அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
முக்கூர் லக்ஷ்மிநரசிம்மாச்சாரியார் அவர்கள் ஒரு சொற்பொழிவிலே சொன்னார்கள். பத்து அவதாரங்களையும் கிருஷ்ண அவதாரத்திலே பார்க்கமுடியும் என்று. முதல் மூன்று அவதாரங்களும் அவனுடைய குழந்தைப்பருவதிலேயே முடிந்துவிடுகின்றன .கருவுக்குள்ளே மீனாக இருந்தான். வெளியே வந்து தவழும்போது ஆமையாக ஆனான். மருதமரங்களை முறிக்கும்போது அவன் வராகம். அப்படி விளக்கியபடியே போனார். கிருஷ்ணன் ராமனாகவும் பரசுராமனாகவும் தோற்றமளிப்பார் என்று சொன்னார்.
அதை என்னால் கற்பனையே செய்யமுடியவில்லை. ஆனால் கம்சனின் நெஞ்சு பிளந்து கொல்லும் காட்சியிலே நிஜமாகவே கிருஷ்ணன் நரசிம்ம அவதாரம் எடுத்த்து போல தோன்றியது. அதேபோல தன் தந்தை வசுதேவரிடம் அவன் உங்கள் நெஞ்சைப்பிளந்து குருதிபூசி அரியணை அமர்கிறேன் என்று சொல்லும்போதும் நான் கண்டது நரசிம்மத்தைத்தான். ’நீதியின் பெருவஞ்சம்’ என்று அதை நீலம் நாவலிலே சொல்கிறீர்கள்
நன்றி ஜெ. ஒரு பெரிய அனுபவம். அதற்குமேல் சொல்ல ஒன்றுமே இல்லை
கண்ணன் ஸ்ரீனிவாசன்
நீலம் நாவலில் கம்சனின் நெஞ்சைப்பிளந்து ரத்தம் பூசிய உடம்போடு கிருஷ்ணன் செல்கிற காட்சியை கற்பனையிலே விரித்து எடுக்கவே முடியவில்லை. அப்படி ஒரு காட்சி பாகவதத்திலே உள்ளதா? நீங்களே எழுதியதா? கிருஷ்ணனை குழலூதும் சின்னக்கண்ணனாக மட்டும்தானே நாமெல்லாம் நினைத்திருக்கிறோம்.
ஆனால் கதை அந்தக்காட்சியை நோக்கி வந்துகொண்டே இருந்த்து என்பதையும் புரிந்துகொள்கிறேன். ஆரம்பத்திலேயே வசுதேவன் சொல்லிவிடுகிறார். பிறகு எல்லாரும் அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அப்படி நெஞ்சுபிளந்து போகிற கிருஷ்ணன் ஒரு நரசிம்ம அவதாரம் போல இருப்பதாகத் தோன்றியது. யானையை கொன்று ரத்ததுடன் போகிற சிங்கம் என்று சொல்கிறீர்கள். அதேபோல சபை முன்னால் வந்து நின்றது சிம்மம் என்கிறீர்கள்
கிருஷ்ணன் அந்த முகத்தைக் கழற்றிவிட்டு குழலுடன் வந்தால்போதும் என ஆசைப்பட்டேன்
நீலம் நாவல் எனக்கு என்னென்ன கொடுத்த்து என்பதை என்னால் சொல்லிவிடமுடியாது. ஒருபெரிய பரவசம். அதேமாதிரி ஒரு பெரிய தவிப்பு. என்னுடைய உள்ளே இருந்த சாஃப்ட்வேர் முழுக்க திரும்பி இன்ஸ்டால் செய்வதைமாதிரி இருந்த்து. பூதனையை பூமியாகப் பார்ப்பதெல்லாம் இந்தமாதிரி ஒருநாவல் வழியாகத்தானே முடியும்?
வி.ஆர். கிருஷ்ணன்
அன்புள்ள கிருஷ்ணன்
அந்தக் குருதியிலாடி வரும் காட்சி பாகவத்த்திலே உள்ளதுதான்
ஜெ