அன்புள்ள ஜெயமோகன், நான் பல முறை உங்கள் இணையதளத்தை படித்தாலும், இது தான் முதல் முறையாக எழுதுகிறேன். உங்களைப்பற்றி பல பேர் பலவிதமாக சொன்னாலும்(அண்மையில்), நான் உங்களை ஒரு அறிவுஜீவியாகத்தான் நினைக்கிறன். அந்த அளவு ஆழமான சிந்தனையும், அதை பிசிறின்றி அளிக்கும் விதமும். வாழ்கையை பற்றிய உங்களின் அனுமானங்கள் ஒரு வகையில் எனக்கு வழிகாட்டியிருக்கின்றன.
குடும்பம் மற்றும் குழந்தைகள் வாழ்வை சுவாரசியமாக ஆக்க உதவும் என்ற கருத்து எனக்கும் முன்னமே இருந்தாலும், உங்கள் எழுத்தில் காணும்போது ஒரு ஆறுதல். நான் ஒன்பதாம் வகுப்பு முதலே ஒரு குழப்ப மன நிலையில் இருந்துள்ளேன். அந்த வயதில் தான் எனக்கு நாம் என் வாழ்கிறோம், என்ன செய்கிறோம் என்ற எண்ணங்கள் மிகவும் தீவிரமாக தோன்ற ஆரம்பித்தன. உட்கார்ந்த இடத்திலேயே இந்த பிரபஞ்சத்தின் எல்லையில்லாத்தன்மையையும் என் சிறுமையையும் உணர்ந்த நாட்கள் மிகவும் அதிகம்.
ஆனால் படிப்பை என் தலையாய கடமை என்று எண்ணியதால் என்னை நான் படிப்பில் தீவிரமாக ஈடுபடுதிகொண்டேன்.ஆனால் கல்லூரி சென்றதும், மீண்டும் அந்த வெறுமை தாக்கியது. அங்கேயும், என் பெற்றோர் படும் அவதியை எண்ணி நான் படிப்பில் கவனம் செலுத்தினேன். நான்காவது வருடம், வேலை கிடைத்ததும் ஏற்பட்ட ஒரு வெறுமை என்னால் சொல்லி புரிய வைக்க முடியாதது. அப்போதும் ஒரு வழியாக நான் என்னை மேல்படிப்பின் வழி செலுத்திகொண்டேன். உலகத்தில் வெறும் இன்பம் (pleasure ) தான் இருக்கிறது, மகிழ்ச்சி, வாழ்வின் உண்மையை அறிந்த பூரிப்பு, ஞானம் எல்லாம் வெறும் பொய் என்று நானாகவே முடிவு எடுத்துக்கொண்டேன். அதன் நோக்கம் வெறும் படித்து பொருள் ஈட்டி என் பெற்றோருக்கு என் கடமையை ஆற்றவேண்டும் என்ற ஒரே நோக்கம் தான். அது எனக்கு அப்போது வசதியான தத்துவமாக இருந்தது.
காமம் என்பது ஒரு எட்டாம் வகுப்ருந்தே ஒரு தொடர்ந்த ஈடுபாடாக கூடவே இருந்து வந்துள்ளது. காமத்துக்கு அப்புறம் தான் தத்துவம் எல்லாம் என்றே இருந்துள்ளேன். ஒரு கணம் பிரபஞ்சத்தின் எல்லை என்னை மலைக்க வைத்தாலும், மறு கணமே காமம் என் கவனத்தை திசை திருப்பியது உண்டு. அதே சமயம், காமத்தை வெறுத்து ஒதுக்கிய நாட்களும் உண்டு. காமம் மற்றும் பெற்றோரின் வற்புறுத்துதல் ஆகியவை மீண்டும் என்னை திருமணத்தின் பக்கம் திருப்பியது. அப்போதும் நான் ஒரு சமரசம் தான் செய்து கொண்டேன். எனக்கு வேண்டிய படி ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்காமல், எல்லாம் ஒன்றுதான் என்ற அரைகுறை அணுகுமுறையில், பெற்றோர் சொல்படி ஒரு பெண்ணை மணமுடிந்தேன்.
இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லாமல் சென்ற வாழ்கை இப்போது கடினமாக ஆகி விட்டது. மனைவியின் அளவுக்கு மீறிய கோப குணத்தாலும் அதன் கூடவே சேர்ந்து கொள்ளும் அளவுக்கு மீறிய தாழ்வு உணர்ச்சி மற்றும் மறை சிந்தனைகளாலும், இதுவரை செய்த சமரசங்களை விட மிகப்பெரிய சமரசங்களை செய்து கொண்டுள்ளேன். அவள் சிறிய அளவில் ஒரு மனநோயாளியாகவும் இருக்கலாம். நான் நினைப்பதை சொல்வதே ஒரு potential வெடிகுண்டாக இருக்ககூடிய நிலைமையில் உள்ளேன். ஆனாலும் நான் போலி வாழ்வில் தேறி விட்டேன். ஒரு குழந்தையும் உண்டு. குழந்தையின் வசம் ஒரு பற்றுதலையும் உணர்கிறேன். சில சமயங்களில் இந்த வாழ்வை சுவாரசியமாக ஆக்க வேண்டிய உறவுகள் என்னை போன்ற ஆளுக்கு ஒத்துவராத ஒன்று என்றும் நினைப்பது உண்டு. அந்த சமயத்தில் நான் உங்களை காண்கிறேன். உங்கள் வரிகளை படிக்கிறேன். எனக்கு ஆறுதலாக உள்ளது. இது தான் சுவாரசியம் என்று சொல்லிக்கொள்கிறேன். என் மனைவியை மாற்றியும் வருகிறேன். மிக மெதுவாக.
உங்களை போல் ஒரு அறிவுஜீவி குடும்ப வாழ்வில் காட்டும் ஈடுபாடு எனக்கு ஒரு மிகப்பெரிய ஆதரவு. மனைவியின் இந்த நிலைமையால் பல நண்பர்களை இழந்து உள்ளேன். ஆனாலும் ஒரு குருட்டு நம்பிக்கை மற்றும் தீர்மானத்துடன் பயணித்துள்ளேன். முக்கியமான முடிவுகளில் யோசிக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டுள்ளேன். வாழ்வின் நோக்கம் மற்றும் தத்துவசிந்தனை போன்றவற்றை கொஞ்சமாவது என் பக்கம் வைத்துக்கொள்ள உதவுவது உங்கள் எழுத்து தான். நீங்கள் ஒரு பொக்கிஷம் எனக்கு. நிஜமாக.
அன்புடன்,
எஸ்
அன்புள்ள நண்பருக்கு,
உங்கள் மனநிலை குறித்த விவரணையை வாசித்தேன். அந்த மனநிலைகளில் நானும் இருந்திருக்கிறேன். பிரபஞ்சத்தில், வாழ்வில் நாம் உணரும் பிரம்மாண்டம் நம்மை அர்த்தமற்றவராக சிறுத்து மண்ணோடு மண்ணாக்கிவிடும். அந்நிலையில் எந்த உலகியல்செயல்பாட்டுக்கும் பொருளிருக்காது. எதுவுமே ஆழமான மனத்தூண்டலை அளிக்காது. அவிரதி என்று பதஞ்சலி யோகம் சொல்லும் மனநிலை அது
அந்த மனநிலையில் இருந்து நான் மீண்ட ஒரு நாளைப்பற்றி எழுதியிருக்கிறேன். தற்கொலையிந் முனையில் இருந்து எழுந்து வந்த நாள் அது. அதன்பின் நானே முடிவுசெய்துகொண்டேன், இனி வாழ்க்கையில் துயரப்பட மாட்டேன் என்று. இருத்தல் என்பதே பேரின்பம். உயிரோடிருத்தல். ஒவ்வொருநாளும். தூக்கம் விழிப்பு உணவு எல்லாமே…ஒவ்வொருகாலையும் மாலையும் கோடையும் பனியும்… ஒரு சுயப்பயிற்சி போல எல்லாவற்றையும் ரசிக்க என்னைப் பழக்கிக் கொண்டேன். மிக எளிய விஷயம் இது. இதை நான் ரசிக்கிறேந் என்று சொல்லிக்கொள்ளுங்கள் அதை ரசிக்க ஆரம்பிக்கலாம். மனித மனம் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல, மிக சாதாரணமாகப் பழக்கி எடுக்கக்கூடிய ஒன்று அது. பழக்கங்களால் ஆனது, சூழலை பிரதிபலிப்பது.
உங்கள் கடிதத்தில் இருந்து நான் புரிந்துகொண்டது உங்களிடம் இருந்த அவிரதியே பிரச்சினை என்று. உன் மேல் எனக்கு ஆர்வமில்லை என்ற பார்வையுடன் நீங்கள் ஒருவரைப் பார்த்தீர்கள் என்றால் அவர் உங்கள் மேல் வெறுப்பைக் கொட்ட ஆரம்பிப்பார். உங்களுக்குள் இருக்கும் அவிரதியை – விரக்தியை – இயற்கை உங்களுக்கு மேல் பிரதிபலித்துக்காட்டும்.
நான் எளிமைபப்டுத்தவில்லை. சகமனிதர்களைக் கையாள்வது அத்தனை எளிய விஷயம் அல்ல. மனிதர்களின் பேராசை, மூர்க்கம், வெறுப்பு, அறியாமை ஆகியவற்றை சந்திப்பதில் நாம் பெரிதாக ஏதும் செய்வதற்கு இல்லை. அது ஒருவகையில் நம்மை மீறிய நிகழ்வு. ஆனால் நாம் நம்மை பெரும்பாலும் சமநிலையில் வைத்துக்கொள்ளலாம்.
சமநிலை என்பதே என்னுடைய கொள்கை என எனக்கே நான் சொல்லிக்கொள்வேன். இங்குள்ள எதிலும் எனக்கு விலக்கம் இல்லை. என் ஒவ்வொருநாளும் எனக்கு உவப்பாக வேண்டும். ஒவ்வொன்றும் உவப்பாக வேண்டும். ஆனால் இவற்றை அவதானிக்கும் அளவுக்கு தூரமும் விலக்கமும் எனக்குத் தேவை. இதுவே என் வழி.
பிரபஞ்சம் மிகப்பெரியது, மனிதன் மிகச்சிறியவன் என்பது ஒரு கோணம். மிகச்சிறிய மனிதனுக்கு இந்த மிகப்பெரிய பிரபஞ்சம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பது இன்னொரு கோணம். நன் இரண்டாவது கோணத்தை தேர்வு செய்துகொண்டேன்
ஜெ
மறுபிரசுரம் முதர்பிரசுரம் Jan 19, 2010