நான் குமரிமாவட்டம் பத்மநாபபுரத்தில் வாழ்ந்தபோது பேருந்து நிறுத்தத்துக்கு எதிரே ஒரு சுற்றுச்சுவருக்குள் நின்றிருந்த ஆலமரத்தடியின் மேடையில் ‘குரு ஆத்மானந்தர் தன் குருவைக் கண்டடைந்த இடம் இது’ என்ற வரிகளை வாசித்தேன். பலமுறை அந்த இடத்தைக் கடந்துசென்றபோதும்கூட ஆத்மானந்தரை அறிய நான் அதிக முயற்சி எடுத்துக்கொள்ளவில்லை.
தற்செயலாகத்தான் அவரது பெயர் கிருஷ்ணமேனன் என்றும் உலகப்புகழ்பெற்ற வேதாந்த ஞானி என்றும் அவரைச் சந்திக்க சி.ஜி.யுங், ஜூலியன் ஹக்ஸிலி போன்றவர்கள் வந்திருக்கிறார்கள் என்றும் தெரிந்துகொண்டேன். அவரைப்பற்றி சுந்தர ராமசாமி பலமுறை சொல்லியிருக்கிறார். க.நா.சு அவரைப்பார்க்க வந்திருக்கிறார். ராஜாராவ் அவரை தன் குருவாக நினைத்தார்.
Waves are nothing but water-so is the sea’என்னும் அவரது வரி க.நா.சுவுக்கு மிகவும் பிடித்தமானது. சுந்தர ராமசாமிக்கும். என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார். அவர்தான் ஆத்மானந்தா என்று பிந்தித்தான் அறிந்துகொண்டேன்.
ஆத்மானந்தரின் வாழ்க்கையில் மூன்று முகங்கள் உண்டு. அவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் காவல்துறை உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றார். கூடவே வேதாந்த ஞானியாகவும் இருந்தார். காலை எட்டுமணிவரை வேதாந்த வகுப்பு எடுப்பார். சீருடை அணிந்து அலுவலகம் கிளம்பிவிடுவார்.
இன்னொரு முகம் அவரது வாழ்க்கையின் பிற்காலத்தில் வந்தது. பழுத்த வேதாந்தியான அவர் திடீரென்று ராதாமாதவ உபாசனைக்குள் சென்று ராதையாகவே சிலவருடங்கள் வாழ்ந்தார். அப்போது அவர் எழுதிய ராதாமாதவம் என்னும் இசைப்பாடல்கள் மிகவும் பிரபலமானவை.பின்னர் திரும்ப வந்து வேதாந்தம் கற்பித்தார். வேதாந்தஞானத்தின் இறுக்கத்தை அந்த நெகிழ்வின்வழியாக வென்றதாக அவர் சொல்லியிருக்கிறார்.
ஆத்மானந்தருக்கும் எனக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. அவரது அதே நிலப்பகுதியைச் சேர்ந்தவன் நான். வேதாந்தஞானமே எனக்கும் ஆதாரம். கூடவே உலகியல் வாழ்க்கையை கச்சிதமாகப் பிரித்து அதை சிறப்புறச் செய்யவும் கற்றவன்.
எனக்குள்ளும் ஒரு ராதாமாதவம் இருந்தது என உணரவைத்தது நீலம் எழுதிய நாட்கள்தான். கண்ணனை மிக அருகே கண்டறிந்த நாட்கள் அவை. இங்கில்லாமல் எங்கோ வாழ்ந்தேன்.என் மொழியில் வேய்குழல் இசையும் கலந்ததுபோன்று உணர்ந்தேன்
பழைய திருவிதாங்கூரைச் சேர்ந்தவன் நான். கேரளத்தில் பிறந்த எந்த இந்துவுக்கும் கிருஷ்ணபக்தி என்ற வலையில் இருந்து விடுபட முடியாது என்பார்கள். மூன்றுமழைக்காலமும் மாறாப்பசுமையும் கொண்ட மண் இது. பூக்களின் நிலம். நீரோடைகள், குளங்கள், மலைச்சரிவுகள், புல்வெளிகள், காடுகள் கொண்டது. இங்குள்ள இயற்கையின் நிரந்தரமான உணர்வுநிலை காதல்தான்.
கேரளம் முழுக்க கிருஷ்ணபக்தி வேரூன்றியிருக்கிறது. ஏராளமான கிருஷ்ணன் கோயில்கள் இங்குண்டு. என் வீட்டருகே நான்கு கிருஷ்ணன் கோயில்கள் இருந்தன.ஜெயதேவரின் அஷ்டபதி பாடல்களை கிருஷ்ணன் கோயில்களில் சோபானசங்கீதம் என்ற பேரில் பாடும் வழக்கம் உண்டு. அப்படிப் பாடுவதற்கே ஒரு பொதுவாள்- மாரார் என்னும் ஜாதிகளும் இருந்தன.கேரளத்தின் பழமையான கலைவடிவம் கிருஷ்ணனாட்டம். அதிலிருந்து கதகளி வந்தது. கேரளத்தின் லாஸ்ய நடனவடிவமான மோகினியாட்டம் ராதையை மையக்கதாபாத்திரமாகக் கொண்டது.
அத்துடன் ராதாமாதவ பாவத்தை பரப்பிய ஞானியான சைதன்ய மகாப்பிரபு[1486 – 1534] திருவிதாங்கூருக்கு வந்து இங்கே கிருஷ்ணபக்தியை நிலைநாட்டினார். திருவட்டாரில் என் தந்தைவழிப்பாட்டியின் வீட்டுக்கு கூப்பிடு தூரத்தில்தான் அவர் தங்கியிருந்த மாளிகை இருந்தது. நான் அதன் இடிபாடுகளைப்பார்த்திருக்கிறேன். அவர் வழிபட்ட கிருஷ்ணன் கோயில் இப்போது பெரிதாக உள்ளது
அம்மனநிலைகள் என் உள்ளத்தில் இருந்திருக்கலாம். இதிலுள்ள பிருந்தாவனம் நான் பலமுறை சென்ற யமுனைக்கரை தோட்டம் அல்ல. குமரிமாவட்டத்தின் என்றும் பசுமைமாறாத சோலைகள்தான். நான் கண்ட கிருஷ்ணனும் இங்குள்ளவரே.
ஆகஸ்ட் 17 பின்னிரவில் இதன் முதல் அத்தியாயத்தை எழுதினேன். செப்டெம்பர் 24 மதியம் முடித்தேன்.நடுவே பயணங்கள். தொழில்சம்பந்தமான வேலைகள். ஆனால் நீலம் என்னுள் அறுபடாத ஓர் ஒழுக்காக இருந்துகொண்டே இருந்தது.
மகாபாரத நாவல்களான ‘வெண்முரசு’ வரிசையில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் ஆகியவற்றுக்கு அடுத்ததாக வருகிறது நீலம். இதற்கு அடுத்தநாவல் ‘பிரயாகை’. ஆனால் இந்நாவல் மகாபாரதத்தைவிட பாகவதத்தையும் ஜெயதேவரின் அஷ்டபதியையும்தான் அதிகமாக சார்ந்திருக்கிறது. மகாபாரதத்தின் கதைவெளிக்கு சற்று விலகி நிற்பது இந்நாவல். உணர்வுகள், மொழி அனைத்திலும்.
இந்நாவலுக்கு முதற்தூண்டுதலாக இருந்தவர் என் நண்பர் ஈரோடு கிருஷ்ணன். இணைஆசிரியராக என்னுடனே இருந்துகொண்டிருந்தார். அவருக்கு என் அன்பு. இதற்கு சிறந்த சித்திரங்கள் வரைந்து உதவிய ஷண்முகவேலுக்கும் ஏ.வி.மணிகண்டனுக்கும் பிழைதிருத்திய ஸ்ரீனிவாசன் சுதா தம்பதியினருக்கும், இணையதள நிர்வாகியான ராமச்சந்திர ஷர்மாவுக்கும் வெளியிடும் ‘நற்றிணை’ யுகனுக்கும் மனமார்ந்த நன்றி.
இந்நாவலை ஆத்மானந்தரின் நினைவுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்
ஜெயமோகன்
[நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் நீலம் நாவலின் முன்னுரை]
வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்
வியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்