நஸ்ரானி

ஜெ,

அம்மாவன் வாசித்தேன். அதில் ஒரு சந்தேகம். இக்கா பிரியப்பெட்ட இக்கா நாயர்களைப்பற்றி உயர்வாகச் சொன்னபோது தேவையில்லாமல் ஏன் நஸ்ரானிகள் சந்தோஷப்படவேண்டும்?

கோபி

அன்புள்ள கோபி

முன்பு ஒரு எம்.டி அம்மாவன் சொன்னாராம்.‘உங்கள் எல்லா படத்திலும் மம்மூட்டியே ஏன் நடிக்கிறார்? மோகன்லால் நடிக்கலாமே’ என்பது கேள்வி. ‘மம்மூட்டி அளவுக்கு மோகன்லாலுக்கு நாயர் லுக் இல்லை’ என்பது பதில்

கேரளத்தில் நாயர், நஸ்ரானி, மாப்ளா மூன்றும் ஒரே பொருள்தான். ஏதோ ஒருகாலகட்டத்தில் கடவுளின் கையிலிருந்து நழுவி விழுந்து மூன்றாக உடைந்துவிட்டது என்று சொல்வார்கள்

ஆனால் நஸ்ரானிகள் என்னும் கிறிஸ்தவர்களுக்கு அறிவுத்தாகம் கொஞ்சம் அதிகம். இரக்கமில்லாமல் அதை நாடுவதிலும் சிறந்தவர்கள். சிறந்த உதாரணம் என் நண்பரும் இசைவிமர்சகரும் குணச்சித்திர நடிகரும் ரகசியப்பாடகருமான ஷாஜி.

நஸ்ரானிகளின் அறிவுத்தாகம் பற்றி ஒரு ஜோக். இதுவும் வி.கெ.என்னுக்கு சார்த்திக்கொடுக்கப்பட்டதுதான். லோனப்பன் என்னும் நஸ்ரானி ஆஸ்பத்திரிக்குச் சென்றார். எல்லா நஸ்ரானிகளையும்போல அதிகாலையிலேயே எழுந்து குளித்து காதில் முடி துலங்க பீஃப் பிரை ஒரு பிளேட் காச்சி, மேலே ரண்டெண்ணம் வீசி’ தெளிவு பெற்றிருந்தார்.

நர்ஸ் மேரியை கண்டு லோனப்பனுக்கு ஐயம். அருகே சென்று கூர்ந்து இடதுமார்பின்மேல் அவளுடைய பெயர் பாட்ஜை பார்த்தார். கடும் சிந்தனை. குழப்பம். ஐயக்கொப்பளிப்பு. மீண்டும் கூர்ந்து வாசித்தார். எழுத்து எழுத்தாக. கடைசியில் ஐயத்தை கேட்டார்

‘மேரீன்னு பேரு இல்லியா?’

‘ஆமா’

மறுபக்கம் கையைக்காட்டி ‘அப்ப தங்கச்சி பேரு என்ன?’

முந்தைய கட்டுரைமாயை
அடுத்த கட்டுரைஅலைச் சிரிப்பு