அன்புள்ள ஜெ,
காளியமர்த்தனம் படங்களைப்பார்த்துக்கொண்டிருந்தபோது எங்கோ பார்த்த ஒரு படம் நினைவுக்கு வந்தது. கடைசியில் அதைக் கண்டுபிடித்தேன். அது ஹெர்குலிஸ் நீர்த்தெய்வமான ஹைட்ராவை வெல்லும் காட்சி
ஹெர்குலிஸின் இரண்டாவது சாக்ஸம் ஹைட்ரா என்னும் ஒன்பதுதலை நாகத்தை வெல்வது. இது கலங்கிய நீரில் வாழும் ஒரு நீர் அரக்கன். நீரில் இருந்து அவ்வப்போது வந்து தாக்கும். ஹெர்குலிஸ் தன் தோழனாகிய ஐயோலஸின் உதவியுடன் நீரில் குதித்து அதைக்கொல்கிறான்
கிருஷ்ணனின் கதையிலும் காளியன் யமுனையின் கலங்கிய நீருக்குள் வாழ்கிறது. பலராமன் கரையில் நின்று உதவ கிருஷ்ணன் அதைக்கொல்கிறார்
இந்தப்புராணக்கதைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவையா? அங்கிருந்து இங்கே வந்திருக்குமா? குறிப்பாக தன்ணீருக்குள் வாழும் பாம்பு அரக்கன் என்ற உருவகத்தைப்பற்றி கேட்கிறேன்.
அன்புள்ள சாமிநாதன்,
காளியமர்த்தனத்தின் படங்களில் அதற்கு பல தலைகள் இருப்பதுபோல இல்லை. அதை இஸ்கான் இயக்கத்தினர் ஐரோப்பிய ஓவியர்களைக்கொண்டு வரைந்தபோதுதான் ஹெர்குலிஸ் சாயல் வந்தது
நீங்கள் பீமன் கங்கைநீரில் விழுந்து நாக உலகம் போகும் காட்சியையும் இதனுடன் ஒப்பிட்டுப்பார்க்கலாமே?
நீருக்குள் வாழும் நாகங்களைப்பற்றிய தொன்மங்கள் உலகம் முழுக்க உண்டு. மிகப்பெரிய அளவும், விஷமும் கொண்ட நாகங்கள் நீரில் வாழ்கின்றன என்பதே காரணம். மாலுமிகளிடமிருந்து கடல்நாகங்களைப்பற்றிய தகவல்களும் கற்பனைகளும் பரவி அவை தொன்மங்களாக ஆயின
ஆப்ரிக்காவில் நீர்தேவதைகள் பல நாகங்களாக கருதப்படுகின்றன. நீரின் நெளிவு பாம்புடன் ஒத்திருப்பதும் காரணமாக இருக்கலாம். சீனாவில் டிராகன் ஒருவகை நாகம்தான். நாகமுதலை. நீரில் வாழும் டிராகன்கள் உண்டு.
தொன்மங்கள் அனைத்துக்கும் உலகளாவிய ஒற்றுமை உண்டு. வரலாற்றுக்கு முந்தையகாலம் முதலே தொன்மங்கள் எப்படிப்பரவின என்று உலகப்புகழ்பெற்ற ஆய்வாளரான ஜோசப் கேம்பல் எழுதியிருக்கிறார்
தொன்மங்கள் உலகமெங்கும் பரவியமைக்குக் காரணம் மானுடர் கதைகளைக் கேட்பதற்கும் பரப்புவதற்கும் கொண்டுள்ள ஆர்வம்தான். புதியகதை எப்போதும் ஆர்வத்தை உருவாக்குகிறது
ஆனால் அதற்கு அப்பாலும் ஒருகாரணம் உண்டு. அதுவே முக்கியமானது. தொன்மங்கள் மானுட ஆழ்மனதின் சில உணர்வுநிலைகளை உருவமாக ஆக்குபவை. உலகமெங்கும் மனிதமனம் ஒன்றே. ஆகவே ஒரு தொன்மம் இன்னொரு ஊரிலும் ஆழ்மனதின் வெளிப்பாடாக ஆகிறது
ஜெ