பித்தின் விடுதலை

p224076_2a

ஜெ சார்

நீலம் வாசித்து வாசித்து நானே ஒரு வகையான தனிமைக்குள் போய்விட்டேன். எனக்கு தனிமையோ அல்லது அதேமாதிரியான உணர்ச்சிகளோ சாதாரணமாக கிடையாது. நான் உற்சாகமானவள். ஆனால் மனத்துக்குள் ஒரு பெரிய தனிமை இருந்துகொண்டிருக்கிறது என்ற எண்ணத்தை நீலம் வாசித்தபோது அடைந்தேன்.

அது என்னது என்றுதான் யோசித்துக்கொண்டிருந்தேன். பெண்ணாகப்பிறந்துவிட்டதனாலேயே ஒரு வகையான அடைபட்ட நிலைமை வந்துவிடுகிறது. கன்னுக்குட்டியை கட்டிப்போட்டிருப்பதுமாதிரி. எங்கோ ஒரு இடத்திலே நம்மால் மேலே போகமுடியாது என்று தோன்றும். நான் சமூகக் கட்டுப்பாடுகளை மட்டும் சொல்லவில்லை. அதெல்லாம் உண்டுதான். நான் சொல்வது வேறுமாதிரி. நாமே நமக்கு உணரும் கட்டுப்பாடுகள். குடும்பம் அந்தமாதிரி. அதேமாதிரி உடம்பு. நம்மை யார் என்ன நினைப்பார்கள் என்ற நினைப்பு. இதெல்லாம்

ராதை மாதிரி பிச்சியாக இருந்தால்தான் அதையெல்லாம் தாண்டி போகமுடியும் என்று தோன்றியது. அவளுக்கு அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. அவள்பாட்டுக்கு சிறகு முளைத்து பறந்துபோய்விடுவாள். ஆனால் அவளுடைய மனசுக்குள் எல்லாம் உடையவேண்டும். பெண் என்று அவள் நினைத்துக்கொண்டிருக்கிற எல்லா அடையாளங்களையும் அவள் இல்லாமலாக்கி விடவேண்டும்

அவளே கண்ணனுக்காகக் காத்திருக்கும்போது அதைத்தான் உணர்கிறாள். கரைகடக்கலாகாத நதி. சிறைப்பட்டு சிறகிழந்த கிளி. காட்டில் அன்னை மறந்து சென்ற கன்று. தன்னுள் ஊறி தானே வற்றி மறைந்து உலரும் காட்டுச்சுனை. ஓடு உடைக்க முடியாத பறவை. தான் சுற்றிய கூட்டுக்குள் சிறைப்பட்ட பட்டுப்புழு. எத்தனை அகநாடகங்கள் வழியாக என்னை அமைத்துக்கொள்கிறேன். இதெல்லாம் வர்ணனைகள். இப்படியெல்லாம் சொல்லியும்கூட சொல்லமுடியாத அந்த நிலையைத்தான் பலவார்த்தைகளிலே சொல்கிறீர்கள்.

இந்த வர்ணனையிலே ஒவ்வொரு வரியையும் உடைத்து உடைத்து வாசித்துப்பார்த்தேன். நதிக்கு கரை கடக்கமுடியாது. ஆனால் அது அதுவே ஓடி ஓடி உண்டுபண்ணிய கரை அது. அது நம்முடைய இயல்பு. சிறைபட்டு சிறகிழந்த கிளி. அது நம்மை பிறர் கட்டுப்படுத்துவது. அன்னை மறந்துவிட்ட கன்று என்பது சொந்தமும் தெய்வமும் எல்லாம் விட்டுவிட்ட நிலை.

தானே ஊறி வற்றும் காட்டுச்சுனை என்பது நமக்குள்ளே ஊறி வற்றும் உணர்ச்சிகள். தானே சுற்றிய கூட்டுக்குள் சிறைப்பட்ட புழு என்பது நம் என்ணங்கள். இந்த இரண்டும்தான் எனக்கு பகீரென்று ஆகிவிட்ட்து. இதெல்லாம் நம் பிரச்சினை. நாமே நம்மைச்சுற்றி கூடை கட்டி அதுக்குள் சிறையிருக்கிறோம். நாமே ஊறி நாமே மறைகிறோம். பெண்களுக்கு இருக்கும் பிரச்சினையே இந்த ரகசியமான day dreaming and Self pityness என்ற பிரச்சினைதான்.

ஆனால் ராதை அதிலே இருந்து தன்னை உடைத்துக்கொண்டு ஓடிவிடுகிறாள். அவளுக்கு அந்த விடுதலை காமம்  வழியாக வருகிறது. அது காமம் இல்லை. பைத்தியம். பைத்தியம்தான் அப்படி உடையெல்லாம் வீசிவிட்டு ஓடும்

நாமிருவரும் இன்றிருக்கும் இவ்வுலகில் நீறி எரியட்டும் நெறிநூல்கள். மட்கி மறையட்டும் மூத்தோர் சொற்கள். இங்கு சட்டங்களில்லை சாத்திரங்களேதுமில்லை. அறமில்லை ஆளும் தெய்வங்களும் இல்லை. கோலேந்தி பீடம் கொண்டிருப்பது ஏழுலகின் மேல் எழுந்து நிற்கும் காமம்.

அவளுடைய வரிகளை வாசித்துக்கொண்டே போனபோது முன்பே வாசித்த அந்த எல்லா கட்டுகளும் உடைந்துவிட்டன என்ற எண்ணம் வந்த்து. அந்த வரிகள் முன்னரே வந்த வரிகளுக்கு பயங்கரமான காண்டிராஸ்டாக இருந்தன.

கதவுண்டு காற்றுக்கு. சாளரத் திரையுண்டு ஒளிக்கு.வேலியற்றது வாசம். வாசமென்றெழுந்த காமம்.என்ன விதி, ஏது நெறி? எங்குளது காமத்தை ஆளும் கருத்துறும் சொல்? தன் வால்நுனித்தவிப்பை விழுங்கத்துடிக்கும் பாம்பின் வாய். தன்னை நிறைத்தெரியத்தவிக்கும் நெருப்பின் செம்மை

அந்த பைத்தியத்தை உணரும்போதுதான் அவளைப்புரிந்துகொள்ள முடிகிறது. அவளை மிக பெர்சனலாக அறிந்தது மாதிரி இருக்கிறது

சி

mad

அன்புள்ள ஜெ

ராதை கிருஷ்ணன் உறவைப்பற்றி நிறைய ‘லாஜிக்கலான’ கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவற்றுக்கு ஒன்றுமே பதில் சொல்லமுடியாது. அவள் இன்னொருத்தரின் மனைவி. வயசு மூத்தவள். அவளுக்கு சின்னவயசு முதல் தெரிந்த குழந்தை. தப்புதான் என்றுதான் தோன்றும். ஆனால் ஒரே வரியில் அதுக்கான பதில் உண்டு. அவளுக்கு பித்து என்பதுதான் அது.அதைவிட பெரிய பதில் ஒன்றுமே இல்லை அதை அற்புதமாக காட்டியிருக்கிறீர்கள்

கண்ணன்

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

மரபின் மைந்தன் முதற்கனல் பற்றி எழுதும் தொடர்

முந்தைய கட்டுரைகாலமும் வெளியும்
அடுத்த கட்டுரைநூறுநாற்காலிகளின் யதார்த்தம்