அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். நேரிடையாக விசயதுக்கு வருகிறேன், தற்போது வெளியாகி உள்ள ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தேன். செல்வராகவனின் இந்த முயற்சி, என்னை தடுமாற வைக்கிறது. அதுவும் அந்த பின்பாதி சோழ மன்னர் வாழ்க்கை, சரி உங்களுடன் அதை பற்றி கேட்க என்ன இருக்கிறது என்றால், படத்தின் பின் பகுதியில் காண்பிக்கப்பட்ட காட்சிகளில் பல, சோழ மன்னர்கள் வாழ்க்கை இருந்து எடுக்கப்பட்டது என்கிறார்கள். நான் பேசிய அநேகம் பேரால் அவற்றை புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கும் தான். மீண்டும் பார்க்க வேண்டும்.
அவற்றில் காட்டப்பட்ட அந்த வாழ்ந்து ஒடுங்கிய மக்களின் வாழ்க்கை. உணவுக்கு கஷ்டபட்டாலும், செம்மையாக இருந்த காலகட்ட வாழ்க்கையின் எச்சங்கள், போன்றவற்றிம் மூலம் அந்த வாழ்க்கை முறை அறிய இயலும். மிக நீண்ட தூரம் வந்துவிட்டோம், பாட்டனாரின் பெயர் தெரியாத இந்த தலைமுறைக்கு அவற்றை புரிந்து கொள்வது கடினமே, அவற்றை பற்றி இந்திய வாழ்க்கைமுறை அறிந்த உங்களை போன்றவர் எடுத்து சொல்லமுடியும் என்றே எண்ணுகிறேன்.
நீங்கள் தற்போது சினிமாவில் எழுதுகிறிர்கள், இந்த படத்துக்கும் விமர்சனம் எழுதும் யாரும் பின்பாதியை பற்றி எதுவும் சொல்ல இயலவில்லை. நண்பர்களோ தங்களுக்கு புரிந்ததை வைத்து, இந்த காட்சி இப்படி எடுத்திருக்கலாம் என்று சொல்லி போகிறார்கள். இந்த படத்தில் ஒரு நாவல் பல பக்கங்களில் விவரிக்க கூடிய விசயங்களை, சில நொடி காட்சிகள் கடந்து போவதாகவே படுகிறது. இவற்றில் எது கற்பனை, எவை வரலாற்று உண்மை, எவை உண்மையை ஒட்டி எடுக்கப்பட்டது, போன்ற பல கேள்விகள். எனக்கு தெரிந்த யாரிடம் கேட்பது?
காவல் கோட்டம் போன்ற நாவலுக்கு நீங்கள் கொடுத்த விமர்சனம் போல, இந்த மாதிரியான ஒரு சினிமாவையும் விமர்சிக்கலாம். இதை பற்றி விமர்சிப்பதை விட, அவற்றின் உட்கருத்துகளை எடுத்துரைத்தால், இன்னும் நிறைய வாசகர்களால் புரிந்து கொள்ள முடியும்.
நீங்கள் ஒருவேளை இந்த படம் பார்த்து இருந்தால், அந்த படத்தின் உண்மை உங்களை பாதித்து இருந்தால். எங்களுக்கு அதை பற்றி சொல்லலாமா? இல்லை, இந்த படம் அந்த அளவுக்கு எதையும் சொல்லவில்லை என்றாலும் சரிதான்.
கடித்தை வாசித்ததுக்கு நன்றி,
அன்புடன்,
மணி.
அன்புள்ள மணி
தொடர் பயணத்தில் இருந்தமையால் நான் இன்னமும் படத்தைப் பார்க்கவில்லை. என் நண்பர் சுகா [படித்துறை] அது மிக முக்கியமான ஒரு சோதனை முயற்சி, காட்சிப்படுத்தலில் ஒரு சாதனை என்று சொன்னார்.
பார்த்தபின்னர் எழுதுகிறேன்
ஜெ
மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு ,
வணக்கம். நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன். என்னை பெரிதும் ஈர்ப்பது உங்களுடைய இந்திய வரலாறு சார்ந்த பதிவுகள் . சென்ற வாரம் “ஆயிரத்தில் ஒருவன் ” படம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது குறிப்பாக இரண்டாம் பகுதி. படம் முடிந்ததும் எனக்குள் ஒரு சிறு எண்ணம். ” தமிழ் வரலாற்றைப் பற்றிப் படிக்கவேண்டும் ! ” . ஆதலால் தமிழ் நாட்டின் வரலாற்று புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கண்டிப்பா தமிழ் வரலாற்றினை படித்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் சில பல சிறந்த புத்தகங்களின் பெயர்களை சொல்லுமாறு வேண்டுகிறேன்.
நன்றி ,
பிரவின் சி
அன்புள்ள பிரவீண்,
உண்மையில் நீங்கள் சொன்னபின்னரே அதைப்பற்றி யோசித்தேன். தமிழக வரலாற்றை கச்சிதமாக ஒரு பொதுவாசகனுக்கு அறிமுகம் செய்யக்கூடிய நல்ல நூல்கள் இல்லை. பாடப்புத்தக வடிவங்களே உள்ளன. தமிழ் வரலாற்றை எழுத்துத் திறமை கொண்ட எவரும் எழுதவில்லை என்றே சொல்லலாம் — ஆய்வாளார்களே எழுதியிருக்கிறார்கள்
என் வரையில் நான் சிபாரிசு செய்யக்கூடிய நூல் கே.கே.பிள்ளை எழுதிய ‘தென்னிந்திய வரலாறு’ சுருக்கமானது.சரளமானது. தமிழக வரலாற்றை தென்னிந்திய வரலாற்றில் இருந்து பிரித்து வாசிக்கவும் முடியாது. குறிப்பாக பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர்
ஜெ