அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம்
தங்களுடைய கீதை தொடர்பான கட்டுரைகள் மிகவும் ஆர்வமூட்டுபவை அது மட்டுமல்லாது நகைச்சுவை பகுதி மிகவும் சிறப்பானமுறையில் எழுதபட்டிருக்கிறது
தங்களுடைய கீதை தொடர்பான கட்டுரையில் சுவாமி சித்பாவனந்தர் மற்றும் வினோபாவே அவர்களின் கீதை தொகுதியை படிக்கும்படியும் தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.
குறிப்பாக இவை இரண்டும் தத்துவ பயிற்சியை பெற விரும்புபவர்களுக்கு பெரிதும் உதவக்கூடியது என்றும் சொல்லி இருந்தீர்கள்.
அந்த நூல்களோடு ஓரள்வு தொடர்பு இருக்கிறது என்ற முறையில் அவற்றை என்னால் ஏற்க முடிகிறது என்றாலும் சுவாமி சித்பாவனந்தர் மற்றும் வினோபாவே இருவரின் உரையிலும் குறிப்பாக வினோபாவே அவர்கள் பாவனை பக்தி ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறார் என்றே நான் கருதுகிறேன் குறிப்பாக புண்டலீகன் பற்றி அவர் அதிகமும் கூறுவதை நீங்கள் கவனித்திருக்கலாம் இரண்டாவதாக பாவனை செய்து தான் பாரேன் என்கிற இந்த வரிகள் திரும்ப திரும்ப வருவதை தாங்கள் கவனித்திருப்பிர்கள்.
சித்பாவனந்தர் உரையிலே கூட நம்பிக்கை இல்லாதவன் அழிகிறான் என்கிற வரிகள் ஒலிப்பதை நான் படித்திருக்கிறேன். ஒரு தத்துவ விரும்பியாக எந்த நூல்கள் மிக பெரிய உதவி புரிந்தாலும் அந்த உதவி கூட நம்பிக்கை என்கிற அடிப்படையில் தானா அந்த அடிப்படையில் இருந்து தான் தத்துவங்கள் பிறக்க முடியுமா? என்கிற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.
இரண்டாவதாக ஏதோ ஒரு நம்பிக்கை கையறு நிலையில் கீதை உதவக்கூடும் என்கிற நம்பிக்கையில் தான் கீதையை படிக்க துவங்கினேன்.அதன் தத்துவ அமைப்பும் அசாதாரணமானவை.உள்ளபடியே ஒப்புக் கொள்கிறேன்.இருப்பினும் கீதையை கூர்மையாக படிக்கிற பலரும் புரிந்து கொண்டவர்கள் பலரும் அப்படி ஒரு தருணம் கையறு நிலையில் தான் துவங்கியிருக்கிறார்கள் அந்த தத்துவம் அவர்களை ஆட்கொள்ளும்.
அந்த தத்துவ பீடத்தை நோக்கி அவர்கள் தள்ளப்பட்டது நம்பிக்கையினாலேயே என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.
வெறும் அறிவுக்காக என்றில்லாமல் ஒரு அசாதரண தேடலுடன் படிப்பவர்களே அதை நன்றாக புரிந்து கொள்கிறார்கள். அந்த அசாதரண தேடலுக்கான மூலம் நம்பிக்கை தானோ புரியவில்லை.
இந்த கடிதத்துக்கான காரணம் இதன் மூலம் உங்களிடமிருந்து நிறையா அறிந்து கொள்ளலாம் என்பதே. என்னுடைய கோணத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற நெடு நாள் ஆசை நிறைவேறியுள்ளது. என்னுடைய நண்பர் மூலமாக தமிழில் டைப் செய்ய நேற்று கற்றுக்கொண்டேன்.
உங்கள் விடைகளுக்கு நன்றி
அன்புடன்
சந்தோஷ்
***
அன்புள்ள சந்தோஷ்,
நம்பிக்கை என்று சொல்லும்போது அது அங்கே முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறது அல்லவா? நம்பிக்கைக்கு தர்க்கம் கொஞ்சம்கூட உதவாது. நம்பிக்கை மனித பலவீனங்களைக் கண்டடைந்து அங்கே வேர்கொள்கிறது, பாறைப்பிளவில் வேரூன்றும் செடிபோல. நம்பிக்கை தத்துவத்தை தேடுவதில்லை. தத்துவத்தை பரிசீலிக்க அதனிடம் கருவிகள் இல்லை. நம்பிக்கை செயல்படும் தளமே வேறு.
நீங்கள் சொல்வது உண்மையே. இன்று நமக்கு கிடைக்கும் உரைகளில் பெரும்பகுதி பக்தி சார்ந்தவையே. புராணிகர்களின் பேச்சுகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்துமே பக்தி சார்ந்த விளக்கத்தையே கீதைக்கு அளிக்கின்றன. அதை தவறு என்று நான் சொல்லமாட்டேன், கீதையை வாசிப்பதன் ஒரு வழி அது. உண்மையில் கீதையின் சாங்கிய யோகம் மட்டுமே பக்திக்குப் போதுமானது. இன்னும் ஒருபடி மேலே சென்று கர்மயோக நிலையை சேர்த்துக்கொள்ளலாம். பெரும்பாலான உரைகள் இவ்விரு அத்தியாயங்களில் தங்கள் பொருள்கொள்ளலை முடிவுக்குக் கொண்டுவந்து அதன் பின்னர் மேலே வரும் எல்லா அத்தியாயங்களையும் அந்த கோணத்தில் விளக்கி முடிக்கின்றன. விதிவிலக்கு என்று அரவிந்தர் நடராஜகுரு போன்ற சிலரையே சொல்ல முடியும்.
ஏன் என்றால் இந்துமதத்தின் அடித்தளம் பக்தி இயக்கத்தால் கட்டப்பட்டது. பண்டைய இந்துமரபானது வேள்விச்செயல்கள் அனுஷ்டானங்கள் போன்றவற்றாலும் மறுபக்கம் உயர்தத்துவத்தாலும் ஆனதாக இருந்தது. இரண்டுக்கும் இடையே இணைப்பே இருக்கவில்லை. அனுஷ்டானங்கள் கீழ்நிலையிலும் தத்துவம் உயர்நிலையிலும் இருந்தது. இதை கர்மம் X ஞானம் என்ற இருமையாக அக்கால நூல்கள் சொல்கின்றன. இந்துஞான மரபானது இந்துமதமாக ஒருங்கிணைவு பெற்ற கிபி ஐந்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இவ்விரு முனைகளும் பக்தி மூலமே பிணைக்கப்பட்டன. இக்காலகட்டத்தை பக்திகாலம் என்கிறோம். இந்த ஞானப்பேரலை தெற்கில், தமிழகத்தில், உதித்து வடக்கை தழுவி நிறைத்தது.
ஞானத்துக்கும் கர்மத்துக்கும் இடையே உள்ள பெரும் அகழியை நிரப்பவே பக்தி அத்தனை பேருருவம் கொண்டது. பக்தி என்ற கருதுகோள் மிகத்தொன்மையானதும் அடிபப்டையானதுமாகும். அதை தொன்மையான அனுஷ்டானங்களில், ரிக்வேதம்போன்ற ஆதிநூல்களில் காண்கிறோம். அது மனிதனின் மிக இயல்பான மன எழுச்சி. ஆனால் அதை கலைகள் தத்துவம் இலக்கியம் அனுஷ்டானங்கள் வாழ்க்கைமுறை ஆகிய அனைத்துடனும் இணைத்து ஒரு பேரியக்கமாக வளர்த்தனர் முன்னோடிகள். நம்மாழ்வார் முதல் ராமகிருஷ்ண பரமஹம்சர் வரை அதை நிகழ்த்திய ஞானிகளின் வரிசை மிகப்பெரிது. ஒருகட்டத்தில் ஞானம் கர்மம் என்ற பேதமே பக்தியால் அழிக்கபப்ட்டது. அதுவே இந்து மதத்தின் வெற்றி. அதன் மூலமே அது சமண ,பௌத்த மதங்களை கடந்து வந்தது. இன்றும் நீடிக்கிறது.
ஆகவே இந்து ஞான மரபுக்குள் பக்தி என்பது அத்தனை எளிய ஒரு விஷயம் அல்ல.மது ஒரு மனநிலையோ நம்பிக்கையோ அல்ல. அது ஒரு முழுமையான தரிசனம் ஆகும். ராமகிருஷ்ணரைப்பற்றிச் சொல்லும்போது இதை விவேகாந்னந்தரே விளக்கியிருக்கிறார். இந்து மரபில் உள்ள பக்தி என்பது இறுக்கமான நம்பிக்கை மட்டுமல்ல. ‘உளன் எனின் உளன் இலன் எனின் இலன்’ என்றும் ‘உண்மையுமாய் இன்மையுமாய்’ என்று காணும் நிலைக்கு நம் பக்தி இடம் கொடுக்கிறதே.
இங்குள்ள பக்தியைக் கூர்ந்து கவனித்தால் அது ஒரு மாபெரும் ஒருங்கிணைவு[ சமன்வய] நோக்கு என்று புரியும். உருவ வழிபாடும் அருவ வழிபாடும் அதில் இணைகின்றன. தத்துவமும் அனுஷ்டானமும் இணைகின்றன. இந்த நோக்கின் நூலாக கீதை செயல்பட ஆரம்பித்ததை இயல்பான ஒன்றாகவே நான் எண்ணுகிறேன். ஆகவே உயர்தத்துவ நூலான கீதையை உணர்ச்சிகரமாகவும் அனுஷ்டானம் சார்ந்தும் நோக்கும் அணுகுமுறைகள் அதனளவில் பொருள்கொண்டவையே. பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த பக்திமயமாக்கும் போக்கு இப்போதும் தொடர்கிறது. அதற்கான வரலாற்றுக் காரணம் உள்ளது. கோடானுகோடி மக்களுக்கு அதற்கான தேவையும் உள்ளது.
ஆனால் பக்திக்கு அப்பால் சென்று தூய தத்துவமாக அதை காண முனைபவர்களுக்கு மட்டுமே கீதையின் உள் அடுக்குகள் திறந்துகொள்ளும். துரதிருஷ்டவசமாக தமிழில் அத்தகைய நூல்கள் அனேகமாக இல்லை
ஜெ
***
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்கள் கீதையை ஏன் பயிலவேண்டும் என்ற கட்டுரையை படித்தேன். அதுபற்றி எனது சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த கடிதம்.
குறிப்பு: எனக்கு தத்துவவியலில் மிகச்சொற்பமான புரிதலே உள்ளது. எனது கருத்துக்கள் முழுவதும் தவறாக இருக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
பல்வேறு சமயங்கள் தங்களுக்கான வழிமுறைகளையும் வாழ்கைமுறைகளையும், தெளிவாக தங்களது சித்தாந்தங்களையும் கோட்பாடுகளையும் முன்னிறுத்தி ஒரு புனித நூலை முன்வைத்திருக்கிறது. உலகிலுள்ள பல மதங்களைப் பார்த்தால், “ஒரு கடவுள், ஒரு புனித நூல்” என்ற நிலை நிலவுவதைப்பார்க்கலாம். இஸ்லாம், கிறுத்துவம், பௌத்தம்(பல பிரிவுகள் இருந்தாலும்), சீக்கியம் ஆகியவை நமக்கு நன்கு தெரிந்த “ஒரு கடவுள், ஒரு புனித நூல்” தத்துவத்தை முன்னிறுத்துவன.
ஆனால், இந்து சமூகம் இந்த “ஒரு கடவுள், ஒரு புனித நூல்” தத்துவத்தை ஏற்கவில்லை என்று சொல்லலாம். பற்பல கடவுள்களும், பற்பல நூல்களும் அடங்கியது இந்து சமூகம். ஆனால் “ஒரு கடவுள், ஒரு புனித நூல்” என்பது மிக எளிமையான வியாபார யுக்தியாகப் பட்டிருக்கவேண்டும். ஒருவேளை அது கிறுத்துவத்தின் வெற்றியின் மீதும் ஆதாரப்பட்டிருக்கலாம் என்பது என் எண்ணம். அந்த தத்துவத்தை முன்னிறுத்தியே கீதையை இந்துக்களின் புனித நூலாக பிரபலப்படுத்தும் முயற்சி ஏற்பட்டிருப்பதாக கருதுகிறேன். ராசாராம் மோகன் ராய் அவர்கள் இதில் சீரிய முயற்சி மேற்கொண்டதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
கீதை, நிச்சயமாக ஒரு பிற்சேர்கை என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அது ஆதிசங்கரர் காலத்திற்கும் முற்பட்டது என்பதற்கு ஆதிசங்கரரின் மேற்கோள்கள் சாட்சியாகின்றன( பகவத் கீதா கிஞ்சித தீதா, கங்கா ஜல லவ கனிகா பீதா- பஜகோவிந்தம்). நிற்க. தாங்கள் கீதைக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகப்படுகிறது. கீதை என்வரையில் ஒரு தத்துவ நூலாக இருந்தாலும், இந்திய தத்துவ ஞானத்தை எடுத்துரைக்கும் ஒரு ஒப்பில்லாத நூலன்று என்பது எனது மதிப்பீடு. உபநிஷதங்களிலும், சாத்திரங்களிலும் விளக்க முற்பட்டதை கீதை மற்றொரு தளத்திற்கு எடுத்துச்சென்றதாகவும் சொல்ல இயலாது.
இந்திய தத்துவவியல் குடும்பத்தில் கீதைக்கு சொற்ப மதிப்பே இருக்கமுடியும். ஆனால், இது கீதையை, அதன் ஆழத்தை சற்றும் உணராமல் நான் சொல்வதாக இருக்கலாம்.
மற்ற மத புனித நூல்களைப்போல, இது கடவுளின் வாயிலிருந்து நேரடியாக வந்தது என்று சொல்லி வியாபாரம் செய்ய ஏதுவாக இருப்பதாலும், இந்திய தத்துவவியலில் இது மிக எளிதான துவக்கமாக இருக்கமுடியும் என்பதாலுமே இதற்கு இத்தனை முக்கியத்துவம் தரப்படுவதாக உணர்கிறேன். இதே “ஒரு கடவுள், ஒரு புனித நூல்” தத்துவத்தை முன்வைத்தே இஸ்கான் போன்ற இயக்கங்கள் இதற்காக முழுமூச்சாக போராடிவருவதையும், அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிறுப்பதையும் காண்கிறோம்.
கீதையை முன்னிறுத்துவதில் தாங்களும் முனைவது எனக்கு சற்றே ஆச்சரியமாக உள்ளது.
கீதை அளவுக்கே பைபிளும், குறளும், தம்மபதமும் என்று சொல்லும் போது, குறளுக்கும் இங்கே ஒரு இடம் கொடுக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை தருகிறது. குறளை எந்த விதத்திலும், தத்துவவியலைச் சார்ந்த ஒரு நூலாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. தாங்கள் இங்கு அதையும் சொல்லியிருப்பதால், அதற்கான காரணங்கள் வலுவாகவே இருக்கும் என்று நம்புகிறேன். அதை தெரிந்துகொள்ளவும் விழைகிறேன்.
நன்றி
ராம்
***
அன்புள்ள ராம்,
தங்களுக்கு விரிவான பதிலை எழுத வேண்டும் என்று எண்ணி தள்ளிப்போட்டு தாமதமாகிவிட்டது. இப்போது ப்யணத்தின் அவசரம்
தத்துவம் பண்டைய நூல்களில் இரண்டு தளத்தில் வெளிப்பட்டிருக்கும். ஒன்று மீபொருண்மை தளத்தில் [மெட·பிசிக்ஸ்] இரண்டு அறவியல் தளத்தில் [எதிக்ஸ்] ஆனால் நடைமுறையில் அவை உயர்தத்துவத்தை தொட்டுக்கொண்டுதான் நிலைகொள்ளும். ஒரு நூல் நெறி அல்லது ஒழுக்கம் [மொராலிடி] சார்ந்து இருக்கும்போதுமட்டுமே அது தத்துவமில்லாததாக உள்ளது. கணிசமான நீதி நூல்கள் நெறிநூல்களே. குறள் அப்படி அல்ல, அது அறவியல் நூல். அவ்வகையில் அது தன்னிகரில்லாதது. அறவியலின் உச்சம் சென்று தொடும் தத்துவத்தை அதன் பல பாடல்களில் காணலாம். குறளை வெறுமே செய்க-செய்யாதெ என்று சொல்லும் நூலாக நம்மால் வாசிக்கமுடியாது. இதை பிற்பாடு விரிவாகவே பேசலாமென்றிருக்கிறேன்
கீதையின் இடம் குறித்து. கீதை ஒரு உபதேச நூல் அல்ல. அதன் ஒவ்வொரு அத்தியாயமும் சொல்வதுபோல அது ஒரு யோக நூல். யோகம் என்றால் என்ன என்று நான் விரிவாகவே விளக்கியிருக்கிறேன். தத்துவத்தின் முரணியக்க [டைலடிகல்] போக்குதான் அது. கீதை கண்டிப்பாக உபநிடதங்களில் முதன்மையானது. அதனுடன் ஒப்பிடத்தக்க உபநிடதம் என்று கடோபநிடதம், சாந்தோக்ய உபநிடதம் இரண்டை மட்டுமே சொல்ல முடியும். கீதையின் தளங்கள் பல நம்மால் விரிவாக கவனிக்கப்பட்டதில்லை.
கீதை மூன்று காரணங்களினால்முக்கியத்துவம் பெற்றது. ஒன்று பக்தி இயக்கத்தால் கிருஷ்ணபக்தி மேலெழுந்தபோது கிருஷ்ணரின் நூல் என கீதையும் முக்கியத்துவம் பெற்றது. இரண்டு அது மகாபாரதத்தின் உக்கிரமான நாடகச் சந்தர்ப்பத்தில் அமைந்துள்ளது. மூன்று அதன் முதல் தளம் எளியதும் பக்தி நோக்கில் விளக்கப்பட ஏற்றதுமாகும்.
கீதையை இந்த பக்தி நோக்குகள் மூலம் அணுகும் முறைதான் நாம் அறிந்தது. அதை தத்துவ நோக்கில் அணுகும்போது அதன் ஞானவிரிவையும் கவித்துவத்தையும் உணர முடியும்
ஜெ
திரு ஜயமோகன் அவர்களுக்கு,
தங்களது பரபரப்பான நேரத்திலும் எனக்கென நேரம் ஒதுக்கி பதில் எழுதியதற்கு நன்றி. குறளைப் தத்துவவியல் சார்ந்த நூலாக வைத்ததற்கான உங்களது விளக்கம் படித்தேன்.
எதிக்ஸ் என்பதற்கு நன்னெறி என்றும் ஒழுக்கவியல் என்று பொருள் சொல்லலாம். மொராலிடி என்பதற்கும் ஒழுக்கவியல் என்றே பொருள் வருகிறது. குறள், பெரும்பாலும், செய் செய்யாதே என்று சொல்வதைவிட, இது நன்று இது தீது என்று நல்லன தீயவற்றை பிரித்துக்காட்டுகிறது. மரபுரீதியான தத்துவவியல் சார்ந்த நூல்கள் எனக்குத் தெரிந்தவரையில் நல்லது தீயது என்று பகுத்துக்காட்டுவதில்லை. நல்லது தீயது என பிரிப்பது சமூகம் சார்ந்த ஒரு கட்டுமானம் என்று நினைக்கிறேன். தத்துவங்கள் அதிகமாக டோட்டாலிடி பற்றியே பேசுவதாக அறிகிறேன். இதை, தத்துவம் என்பது பிலாசபி என்ற பொருளில் எழுதுகிறேன். இது தத்துவம் என்பதை தியரி என்ற நோக்கில் எழுதவில்லை.
என்னால் கீதையை தத்துவ நூலாக பார்க்க இயலாமல் போவதற்கு அது செயல்களை (கர்ம யோகம்) குறித்து பேசுவதும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது. தத்துவம் என்பது செயல்கள் குறித்து பேசுவதில்லல அல்லது பேசக்கூடாது என்ற என் புரிதல் தவறென்றால் தயவுசெய்து சுட்டிக்காட்டவும்.
கீதையைப்பற்றி நீங்கள் அளித்துள்ள விளக்கம் என்னை ஒப்புக்கொள்ள வைத்தாலும், படித்தபோதும், உரைகள் கேட்டபோதும் அதில் பக்தியும், “லாஜிகல்” விவாதங்களையும் அதிகம் பார்க்கமுடிகிறது. என்ன தோன்றுகிறது என்றால், பக்தி சார்ந்த ஒரு விஷயத்தை வெகுஇயல்பாக தத்துவத்திற்கு இட்டுச்செல்வதர்கான வாய்ப்பு நிறைய இருப்பதாக. எந்த ஒரு விஷயத்தையுமே தத்துவப்பார்வையில் முனைந்து முயன்றால் அதையே தத்துவமாக்கிவிடலாம் என்றும் தோன்றுகிறது. ஒருவேளை இது, எல்லாவற்றையும் எனது புரிதலின்படி ஒரு ஒற்றை பரிமாணத்தில் அடைக்கும் முயற்சியாகவும் இருக்கலாமமென நினைக்கிறேன்.
மிக்க நன்றி.
ராம்
***