ரோடுரோலர் சிந்தனைகள்

அன்புள்ள ஜெ,

இந்த ந்யூயார்க் டைம்ஸ் கட்டுரை  சிந்திக்க வைப்பதாக உள்ளது. கடந்த ஐம்பது ஆண்டு காலமாக தனித்தன்மை கொண்ட அமெரிக்கர்களுக்கு உருவாக்கப்பட்ட  மன நோய் சிகிச்சை வழிமுறைகள் எவ்வாறு மற்ற கூட்டு மற்றும் பன்முக தன்மை கொண்ட கலாச்சாரங்களுக்கு எந்த மாற்றுதலும் இல்லாமல் ஏற்றுமதி செய்யப்படுவதை சுட்டிக்காட்டுகிறது.

http://www.nytimes.com/2010/01/10/magazine/10psyche-t.html?em

அன்புடன்

சிவா – ஹ்யூஸ்டன்

அன்புள்ள சிவா

மிக முக்கியமான கட்டுரை. ஏற்கனவே பல கட்டுரைகளில் இதை உளவியலாளரான நித்ய சைதன்ய யதி சொல்லியிருக்கிறார். இன்னமும் விரிவாக இதை அணுகும் நித்யா இந்திய செவ்வியல் இலக்கியங்களைப் புரிந்துகொள்ள மேலைக் கோட்பாடுகளை  அப்படியே போட்டுப்பார்ப்பதும் அப்படிப்பட்ட முட்டாள்தனமே என்கிறார். ஆனால் இன்றுவரை நம் கல்விக்கூடங்களில் நடந்துகொண்டிருப்பது அதுவே

இன்னும் பார்த்தால், இந்த எளிய உளவியல் கருவிகளைக் கொண்டுதான் காந்தி முதல் ரமணர் வரையிலான இந்திய ஞானிகளின்  மனத்தை ஆராய்கிறார்கள். பாரதியையும் தாகூரையும் புதுமைப்பித்தனையும் ஜானகிராமனையும் ஆராய்கிறார்கள். மேலைநாட்டார் செய்வதாவது பரவாயில்லை, அது அவர்களின் வழி எனக்கூறிக்கொள்ளலாம். இங்கே உள்ள அறிவுஜீவிகள் அங்குள்ள கோட்பாடுகளை அப்படியே இங்கே இறக்குமதி செய்வதில் உள்ள வன்முறையும் அழிவும் சாதாரணமானதல்ல. இன்றுவரை இதுவே எந்தவிதமான மாற்று எண்ணமும் இல்லாமல் செய்யப்படுகிறது.

கொஞ்சம் பின்னால் திரும்பிப்பாருங்கள். பத்தாண்டுகளுக்கு முன்னால் சட்டென்று தகர்ப்பமைப்பு [டிகன்ஸ்டிரக்ஷன்] என்று இங்குள்ளவர்கள் ஆரம்பித்தார்கள். அவர்கள் யாராவது அதற்குள் ஒரு இந்திய வகையை ஓர் இந்திய நோக்கை உருவாக்குவதற்காகவாவது முயன்றார்களா? இல்லை. அப்படியே அந்த வழியை இங்கே கொண்டுவந்தார்கள். ·பூக்கோ என்கிறார்கள், லக்கான் என்கிறார்கள், குளோட் லெவிஸ்டிராஸ், ஆலன் டண்டிஸ் என்கிறார்கள் என்கிறார்கள். நாட்டாரியல், குறியியல், மொழியியல்… எத்தனை அறிஞர்கள் எத்தனை சிந்தனைத்துறைகள்… தங்கள் சமூகத்தை ஆராய அவர்கள் உருவாக்கிய கருவிகளை அப்படியே இங்கே கொண்டுவருகிறார்கள். கருவிகளை மட்டுமல்ல அவர்கள் அங்கே கண்டுபிடித்த முடிவுகளைக்கூட அப்படியே இங்கே கொண்டுவருகிறார்கள். உடலரசியல் என்றும் விளிம்புநிலைக் கதையாடல் என்றும், நிராகரிப்பின் அரசியல் என்றும் எத்தனை ப்ளா ப்ளாக்கள்…

இவை எதற்குமே இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையில் இருந்து எந்த ஆதாரமும் எடுக்கபப்ட்டதில்லை. இங்கே எழுதப்படும் இலக்கியங்களில் இருந்து எதுவும் பெற்றுக்கொண்டதில்லை. அப்படியே அசட்டு மொழியாக்கம் செய்து தமிழ்ச்சிந்தனையின் தலையில் கட்டிவிடுகிறார்கள். இதன் விளைவாக இங்கே உண்மையான சிந்தனைகளே எழ முடியாதபடி ஆகிறது. இங்கே உள்ள அனைத்துமே திரிக்கப்படுகின்றன. கடந்த இருபதாண்டுக்காலமாக இதை நான் கடுமையாக சொல்லிவருகிறேன்

இந்த மனநிலையில் உள்ள ஆழமான தாழ்வுணர்ச்சியை, அதன் விளைவான அறியாமையை, நமுடைய பண்பாட்டின் தனித்தன்மையைச் சுட்டிக்காட்டும்போது ஒருவர் பாரம்பரியவாதியாக ஆகிவிடுவார். பாரம்பரியவாதி இந்துத்துவவாதி அல்லவா? இந்துத்துவாதி கடபபரையுடன் பாபரின்கும்மட்டத்தை இடிக்கச் சென்றவன் தானே? முடிந்தது கதை…

நல்லவேளை வெள்ளைத்தோலர்கள் நியூயார்க் டைம்ஸிலேயே சொல்லிவிட்டார்கள். இதையும் அபப்டியே மேற்கோளாக இங்கே கொஞ்சநாளில் எதிர்ப்பார்க்கலாம்…

ஜெ

முந்தைய கட்டுரைவிவேக் ஷன்பேக் சிறுகதை – 4
அடுத்த கட்டுரைசக்கரியா மீது தாக்குதல்