அன்புள்ள ஜெயமோகன், நான் தங்களின் வலை தளம் மற்றும் நூல்களின் தீவீர வாசகன். என்னை இன்று வெகுவாக பாதித்ததை தங்களிடம் பகிரவே இக் கடிதம் கடந்த இரண்டு நாட்களுக்குள் எனக்கு whatsapp இல் கீழ்க்கண்ட வீடியோக்கள் நண்பர்கள் மூலம் பகிரப்பட்டது.1. மின்சார ரயில் கூரையில் ஏறி மின் கம்பியை தொட்டு உயிரை விடும் மன நோயாளியின் நேரடிகாட்சி.2. நேற்று வெள்ளை புலியிடம் சிக்கி உயிரிழந்த வாலிபன் பற்றிய நேரடி காட்சி (இதை என்னால் 3 நொடிகளுக்கு மேல் பார்க்க முடியவில்லை, ஆப் செய்து delete செய்துவிட்டேன்) 3.மனைவியின் தலையை கொய்து அதனுடன் இருக்கும் கணவனின் புகைப்படம்.
ஐயா, சக மனிதன் ஏதேதோ காரணங்களால் உயிர் இழப்பதை, எந்த மன உறுத்தலும் இல்லாமல் கைபேசியில் படமெடுக்கும் இந்த சமிபத்திய அரக்கத்தனம் மனித இனத்தை எங்கு கொண்டு செல்லும்?
மனித மனதின் அன்பின் ஊடகவும், குரூரத்தின் உச்ச நிலைகளையும் கதை, கட்டுரை மூலம் சொல்லும் (யானை டாக்டர், 3 சிறுத்தை 1 புலி, காடு நாவல் ) தாங்கள் இதற்கு கூறும் சிந்தனை மிக்க நல்ல பதிலால், தங்களின் ஏராளமான வாசகர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்ச்சி உண்டாகும் என்று உறுதியாக நம்புகிறேன். உங்கள் பதிலால் மனித மனங்களின் வக்கிரம் தணியும்.
குறிப்பு : நான் பார்க்க பயந்த புலி பட துணுக்கை (வீடியோ) என் உடன் பணி புரியும் பெண்கள் ஆர்வத்துடன் முழுதும் பார்த்தனர்.
அன்புடன்
சரவணகுமார்
வடசேரி
நாகர்கோயில்
அன்புள்ள சரவணக்குமார்,
இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது என்று புரியவில்லை. எப்போதும் மனிதனுக்கு உக்கிரமான நிகழ்ச்சிகள் மீது பெரிய ஆர்வம் இருக்கிறது. கொலை,தற்கொலை, விபத்துக்கள், அடிதடிகள், கலகங்கள்…
ஏனென்றால் அன்றாடவாழ்க்கை மிகவும் சலிப்பானது. தட்டையானது. அடிப்படை உணர்ச்சிகள் எதுவும் வெளிப்படாதது.ஆகவே வாழ்ந்த நிறைவையே அளிக்காதது. ஆகவேதான் நாம் பயணம் போகிறோம். சாகஸங்கள் செய்கிறோம்,
ஆகவே எந்த ஒரு தீவிரமான நிகழ்ச்சியையும் மனிதர்கள் தவறவிடுவதில்லை. கலவரங்களையும் தீவிபத்தையும் வேடிக்கைபார்க்கப்போய் சாகிறவர்கள்தான் அதிகம். 2004ல் சுனாமி வந்தபோது சென்னையில் சுனாமி தாக்கியதைக் கேள்விப்பட்டு அவசரமாக கடற்கரைக்கு வேடிக்கைபார்க்க ஓடிப்போனவர்கள்தான் குமரிமாவட்டத்தில் அதிகம் பலியானார்கள். [நானும் நாஞ்சில்நாடனும் சிலரும் போக முயன்றோம், வாகனம் சிக்கவில்லை]
சென்ற நூற்றாண்டில் ஊடகங்கள் இல்லாதபோது கொலை, விபத்து போன்றவை வாய்மொழிப்பாடல்களாக இயற்றப்பட்டு நாடோடிப்பாடல்களாகச் சந்தைகளிலும் முச்சந்திகளிலும் நீண்டபாடல்களாக பாடப்பட்டன. அவை பின்னர் சிறிய ‘குஜிலி’ பதிப்பு நூல்களாக வெளிவந்தன.நானே பலவற்றை கேட்டிருக்கிறேன். காசுகொடுத்து வாங்கவும் செய்திருக்கிறேன்.
எடத்துவாவின் யானை மிரண்ட கதை நினைவில்கூட இருக்கிறது.
அஞ்சாறுபேர் ஓடி அறையிலு கேறியே.
ஆனவந்நப்போள் அவிடே தூறியே
ஆனைப்பிண்ணம் கண்டல்லோ அம்மச்சி சத்துபோயீ!
ஆனமுடி கொண்டல்லோ அம்மிணி காஞ்ஞுபோயீ!
[சற்று கௌரவமான தமிழாக்கம்]
ஐந்தாறுபேர் ஓடி அறையில் ஒளிந்தனர்
ஆனைவந்தபோது அங்கே மலம் கழித்தனர்
ஆனையின் சாணியைக் கண்டுதான் பாட்டி செத்துப்போனாள்
ஆனையின் வால்முடி பட்டு அம்மிணி செய்த்துப்போனாள்
இந்தப்பாடலை பாடியவர் ஒரு முஸ்லீம்பாடகர். மஸ்தான் என்று பெயர். இவர்களெல்லாருமே மஸ்தான்கள்தான். இவர் தீப்பெட்டியில் படுவேகமாக இரண்டுவிரலால் தாளம்போட்டுப்பாடுவார். ஆகவே தீப்பெட்டி மஸ்தான் என்று சான்றோரால் அழைக்கப்பட்டார்.
எடத்துவாவின் யானை சொர்க்கத்துக்குப் போகிறது. ‘படச்சோன்’ அதனிடம் கணக்கு சொல்கிறார். ‘டா ஹமுக்கே நீ எப்டீடா பதினெட்டுபேரை மய்யத்தாக்கினே? ஹராம்பொறப்பே?’
யானை பதிலுக்கு பரிதாபமாக மன்றாடுகிறது
ரட்சகனாம் ஒடயதே ரண்டுவாக்கு கேக்கணே
ரண்டுதலை உண்டே அடியென்றே கணக்கிலே
பேடிச்சு சத்ததும் பனிபிடிச்சு சத்ததும்
பாவத்தின்றே குற்றமோ பறயீன் தம்புரானே
[ரட்சகனாகிய இறைவா இரண்டு வார்த்தை கேள்
என் கணக்கில் இரண்டு தலைதான் உண்டு
பயந்து செத்ததும் நடுங்கிச் செத்ததும்
பாவமாகிய என் தப்பா சொல்லு]
திருவனந்தபுரத்தின் புகழ்பெற்ற குஜிலிபாடகரான உண்ணிகிருஷ்ணன் மேனோன் ஆ.மாதவனின் எட்டாவதுநாள் என்ற குறுநாவலில் அழகிய கதாபாத்திரமாக வருகிறார். நானே அவரை பார்த்திருக்கிறேன். கொலை வர்ணனையில் ‘மாஸ்டர்’. தாசிகளையும் சிறப்பாக வர்ணிப்பார். சட்டம்பி கோமப்பன் வாக்கத்தி நாணுக்குட்டன் நாயரின் வயிற்றை குத்திக்கிழித்தபோது அவரது நாள்பட்ட வாயுப்பிரச்சினை காரணமக ‘காற்று’ அந்த துளை வழியாக வெளியே போன வருணனை மெய்சிலிர்க்கவைக்கும்
காலையில் வெண்சருமமும் கச்சிதமீசையும் சட்டைக்குப்பின் கர்ச்சீபும் வெண்ணிற உடையுமாக அழகாக இருப்பார். ‘பகலிலே பக்கா நாயர். ராத்திரியில் ஆளு தனி செற்ற’ என்று சாளைப்பட்டாணி சொல்கிறார் . அவரை ஜகதி ஸ்ரீகுமார் ஒரு படத்தில் நடித்தும் காட்டியிருக்கிறர்.
‘ஒற்றக்கொம்பில் இரட்டத்தூக்கு’ ‘ஆறணாவுக்கு அஞ்சு கொலை’ போன்ற பல தற்கொலைகளும் அருங்கொலைகளும் பாடல்பெற்றிருக்கின்றன. ‘மறியக்குட்டிக்கொலக்கேஸு’, ‘மதராசிலே மோன்’ போன்ற சில பாடல்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன.
அப்படி ஒருகொலைப்பாடல் 1972ல் நல்லபடமாகவும் வந்துள்ளது. செம்பருத்தி. பி.என்மேனன் இயக்கியது. அசோக் குமார் ஒளிப்பதிவு செய்த அருமையான கருப்புவெள்ளை படம். திரைக்கதை மலையாற்றூர் ராமகிருஷ்னன். ‘சக்ரவர்த்தினீ நினக்கு ஞான்’ போன்ற அற்புதமான பாடல்கள் உள்ளபடம். வயலார் எழுதி தேவராஜன் இசை.
தமிழில் தென்னகத்தில் இப்பாடல்கள் கொலைச்சிந்து என்று அழைக்கப்பட்டிருக்கின்றன. முனைவர் அ.கா.பெருமாள் கொலைச்சிந்துக்களை நல்ல அறிமுக உரையுடன் தொகுத்திருக்கிறார். நா.வானமாமலை கொலைச்சிந்துக்களை ‘நவீன நகர்சார் நாட்டார்பாடல்கள்’ என்று வகுக்கிறார். ‘தமிழில் கொலைச்சிந்து’ என்னும் ஆய்வுநூல் மருதத்துரை என்பவரால் எழுதப்பட்டுள்ளது. இணைய்த்தில் தமிழகத்தில் கொலைச்சிந்து என்ற பேரில் ஒரு நூல் வெளிவந்துள்ள தகவல் உள்ளது [சி. மா இரவிச்சந்திரன், பா சுபாஷ்போஸ்]
ப.சரவணன் கொலைச்சிந்து என்னும் வடிவம் உருவான முறைபற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கிறார். விடுதலைப்போருக்குக் கூட கொலைச்சிந்து வடிவம் பயன்படுத்தபப்ட்டிருக்கிறது. பகத்சிங் கொலைச்சிந்து ஆங்கில அரசால் தடைசெய்யபப்ட்டது என்கிறார் சரவணன். முனைவர் சி.சுந்தரேசன் கொலைச்சிந்து பற்றி ஒரு அறிமுகக்குறிப்பை எழுதியிருக்கிறார்
சித்தையன் கொலைச்சிந்து, மம்பட்டியான் கொலைச்சிந்து போன்றவை மக்களிடையே பிரபலமானவை. மம்பட்டியான் கொலைச்சிந்து மலையூர் மம்பட்டியான் என்ற பேரில் படமாக வந்தது. சித்தையன் கொலைச்சிந்தை இணையத்திலேயே வாசிக்கலாம்
இவை எல்லாமே கொடூரமான வர்ணனைக்குப் புகழ்பெறவை. இன்றைய ‘மாஸ்’ சினிமாவில் வரும் வன்முறைக்காட்சிக்கு ஒருபடி மேல் என்று சொல்லத்தக்கவை. சந்தேகத்தால் மனைவியைக் கொலைசெய்தவன் சித்தையன். அதை சித்தையன் கொலைச்சிந்து இப்ப வருணிக்கிறது
வீச்சருவாள் கையில் எடுத்து – அடியே
வெக்கம் கெட்ட வேசி மகளே வெகுமதி உனக்கு இதுதான் என்று
வெட்டினானாம் கழுத்தைச் சேர்த்து – பாலம்மாளையும்
வெட்டினானாம் கழுத்தைச் சேர்த்து
சண்டாளப் பாவியப் பையல் சதக்கென்று வெட்டியதில்
சலசலன்னு ரத்தம் தெறிக்க – பாலம்மாள் உடல்
தரையில் விழுந்து துடிக்க – தாலி
கட்டிக்கொண்ட சம்சாரத்தை கொலை செய்த துரோகி என்று
தலை அவனைக் கண்டு துடிக்க
(சித்தையன் கொலைச் சிந்து)
தினத்தந்தியின் சதக் சதக் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லையா என்ன? இன்றும் நாம் அதிகம் நாளிதழில் சதக் சதக் செய்திகளைத்தானே வாசிக்கிறோம்.
[சுனாமி பற்றி வைரமுத்து எழுதிய கவிதையும் சமீபத்தில் எஸ்.ரா புலி மனிதனைக் கொலை செய்ததைப்பற்றி எழுதிய குறிப்பும் கொலைச்சிந்து பாட்டின் நவீன வடிவங்கள் என்று தோன்றியது]
கொலைச்சிந்துக்கு முன்னால் உள்ள நாட்டுப்புறப்பாடல்களும் இதே மனநிலையைத்தான் காட்டுகின்றன. பொன்னிறத்தாள் அம்மன் கதை, மதுசூதனப்பெருமாள் மாடன் பாட்டு எல்லாமே அருங்கொலை வர்ணனைகள்தான். சொல்லப்போனால் கலிங்கத்துப்பரணியும் புறநாநூறும்கூட இம்மனநிலையை உள்ளடக்கியவைதான்
ஊரில் பேசப்படும் விஷயங்கள் எல்லாமே இம்மாதிரி நிகழ்ச்சிகள்தானே? 1901 ல் எங்களூரில் இதேமாதிரி ஒரு நிகழ்ச்சி. நாலைந்து பெண்கள் புல்லறுத்துக்கொண்டிருந்தனர். ஒருத்தி சொன்னாள் ‘அங்க பாருடி அக்கா என்னமோ ஒண்ணு நெரங்கி [தவழ்ந்து] வருது’. ‘பூனையில்லா? பேதீல போறது வளந்துல்லா நிக்கி!’ என்று இன்னொருத்தி. வந்தது புலி. அவளை கவ்வி இழுத்துக்கொண்டு சென்றது. அது செவிவழிக்கதையாக நூறாண்டுக்காலம் புழங்கியது.
இன்று அந்த இடம் முக்கியமான குறுநகர் மையம்.இன்றும் புலியெறங்கி [அல்லது புலிநெரங்கி] என்றே அழைக்கப்படுகிறது. நண்பர் கே.பி.வினோதின் மனைவி ஊர் அது. குலசேகரத்தில் ‘புலிநெரங்கி எல்லாம் எறங்குங்க’ என்று கூவி கண்டக்டர் இறக்கிவிடுவார்
ஒருவனை புலி அடிப்பது ‘பரிதாபம்’ மட்டும் அல்ல. அது ஒரு அபூர்வ நிகழ்ச்சி. அந்த ‘வரலாற்றில்’ பங்குகொள்ளவும் பதிவுசெய்யவும் சாமானியர் துடிக்கிறார்கள். சொல்லிச்சொல்லி பெரிதாக்குகிறார்கள். அங்கே நின்ற ஐம்பதுபேரிடம் கேட்டால் நூறு பாடபேதங்களாக அக்கதை கிடைக்கும். இப்படித்தான் நினைவுகள் வரலாறாகின்றன.
அத்துடன் அந்த தீவிரநிலைகளில் தங்களை வைத்துப்பார்த்துக் கற்பனைசெய்கிறார்கள். அந்த அனுபவங்களில் மானசீகமாக திளைக்கிறார்கள். அவர்களின் உலகம் விரிகிறது
ஆக அதெல்லாம் வக்கிரங்கள் அல்ல. அடிப்படை மானுட இயல்புகள். என்றும் உள்ளவை.மனிதர்கள் அப்படித்தான். சாமானியர்கள், அசாதாரணமான விஷயங்களுக்காக ஏங்குபவர்கள்.
ஜெ
========================================================
சக்ரவர்தினீ நினக்கு ஞான் என்றே
சில்ப கோபுரம் துறந்நூ
புஷ்ப பாதுகம் புறத்து வச்சு நீ
நக்ன பாதையாய் அகத்துவரூ
]சக்கரவர்த்தினீ உனக்கு நான் என்
சிற்ப கோபுரத்தை திறந்தேன்
புஷ்ப பாதணியை வெளியே வைத்துவிட்டு
வெறும் கால்களுடன் உள்ளே வா ]
Sep 27, 2014