இந்தியப்பயணம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

பயண நூல்களைப்பற்றிய கடிதங்கள் படித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். பயண எழுத்து (Travel writing)  தமிழில் அவ்வளவு பிரபலமற்ற , பேசப்படாத ஒன்று. உங்கள் பயணங்களை அவ்வப்போது படிக்க நேரும்போது , நீங்களே ஒரு தனி நூலாக உங்கள் பயணஙகளையும் தேடல்களையும் அளித்தால் அற்புதமாக இருக்கும் என்று  எண்ணுவதுண்டு.

தமிழில் சிறப்பாக சொல்ல   சில நூல்களே இருக்கும்போது ஆங்கிலத்தில் ஏராளமான பயண நூல்கள்.  பல வருடங்களுக்கு முன் எனக்கு படிக்க கிடைத்தவற்றில்  முக்கியமானவை – ஜாண் ஸ்டீன்பெக்கின் ‘சார்லியுடனான பயணங்க்ள் ‘ , ஜாக் குராக்கின் ( Jack Keurouc) பயண நாவலான’ On the Road’  , டார்வினின் அற்புதமான நூல் ,’எச்.எம்.எஸ்.பீகிள் பயணம்’. ( Voyage of th Beagle ) இவை பயண  எழுத்தை தேடிப் படிக்கும் ஆர்வத்தை  என்னுள் ஆழமாகப் பதித்தவை

எனக்கு மிகவும் பிடித்த, நான் மறு வாசிப்பு செய்கிற  பயண எழுத்தாளர்களைபற்றிய சில குறிப்புகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

பால் தோரோ – Paul Theroux  – தனிமையில்  ரயில் பயண்ஙகளை இவர் மேற்கொண்டிருக்கும் விதம் , அனுபவங்கள் அனைத்தும் மிகவும் சுவராசியமானவை.  இவரின் இந்திய ரயில் பயணம் உள்ளிட்ட 28000 மைல்கள் லண்டனிலிருந்து டோக்கியோ வரையிலான ரயில் பயண அனுபவம் பற்றிய நூலான ‘ The Great Railway bazaar’  மிகவும் பேசப்பட்ட ஒன்று. 1975 இல்  மேற்கொண்ட இந்த ரயில்  பயணத்தை   30 வருடஙகளுக்குப் பின் அதே பாதையில் பயணம் செய்த இவரின தற்போதைய அனுபவங்கள் ‘  Ghost Train to the Eastern Star: On the Tracks of the Great Railway Bazaar  ‘  என்ற நூலாக வெளிவந்து விற்பனையில் தற்சமயம் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. சீன ரயில் பயண நூலான ‘ Riding the Iron Rooster ‘ மற்றும் பசிபிக் கடலோர பகுதிகளில் தனியாளாக ஒரு கோயாக்  படகைக் கொண்டு பயணம் செய்து அப்பகுதி மக்களையும் வாழ்க்கையையும் அலசிய ‘The Happy Isles of Oceania: Paddling the Pacific ‘  போன்றவை முக்கியமானவை.   இவரின் பயண நூல்கள் தவிர நாவல்களை தவிர்த்துவிடுவேன் . . இவரது நுல்கள் பற்றி இங்கு காணலாம்:
http://www.amazon.com/s/ref=nb_ss_b?url=search-alias%3Dstripbooks&field-keywords=Theroux&x=0&y=0

William Dalrymple – வில்லியம் டால்ரிம்ப்பிள் –  பழைய ஐரோப்பிய – ஆசிய – சீன  வணிக பாதை  – Silk Road – வழியே   இவர் மேற்கொண்ட பயணம் பற்றிய ” In Xanadu ” ,  மத்தியதரைக்கடல் பகுதி சார்ந்த கிரேக்க மலைப்பகுதிகளிலிருந்து தொடங்கும் ப்யணம் பற்றிய  ‘From Holy Mountain’  போன்ற பயண நூல்கள் உலகளாவிய கவனம் பெற்றவை. இந்திய பயணஙகள் மற்றும் டெல்லி பற்றி   The Age of Kali , City Of Djinns ஆகிய நூல்கள் எழுதியுள்ள் இந்த ஐரோப்பியர் . இந்தியாவில் வாழ்ந்து வருகிறார். இவர் போலவே இந்தியாவில் வாழ்ந்துவரும் மற்றொரு ஐரோப்பியரான பில் ஐட்கின -Bill Aitken – எழுதியுள்ள Seven Sacred Rivers குறிப்பிடத்தக்கது. மற்றும் சமகால பயண எழுத்தாளர்களில் Bill Brysonனின்   பயண நூல்கள் முக்கியமானவை.

சற்று முந்திய காலத்தை எடுத்துக்கொண்டால் Eric Newby , Bruce Chatwin ஆகியோரின் பயண எழுதுக்கள்  மிகவும் பிடிக்கும. இன்னும் எனக்கு பிடித்த பயண நூல்கள் ,  எழுத்தாளர்கள் உண்டு.

பயண எழுத்து மற்றும்  பயண நூல்கள் பற்றி பேசி பகிர்ந்துகொள்வது மிக அரிதாக இருக்கும் நிலையில் இங்கு  இவ்வெழுத்துக்களை ரசிப்பவர்கள் கடிதஙளைப்பார்த்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் இந்திய சுற்றுப்பயணத்திற்கு   எனது வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆனந்த்

அன்புள்ள அரவிந்த்

பயணக்கட்டுரைநூல்கள் குறித்த தகவல்களுக்கு நன்றி.

தமிழில் இலக்கியத்தரமில்லாத ஆனால் அரிய தகவல்கள் கொண்ட பயணநூல்கள் சில உண்டு.  திரு வி கல்யாணசுந்தரனாரின் ‘எனது இலங்கை செலவு’ அதில் ஒன்று

சேலம் பகடாலு நரசிம்ம நாயிடு  நூறுவருடம் முன்பு எழுதிய பயணக்கட்டுரைகளில் அக்கால தமிழகத்தின் அரிய சித்திரங்கள் உள்ளன

ந.சுப்பு ரெட்டியார் தமிழகம் கேரளத்தில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று நேரடி அனுபவங்களை விரிவாக எழுதியிருக்கிறார். அதே வகையை சேர்ந்தவை தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் கோயில்களைப்பற்றி எழுதிய எழுத்துக்கள்.பரணீதரனின் எழுத்துக்களுக்கு அவையே முன்னோடி

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன்

உங்கல் இந்தியப்பயணம் குறித்த தகவலை கண்டு உற்சாகம் கொண்டேன். மனமார்ந்த வாழ்த்துக்கள். அரசியல்வாதிகள் இந்தியா என்ற சித்திரமே நம் நெஞ்சுக்குள் வராமல் பார்த்துக்கொள்கிறார்கள். அண்டைமாநிலங்களை வெறுப்பதற்கு கற்பிக்கிறார்கள். நமது பண்பாட்டுச்செல்வங்கள் தேசமெங்கும் பரவிக்கிடக்கின்றன. நாம் ஒருபோதும் நம்முடைய நிலத்தை எல்லையிட்டு பார்க்க முடியாது. என் இருபதுவயதில் தொழில் நிமித்தமாக சூரத் சென்றுவர ஆரம்பித்தபோதுதான் இந்தியா என்ற தரிசனம் எனக்குக் கிடைத்தது. வறுமையும் துயரமும் நிரம்பிய இந்தியாவில் அடிநாதமாக ஓடும் பண்பாட்டை நான் காண நேர்ந்தது. பிற அரசியல் தலைவர்கள் காங்கிரஸ் மாநாட்டுக்கு அனைவரையும் டெல்லிக்கு வரச்சொல்லிக்கொன்டிருந்தபோது காந்தியடிகள் மட்டும் அவரே இறங்கி இந்தியாவெங்கும் அலைந்து இந்தியாவை தரிசனம்செய்தார். விவேகானந்தர் அரவிந்தர் மட்டுமல்லாமல் நம்முடைய இன்றைய துறவிகளான ஜக்கி வரை அனைவருமே இந்தியதரிசனம் கண்டவரக்ளெயாவார். இந்திய மண் ஒன்றுதான். ஒரே பண்பாடு கொட ஒரே உடலும் உயிரும் கொன்ட தேசம் இது. அரசியல்வாதிகளின் அற்ப ஆசைகள் சதிகளாக மாரி இந்த நாடு சிதையும் என்றால் அது ஒரு  உயிரை குரூரமாக வெட்டிச்சிதைப்பதுபோல ரத்த ஆறுமேல்தான் நிகழும். நமக்கு அந்த அனுபவம் இருந்தும்கூட நம்மால் ராமதாஸ்கள், ராஜ் தாக்கரேக்கள், எடியூரப்பாக்களைத்தான் உருவாக்க முடிகிறது. நம் ஜனநாயகம் அடைந்த தோல்வி இதுவே. நம் சிந்தனையாளர்கள் வெறும் காகிதம் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அனுபவம் சார்ந்தவர்களாக இல்லை. இலக்கியம் மூலம்மும் ஆன்மீக சிந்தனைகள் மூலமும் நாம் இப்போது ஒன்றாக இருக்கிறோம் . அந்த  வலிமை நம்மை காப்பாற்றட்ட்ட்டும்

ரமேஷ் சிவகுரு

இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம்

இந்திய சுற்றுப்பயணம்:கடிதங்கள்

முந்தைய கட்டுரைஇந்திய சுற்றுப்பயணம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇந்தியப் பயணம் சில சுயவிதிகள்