ஜெ
ராதையை கண்ணன் சென்று சந்திப்பதிலேதான் முடியும் என்று நினைத்திருந்தேன். அதாவது ராதையும் கோபிகைகளும் கண்ணனை வழியனுப்பும்போது கதறி அழும் இடத்தை எழுதுவீர்கள் என்று நினைத்தேன். அதை பலபேர் பாடியிருக்கிறார்கள். ஓவியம் கூட பல கோணங்களில் வரையப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் இடம் மிகவும் புதியது. இப்படி எதிர்பார்க்கவே இல்லை. கிரியேட்டிவிட்டி என்பது நாவல்ட்டியெதான் என்று புரியாமல் எத்தனை வாசித்தாலும் பயனில்லை
கண்ணன் வயதாகி இருக்கிறான். பாரதப்போர் முடிந்துவிட்ட்து. 80 வயதில் கிருஷ்ணன் 82 வயதில் சித்தியடைந்ததாக கணித்துச் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
நாண் தளர்ந்து மூங்கிலானது வில்.
மரமறிந்து சிறகமைந்தது புள்.
வினைமுடித்து மீள்கிறது அறவாழி.
நுரை எழுந்து காத்திருக்கிறது பாலாழி
என்று நிமித்திகன் சொல்வதை வைத்துப்பார்த்தால் கிருஷ்ணன் கூடிய சீக்கிரத்தில் மறையவிருக்கிறார். அது அவருக்கே தெரியும். அவர் காத்திருக்கிறார். அதற்குமுன் ராதையைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறார்
நீங்கள் காட்டும் இந்தக் கிருஷ்ணரிடம் விளையாட்டுத்தன்மை இல்லை. முதிர்ந்திருக்கிறார். அவரை சின்னவயது முதல் தெரிந்த சிலர்தான் இருக்கிறார்கள். அவர் தனிமையிலே இருக்கிறார். அவரது அமைச்சர்களுக்கு அவர் புல்லாங்குழல் வாசிப்பார் என்றே கூட தெரியவில்லை. ராதையை அவர்களுக்குத் தெரியாது
கதையை வைத்துப்பார்த்தால் அப்போதே யாதவர்களின் உட்சண்டைகள் ஆரம்பமாகியிருக்கும். கிருஷ்ணர் சலித்திருப்பது தெரிகிறது. அவர் ராதையைப் பார்க்கும்போது கடைசிக் கடமை முடிகிறது.
பிறந்து ஒருநாள் கூட ஆகாத கைக்குழந்தையாக இரண்டாம் அத்தியாயத்திலே வந்த கிருஷ்ணனை இப்படி பார்ப்பது ஒருமாதிரி மனசை கஷ்டப்படுத்த்னாலும் இதெல்லாம்தான் அறிந்துதானே அவன் வந்தான் என்றும் தோன்றுகிறது. கிருஷ்ணனைக் கொன்ற வேடன் பெயர் ஜரா. அப்படியென்றால் நரை மூப்புதான் அவரை கொன்றது.
ராதையின் சன்னிதியில் குழலூதி நிற்கிற கிருஷ்ணனுடன் கிருஷ்ணனின் வாழ்க்கைக்கதை முடிந்தது. பூத உடல் மறைவது மட்டுமே மிச்சம். அப்படியென்றால் தொடக்கம் முதல் முடிவு வரை சொல்லிவிட்டீர்கள்.
கிருஷ்ணனுக்கு வயதாகிறது. ராதைக்கு வயதே ஆகவில்லை. இப்போதுதான் ஐந்தாறு வயது ஆகியிருக்கிறது. இன்னும் பிரேமையையே ஆரம்பிக்கவில்லை. ராதை ஏகப்பட்டபேர். அவர்கள் பிறந்து வந்துகொண்டே இருப்பார்கள். ஆனால் கிருஷ்ணன் ஒருவர்தான்.
இன்னொருமாதிரி முடித்துவிடமுடியுமா என்று ஒருநாவல் தோன்றுமென்றால்தான் அது உண்மையிலே நிறைவு அடைகிறது. சில கிளாசிக்ஸ்தான் அப்படிச் சொல்லமுடியும். இது அப்படிப்பட்ட நாவல்.
ஆசிகள்
சுவாமி
அன்புள்ள ஜெ
நீலம் உங்கள் படைப்புகளிலேயே தனிச்சிறப்பானது. கொற்றவையில் ஒரு மெல்லிய தாளம் உடைய மொழிநடையை கைக்கொண்டிருந்தீர்கள். தூயதமிழ்நடையும்கூட. அது இதிலே உச்சம் கொண்டுவிட்டது. நடை என்று சொல்லமுடியாது. நடனம் என்றுதான் சொல்லவேண்டும்
அந்தநடை இதற்குத் தேவையாகிறது. அந்த நடை இல்லாமல் இந்நாவலை யோசிக்கவே முடியாது. எனென்றால் இந்நாவல் நடைமுறைசார்ந்தஉலகிலேயே இல்லை.நடைமுறை விஷயங்கள் கொஞ்சம் வந்தாலே கீழே இறங்கியிருக்கும். இதில் ராதையின் பகுதி மனசுக்குள்ளேயே நடக்கிறது. ஒரு நினைவு மாதிரி. கம்சன் பகுதி அதோடு ஒட்டாத யதார்த்தமாக இருக்கக் கூடாது. ஆகவே அதை வெவ்வேறு குரல்கள் சொல்வது மாதிரி அமைத்திருக்கிறீர்கள். இரண்டுக்குமே சந்தம் உள்ள நடை கைகொடுக்கிறது. நடப்பதை பார்ப்பதுமாதிரியான யதார்த்தவாதம் இல்லாமல் சொல்லிக்கேட்பதுமாதிரி அல்லது மனசுக்குள் தாளத்துடன் மொழி ஓடுவதுமாதிரி நாவலை உணரமுடிந்தது.
அதோடு மிகச்செறிவான மொழி. அலங்காரத்துக்காக ஒரு வரிகூட எழுதப்படாமல் சந்தத்தை கையாள்வது பெரிய சவால். அது நிகழ்கிறது.நூற்றுக்கணக்கான வரிகளை நான் குறித்துவைத்தேன். பலவரிகள் ஒட்டுமொத்த ஆன்மீகத் தேடுதலையே சொல்லக்கூடியவையாக இருந்தன
நாவலின் கட்டிட அமைப்பை நான் இப்படி உருவகம் பண்ணிக்கொண்டேன். சரியாக இருக்கிறதா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். ஒரு ஓட்டம் ஹடயோகம் அல்லது அகோரமார்க்கம் போன்ற ஒரு வழி. இன்னொன்று பக்தி உபாசனா மார்க்கம். முதல் வழிக்கு கம்சன். இரண்டாவதுக்கு ராதை. இது இருவருமே முக்தி அடைந்ததைப்பற்றித்தான் பேசுகிறது. ஆனால் பரிபூரணம் அடைந்து பிரம்மம் ஆனவள் ராதைதான்
கிருஷ்ணனின் பிறப்பும் சரி, கம்சன் செய்யும் கொலையும் சரி குறியீடுகளாகவுமே வாசிக்கக்கூடியவை. ‘யோகத்திலே முதலில் செய்யவேண்டியது கொலை. சொந்தக் குடும்பத்தையும் குழந்தைகளையும் கொலைசெய்யவேண்டும். உறவினர்களை கொலைசெய்யவேண்டும். மொத்த உலகையும் கொலை செய்யவேண்டும். அந்த ரத்தம் வழியாகத்தான் நாம் விடுதலை அடையமுடியும்’ என்று என் குருநதர் சொல்லுவார். அதுதான் குழந்தைக்கொலை. அதைத்தான் கம்சன் செய்கிறார். ஆனால் ஒரு சின்னப்பறவை மிஞ்சிவிடுகிறது
அதன் முதல் அத்தியாயம் சொல்லெழுதல் என்று இருக்கிரது. மனசுக்குள் முதல் சொல் எழுவது முக்கியம். அதுதான் தொடக்கம். அந்த முதல்சொல்லை மூலமந்திரம் என்பார்கள். திலகவதி அருணகிரிக்குச் சொன்னதுமாதிரியான சொல் அது. அடுத்து பொருளவிழ்தல். அடுத்து அனலெழுதல்.
பாலாடி பழியாடி பலநூலில் பகடையாடி பசுங்குருதியாடி எழுக என் தெய்வம்! எழுக! எழுக என் தெய்வம்! எழுக! – என்று வசுதேவர் நடனமாடுகிறார். அந்த அத்தியாயமே மூலாதாரக் கனல் எழுவதுமாதிரி இருக்கிறது. ரத்தம் தீயாக மாறுவதுமாதிரி. ‘இதன் வலக்கையில் அனல்குறி உள்ளது’ என்று யோகமாயை பற்றி சொல்லப்படுகிறது. அதுதான் குறியீடு.
செழுங்குருதி,சுழலாழி,பாலாழி என்று மூன்று அத்தியாயங்கள். அனல் கண் திறந்தபிறகு வரும் நிலைகள்.
‘அதற்குமேலே ஐந்து கோட்டைகளை இடிக்கவேண்டும்’ என்று என் ஆசிரியர் சொல்வார். ‘மூலாதாரம் முதல் ஐந்து சுழிமுனைகள். மூலாதாரம் பூதனை. பூமி. அன்னம். மண். அடுத்து காற்று அதாவது பிராணன்.
அதுக்கப்பால் நீர்.அதற்குப்பிறகு ஆலகால விஷம் எழும் நெருப்பு. அதுதான் காளியன். அதன்மீது நின்று ஆடுகிறது பெரிய யோகக்குறியீடு. அதன் பிறகு வானம்.அதுதான் ஆக்ஞை. அதை தாமரையாகவும் சக்கரமாகவும் அந்த அத்தியாயம் சொல்கிறது.. சொல்லாயிரம்,பொருள் ஒன்று, ஒன்றே அது என தலைப்புகளே அந்த வளர்சியை சுட்டிக்காட்டுகின்றன. அதுதான் கடைசியில் முடி,கொடி என்று நிறைவடைகிறது.
அதேமாதிரி ராதையின் பிரேமையின் வளர்ச்சியும் பல யோகஅடையாளங்கள் வழியாகவே செல்கிறது.இந்த கட்டிடமே நிறையவிஷயங்களைச் சொல்கிறது. நான் இனிமேல்தான் முழுசாக வாசிக்கவேண்டும். புத்தகமாக புரட்டிப்புரட்டிவாசித்தால்தான் சரிவர வாசிக்கமுடியும்
மீனாட்சி சுந்தரம்
வியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்