இந்திய சுற்றுப்பயணம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெ

அக்காமலையின் அட்டைகள் கட்டுரை நன்றாக இருந்தது. தன்னந்தனியாக கடந்த 495 நாட்களாக கடலில்சென்றுகொண்டிருக்கும் ஒரு அமெரிக்கரின் அனுபவங்களை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அவருக்கு ஒரு இணைய தளம் உள்ளது. அனேகமாக தினமும் அது படங்கள் மற்றும் அன்றாட அனுபவங்கள் சிறப்பனுபவங்கள் ஆகியவற்றுடன் வலையேற்றம் செய்யப்பட்டுவருகிறது. அவரது இலக்கு 1000 நாட்கள் கரையையே தொடாமல் தன்னந்தனியாக கடலிலேயே பயணம்செய்வது. பொருட்கலைப் பெறுவதோ மனிதர்களைப் பார்ப்பதோகூட கிடையாது. அவர் ஒரு தோழியுடன் அப்பயணத்தை தொட்ங்கினார். அவள் கருவுற்றதனால் பயணத்திலிருந்து விலகிவிட்டார் .குழந்தைபிறந்துள்ளது.

ஒரு மனிதர் கடலில் தனியாக ஒருவருடத்துக்கும் மேலாக சென்றுகொண்டிருப்பதென்பது மிகவும் வியப்பூட்டுகிறது. அவர் எப்படி சாப்பிடுகிறார் எப்படி தூங்குகிறார் எப்படி உடல் ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்கிறார் எப்படி பருவநிலைகளை கணிக்கிறார் எல்லாமே ஆச்சரியமான செய்திகளாக உள்ளன..ஒவ்வொருநாளும் அவர் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதனால் நாமும் அவருடன் செல்லும் உணர்வு உருவாகிறது. புயல்களை அவர் தன்னந்தனியாகச் சமாளிக்கும் விதம் என்னை பிரமிக்கச் செய்தது.

இச்செய்தியை உங்கள் இணையதளத்தில் பிரசுரிக்கலாமென்று எண்ணுகிறேன். அந்தத பார்க்க http://1000days.net/home/
 
N.லோகநாதன்

***

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

என் கடிதத்தை படித்து, உங்கள் தளத்தில் வெளியிட்டு, அதற்கு பதிலும் அளித்தமைக்கு மிக்க நன்றி.

     காலையில் உங்கள் கட்டுரையை படித்தவுடன் மனதில் உடன் தோன்றியவற்றை உடனே கடிதமாக எழுதினேன். யோசித்து பார்க்கையில் இது குறித்து எழுத நிறைய இருக்கின்றது என தோன்றுகிறது. என்னுடைய சிறு வயதில் என் அம்மாவின் கடும் எதிர்ப்புக்கிடையில் என் அப்பா என்னை அருகில் உள்ள மலைக்கு அழைத்து சென்றார். ஒரே மழை. மலையடிவாரத்தில் மழையில் நனைந்து கொண்டு  நீண்டநேரமாக நின்று கொண்டிருந்தோம். மலையை சரியாய் பார்க்க இயலவில்லை.  அன்றைக்கு எனக்கு ஏற்பட்டது ஒரே எரிச்சல்தான். கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு பிறகுதான் அந்த காட்சியின் Magnificent எனக்கு புரிந்தது. அதற்கு பிறகு, என் பள்ளியிறுதி வகுப்பில் என் எதிர்காலம் பற்றி கேட்ட கேள்விக்கு பயண எழுத்தாளர் ஆவது என சொல்லி அன்றைய தினம் அனைவராலும் கேலி செய்யப்பட்டேன்.

 பயணம் குறித்து நீங்கள் இன்னும் எழுதவேண்டும் என ஆசைபடுகின்றேன். நமக்கு சுற்றுலாவிற்கும் பயணத்திற்கும் உள்ள வேறுபாடு தெளிவாக தெரியும்வரை. அதேபோல் உங்கள் பயண அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. தற்போதைய பள்ளிகளில் இன்ப சுற்றுலா என்று அழைத்து போவது பெரும்பாலும் Amusement Parks தான். இந்த இலட்சணத்தில் அவர்கள் வளரும் சூழ்நிலையில் அவர்கள் அடுத்த தலைமுறைகளையும் தங்கள் சொந்த ஊரைவிட்டு 20 கி.மி. தாண்டாவண்ணமே வளர்க்க முடிகிறது. துாரத்தில் உள்ள கல்லுாரியில் சேர்க்கும்போது ஒரே அழுவாச்சியாக இருக்கும். சமவெளியில் நம்மால் சுவர்களின்றி நிச்சயம் வசிக்க இயலாத நிலையில் தான் உள்ளோம்.

     தமிழில் நல்ல பயண நுால்கள் பற்றி படிக்க விருப்பம். ஆங்கிலத்தில் கொட்டி கிடக்கின்றன. இதுவரைக்கும் படித்ததில் எனக்கு பிடித்தது Seven Years in Tibet and Snow Leopard. தமிழில் எஸ் இராமகிருஷ்ணன் எழுதிய “தேசாந்திரி” ஒரு அருமையான பயண நுால். உங்களின் “பனி மனிதன்” கதையில் கூட மலையேற்றத்தை பற்றி சுவாரஸ்யமாக சொல்லியிருப்பீர்கள். ஆனால் அந்த கதை முற்றுப் பெறாமலேயே உள்ளது என நினைக்கிறேன். வெ சாமிநாத சர்மாவின் நடை பயணம் பற்றி ஒரு நுால் அதையும் படித்திருக்கின்றேன்.  சில பயண நுால்கள் “நான் பாருக்குள்ளே போகும்போது அங்கே ஒரு ஷோக்கான பாப்பா இருந்திச்சி” என்ற ரீதியில் எழுதப்பட்டிருக்கின்றன. வேறு ஏதேனும் நல்ல பயண நுால் இருந்தால் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) இருந்தால் தயவு செய்து சொல்லவும்.

Thanks

Joseph Mani

***

அன்புள்ள ஜோசஃப்
பல நூல்கள் உள்ளட்ன

தி ஜானகிராமன் ‘நடந்தாய் வாழி காவேரி’ ஒரு முக்கியமான நூல்.தலைக்காவேரி முதல் பூம்புகார் வரையிலான பயணத்தைப்பற்றிய நூல்.

தமிழில் மொழிபெயர்ப்பாகிவந்த நூல்கலில் ராணி சந்தா எழுதிய பூர்ணகும்பம் [கும்பமேலா அனுபவங்கள்] காகா காலேல்கர் எழுதிய ஜீவன் தாரா என்ற நூலும் [இந்திய நதிகளை பற்றிய பயணக்கட்டுரை] தாகூரின் பயணக்கட்டுரைகளும் கிளாசிக் வகையைச்சார்ந்தவை
ஜெயமோகன்

அன்புள்ள ஜெயமோகன்

நீங்கள் நண்பர்களுடன் ஒரு இந்தியப்பயணம் [ இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம் ]செய்யவிருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நான் கல்லூரி நாட்களில் பைக்கில் சில சிறு பயணங்களைச் செய்ததுண்டு. இப்போது விடுமுறைகளில் பயணங்கள்செல்ல ஆசைபப்டுவேன். ஆனால் முடிவதில்லை. அதற்கான நட்போ சூழலோ இல்லை. உலகம் சுற்றிக் கொண்டே இருக்கிறேன். ஆனால் அவை எவையுமே சுற்றுலாப் பயணங்கள் அல்ல. அலுவலகப் பயணங்கள். உதாரணமாக நான் சீனாவுக்கு ஏழுமுறை சென்றிருக்கிறேன். சீனபெப்ருஞ்சுவரையோ தடைசெய்யபப்ட்ட நகரையோ பார்த்தது இல்லை. அலுவலகப் பயணங்களில் அந்த மனநிலையே வாய்ப்பதில்லை. நீங்கள் கிட்டத்தட்ட விட்டுவிடுதலையான மனநிலையில் இருந்துகொண்டிருக்கிறீர்கள். உங்களைப்பார்த்து பொறாமைப்படுகிறேன். ஓர் எழுத்தாளன் வாழவேண்டிய வாழ்க்கை உங்களுக்கு அமைந்திருக்கிறது…என் வாழ்த்துக்கள்

துரை.அரங்கராசன்

***

ஜெ,

இந்தியாவின் குறுக்குத்தோற்றம் ஒன்றை நீங்கள் பார்க்கப்போகும்செய்தி கண்டு மனமகிழ்ச்சி அடைந்தேன். அற்புதமான திட்டம். சாதாணமாக நண்பர்கள்செல்வதற்கும் எழுத்தாளர் செல்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. நீங்கள் மனதில் பதியவைக்கும் ஒவ்வொரு விசயமும் முக்கியமானது. போகும் இடங்களை முடிவாக தீர்மானிக்காமல்தான் செல்வீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். பயண அனுபவங்களை நல்ல கட்டுரைகளாக எழுதுங்கள்

சுப்ரமணியம் குமரசாமி

**

அன்புள்ள ஜெ,

இந்தியப்பயணம் பற்றிய செய்தி உற்சாகத்தை அளித்தது. வாழ்த்துக்கள். உங்கள் அனுபவங்களை நீங்கள் வாசகர்களுடம் பகிர்ந்துகொள்ளுங்கள். இணையம் வழியாக புகைப்படங்களையும் செய்திகளையும் உடனுக்குடன் அனுப்ப முடியுமல்லவா? நாங்கள் இந்தியாவிலிருந்து விலகி எங்கோ இருக்கிறோம். பிரிந்திருக்கும் அந்த மண் மீது மோகம் கொண்டவர்களாக இருக்கிறோம். உங்கள் குறிப்புகள் வழியாக நாங்களும் இந்தியாவை பார்க்கமுடியுமே.. பயணத்துக்கான ஏற்பாடுகள் எல்லாவற்றையுமே இணையத்தில் ஏற்றுங்கள். உங்கள் இணையதளத்தில் எனக்கு மிகவும் பிடித்திருப்பதே உங்கள் பயணக்குறிப்புகள்தான். சுருக்கமானவை ஆனாலும் மிகவும் ஆர்வமூட்டுபவை அவை.

வி.ஜானகிராமன்

***

இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம்

முந்தைய கட்டுரைசெங்காடு
அடுத்த கட்டுரைஇந்தியப்பயணம்:கடிதங்கள்