அக்காமலை:ஒருகடிதம்

மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் பயணக் கட்டுரை “அக்காமலையின் அட்டைகள்.” மற்றும் இதர பயணக் கட்டுரைகள் படித்திருக்கின்றேன். வெகு அழகாக இருந்தது. பொதுவாக, நமக்கு, தமிழர்களுக்கு, சுற்றுலா என்பது ஒரு தண்ட செலவாகவே பார்க்கப்பட்டு, அவ்வாறு சுற்றுலா சென்றாலும் சென்னை போன்ற வணிக ஸ்தலங்களுக்கு வணிக காரணங்களால் செல்லும்போது “தி.நகர், இரங்கநாதன் தெரு, சரவண பவன்” போன்ற முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவது மட்டுமே இன்ப சுற்றுலாவாக இருக்கிறது.

     தங்களின் பயணக் கட்டுரைகளால் குறைந்தது ஒரு ஊருக்கு இரண்டு பேர் எந்தவித பயண திட்டங்களுமின்றி அல்லது முழு பயண திட்டங்களுடன்  ஏதேனும் நிஜ சுற்றுலா தலங்களுக்கு சென்றுவந்தால் அதுவே தங்கள் பயண கட்டுரைகளுக்கு கிடைத்த வெற்றி. தலைப்பு மட்டும் பயமுறுத்தும் வகையில் வைக்கின்றீர்கள். “அக்காமலை அட்டைகள்”. நல்லவேளை, “அக்காமலை சிறுத்தைகள்” என வைக்கவில்லை. “அக்காமலை அதிசயம், அக்காமலை ஆனந்தம், வால்பாறை வசந்தம்” இதுபோன்ற தலைப்புகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

Joseph Mani

அன்புள்ள ஜோச·ப்

சிறுத்தைகளுக்கும் அட்டைகளுக்கும் முக்கியமான வேறுபாடு உண்டு. சிறுத்தைகள் நம்மைப்பார்த்து ஓடிப்போகின்றன. அட்டைகள் நம்முடனேயே வருகின்றன. நாம்  நம்முடன் கொண்டுவருவனவற்றைப்பற்றித்தானே எழுத முடியும்?

வேடிக்கை இருக்கட்டும். உண்மையில் பயணம், சுற்றுலா போன்றவற்றைச் சார்ந்த நம்முடைய மனநிலை மாறியாகவேண்டும். நீங்கள் சொல்வதையே நானும் சொல்லிவருகிறேன். ஒன்று அதை ஒருசெலவாக மட்டுமே எண்ணக்கூடாது. சிக்கனமாக இருக்கலாம்தான். ஆனால் நாம் ஆடைகள் உணவு ஆகிய இருவிஷயங்களிலும் அபப்டி சிக்கனமாக இருப்பதில்லை. மேலும் பயணங்களை மனமிருந்தால் மிகக்குறைவான செலவிலேயே அமைத்துக் கொள்ள முடியும்.

அதற்கு, பயணங்களில் எது முக்கியம் என்ற பிரக்ஞை நம்மிடம் இருக்க வேண்டும். ஆடம்பரமான, வசதிகள் மிகுந்த பயணங்களை நாடுவது கூடாது. அப்படிப்பட்டமனநிலை கொண்டிருந்தால் பெரும்பாலும் வசதிக்குறைவுகள் மட்டுமே நம் கண்களுக்குப் பட்டு நாம் மிகவும் மனச்சோர்வடைய நேரும். பயணங்களில் எப்போதும் எதிர்பாராத சிக்கல்கள் , வசதிக்குறைவுகள் இருக்கும்.

பயணங்களில் நாம் பெறும் அக அனுபவமே முக்கியம். சூடான பொருளை நகர்த்தி நகர்த்தி வைத்தால் அது ஆறுவதுபோலத்தான் பயணங்கள் நம்மை ஆற்றுகின்றன. நாம் வாழும் சூழல் பழகிய மனிதர்கள் பிரச்சினைகள் ஆகியவற்றை விட்டு விலகும்போதே நம் மனம் புத்துணர்ச்சி கொள்கிறது. ஒருபயணத்தின் எல்லா அனுபவங்களும் அப்பயணத்தின்  கொடைகளே என்று எடுத்துக் கொள்ள வேண்டும். வசதியாக இருக்கவேண்டுமென்றால் வீட்டிலேயே இருக்கலாமே.

நம்முடைய மக்களுக்கு பயணத்தை எப்படிச்செய்வதென்று தெரிவதில்லை என்பதைக் கண்டிருக்கிறேன். இளைஞர்கள் சேர்ந்து பயணங்கள் செல்லும்போது ‘இளைஞர்களாக’ இருக்க முயல்கிறார்கள். கத்திக் கூச்சல்போடுவது, ஆர்பபட்டம்செய்வது, பிறரைக் கிண்டல்செய்வது போன்றவைதான் இளைஞர்களின் இயல்புகள் என்று சினிமா பார்த்துக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை செயற்கையாகச் செய்கிறார்கள்.

இன்னொருதரப்பு பயணம் என்பதே குடிப்பதற்காகத்தான் என்று நினைப்பவர்களினால் ஆனது. கிளம்பியதுமே குடி. பின்னர் எங்கே சென்றோம் என்ன பார்த்தோம் என்று எதுவுமே தெரியாமல் குடி. வாந்தி. சலம்பல். சண்டை. இதற்குப் பெயர் ‘ஜாலியாக இருக்கிறது’

குடும்பம்குட்டிகளுடன் பெரும் குழுவாக, ஒரு நகரும் கிராமமாக, பயணம் செய்வது இன்னொருவகை. ஊரில் என்ன பேசினார்களோ என்ன சண்டை போட்டார்களோ அதையே போகுமிடமெல்லாம் கொண்டு போவார்கள். குடும்பத்தலைவர் அனைவரையும் அதட்டுவார். பதற்றமே உருவாக இருபபர். பெண்கள் வீட்டில் சமைப்பதை வெளியே கொண்டுபோய் சமைப்பார்கள்.

போகுமிடங்களை அசுத்தம் செய்வது நம்முடைய பழக்கம். இதில் தமிழர்கள் ஓரளவு பரவாயில்லை, மலையாளிகள் மிகமிக மோசம். ஒரு மலையாள சுற்றுலாக்குழு பத்து தமிழ்குழுக்களுக்கு தேவையான தின்பண்டம் மற்றும் மதுபானங்களுடன் பயணம் செய்யும். போகுமிடமெல்லாம் குப்பைகளை குவித்துப் போகும்

பயணங்களைச் செய்ய மிகச்சிறந்த வழி ஒன்றுதான். பயணம் என்பது தியானம் போல ,பிரார்த்தனை போல ஒரு ஆன்மீக அனுபவம் என்று எண்ணிக் கொள்வது. அதில் கிடைப்பதெல்லாம் ஆனந்த அனுபவமே என்று கருதுவது. நம்மை முழுமையாக அதற்கு சமர்ப்பணம்செய்துகொள்வது. அட்டையும் ஒரு ஆனந்தமே. முதல் சில கடிகளுக்குப் பின். சிலசமயம் பிரியமான கைக்குழந்தைபோல அது நம்மில் ஒட்டியிருப்பதாகக் கூட தோன்றும்.

பயணங்களின் சுவையை அறிந்த ஒருவர் அதன்பின் பயணங்கள் இல்லாமல் வாழ முடியாது.

– Show quoted text –




ஜெயமோகன்

முந்தைய கட்டுரைஅக்காமலையின் அட்டைகள்.
அடுத்த கட்டுரைசெங்காடு