குருதியின் ஞானம்

narasimha_by_molee-d7g08yf

ஜெ,

கிருஷ்ணாவதாரம் அழகு மட்டுமே உள்ள ஒன்று என்ற எண்ணம்தான் என் மனசுக்குள் இருந்தது. அதற்குக்காரணம் நம் கதாகாலக்ஷேபம்தான். நான் சின்னவயதில் இருந்த இடத்தில் ராதாகல்யாணம் நடக்கும். பாட்டுகள் பாடுவார்கள். ‘ஆடாது அசங்காது வா கண்ணா’ ‘பால்வடியும் முகம் நினைந்து’ இரண்டுபாட்டுகளும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

ஆனால் நீலம் ஆரம்பம் முதலே கிருஷ்ணனை க்ரூரத்துடனும் ஸம்பந்தப்படுத்திக்காட்டிக்கொண்டே இருந்தது. அது எனக்கு ஒவ்வாமல் இருந்தது. உண்மையில் நீங்கள் பாகவதத்தில் இருந்துதான் அதை எடுத்திருப்பீர்கள் என்று தெரியும். ஆனாலும் அதை மனசு ஏத்துக்கொள்ள மறுத்துவந்தது. ‘என்னோட க்ருஷ்ணன் வேற’ என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தேன்.

எனக்கு விஷ்ணு அவதாரங்களிலே நரசிம்ம அவதாரம் அவ்வளவாக பிடிக்காது. சின்னவயசு முதல். அதிலே உள்ள பயங்கரம் தான் காரணம். ஆரம்பம் முதலே எழுதிக்கொண்டுவந்து கடைசியிலே கிருஷ்ணனைக் கொண்டுபோய் நரசிம்மத்திலே சேர்த்துவிட்டீர்களா என்றெல்லாம் நினைத்தேன்

கிருஷ்ணசங்கீதத்தைக்கூட வேட்டைவரிப்புலியின் கால்களில் அமைந்த மென்மை என்று சொல்லிவிட்டீர்கள். சிம்மம் ரத்தம் சொட்ட நடப்பது மாதிரி என்று என்ற வரி 27 ஆவது அத்தியாயத்திலே வருகிறது. அந்த வரியையே வாசித்துக்கொண்டிருந்தேன். அப்புறம் அவன் சபையிலே பேசும்போது மெய்சிலிர்த்துவிட்டது. அப்படித்தானே இருக்கமுடியும் என்ற நினைப்பு வந்துவிட்டது. அந்த அளவுக்கு நீதியிலே வஜ்ரம் மாதிரி இருக்கும் ஒருவனுடைய மனசுதான் பூவாக இருக்கமுடியும்

சான்றோர்களைப்பற்றிச் சொல்லும்போதெல்லாம் வாக்கிலும் மனசிலும் வஜ்ரம் போன்றவர்கள் என்று சொல்லப்படுவதன் அர்த்தம் என்ன என்பது அப்போதுதான் புரிந்தது. பெரிய கருணை கொண்ட நீதிமானின் கையிலே உள்ள வாள் போல குரூரமான ஏதும் கிடையாது. ஏனென்றால் எது சரி என்று அவருக்குத்தெரியும். அதிலே compromise செய்யமாட்டார்.

நரசிம்மம்தான் கிருஷ்ணன் என்று புரிந்துகொள்ள இவ்வளவு இலக்கியம் தேவைப்படுகிறது. வேறுமாதிரி சொன்னால் என்னப்போன்ற emotional fools க்கு ஏறியிருககாது. புராணமெல்லாம் எங்களுக்காகத்தான்

ரங்கநாதன்

narasimha_by_sofiejo-d31jsco
ஜெ,

நீலத்தை மீண்டும் அங்கிங்கே தொட்டுத்தொட்டு வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்நாவலை வாசிப்பதற்கான சிறந்தவழிகளில் அதுவும் ஒன்று. மொத்தத்தையும் வாசித்தபிறகு அவ்வப்போது தோன்றும் இடத்தை எடுத்து வாசிப்பது. முதல் வாசிப்பிலே சரியாகக் கவனிக்காமல் போய்விட்ட இடங்களை இப்படி திரும்ப வாசிப்பது இன்னும் ஆழமான புரிதலைக் கொடுக்கிறது. முதலிலே வாசிக்கும்போது அந்த இடத்தைப் புரிந்துகொள்வதற்கான tool நம்மிடம் இருக்காது. ஆனால் ஒட்டுமொத்தமாக வாசித்தபிற்பாடு அந்த அத்தியாயத்தின் மொத்த நுட்பமும் வேறுவகையிலே தெரிய ஆரம்பித்துவிடுகிறது. அது ஒரு அற்புதமான அனுபவமாக அமைகிறது

அக்ரூரர் கண்ணனைப்பார்க்க வரும் அத்தியாயத்தை நான் ஆரம்பத்திலே அவ்வளவு கூர்ந்து வாசிக்கவில்லை. அவரை கம்சனின் அமைச்சர் என்று கதையிலே கேட்டிருந்த ஞாபகம். ஆனால் இங்கே அவரை குலத்தலைவராகச் சொல்கிறீர்கள். அதைப்பற்றிய கவனம்தான் என்னிடம் இருந்தது. ஆனால் இப்போது வாசிக்கும்போது மொத்த நாவலை ஓடவைக்கிற dichotomy அந்த அத்தியாயத்திலே இருக்கிறது என்ற எண்ணம் வந்தது. வாசிக்க வாசிக்க அது சிலிப்பாக இருந்தது

பெருங்கருணை ஒரு விரலாய் மீட்டும் பேரியாழ் இப்புடவி – என்று கண்ணனின் குழலோசையை முதலிலே கேட்டபோது அக்ரூரந் நினைக்கிறார். அது சரியானதுதான். அதைத்தான் ராதை கேட்கிறாள். பக்தர்கள் கேட்கிறார்கள். அதுவும் அவன் முகம் தான். அதுதான் இந்தப்பிரபஞ்சத்தின் முகமும்கூட.

ஆனால் அடுத்து உடனடியாக அடுத்த தரிசனம் வந்துவிடுகிறது. கொலைவெறி கொண்டு குழைந்தது குழல். வாள்முனையெனச் சுழன்றது.வில்லென வளைந்து தொடுத்தது. விஷமென கோப்பை நிறைந்து காத்திருந்தது. வஞ்சமென விழியில் ஒளிர்ந்தது. வைரமென நெஞ்சில் கனத்தது.

சங்கீதம் விஷம் மாதிரி கொலைவெறிகொண்டிருக்கிறது. இதுவும் கண்ணன் குழல்தான். இந்தப்பிரபஞ்சத்தின் முகம்தான். இந்நாவலிலேயே எல்லாரும் கண்ணனைப்பார்க்கிறார்கள். ஒருபக்கம். ராதை ஒருபக்கம் கண்டாள். மற்றபக்கத்தை மறந்து மாயையில் விழுந்தாள். கம்சன் ஒரு பக்கம் கண்டான். மற்றபக்கத்தை தானே மறைத்தான். அக்ரூரர்தான் ரெண்டுபக்கமும் பார்த்தவர்

அந்த ஒரு அத்தியாயம் போதும் இந்நாவலை எல்லாவகையிலும் புரிந்துகொள்வதற்கு. கீதையையும் பிரிந்துகொள்ள சரியான இடம் அது

ஒவ்வொன்றும் பிறிதொன்றை உண்ணக்கண்டேன். பறவைகள் புழுக்களை உண்டன. பறவைகளை விலங்குகள் உண்டன. விலங்குகளை விலங்குகள் உண்டன. விலங்குகளை மானுடர் உண்டனர். அனைவரையும் புழுக்கள் உண்டன. உணவு உணவு என வெறித்த முடிவிலா வாய்களின் வெளி இப்புடவி என்றறிந்தேன். அவற்றில் பசியென்றும் ருசியென்றும் கொலைவெறியென்றும் கோரநினைவென்றும் எஞ்சுவது ஒன்றே என உணர்ந்தேன்.

அதுதானே கீதா தரிசனம். அர்ஜுனனுக்கு அளித்த ஞானத்தைக் கிருஷ்ணன் அதற்கு முன்னரே அக்ரூரருக்குக் கொடுத்துவிட்டார்

பார்த்தா.

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

மழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி


வியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்

முந்தைய கட்டுரைகாளி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 9