அன்புள்ள ஜெ.மோ,
“குருவின் உறவு” பற்றிய உங்கள் கட்டுரையில் துறவு பற்றி நீங்கள் எழுதியிருப்பது சம்பந்தமாக ஒரு கேள்வி எழுகிறது. தன் பகவத் கீதை மொழி பெயர்ப்பின் முன்னுரையில் மகாகவி பாரதி இல்லறத்தின் வழியாகவும் ஞானம் அடையலாம் என்பது தனக்குப் பெரிய ஆறுதலாயிற்று என்று கொள்ளும் பெருமூச்சு என்னை எப்போதும் வியக்க வைக்கிறது. அந்தப் பெருமூச்சு ஏன்?
“ஒளி வகை ஒரு கோடி கண்டவர்” என்று பாரதி பற்றி தி.ந.ராமச்சந்திரன் கூறுவார். பாரதி ஞான அநுபூதி பெற்றவர் என்பது எத்தனை அளவு உண்மை? அல்லது கவிக்கற்பனை அவ்வாறு தோற்றத்தை உருவாக்கிவிட்டதா?
(“தக்கலை பீர் முகமது அப்பா ஒரு ஞானி அல்ல. அவர் வெறும் புலவர்தான்” என்று ஒருவர் என்னிடம் வாதாடினார். ஞானமடைந்த ஒருவர் குயவராகவோ மீனவராகவோ இருக்கலாம். ஆனால் அவர் கவிஞராக இருந்துவிட்டால் மட்டும் அவரது ஞானத்தை அது கேள்விக்குறி ஆக்கிவிடுமா? என்று அவரிடம் நான் கேட்டேன்)
(இக்கேள்வியை தங்கள் தளத்தில் போஸ்ட் செய்ய முயன்றேன். அதில் தமிழில் டைப் செய்ய இயலவில்லை. எனவே மின்-அஞ்சலிக்கிறேன்)
ரமீஸ் பிலாலி
தமிழ் விரிவுரையாளர்
ஜமால் முகமது கல்லூரி,
திருச்சி – 20
*
அன்புள்ள ரமீஸ்
ஞானத்துக்கும் துறவுக்கும் நேரடி உறவென ஏதும் இல்லை. துறவை ஞானத்துக்கு நிபந்தனையாக வைத்த மதங்கள் சமணமும் பௌத்தமும் மட்டுமே. அம்மதங்களுக்கு முன்னர் இந்து மரபில் துறவை வாழ்க்கையின் கடைசி நிலை என்றே சொன்னார்கள். இளமையில் துறவு குறித்த சிற்சில தனிப்பட்ட கதைகள் மட்டுமே காணப்படுகின்றன -சுகப்பிரம்ம ரிஷி போல.
சங்கரர்
சமணர்களுக்கும் பௌத்தர்களுக்கும் வாழ்க்கையில் உள்ள ஈடுபாடு என்பது வாழ்க்கையை அறிவதற்கு மிகப்பெரிய தடை என்ற எண்ணம் இருந்தது. நீங்கள் ஒன்றை விரும்பினால் அதை அறியமுடியாது, உங்கள் விருப்பம்சார்ந்த உண்மையையே காண்பீர்கள் என்பது அவர்களின் எண்ணம். ‘பற்றறுத்தல்’ அவர்களுக்கு உயர்விழுமியம்.
ஆனால் இந்து மரபில் அப்படி அல்ல. ஒன்றின்மீது நமக்குள்ள பேரன்பே அதை நாம் அறியவும் காரணமாகலாமல்லவா? என் மகன் மீதான அன்பே அவனை நான் கூர்ந்து கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் வழிவகுக்கிறது அல்லவா? ஆகவே பற்றையே ஒரு மெய்காணும் முறையாக முன்வைத்தன இந்து பக்தி மரபுகள்.
குறிப்பாக ராமானுஜரின் வைணவம். அது பற்றை பிரபத்தி என்றது. கட்டற்ற பிரியமே பிரபத்தி. அதுவே வாழ்க்கையையும் இறைவனையும் அறியும் வழி. ஆகவே வைணவத்தில் துறவுக்கு இடமே இல்லை. வாழ்வின் கடைசிக் கட்டத்தில் இறைவனிடம் மட்டும் பற்று வைக்கலாம், அதுவே அவர்கள் சொல்லும் துறவு. சங்கரர் இளமையில் துறவு பூண்டவர். ராமானுஜர் மணமானவர்.
இந்து மரபில் துறவும் மெய்மைக்கான வழிதான். இல்லறமும் வழிதான். விலக்குதலும் வழிதான் பற்றுகொள்ளுதலும் வழிதான். ‘கபம் இருந்தால் சுக்கு பித்தமிருந்தால் இஞ்சி’ என்று பழமொழி
நீங்கள் சொல்லும் சிக்கலை நாம் எப்போதுமே இலக்கிய விவாதங்களில் காணலாம். இதில் உண்மையான ஒரு கேள்வி உள்ளது. கவித்துவ உச்சமும் ஆன்மீக உச்சமும் வேறு வேறா?
வேத ரிஷிகள் அனைவருமே தங்களை கவிஞன், பாடகன் என்றுதான் சொல்கிறார்கள், ஞானி என்றல்ல. கிறித்தவ மரபிலும் பல புனிதர்கள் தங்களை கவிஞர் என்றே சொல்கிறார்கள். சூ·பிகளில் பலர் கவிஞர்களாகவே அறியப்படுகிறார்கள். ஆனாலும் கவிதைமேல் இந்த அவநம்பிக்கை உள்ளது.
ஏனென்றால் கவிதைக்கு அதன் அழகியல்பூரண நிலையில்கூட இரு பிரச்சினைகள் உண்டு. ஒன்று, உணர்ச்சிக்கொந்தளிப்பு. இரண்டு, அகங்காரம். கம்பனைப்பற்றியும் காளிதாசனைப்பற்றியும் நமக்குக் கிடைக்கும் எல்லா கதைகளும் அவர்களின் இவ்விரு குணாதிசயங்களைப்பற்றியும் பேசுகின்றன. இதை விளக்கின் அடியில் உள்ள நிழல் என்று பவபூதி சொல்கிறார். அந்த இருளை விளக்கால் விரட்ட முடியாது.
கவிஞர்கள் உணர்வெழுச்சிகளால் சமநிலை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் கவிதை அந்த அலையின் உச்ச எழுச்சியில் நிகழ்கிறது. அலையிறங்கும்போது பாதாளத்தில் சோர்வில் தங்களை உணர்கிறார்கள். சோர்வில் கிடக்கையில் தன் கவிதையைப்பார்த்து அகங்காரம் கொண்டு எழுகிறார்கள். தன் கவிதையை ‘எந்நாளும் அழியாத மாகவிதை’ என்று சொன்ன பாரதி கஞ்சாவில் அழிந்தான்.
அந்த நிழலையும் ஒளியாக்கிக் கொண்ட கவிஞன் ஞானியே. அத்தகைய கவிஞானிகள் எல்லா தலைமுறையிலும் உள்ளனர். அவர்களின் கவிதையில் அழகியலின் உக்கிரம் இருக்காது. காரணம் உணர்வெழுச்சி இருக்காது என்பதே. ஆனால் அமைதியும் ஆழமும் இருக்கும். பீர்முகம்மது அப்பா அவர்களும் குணங்குடி மஸ்தான் சாயபுவும் கண்டிப்பாக ஞானியர், அதேசமயம் கவிஞர்கள். ஆகவேதான் பேரறிஞரான சதக்கப்துல்லா அப்பா அவரக்ள் வந்து பீர்முகது சாகிபை வணாங்கிப்போனதாக கதைகள் சொல்கின்றன. பேரறிஞனின் அகங்காரம் ஞானியின் முன்னால் மட்டுமே மடங்கும்.
‘ரிஷி அல்லாதவன் கவிஞனும் அல்ல’ என்று மகாபாரத வாக்கியம் ஒன்றுண்டு. கவிஞன் ஞானியும்கூட என்று அதற்கு பொருள். குறைந்தபட்சம் கவிதை நிகழும் அந்த உச்சநிலையிலாவது அவன் ஞானியே.
ஜெ
[மறுபிரசுரம்/முதற்பிரசுரம் ஜனவரி 10, 2010]