர்கள் நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டார்கள். சம்ஸ்கிருதம் நாயர்களில் வயகாராவின் விளைவை உருவாக்கும் என்பதை அறியாத யதீந்திரநாத் கோத்தாரி அந்தபரவசம் தன் ஞானத்தால் பிறந்தது என்று எண்ணி உற்சாகமடைந்து விரிவான பேருரைக்குள் புகுந்தார்.

அவரது பேச்சை மாத்ருப்பூமி கொல்லம் நிருபரான சதானந்தன்நாயர் அவருக்குப் புரிந்தவகையில் சுருக்கமாக இவ்வாறு மறுநாள் அச்சில் வரச்செய்திருந்தார். பாஸ்கரர் சொல்லும் பேதாபேதவாதம் என்றால் என்ன? பிரம்மமும் பிரபஞ்சமும் இரண்டேயாயினும் ஓர் உச்ச நிலையில் ஒன்றே. அந்த உச்சநிலை எப்போது வருகிறது? அந்த உச்சநிலையை முடிந்தவரை ஒத்திப்போடுவதில்தானே இன்பம் இருக்கிறது? அதையே யோகம் என்கிறோம். அதற்கும் ஒரு யோகம் வேண்டும் என்று பொருள்.

இதிலிருந்து நாம் அப்ரதக்சித்தி என்ற தத்துவம் பிறக்கிறது. மூன்றையும் பிரித்துப்பார்க்க முடியாது என்ற ஞானமே அது. பிரபஞ்சம் ஆத்மா பிரம்மம் மூன்றும் பிரித்துப்பார்க்க முடியாதபடி ஒன்றே. ஆனாலும் பிரம்மம் அப்படி பிரித்துப்பார்த்தலுக்கு அப்பாற்பட்டதாகும். பிற இரண்டும் பிரம்மம் செயல்படுவதற்கு துணை நிற்பவையானாலும் முக்கியமான செயல்பாடுகளில் அவை நுழைவதில்லை.

அர்த்தாபத்தி பிரமாணம் என்பது இல்லாத ஒன்றை நம் பிரக்ஞை உருவாக்கி அறிவதாகும். பிரபாகர மீமாஞ்சையில் இது ஒரு முக்கியக் கோட்பாடு. ஒன்றை பிறிதெனக் கண்டு இல்லாத ஒன்றை புதிதாக மனம் உருவாக்கிக் கொள்கிறது. ஆகவே ஞானத்தை நாம் அஞ்ஞானமாக மயங்குறோம். இல்லாத யானையை அடக்கம்செய்ய நாம் முற்பட்டமைக்கு காரணம் இதுவே. நான் செய்ததெல்லாம் இல்லாத யானையை அவர்களுக்கு தெளிவாகக் காட்டிக் கொடுத்து விளக்கியதுதான். ஐம்புலன்களும் மாயைகளே. சப்த ப்ரமாண ஸித்தாந்தம் இதிலிருந்தே தேவையாகிறது. அதாவது பிரத்யட்சம், அனுமானம் சுருதி என்ற மூன்று பிரமாணங்களில் முக்கியமானது சுருதி அல்லது முன்னறிவே. முன்னறிவென்பது ரிஷிகளால் சொல்லபட்ட ஆப்தவாக்கியங்களே. ரிஷிகள் தாடிவைத்திருப்பார்கள். [கைதட்டல்]

தலைவர் யதீந்திரநாத் கோத்தாரிக்கு மலர்மாலைபோட்டு வாழ்த்தினார். தொடர்ந்து வைத்தியரும் அவ்வாறே வாழ்த்தினார். அனைவரும் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். மாத்ருபூமியில் வந்த படத்தில் கோத்தாரி அருகே நின்ற எவரும் கேரள கௌமுதி யில் வந்த படத்தில் நிற்கவில்லை. இதில் நின்றவர்கள் அதில் நிற்கவில்லை. ஒரு செய்தியில் வெளியான ஒரு பெயர், ஒரு சொல் கூட அடுத்த செய்தியில் வெளியாகவில்லை. இரு செய்திகளுக்கு ஒரு நிகழ்ச்சி ஆதாரமாக இருப்பதே உண்மையான அத்வைதம் என்று வைத்தியர் மறுநாள் கொல்லம் ஸ்ரீ நாராயண சத்குரு தர்ம சமாஜம் படிப்பகத்தில் வைத்து விரிவாக விளக்கினார்.

குறிப்புகள்

1. சஞ்சயனம் : மரணச் சடங்கு

2.காதிலோலை. ஒரு வகை நகை. காதில்போடப்படுவது.பொன்னால் ஆனது

3. அசத்து. கேரளத்தில் ஒரு வசை. அசடு என்பதன் சம்ஸ்கிருத மூலம். அறிவிலி

முந்தைய கட்டுரைஞாநி இணையதளம்
அடுத்த கட்டுரைஇந்துத்துவம், மோதி:கடிதங்கள்