என்.எம்

chairmanemirates

ஜெ

நா.மகாலிங்கம் அவர்களுக்கான அஞ்சலி வாசித்தேன்

என் எம் என்று அன்போடு அழைக்கப்படும் அவர் எனக்கு ஒரு தனிப்பட்ட வழிகாட்டி. இது வரை பார்த்ததில்லையெனினும். அவரது ஆப்பக்கூடல் சர்க்கரை ஆலைக்கு, கரும்பு அனுப்பும் ஒரு 2 ஏக்கர் விவசாயியின் மகனாகத்தான் அவரை முதலில் அறிந்து கொண்டது.

வளர்ந்த பின் அவரது சக்தி புத்தகமும் அவரது வள்ளலார் அபிமானமும். அரசியல்வாதியெனும் ஒரு முகமும் அவருக்கு உண்டு. 15 வருடங்கள் – 52 லிருந்து 67 வரை எம்.எல்.ஏ வாக இருந்திருக்கிறார். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் தந்தை.

அவரது இலக்கிய அறிமுகம் – நெஞ்சைத் தொட்டுவிட்டது. தெரியவேயில்லை. உங்களுக்கும் அவருக்கும் இவ்வளவு நெருக்கமான உறவு இருக்கும் எனத் தெரிந்திருக்க வில்லை. தெரிந்தபின்பு, இது இயல்புதானே எனத் தோன்றுகிறது.

நிச்சயமாக விஷ்ணுபுரம் அமைப்புக்கு அவரது உதவியை நாடியிருக்கலாம் ஜெ. அவரின் தொழில் மிகவும் நேர்மையான ஒன்றுதான். அவருக்கு பினாமிகள் தேவையில்லை. தெரிந்திருந்தால், வற்புறுத்தியிருப்பேன். சக்தி நிறுவனங்களின் ஸ்பான்ஸர்ஷிப் மிக மிகக் கௌரவமான ஒன்று. மற்றெந்த பன்னாட்டு நிறுவனத்தையும் விட. டாடா குழுமங்களுக்கு இணையானது என்று சொல்லுவேன்.

மண்ணைப் பண்படுத்திச் செய்யப் படும் வேளாண்மை போல, மனதைப் பண்படுத்திப் பெரு வாழ்வு வாழும் வித்தை கைவந்த பெரு மனிதர்.

பாலா

அன்புள்ள ஜெமோ

ஒரு பதினைந்து வருடம் முன்பு கோவையில் விடியல் பதிப்பகம் போயிருந்தபோது அங்கிருந்த ஒருவர் உங்களை ‘பொள்ளாச்சி மகாலிங்கத்தோட ஆள்’ என்று சொல்லித்தான் அறிமுகம் செய்தார். அங்கே இருந்த விடியல் சிவாவும் விஷ்ணுபுரம் நாவல் அவர் உதவியால்தான் வெளிவந்தது என்று சொல்லி அ.மார்க்ஸ் எழுதிய ஒரு கட்டுரையை காட்டினார். அதில் பொள்ளாச்சி மகாலிங்கம் உங்களை ஸ்பான்ஸர் செய்கிறார் என்று எழுதியிருந்தது. அதன்பிறகு பலர் அதை எழுதி நான் வாசித்திருக்கிறேன். உங்கள் சொல்புதிதே அவருடைய பத்திரிகைதான் என்றுகூட ஒரு சிற்றிதழில் எழுதியிருந்தார்கள்.

ஆனால் அவருக்கும் உங்களுக்கும் உண்மையாக நெருக்கம் இருந்ததை அஞ்சலிக்கட்டுரை வாசித்துத்தான் தெரிந்துகொண்டேன். வேறு எங்குமே நீங்கள் எழுதியதோ பேசியதோ இல்லை. [நான் அவருக்கு நீங்கள் சமர்ப்பணம் செய்த புத்தகத்தை வாசிக்கவில்லை] இப்போது நான் நீண்டதூரம் மானசீகமாக கடந்து வந்துவிட்டேன். அன்றைக்கு பெரிய ஆட்களாக நினைத்துப்பழகிய ஒவ்வொருவரும் எவ்வளவு அற்பமான சின்ன மனிதர்கள் என்று இப்போது தெளிவாகவே தெரிகிறது.யோசிக்கும்போது இந்தச்சில்லறைக்கும்பலுக்குப் பயந்துபோய் அவரைப்போன்ற பெரிய மனிதரிடம் நீங்கள் தூரத்தை உருவாக்கிக்கொண்டிருக்கவேண்டாமே என்றுதான் தோன்றுகிறது.

அவர் நல்லவிஷயங்களைச் செய்ய ஆர்வமாக இருந்தார். நீங்கள் என்ன செய்யவேண்டுமென்று தெரிந்தவர். அவருடன் நீங்கள் இருந்திருந்தால் நீங்கள் நினைத்த நிறையவிஷயங்களைச் செய்திருக்கமுடியும். ஒரு சக்தி அவார்ட் கூட ஏற்பாடு செய்து தமிழிலக்கியத்தின் முக்கியமான பலரை கௌரவித்திருக்கமுடியும்

உங்கள் நோக்கம்தான் முக்கியம். பொறாமைக்காரர்கள் எதுசெய்தாலும் எரிந்துகொண்டுதான் இருப்பார்கள். அது அவர்களுடைய மனநோய். அவர்களால் வெளியே வரமுடியது. நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதுதானே கடைசியில் வரலாற்றில் இருக்கும்?

சரவணக்குமார்

அன்புள்ள சரவணக்குமார்,

பலசமயம் நாம் நம்முடைய பொதுவாழ்க்கையில் உருவாகும் படிமம் பற்றிய கவனத்துடன் தான் இருக்கவேண்டியிருக்கிறது

நவீன இலக்கியத்துக்கும் தமிழாராய்ச்சிக்கும் கல்வெட்டு ஆராய்ச்சிக்கும் காந்திய ஆராய்ச்சிக்கும் என நான்கு மிகப்பெரிய விருதுகள் அளிக்கும் ஒரு அறக்கட்டளைபற்றி ஒருமுறை அவர் சொல்லியிருக்கிறார்

ஜெ

அன்புள்ள ஜெமோ

என்.எம் அவர்களுக்கு அஞ்சலி வாசித்தேன். அதில் கவுண்டர்களைப்பற்றிச் சொல்லியிருந்தது மனதை நெகிழவைத்தது. கவுண்டர்களுக்கு நிறைய தீயபண்புகளும் உண்டு. ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது அவர்களின் நல்ல பண்புகள். அதுவும் உண்மைதான். அந்த நல்ல பண்புகளே அவர்களை இத்தனைதூரம் உயர்த்திக்கொண்டுவந்தது

ஆனால் இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக இதெல்லாம் தேவையே இல்லை என்ற எண்ணம் வந்துகொண்டிருக்கிறது. கவுண்டர்களின் பணிவு துணிவு எல்லாம் வேலைக்காகாது நாமும் மற்றவர்களைப்போல ஆர்ப்பாட்டம் பண்ணி ஊருக்கு வெளிச்சம்போட்டு அற்பமாக இருக்கவேண்டும் என்ற என்ணம் பரவலாக உருவாகி வந்துகொண்டிருக்கிறது

அந்த சூழலில் கவுண்டர்களிலே நாயகர் போன்ற ஒருவரை உதாரணமாகக் காட்டி அதை வலியுறுத்திச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். அது உண்மை. இதுவரைக்கும் கொண்டுவந்த பண்புகள்தான் இனியும் கொண்டுபோகும். இன்றைய பொதுப்போக்கைக் கண்டு கோவணத்தை உருவி தலைப்பாகையாகக் கட்டும் அற்பத்தனம் நம்மை வீழ்த்தும். அதை அருமையாக உணரவைத்தது

என்.எம் உங்களை அழைக்க ரயில்நிலையம் வந்ததையும் அவரது பணிவையும் பற்றி எழுதியிருந்தீர்கள். தன் பெருந்தன்மையால் மனவிரிவால் என்னை தனக்கு இணையானவன் என்று ஒவ்வொருமுறையும் எண்ணவைத்த அந்த மாபெரும் பண்பைத்தான் இக்கணம் கண்ணீருடன் எண்ணிக்கொள்கிறேன். தலைவணங்குகிறேன் என்ற வரியை வாசித்ததும் கண்ணீர்விட்டேன்

என் எம் அவர்களுக்கு நிறைய அஞ்சலிகளும் கட்டுரைகளும் வரும். உங்களைப்போன்ற ஒரு எழுத்தாளர் பயன்கருதாத தொலைவில் இருந்து எழுதிய இந்த வரி என்றும் நிற்கும்

சுப்ரமணியன்

அன்புள்ள சுப்ரமணியன்

வெற்றி என்பது பொருளியல் வெற்றி மட்டும் அல்ல. அதுதான் கண்ணுக்குத்தெரியும். அந்த வெற்றியை நலம் பயக்கும் முறையில் பயன்படுத்திக்கொள்ளும்போதே வெற்றி பூரணமடைகிறது. அதைச் செய்தவர் அவர்

ஜெ

முந்தைய கட்டுரைவலியிலிருந்து தப்ப முடியாத தீவு
அடுத்த கட்டுரைவேலை – மேலும் ஒரு கடிதம்