காலமும் வெளியும்

krishna-02

ஜெ

நீலமணிக்கண்ணனும் ராதையும் மலர்சொரிந்துவிட்டனர். சொல்மலர். ஆன்மாவை உலுக்கும் வினாக்கள், ஆழமான காதல், பித்துநிலை. அவர்கள் நீங்கள் விரித்த மலர்க்கம்பளத்தில் நடனமிட்டார்கள்

உண்மையில் நான் ராதையின் பரிதவிப்பும் பரவசமும் முடிவடைந்தபோது சற்று ஆறுதல்தான் அடைந்தேன். அது சாதாரண மனித மனதுடனும் வாழ்க்கையுடனும் மேலும் நெருக்கமானதாக இருந்ததுதான் காரணமாக இருக்கலாம். நீலம் தனிப்பட்டமுறையில் துயரத்தையும் ஆனந்தத்தையும் அளிக்கும் நரம்பைத் தீண்டிவிட்டது. கண்ணன் நீலக்கண்மணியாக மாறி நீலக்கடம்பின் கீழே நின்று புல்லாங்குழல் இசைத்தபோதுதான் நிம்மதியே திரும்பிவந்தது. மாயக்கண்ணன் ராதையை உயிர்கொடுத்து பக்தர்களின் நெஞ்சில் அழியாது வாழச்செய்துவிட்டார்

அற்புதமான கதை. உங்கள் இன்னொரு சிறந்த படைப்பு

அன்புடன்

சோபனா அய்யங்கார்

saver_of_world_by_sanjay14-d5hqz0a

அன்புள்ள ஜெ சார்

நீலம் மீண்டும் மீண்டும் வாசிக்கச்செய்த கதை. கதையாக அதிலே ஒன்றும் இல்லை. அந்தக்கதைகள் எல்லாமே சின்னக்குழந்தைகளுக்குச் சொல்லும் மாயாஜாலப்புராணக்கதைகள்தான். பூதனை மோட்சமெல்லாம் பலமுறை கேட்டவைதான். ஆனால் உங்களுடைய மொழியில் அவையெல்லாமே எங்கோ போய்விட்டன.

உதாரணமாக ரோகிணி சின்னக்கண்ணனை மடியிலே வைத்து மேகத்தை நோக்கி சொல்லும் கதை .அது வேதாந்த விளக்கமாகவும் இன்றைய காஸ்மாலஜியாகவும் இருந்தது. ஒரு புராண கதைக்கட்டமைப்புக்குள்ளே அதைப்பார்த்தது பரவசத்தை அளித்தது. பிளாக் ஹோலை ஒரு பன்றியின் கண் என்று வெண்முரசிலே வாசித்தது நினைவுக்கு வந்து மெய்சிலிர்த்தேன்.

நீலம் முழுக்க வரும் உதிரி வரிகள் கவிதையா தரிசனமா என்று தெரியாமல் தெறித்து விழுந்துகிடக்கின்றன. இப்புவியில் சிறுபாதம் சூடும் சிரம்போல அழகியதோ மண்ணாளும் மன்னவரின் மணிமுடி? என்பது போன்ற உணர்ச்சிகரமான வரிகள் ஏராளம் . ஆனால் சில இடங்கள் தியான அனுபவத்தைச் சொன்னதுபோல அல்லது ஒருவகை காஸ்மிக் இமேஜினேஷன் மாதிரி பிரமிக்கவைத்தன

உதாரணமாக விண்சுடர்கள் எல்லாம் விழிவிரித்து நின்றிருக்கும். தோன்றுவது மறைவதில்லை. நிகழ்வது நேற்றாவதில்லை. காலம் சுழித்து கடந்து செல்வதில்லை. நீரோடைகளிலே நிழலாட்டம் ஏதுமில்லை. நெஞ்சில் எழுந்த நினைவேதும் மறைவதில்லை. ஒருகணமே முடிவிலியாய் ஓர் இமைப்பே முழுதுலகாய் ஒரு நினைப்பே முழுவாழ்வாய் ஆகிநிற்கும் கனவுவெளி. அங்கே கோடானுகோடி யுகங்கள் வாழ்ந்திருந்தார். கண்ணன் குழலிசைக்கும் இசையாக அங்கிருந்தார் என்ற வரிகள். நிகழ்வது நேற்றாக ஆகாத ஒரு இடம். நெஞ்சில் எழுந்த நினைவு மறையாமலிருப்பது. காலமில்லாத தன்மையை பிரமிக்கச்செய்யும்படிச் சொல்லிவிட்டீர்கள் என்று தோன்றியது. அது கண்ணனின் இசையும்கூட

அக்ரூரர் கண்ணனின் இசையை கேட்கும் இடமும் இதேமாதிரி முழுக்கமுழுக்க சைக்கடெலிக்கானது. இந்த அனுபவத்தை எழுதிவிடமுடியும் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. பெருவெள்ளமெனச் சுழித்தோடிய என் காலடி நிலம் எழுந்து வானாகி வானவெளியின் கால்வைத்தோடி குனிந்து நிலம் சுழன்று என் கால்நோக்கி வரக்கண்டேன். நாலாயிரம் கோடி காதம் நான்கு நொடியில் கடந்து செல்லும் கனவின் கடுவிரைவு. நடுவே வாய் விரித்த அகழியைத் தாவி மறுபக்கம் சென்று அதைவிடப்பெரிய அகழியைக் கண்டு அதைத்தாவி மற்றொரு தாவலுக்கு அதையே விசையாக்கி தாவித்தாவி கடந்து கடந்து சென்று ஒருகணத்தில் காலுணர்ந்த வெறுமையில் அடியிலா விழுதலை அறிந்து அகம் நடுங்கி அமைந்தேன். இதழ்போல இறகுபோல நான் சென்றிறங்கிய கரும்பாறை மேட்டைச் சூழ்ந்து கருவானம் விரிந்திருக்க ஒளிவிண்மீன்கள் செறிந்திருக்கக் கண்டேன். விண்மீன்கள் அல்ல விரித்த படம்கொண்ட பெருநாக விழிகள் அவை என்று அறிந்தேன். இமையாவிழிகள் இல்லாத காலத்தில் என்றென்றும் என அமைந்திருந்த எல்லையற்ற வெளி. அங்கே நானும் இரு விழியானேன். இருத்தலின்றி இருந்தேன்.

கனவு அனுபவம் என்று சொல்லிவிடலாம். எனக்கு தியானத்தில் இந்த அனுபவம் வந்திருக்கிறது. அதைவிட ஒரு பெரிய ஆபரேஷனுக்காக அனஸ்தீஷியா கொடுத்து உள்ளே போவதற்கு முன்னால் இதே அனுபவம் வந்திருக்கிறது. இதிலே உள்ளது தொடர்ச்சியான இமேஜ்கள். அந்த flow நிற்பதே இல்லை. நிலம் வானாகிறது. கண்மண் தெரியாமல் விழுவதுமாதிரியே பறப்பது. அள்ளி அள்ளி பிடித்துவிட தவிப்பது. எங்கோ விழுந்து விழும்போது எடையில்லாமல் இருப்பதைப் பார்ப்பது

முடிவேயில்லாமல் சென்றுகொண்டே இருப்பதை நாலைந்து வரிகள் சொல்லிவிடுகின்றன. நாகங்கள் தெரிகின்றன. நாகக் கண்கள் விண்மீன்களாக மாறிய பெரிய வெளி தெரிய ஆரம்பிக்கிறது

பிரகாஷ்

வெண்முரசு குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விவாதங்கள்

முந்தைய கட்டுரைசமணமும் மகாபாரதமும்
அடுத்த கட்டுரைபித்தின் விடுதலை