மரபிலிருந்து நவீன எழுத்து

1111

அன்புள்ள ஜெ,

நீலம் பரவலாக அனைவருக்கும் பிடித்திருப்பது ஆச்சரியம் அளித்தது. அதன் நடையையும் அமைப்பையும் வாசித்தபோது தீவிர இலக்கியவாசகர்களுக்கு மட்டுமே உள்ளே நுழைய முடியும் என்றுதான் நினைத்தேன். அத்தனை செறிவானதும் பூடகமானதுமான எழுத்து. ஆனால் கடிதங்களை வாசித்தபிறகு ஆச்சரியம்தான்

நான் நீலம் நாவலை என் அம்மாவிடம் கொடுத்தேன். அம்மாவுக்கு பக்த விஜயம், பாகவதம் ரேஞ்சுதான். ஆனால் குந்தி இருந்து மூன்றுநாளில் கம்ப்யூட்டரிலேயே வாசித்துவிட்டார்கள். நல்லா இருக்குடா…அற்புதமா இருக்கு’ என்றார்கள்

பேசிப்பார்த்தால் பெரும்பாலும் அவர்களுக்குப்புரிந்திருக்கிறது. என்னைவிட சில நுட்பங்களை அதிகமாக எடுத்திருக்கிறார்கள். குறிப்பாக புராணம் சம்பந்தமான விஷயங்களை. என்னை விட அதிகமாகச் சொன்னார்கள். கிருஷ்ணன் ராதைக்குச் செய்த 16 உபச்சாரங்கள் வரும் வரியை வாசித்து என்ன புரிந்தது என்று கேட்டேன். ‘அதாண்டா சோடச உபச்சாரம்’ என்றார்கள். எல்லா கோயிலிலும் உண்டு என்றார்கள்

அதன்பிறகு ‘குருவாயூரிலே சோடச உபசாரத்திலே வெண்ணைகுடுக்கிறது, மயில்பீலி சாத்துறது, ஓடக்குழல் குடுக்கிறது, பூ குடுக்கிறது, பேருசொல்லி கூப்பிடுறது, நட்சத்திரம் காட்டுறது எல்லாம் உண்டு. அதைத்தான் ராதை அப்பவே அவனுக்குச் செஞ்சிட்டாளே’ என்றாள். எனக்கு பயங்கரமான ஆச்சரியம்.

அதை விட முக்கியமான விஷ்யம் அம்மா நீலத்தை பாட்டு என்றுதான் சொல்வார். அதுவும்தான் சரிதான் என்றுதான் தோன்றுகிறது. பாட்டு என்று நினைப்பதனால்தான் வரி வரிவரியாக வாசித்தார். கவிதையாக வாசித்ததனால் தான் அவரால் உள்ளே போகமுடிந்தது

நவீன இலக்கியங்களை வாசிக்கச்சொன்னால் உடனே புரியவில்லை என்று சொல்லிவிடுபவர்களை கவனித்திருக்கிறேன். அவர்கள் முயற்சி செய்வதே கிடையாது. ஒருபக்கம் இரண்டுபக்கம் வாசித்துவிட்டு மூடிவைத்துவிடுவார்கள். ‘புரியாம ஏன் எழுதணும்?’ என்று தர்க்கம் செய்வார்கள் .’எதையும் எளிமையா எழுதினாத்தான் நல்லது. ராமகிருஷ்ணர் கிட்ட இல்லாத எளிமையா?’ என்று அட்வைஸ் செய்வார்கள்.

ஆனால் நீலம் இப்படி புரிவதற்குக் காரணம் அதன் உள்ளடக்கம்தான். நவீன இலக்கியங்களில் நாம் பயன்படுத்தும் இமேஜ்களுக்கான அடிப்படைகளாக உள்ள ஆர்க்கிடைப்புகள் இங்கே நம்முடைய மரபில் உள்ளவை இல்லை. அவை நாம் ஐரோப்பிய இலக்கியத்திலே இருந்து எடுத்துக்கொள்பவை. ஆகவேதான் இங்குள்ள வாசகர்களுக்குப்புரிவதில்லை. அல்லது ரிலேட் ஆவதில்லை.

நீலம் போன்றநாவல்களில் உள்ள ஆர்க்கிடைப்புகள் தொன்மையானவை. அவற்றைஒட்டி எவ்வளவு படிமங்களை உருவாக்கினாலும் மக்கள் கூடவே வந்துவிடுகிறார்கள் என்று தோன்றியது.

ஐரோப்பியர்களுக்கு கிரேக்கத் தொன்மங்களும் அராமிக் தொன்மங்களும் இதேபோல அவர்களின் பழமையான பாரம்பரியத்தில் ஊறி ஆர்க்கிடைப்புகளாக உள்ளே இருக்கின்றன. அவற்றை அவர்கள் இதேபோல எளிமையாகப்புரிந்துகொள்கிறார்கள். நாம் அவற்றை வாசிக்கும்போது விக்கிப்பீடியாவைத் தொட்டுத்தொட்டு அல்லாடிக்கொண்டிருக்கிறோம்

ஓவியங்களையேகூட பார்க்கலாம். அவை மரபான தீம்களை எடுத்து எவ்வளவு புதுமையாக்கினாலும் நம்மவர்களிடம் தடை இல்லை. பலபேருடைய பூஜையறையில் பிள்ளையாரின் க்யூபிஸ ஓவியங்களை பார்த்திருக்கிறேன். நீங்கள் வெளியிடும் கிராஃபிக்ஸ் சிவன் ,துர்க்கை எல்லாமே அனைவருக்கும் பிடித்துத்தான் இருக்கின்றன இல்லையா?

சண்முகம்

2222
அன்புள்ள சண்முகம்

நீலம் பரவலாக வாசிக்கப்பட்டமைக்கு நீங்கள் சொல்வதும் ஒரு காரணம். ஆனால் அது மட்டும் அல்ல

விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் இருநாவல்களிலுமே மரபான ஆர்க்கிடைப்புகள் உள்ளன. விஷ்ணுபுரத்தை விரும்பிவாசித்தவர்கள் பின் தொடரும் நிழலின் குரலை வாசிக்கவில்லை. விஷ்ணுபுரம் நம்முடைய ஞானமரபில் அமைந்துள்ளது என்றும் அதற்குச்செலுத்தும் உழைப்புக்கான ‘பயன்’ உள்ளது என்றும் நினைத்தார்கள். ஆனால் பின் தொடரும் நிழலின் குரலில் உள்ள அரசியலுக்கு ஏன் அத்தனை உழைப்பைக் கொடுக்கவேண்டும் என்றார்கள்.

நீலம் நாவலை வாசிக்க பலர் பலமணிநேரம் செலவழித்திருக்கிறார்கள். ஏழெட்டுமுறைகூட வாசித்திருக்கிறார்கள். இன்னொரு நவீன நாவலை அப்படிக் கூர்ந்து வாசிக்கமாட்டார்கள். அதுபேசும் விஷயம் தங்களுக்குப் பயனற்றது என்ற எண்ணம்தான்

ஜெ

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

மழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி


வியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்

முந்தைய கட்டுரைஅசுரர்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 1