ஜெ சார்
நீலம் வாசித்துமுடித்ததும் ஒரு பெரிய ஏக்கம். வாசிப்பது ஆரம்பத்திலே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. நான் வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்டிருந்த பாகவதம் இரண்டு வால்யூம் வாசித்ததோடு சரி. ராதை கிருஷ்ணன் விஷயமெல்லாம் கொஞ்சம் சுமாராகத்தான் தெரியும். எங்களூரில் பஜனைமடத்தில் சூரி என்பவர் ராதாகிருஷ்ண கல்யாணம் நடத்துவார். ஜெயதேவர் அஷ்டபதி எல்லாம் பாடிக்கேட்டிருக்கிறேன். ஆனால் அதெல்லாமே சின்னவயசு. பெரியதாக ஏதும் மனதில் ஏறவில்லை,
வட இந்தியா வந்தபின்னாடி ராதா பஜனை இங்கே வெகு விசேஷமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ராதைக்கு திருமணம் ஆகி கணவன் நாத்தி மாமியார் எல்லாம் இருப்பதை இந்த நாவலை வாசித்துத்தான் தெரிந்துகொண்டேன். ராதை கிருஷ்ணனைவிட 9 வயசு மூத்தவள் என்பதும் எனக்கு பெரிய செய்திகள்தான். நான் அதற்குப்பின்னால் போய் தேடிப்பார்த்தேன். 12 வயசு மூத்தவள் என்று போட்டிருந்தது. கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நான் ராதையை ரொம்பச்சின்னப்பொண்ணாகத்தான் நினைத்திருந்தேன். படங்களெல்லாம்கூட அப்படித்தான் இருக்கும்.
ஆனால் அந்த தயக்கமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. ராதைக்கு புல்லாங்குழலிசை கேட்கும் இடம் வந்ததும் எனக்கே தலைக்குள் சத்தம் கேட்பது மாதிரி ஆகிவிட்டது. இங்கே விசாரித்தபோது மனநோய் கொண்டவர்களுக்கு அப்படி சத்தம் கேட்கும் என்றார்கள். உண்மையிலேயே ராதைக்கு ஒரு மனநோய்கூட இருந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அந்த இசை அவளுக்கு பித்துப்பிடிக்கவைக்கிறது. அதோடு அந்த பிரேமையினுடைய எல்லா லௌகீக ஞாயங்களும் இல்லாமலாகிவிடுகிறது இல்லையா?
ஆரம்பத்திலே அவளுக்குப் பெரிய தயக்கம் இருந்திருக்கிறது. அவளை கிருஷ்ணன் பார்த்தபார்வை அவளுக்குப்பெரிய அதிர்ச்சி என்றுதான் நான் முதலில் அந்த அத்தியயாத்தைப்பார்த்தபோது நினைத்தேன். பாகவதத்திலே சாதாரணமாக கிருஷ்ணன் கோபியரின் உடைகளை திருடி விளையாடினான் என்று வரும் இடம் இங்கே கதையில் மிக முக்கியமானதாக அமைந்துவிட்டது. ராதை கிருஷ்ணனின் கண்களை பயப்படவில்லை என்று பிறகு புரிந்துகொண்டேன் ஏனென்றால் கண்னன் கண்களிலே காமம் இல்லை. உங்கள் கண்களைத்தான் பார்க்கிறேன் என்று அவரே சொல்லிவிட்டாரே.
ஆனால் ராதை பயபப்டுகிறாள். என்ன காரணமென்றால் அவளுக்கு அவள்மேல்தான் பயம் .அவன் அவளுடைய உடம்பைப்பார்த்ததுமே அவள் நடுங்கிவிட்டாள். ஏனென்றால் அப்போது அவளுடைய மனசு என்ன பதில் செய்தது என்று அவளுக்குத்தானே தெரியும். அதனால்தான் உடனே வீட்டுக்கு ஈர உடம்புடன் ஓடிப்போய் ஒடுங்கிக்கொள்கிறாள். கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறாள். இன்றைக்கும்கூட பெண்கள் செய்யும் விஷயம்தானே இது.
ஆனால் அத்துடன் அந்த சங்கீதம் மேலே எழுந்து கேட்க ஆரம்பிக்கிறது. அந்த சங்கீதம் அவளே உருவாக்கிக்கொண்டது. புல்லாங்குழலை ஒடித்து அவனுக்குக் கொடுத்தவளே அவள்தானே. அந்த இசையிலே அவள் விழுந்துவிட்டாள். அவளால் கரையேறவே முடியவில்லை. அவள் எட்டு நிலைகளில் இருப்பதை நீங்கல் அளித்திருந்த படங்கள் வழியாகத்தான் தெரிந்துகொண்டேன். அது ஆச்சரியமாக இருந்தது. ஆற்றியிருந்து ஒரு கட்டத்திலே முடியாது என்று அபிசாரிகையாக அவள் ஓடிப்போகும்போது அவளுக்கு உலகத்தில் உள்ள எல்லா கட்டுப்பாடுகளும் ஒரு விஷயமே இலலை என்று தோன்றுகிறது. இது இல்லாமல் வேறு ஒன்றுமே பெரியவிஷயம் இல்லை என்று தோன்றுகிறது. பெண்களுக்கு பலசமயம் அப்படியெல்லாம் தோன்றும். ஆண்களுக்கு அப்படி தோன்றுமா என்று தெரியவில்லை.
அவள் செல்கிறாள். கண்ணனுடன் இருக்கிறாள். அங்கேயும்கூட அவளுக்கு பெண் என்கிற அகங்காரம் அடிபடக்கூடாது என்று தோன்றுகிறது. அதற்கு அவள் தயாராக இல்லை. இசையிலே கரைந்துபோகிறாள். கடைசியில் கிருஷ்ணன் வந்து குழலூதுகிறான். அந்த இடத்திலே நான் நினைத்தேன். அந்த வண்டு மூங்கிலை துளைப்பது. பொன்னிறமான மூங்கில்தான் ராதை. வண்டுதான் கண்ணன். அதேபோல சிவந்த தம்பலப்பூச்சி ராதையின் இதய, கருமையான குழியானை கண்ணன். அப்படி அவளைத் துளைத்து இசையை உருவாக்கினான். அவள் இதயத்தை உடைமையாக்கினான்.
அவனே அந்த புல்லாங்குழலுடன் வந்து நிற்கிறான், அவள் கொடுத்த குழலால் அவளுக்கு இசையை காணிக்கையாக்குகிறான். அற்புதமான முடிவு. அந்த இடத்திலே கண்ணீர்விட்டுவிட்டேன். என் மனம் அப்படி நிறைந்த ஒரு சந்தர்ப்பமே என் வாழ்க்கையிலே இல்லை. நான் மனசுக்குள்ளே தேடியதெல்லாம் இதுதான். இதைத்தான் வேறுவகையாக எல்லாம் மனசுக்குள் ஓட்டிக்கொண்டிருந்தேன். இதைவாசித்ததும்தான் நானும் ராதைதான் என்று தெரிந்துகொண்டேன் [பெயரைப் போடவேண்டாம்]
ஆர்
அன்புள்ள ஜெ சார்
நீலம் வாசித்து மனம் நெகிழ்ந்துபோன வாசகிகளிலே நானும் ஒருத்தி. அதன் மொழி எனக்கு முதலிலே கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் பாராயணம் மாதிரி தினமும் கொஞ்சம் வாயால் சொல்லிக்கொண்டே வாசித்தேன். அதிலே உள்ள எதுகைமோனை செய்யுள் வாசிப்பதுமாதிரிஇருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த மொழிநடை என்னை உள்ளே இழுத்துக்கொண்டது. நான் அதிலே கரைந்துபோய்விட்டேன்
கண்ணனை ராதை அவளே உண்டுபண்ணிக்கொண்டாள். அவள் அவனுக்கு அமுதூட்டுகிறாள். பெயர் போடுகிறாள். அவனுடைய மயில்பீலி, புல்லாங்குழல் எல்லாமே அவள் கொடுத்தது. அவள் கொடுத்த மயில்பீலியையும் புல்லாங்குழலையும் ஏந்தி அவன் வந்து அவள் முன்னால் நிற்கிறான்
அவர்கள் முதலில் புல்லாங்குழல் கேட்கும் இடம் மிக உக்கிரமானது. மெதுவாக தோட்டத்தில் மூங்கிலிலே கேட்க ஆரம்பிக்கும் அந்த சங்கீதம் அவளை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டு பைத்தியமாக அடித்து அப்புறம் விடுதலையை அளிக்கிறது என்பதை வாசித்தபோது மனம் விம்மியது. கடைசியில் அந்த இசையே அவளுக்கு நாதோபாசனையாக ஆனது நிறைவூட்டியது
புல்லாங்குழல் கேட்டுக்கொண்டே இருந்தது நாவல் முழுக்க. ஒரு நாவல் வார்த்தையாக எழுதப்படுவது. அது இப்படி சங்கீதமாக மாறி நாள்கள்கணக்காக மனசுக்குள் ரீங்காரம் போடுவது அற்புதமானதாக இருந்தது
என்பெயர் கூட ராதாதான்
ராதா முருகேஷ்