இரண்டு காதலியர்

ஊட்டியில் மழைக்காலம் மிகவும் உக்கிரமானது. மரங்கள் மீது சாந்தியடையாத சினம் கொண்ட ஆவிகள் ஏறிக்கொண்டதுபோல, ஒரு விபரீத வரத்தால் அவை ஆவேசமான விலங்குகளாக ஆகிவிட்டதுபோல் இருக்கும். தலைசுழற்றி அவை ஊளையிடும். மார்பிலறைந்துகொண்டு தரையில் இருந்து வேர் பெயர்த்து எம்ப முயலும். ஒரு கட்டத்தில் கட்டிடங்கள் கூட உயிர்கொண்டு விடும். மிரண்ட மாபெரும் மிருகங்கள் போல அவை முனகும். விம்மும். உதடுகள் துடிக்க சிறகுகள் படபடக்க அதிரும்.

ஊட்டியில் மழையென்றாலே மின்சாரம் போய்விடும். ஆனால் நல்ல மழை பெய்யும்போது குளிர் சற்று குறைந்து இதமான ஒரு கதகதப்புகூட தோன்றும். குருகுலத்திற்குள் ஸ்வெட்டருக்குள் கைகளை இறுக்கிக் கொண்டு கண்ணாடிச் சன்னலை முற்றாக முட்டிவிட்டிருக்கும் மழையைப் பார்ப்பதென்பது கிளர்ச்சியூட்டும் அனுபவம். மண்ணில் மிக ஆன்மீகமான ஏதோ நடந்துகொண்டிருக்கிறது என்று தோன்றிவிடும். மிக மகத்தான ஒன்று. எத்தனை சிந்தனைசெய்தாலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று. மண்ணில் மனிதன் பேசத்தொடங்கிய நாள்முதலே வர்ணித்தும் தீராத ஒன்று…

 

ஊட்டி குருகுலம்

நித்யா உள்ளிருந்து வந்தார். அவருடன் ஜோதி அவரைப்பற்றிக்கொண்டு வர உஸ்தாத் ஷௌகத் அலி அவர் வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்துடன் வந்தார். டாக்டர் தம்பான் [சுவாமி தன்மயா] நித்யா அமரும் இருக்கையை சரிசெய்தார். என்னுடன் தாமஸ் ஜேப்பக் இஎருந்தார். அன்று மாலைக்கூட்டத்துக்கு வேறு எவரும் இல்லை. நித்யா நாற்காலியில் அமர்ந்து தலையணை ஒன்றை முதுகுக்கு வைத்துக்கொண்டதும் என்னை நோக்கி புன்னகைசெய்தார்.

தகரக்கூரைமீது அருவி போல கொட்டியது மழை. சாட்டையால் மாறி மாறி வீறியபின்னரும் எழுவதற்கு அடம்பிடிக்கும் சண்டிமாடு போல குருகுலக்கட்டிடம் அமர்ந்திருந்தது. திரைச்சீலைகள் மீது ஈரம் சீனித்துளிகள் ஒட்டியிருப்பது போல மெல்லிய துளிப்படலமாக புல்லரிக்க ஆரம்பித்திருந்தது. நான் நித்யாவின் காலடியில் அமர்வதற்கான குட்டி மெத்தை ஒன்றை போட்டு அமர்ந்துகொண்டேன்.

எண்ணைவிளக்குகளின் ஒளியில் நிழல்நித்யா எழுந்து கட்டிடத்தின் கூரைமீது வளைந்து அவரையே குனிந்து நோக்கினார். அவரை விலக்கி விரிந்து அந்த நிழலுருவை நோக்கி மடிந்திருந்தன எங்கள் நிழல்கள். நித்யா என்னிடம் ”மழையைப்பற்றி உங்கள் கவிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்றார்” நான் புன்னகைத்து ”பெயல்கால் என்று கபிலர் சொல்கிறார். மழையின் கால்கள் என்று. பெயல்கால் மறைத்தலின் நிலம் காணலரே என்கிறார். மழையின் பல்லாயிரம் கால்கள் ஊன்றி மறைத்து மண் தெரியாமலாகிவிட்டிருக்கிறது என்று…”

நித்யாவின் மனம் கொளுத்தப்பட்டு விட்டது என அறிந்தேன் ”அருமையான வார்த்தை. இத்தனை களங்கமின்மை ஒரு பழங்குடிமனத்துக்கே வரமுடியும்….அது மாபெரும் விவேகங்களையும் ஞானங்களையும் புல் நுனியில் இருந்து பனித்துளியை கைவிரலில் எடுப்பது போல ஒற்றி எடுக்கும்…”

.”எனக்கு மழை ஒரு பறவையின் சிறகு என்று படுவதுண்டு. இந்த பெரிய முட்டையை அந்தப்பறவை தன் சிறகால் மெல்ல மூடிப்பாதுகாக்கிறது. சிலசமயம் தோன்றும் மேலே நீலமாக விரிந்திருப்பதும் ஒரு கடல்தான் என. நாம் அதை தொடுவதில்லை. சில சமயம்தான் அதன் அலை எல்லை மீறிவந்து மண்ணை அறைந்துசெல்கிறது… கடற்பாறை போல பூமி அடிவாங்கி சிலிர்க்கிறது”

”வேதங்களில் மழையைப்பற்றி நிறையச் சொல்லப்பட்டிருக்கிறது” என்று பொதுவாகச் சொன்னார் சுவாமி தன்மயா. நித்யாவை உரைக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன். ”மழையை வேதகால மனம் ஒரு பெரும் லீலையாகக் கண்டது. மண்ணில் உள்ள அனைத்தையும் பிறப்பிக்கும் ஒரு மகத்தான காதல்லீலை. வானத்தின் விந்துவே மழை என்றுணர்வது ஒருதனிமனித மனத்தில் முதன்முதலாக தோன்றிய கணம் எத்தனை பயங்கரமாக இருந்திருக்கவேண்டும். புல்லாக மரங்களாக புழுப்பூச்சிகளாக ஆறாக காடாக  மனுக்குலங்களாக ஊர்களாக நகரங்களாக சிந்தனைகளாக முளைத்தெழும் அந்த விந்து யாருடையது!  அந்த எண்ணம் தன்னுள் வந்த அக்கணம் அவன் உடல் திறந்து இறக்காமல் அதைச் சொல்லாக ஆகியதே ஆச்சரியம்தான்…”

நித்யா தொடர்ந்தார். ”இந்து மரபில் எந்நிலையிலும் காமத்தை அருவருப்பானதாக, விலக்கவும் மறைக்கவும்படவேண்டிய ஒன்றாக, உருவகித்ததில்லை. மாறாக இந்தப்பிரபஞ்சத்தை அறிந்துகொள்வதற்குரிய வழியாகவே அதை ரிஷிகள் கண்டார்கள். இப்பிரபஞ்சத்தின் சாரமான ஆற்றல் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் தருணங்களில் ஒன்று அது. அதில் இருந்தே லீலை என்ற சொல் பிறந்தது. இந்தப்பிரபஞ்சமே ஒரு மாபெரும் விளையாட்டு. சாதாரண விளையாட்டல்ல காதல் விளையாட்டு. ஏனென்றால் பிறவிளையாட்டுகளில் இல்லாத முழுமையான லயம் காதல் விளையாட்டில் உள்ளது. விளையாடும் இருவரும் ஒருவரை ஒருவர் நிரப்புகிறவர்கள். ஒருவரை ஒருவர் முழுமை செய்துகொள்பவர்கள். விளையாட்டின் உச்சியில் இருவரும் தங்களை ஒருவரில் ஒருவர் இழந்து ஒன்றாகிறார்கள். அந்துவரை இல்லாதிருந்த ஒன்று அவர்களை தங்கள் கருவியாக்கி தன்னை நிகழ்த்திக்கொள்ளும் ஒன்று உருவாகிறது”

 

”வானகமும் மண்ணகமும் கொள்ளும் லீலையே இவ்வுலகம் என்று உணர்ந்தனர் ரிஷிகள். ஒளி ஒரு லீலை. காற்று ஒரு லீலை. அருவம் உருவத்துடன் ஆடுவதும் லீலையே. கருத்து பருப்பொருளுடன் ஆடுவதும் லீலையே. அளவிறந்த ஆற்றல்வெளியுடன் ஆக்கும்கருத்து ஆடுவதும் லீலையே. சிவசக்தி நடனத்தை நான் பார்த்து நிற்பதுண்டு. ஆற்றலை அன்னையாக்க வேண்டுமென எந்த மூதாதைக்கு முதலில் தோன்றியது? ஏனென்றால் அது தன்னளவில் முழுமை கொண்டது என்பதனாலேயே. அதற்கு சிருஷ்டியின் நடனம் தேவையில்லை. அதன் ஆழத்தில் உள்ளது எல்லையில்லாத கருணையும் காதலும் மட்டுமே. அந்தக் கருணையையும் காதலையும் தொட்டு எழுப்பி அதனி சிருஷ்டிவெளியாக ஆக்க ஒரு கருத்தாற்றல் தேவை. சிவம், அது ஒரு நடனம். ஏன் அது நடனமிடுகிறது என்றால் நடனத்திற்காகவே….”

”லீலை என்றால் வேறு எதற்காகவும் இன்றி அந்தச் செயலின் இன்பத்திற்காக மட்டுமே நிகழ்வதாகும். ஏன் ஏன் என்று இந்தப்பிரபஞ்சத்தை கேட்டுக்கொண்டே சென்றால் கட்டகக்டைசியில் அந்த கேள்விகள் எல்லாம் ஒன்றாகி, கோடானுகோடி ரிஷிகளின் கோடானுகோடி கேள்விகள் எல்லாம்  இலைசொட்டும் துளிகளே கடலாக ஆனதுபோல திரண்டு ஒற்றைப்பெரும் கேள்வியாக எழுந்து நிற்கும். ஏன்? அதற்கு ஒரே பதில்தான். லீலை! அலகிலாத காதல் விளையாட்டு. அந்த களிநடனத்தை முதலில் தன் அகத்தரிசனமாகக் கண்டவன் யார்? மரவுரி உடுத்து மாமிசம் உண்டு குகையில் வாழ்ந்தானா? அவனுக்கு சுட்டுத்தின்ன தெரிந்திருந்ததா? அவனால் பேச முடிந்ததா, இல்லை நடனமாடித்தான் தன்னை வெளிப்படுத்தினானா? எத்தனை மகத்தானவன். அவனுடைய மாபெரும் மெய்ஞானத்தின் நிழலில் அல்லவா நாம் நின்றுகொண்டிருக்கிறோம்?” நித்யா சொன்னார்.

பின்னர் எப்போதோ துறவு முதல் விழுமியமாகியது. சமணமே அதைக் கண்டுபிடித்தது என்று படுகிறது. துறவு ஒரு மாபெரும் கருதுகோள்தான். அதை துறவியாகிய நான் உறுதியாகச் சொல்லமுடியும். இந்தா இந்தா என்று மண்ணுலகமே மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது இல்லை எனக்கு எதுவும் தேவையில்லை என்று மனிதன் சொல்வானென்றால் அதுவும் மகத்தானதல்லவா? காதல் லீலையாக உள்ள இப்பிரபஞ்சத்திற்கு நேர் எதிரான ஒன்று துறவு. மகத்தான ஒன்றுக்கு இணையான மகத்துவம் உள்ள ஒன்றே எதிராக இருக்க முடியும். ஆனாலும் அது எதிரானதே. அது தலைகீழானதே.

சமணம் துறவை நேர்நிலையாக ஆக்கியது. லீலையை எதிர்நிலையாக ஆக்கியது. அந்த தரிசனத்தை பௌத்தம் எடுத்துக்கொண்டது. பட்டுப்பாதையில் சமண வணிகர்கள் மேற்கே பாரசீகத்துக்கும் சுமேரியாவுக்கும் எகிப்துக்கும் மாசிடோனியாவுக்கும் கிரேக்கத்திற்கும் சென்றார்கள். உலகமெங்கும் துறவைக் கொண்டுசென்றார்கள். துறவு ஒருபெரிய வாள் போல ஒருவனை இந்த பிரம்மாண்டமான கூட்டு நடனத்தில்  இருந்து அறுத்து வெளியே தள்ளிவிடுகிறது. அவன் அதன்பின்னர் இந்த மொத்த நடனத்தையும் விலகியமர்ந்து பார்ப்பவனாகிறான். அவன் பார்க்கும் அந்த பெருநடனத்தை அதில் ஆடுபவர்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை. ஆகவே விலகியவர்கள் ஞானிகளானார்கள். ஞானத்தில் அதிகாரம் துறவை மண்ணுலகமெங்கும் நிலைநாட்டியது

ஆனால் துறவென்பதே இந்தக் காதல்லீலையைக் காண்பதற்கான கண்பெறும் தவம்தான் என்று பலர் புரிந்துகொள்வதில்லை. இங்கே முன்பொரு துறவி இருந்தார். கொஞ்சநாள் அலைந்து திரிந்துவிட்டு இங்கே வந்தார். மாபெரும் சம்ஸ்கிருத அறிஞர். அவரது இளமையில் அவர் மிகச்சிறிய குடிலில் வாழ்ந்தார். தீண்டாமைக்கு உள்ளான சாதியைச் சேர்ந்தவர். அவர்களின் குடிசைகள் ஒரே அறை கொண்ட ஓலைமாடங்களாக இருக்கும். நிலையான வீடுகளை அவர்கள் கட்டிக்கொள்வது தடுக்கப்பட்டிருந்த காலகட்டம் அது. அவர்கள் எட்டுபேர். அத்தனைபேரும் ஒரே குடிசைத்தரையில் தரையில் போடப்பட்ட வைக்கோல் மீது ஒட்டி ஒட்டி படுத்துக்கொள்வார்கள்.

ஒருநாள் அவர் கண்விழித்துப் பார்த்தபோது அவரது அன்னையும் தந்தையும் உடலுறவு வைத்துக்கொண்டிருந்தார்கள். இருளில் ஒரு மின்னலில் அவர்களின் லீலையை அவர் கண்டார். நிர்வாணமாக இருவர் உடல்களும் பிணைந்திருப்பதை மகிழ்ச்சியின் உச்சத்தில் ஒருவரை ஒருவர் மட்டுமே  உணர்ந்தபடி அவர்கள் இருப்பதை. ஒருகணத்தில் அவரது மனம் அதிர்ந்தது. அந்த அசாதாரணமான காட்சியில் இருந்து அவர் விடுபடவே இல்லை. ஆரம்பத்தில் ஆழமான மனக்கசப்பு குமட்டிக் குமட்டி வந்தது. ஒவ்வாத ஏதோ ஒன்றை உண்டுவிட்டவர் போல.

 

நித்ய சைதன்ய யதி

பின்னர் அவர் வீட்டை விட்டுக்கிளம்பி நாடோடியானார். பல பெண்களுடன் உறவு கொண்டார். ஆனால் அவருள் ஒரு கேள்வி இருந்தது. உடலுறவை கூர்ந்து கவனிப்பவனால் அதில் தன்னை மறந்து ஈடுபட இயலாது என்பார்கள் உளவியலாளர்கள். அவர் துறவியானார். குருகுலங்களில் கற்றார். ஏதோ ஒரு புள்ளியில் தியானத்தில் அவரது கேள்விக்கு பதில் கண்டுபிடித்தார். லீலை. அந்தக் கணத்தில் அவ்விருவரும் பிரபஞ்சத்தை நிகழ்த்தும் ஆற்றலின் கையில் இருந்தார்கள். அந்த தரிசனம் வழியாக அவர் மேலும் மேலும் தன்னைக் கண்டடைந்தார். இந்த மழையை தாய்தந்தையின் முயக்கமாக சிவசக்தி லீலையாக காண நம்மால் முடியுமென்றால் அந்தக் கணங்களில் அழிவற்ற உண்மையொன்றின் வாசலில் நாம் நிற்கிறோமென்று பொருள்.

காமத்தை வெறுக்கவும் அருவருக்கவும் கற்பித்தது சமணம். அதிலிருந்து உலகமெங்கும் சென்றது அந்த ஒழுக்கவியல். மானுடனுக்குச் சாத்தியமான ஒரு மாபெரும் படிமத்தை  அதன் மூலம் அவன் இழந்தான்.  எத்தை எத்தனை ஞானிகள் அதன் வழியாக சென்று அந்த முதல்முழுமையின் கணத்தை தொட்டிருக்கிறார்கள். நான் ஒருமுறை அமெரிக்காவின் ஓர் கிறித்தவ தேவாலயத்தில் பேசும்போது சாலமோனின் பாடல்களை மேற்கோள் காட்டினேன். அங்கிருந்த பல பெண்களுக்கு அந்த வரிகள் அதிச்சியை அளித்தன என்று சொன்னார்கள். ஏனென்றால் அந்த வரிகளை அவர்கள் தந்தையின் காமம் போல பார்த்தார்கள். அது இல்லாமல் நாம் வந்திருக்க முடியாது. ஆனால் அதை நாம் சிந்திப்பதில்லை. நம் மனம் கூசி உறைந்து விட நாம் எண்ணங்களை திருப்பிக்கொள்கிறோம். ஆனால் பைபிளின் ஆக அழகான வரிகளாக சாலமோனின் பாடல்கள் நின்றுகொண்டிருக்கின்றன.”

நித்யா சாலமோனின் பாடல்களை பற்றிச் சொன்னார். பழைய ஏற்பாட்டில் உன்னத சங்கீதம் என்று சொல்லப்பட்டிருக்கும் இப்பாடல்கள் தொல்காலம் முதலே யூதர்களால் பாடப்பட்டவை. மொத்தம் இருபத்தெட்டு பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உண்மையில் நெடுங்காலமாக இந்தப்பாடல்களை வெட்டிக்குறைத்தபடியே இருந்து மக்கள் மனதில் தங்கிப்போனதனால் சிலவற்றை மட்டும் விட்டுவைத்திருக்கிறார்கள். யூதர்களின் திருமணங்களிலும் வசந்தகால விழாக்களிலும் பாடப்பட்டவை என்பது ஓர் எளிய விளக்கம். ஆனால் ஏன் அவை இறைநூலில் சேர்க்கப்பட்டன என்பதற்கும் ஏன் அவை சாலமோனின் சொற்களாகச் சொல்லப்பட்டன என்பதற்கும் இது விளக்கம் அளிப்பதில்லை.

யூத மரபின் மாமன்னர்களில் ஒருவர் சாலமோன். அவரது  ஆண்மையையும் வெற்றிச்சிறப்பையும் நிர்வாகத்திறனையும் யூதபுராணங்கள் வாழ்த்துகின்றன. சாலமோனுக்கு  எழுநூறு மனைவியரும் முந்நூறு ஆசைநாயகிகளும் இருந்தார்கள் என்கிறது யூத புராணம். யூதர்களுக்கு அவர் ஒரு பிதாவடிவம். ஆனால் அவர் இப்பாடல்களில் தன்னை பெண்ணாக, காதலனுக்காக ஏங்கும் பேதையாக கற்பனைசெய்துகொண்டிருக்கிறார் என்பதில்தான் ஆன்மீகமான சாராம்சம் உள்ளது.

மாமன்னர்களை ஆணாகவும் அவர்கள் ஆண்ட மண்ணை பெண்ணாகவும் உருவகப்படுத்துவது எங்கும் உள்ள வழக்கம். அந்த மண் விளைநிலம், அவர்களோ ஆக்கும் ஆற்றல். அந்த உலகியல் சார்ந்த தளத்திற்கு நேர் எதிரானது ஆன்மீகமான தளம். அங்கே சாலமோனின் மனமே விளைநிலம். அங்கே முளைக்கவேண்டிய விதைகள் விண்ணிலிருந்து வரவேண்டும். ஆகவே விண்நோக்கிக் காதலுற்றுக் காத்திருக்கும் கன்னிநிலமாக அவர் தன்னை உணர்கிறார். அந்த உணர்வையே இக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.

பெண்ணாக ஆகாத மனம் பிறிதொன்றை உள்வாங்கிக் கொள்வதில்லை. தன்னில் இருந்து எதையும் பிறப்பிப்பதும் இல்லை என்பதே சாலமோன் பாடல்கள் நமக்குக் காட்டும் உண்மை என்றார் நித்யா. தன் ஒவ்வொரு துளி இருபபலும் பிறிதொன்றுக்காக காத்திருக்க, தன்னை வந்தடையும் ஒரு சிறு தொடுகையில் பூரித்து கண்விழித்தெழ, தன்னுள் விழும் ஒரு துளி உயிர்த்தூண்டலை தன் மொத்த ஆன்மாவையும் உணவாகக் கொடுத்து உருவாக்கி எடுக்க பெண்மையாலேயே முடியும். உடலிலும் உள்ளத்திலும் உறுதியாகிவிட்ட ஆண்மையின் இறுக்கத்தை கரைத்து பெண்மையாகி நெகிழ எத்தனை தவம் எத்தனை கண்ணீர் தேவைப்பட்டிருக்கும்!

ஞானவாத கிறித்தவ மரபுகளின்படி சாலமோன் அவரது நூறு வயதுக்குமேல்தான் இந்த உன்னதசங்கீதப் பாடல்களை எழுதியிருக்கிறார்! அன்று நாமறியாத பலவகையான சடங்கு முறைகள் இருந்திருக்கலாம். இப்பாடல்கள் அந்தச் சடங்குகளுடன் பிணைந்தவை என்று படுகிறது என்றார் நித்யா. பத்தாம் நூற்றாண்டுவரைக்கூட ஞானவாத கிறித்தவர்கள் இதற்கான தாந்த்ரீகச் சடங்குகளைச் செய்து வந்தார்கள்.தொடர்ச்சியான ஒடுக்குமுறைகள் காரணமாக அவை பொதுத்தளத்தில் இருந்து முற்றாக மறைந்தன

சாலமோனின் காதல்பாடல்களை இன்று பார்க்கும்போது அவற்றில்  அழிவற்ற ஒன்றை தன்னுள் வாங்கி முளைத்தெழுப்ப அவர் மனம் கொள்ளும் எத்தனிப்பையே காண்கிறோம். லீலையை. அதன் ஏக்கத்தை எதிர்பார்ப்பை வலிகளை ஆனந்தங்களை. அந்த வரிகளை மெய்மையை உள்வாங்கும் நிலைகள் என்று புரிந்துகொண்டால் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு மலர்களாக விரிய ஒரு நறுமணசோலையில் நாம் உலவமுடியும் என்றார் நித்யா

சாலமன்

பாடல் 1. தலைவிகூற்று

தம் வாயின் முத்தங்களால்

அவன் என்னை முத்தமிடுக!

ஆம், உனது காதல்

திராட்சை ரசத்தினும் இனிது.

உனது உடலின் நறுமணம்

இனிமையானது.

உமது பெயரோ உன் வாசனையைவிட

மேலாக எங்கும் பரவியுள்ளது

எனவே இளம்பெண்கள்

உன்னைக் காதலிக்கிறார்கள்.

 

உன்னோடு என்னைக் கூட்டிக்கொள்

நாம் ஓடிவிடுவோம்

அரசே என்னை உன் அறைக்குள் கொண்டுசெல்

நாம் மகிழ்ந்தாடுவோம்

நான் உன்னில் களியாட்டமிடுகிறேன்

திராட்சை ரசத்தைவிட மேலானது

உனது காதல்

திராட்சை ரசத்தை விட தூயது

உன்னுடைய காதல்.

*

 பாடல் 25 தலைவி கூற்று

கிச்சிலி மரத்தடியில் நான் உன்னை எழுப்பினேன்

அங்கேயல்லவா உன் அன்னை உன்னை வலித்து பெற்றாள்?

உன் நெஞ்சில் முத்திரையாய் என்னை பொறித்துக்கொள்!

உன் கைகளின் இலச்சினையாய் என்னை அணிந்துகொள்!

ஆம் காதல் சாவைப்போலவே மகத்தானது!

அன்பின் வேகம் பாதாளம் போல் பொறாதது!

அதன் பொறி எரிக்கும் நெருப்பாகும்.

அதன் கதிர்களோ பொசுக்கும் சுவாலையாகும்.

பெருங்கடலும் அணைக்காது பெருங்காதலை.

பெருவெள்ளமும் மூழ்கடிக்காது அதை.

காதலுக்காக ஒருத்தி தன்

செல்வங்களையெல்லாம் துறந்துவிடுவாள்

ஆயினும் அவள் ஏளனத்துக்குள்ளாகிறாள்.

ஆன்மீகச் சாரமுள்ள காதல்பாடல்களிலெல்லாம் இரண்டு மையக்கருத்துக்கள் பயின்றுவருவதைக் காணலாம் என்றார் நித்யா. என்னைக்கூட்டிச்செல், நாம் இங்கிருந்து ஓடிவிடுவோம் என்று பெண் ஏங்குகிறாள். இங்கே என் பெற்றோர் இருக்கிறார்கள். என்னுடைய தோழிகள் இருக்கிறார்கள். நான் இதுவரை அறிந்து உணர்ந்து விரும்பி சேர்த்த எல்லாமே இருக்கின்றன. ஆனால் இவையனைத்தையுமே உனக்காக விட்டுவிட்டு நான் உன்னுடன் வருகிறேன். நீ எங்கு கொண்டுசென்றாலும் நான் உன்னுடன் மகிழ்ச்சியுடன் வருவேன். உன் கைகளைப் பற்றிக்கொண்டு, உன் மொழிகளைக் கேட்டுக்கொண்டு, நீ என்னை கொண்டுசெல்லும் அறியாத உலகங்களுக்கு விருந்தாளியாக வருவேன்.

போதும் இந்த சிறிய கூண்டு. இங்கே நான் சலித்துவிட்டேன். இது இனி எனக்குக் கொடும் சிறை. ஆனால் காதல் கொண்ட என் மனதுக்கு சிறை ஒரு பொருட்டே அல்ல. சுவர்களும் காவல்களும் ஒரு தடையல்ல. நீ என்னை அழைத்தால் நான் எபப்டியும் தப்பி வந்துவிடுவேன். ஏனென்றால் நீ மட்டுமே என் இருப்புக்குப் பொருள் அளிக்க முடியும். என் உடலும் ஆத்மாவும் உனக்காகவே உருவாக்கப்பட்டவை.  நீ என்னை அழைக்கும் கணத்திற்காகவே நான் பிறந்த கணம் முதல் அவை காத்திருக்கின்றன. நீ உன் காதல் மொழியை என்னை நோக்கிச் சொன்னால் அந்தக் கணமே இந்த குளிர்ந்த மலர்ச்சுனை தடையில்லாத காட்டாறாக ஆகும். வருக என் தேவனே, என்னை ஆளும் என் இறைவனே, என் காதலனே! மீண்டும் மீண்டும் மன்றாடுகின்றன தெய்வீகக் காதல்பாடல்கள்.

அவனுடனான கூடலை தன்னை அழித்து முழுதாக மறையும் அனுபவமாகவே அவை எப்போதும் சொல்கின்றன. உன் முத்தங்களால் என் உடலின் சுனைகளை எழுப்பு. என் ஆன்மாவின் அக்கினியை மூண்டெழச்செய்து என்னை பற்றியெரியச்செய். நான் என எதுவும் எஞ்சக்கூடாது. நான் நீயாக வேண்டும். உன்னுடைய உடலாக உன் ஆன்மாவாக நான் ஆகிவிடவேண்டும். என்னை அணிந்துகொள் என்னை உண்டுவிடு என அவை மன்றாடுகின்றன

கலவியும் மரணமும் ஒன்றேயான ஒரு உச்சத்தையே அவை பாடுகின்றன. அவனுடைய காதல் சாவைப்போலவே மகத்தானது. சாவைப்போல முழுமையானது, மிச்சம் மீதியேதும் இல்லாதது. நீ என்னைக் கொல் என்று அவை வீரிடுகின்றன. நான் இன்றி நீ மட்டுமே இருக்கும் ஒருதருணமாக அதை ஆக்கு. என் அன்பே, நான் அளிப்பதை மிச்சமில்லாமல் ஏற்றுக்கொள். தூய கன்னியொருத்தியின் ஆத்மாவின் பொங்கியெழுதலாக அன்றி அந்த மனஎழுச்சியை எப்படிச் சொல்லிவிடமுடியும்?

”நெடுங்காலம் கழித்து ஒருவர் மீண்டும் சாலமோனின் பாடல்களை தன் ஆத்மாவால் பாடியதை நாம் கேட்கிறோம்” என்றார் நித்யா. ஸ்பெயினின் புனித ஜான் (St.John of Cross). நெருப்பாகவும் பனியாகவும் உருகிவழியும் அவரது பாடல்களை இன்றும் அம்மொழி தன் மிகமெல்லிய இதயத்தசையால் பேணி வைத்திருக்கிறது. ஸ்பானிஷ் மொழியின் இலக்கிய உச்சமெனக் கருதப்படுபவை புனித ஜானின் பாடல்கள். பலநூறு விளக்கங்களுக்கும் ஆய்வுகளுக்கும் உள்ளானவை அவை.

 

 புனித ஜான்

இருண்ட இரவு 

ஓர் இருண்ட இரவில்

காதலால் எரிந்தபடி

நான் என் வீட்டை விட்டுச் செல்கிறேன்.

எத்தனை இனிய வாய்ப்பு !

என் இல்லம் அமைதியாக இருந்தது

 

இருளின் மறைப்பில் பாதுகாப்பாக

நான் இறங்கிய ரகசிய ஏணியினால்

இருளையே ஆடையாக அணிந்துகொண்டு

உயரத்தை அளந்தேன்.

எத்தனை இனிய வாய்ப்பு !

என் வீடு அமைதியில் துயின்றுகொண்டிருந்தது.

 

ஆசீர்வதிக்கப்பட்ட அவ்விரவில்

ரகசியமாக எவராலும் பார்க்கப்படாமல்

எவரையுமே நானும் பார்க்காமல்

என் இதயத்தின் சுடரன்றி

வேறு துணையோ விளக்கோ இல்லாமல்

நான் விலகிச்சென்றேன்

 

இந்த வழிகாட்டி ,இந்த அழியாச்சுடர்,

மதிய சூரியனைவிட ஒளிமிக்க இந்த கதிர்,

என்னைக் கொண்டுசேர்க்கும்

என்னைக்காத்திருக்கும் ஒருவனிடம்.

நான் நன்கறிந்தவன். என் உள்ளத்திற்கு இனியவன்.

எவருமே இல்லா இடத்தில் காத்திருப்பவன்.

 

இரவே, என் வழிகாட்டியே,

விடியலைவிட பிரியமானவளே,

காதலிப்பவர்களை துணையுடன் சேர்ப்பவளே,

மெலிந்து வெளிறிய பெண்ணை

இனிய காதலியாக உருமாற்றுபவளே!

 

அவனுக்காகவே நான் கொண்ட

மலரணிந்த என் இளமுலைகள் மீது

அவன் இதோ உறங்குகிறான்.

அவனை நான் வருடுகிறேன்

தேவதாருக்கள் எங்கள் மீது தென்றலை வீசுகின்றன

 

அவன் குழல்கற்றைகளுடன் விளையாடும்

தேவாலயக்கோபுரத்தின் குளிர்காற்றை

நான் அருந்துகிறேன்

அவனுடைய கரம்

மிக மென்மையாக

என் தொண்டையை வெட்டிச் செல்கிறது. 

என் உணர்வுகள் குருதியென வழிந்தோட

நான் நினைவிழந்தேன்

 

என்னை இழந்தேன் எனினும் எஞ்சுகிறேன்

என் தலைவன் தோள் சாய்ந்து என்னை உணர்கிறேன்

இதோ எல்லாம் மறைகின்றன

எஞ்சியவை எல்லாம்

என் ஆசைகள் முழுக்க.

ஏன் நானேகூட!

 

நான் இறந்த அந்த லில்லிமலர் வெளியில்

அனைத்துமே தொலைந்து போயின!

 

ஸ்பெயின் நாட்டில் 1542 ஜூன் 24 ஆம் தேதி பிறந்தவர் புனித ஜான்.  அவரது உண்மையான பெயர் யுவான் டி ஈப்ஸ் ஆல்வாரிஸ் [ Juan de Yepes Alvarez] இளம் வயதிலேயே ஏழை நெசவாளியான தந்தை மறைந்த பிறகு குடும்பப் பொறுப்பை ஏற்ற இவர் வெள்ளை அடிப்பது, தச்சு வேலை, தையல் வேலை என்று கிராமங்கள் தோறும் அலைந்தார். கல்விக் காலத்தை உழைப்பில் செலவிட நேர்ந்தது. இளமைப்பருவத்தில் குடும்பம் மெடினாடெல் கேம்பஸிற்குக் குடிபெயர்ந்தபோது சொசைட்டி ஆ·ப் ஜீஸஸ் அமைப்பின் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்தார். அது ஏழைகளுக்காக நடத்தப்பட்ட ஒரு சேவை அமைப்பு. மருத்துவமனைக்காக தெருவில் பிச்சையெடுத்தார். கூடவே பள்ளியில் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

21ஆம் வயதில் கத்தோலிக்க கார்மலைட் பிரிவின் பாதிரியானார். பின்பு 1564இல் புகழ்பெற்ற சாலமான்கா பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். இங்குதான் அவர் ·ப்ரேலூயிஸ் டி லியோனின் (Frey Luis de Leon£)   பாதிப்பைப் பெற்றிருப்பார் என்று நம்பப்படுகிறது. டி லியோன் ஒரு மனிதாபிமானி-கவிஞர். பழைய ஏற்பாட்டின் ஹீப்ரூ மூலத்திலிருந்து சாலமோனின் ‘உன்னத சங்கீதம்’ பகுதியை நேரடியாக மொழிபெயர்த்தமைக்காக பாழுஞ் சிறையில் அடைக்கப்பட்டவர். அன்றைய சூழலில் மத அடிப்படைவாதிகளால் சமூக விரோதியாகச் சித்தரிக்கப்பட்டவர்.

புனித ஜானின் மனதில் இந்த மொழிபெயர்ப்பு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ‘இருண்ட இரவு’ போன்ற கவிதைகளில் உள்ள பாலுணர்வைத் தீண்டும் படிமங்கள் அனைத்துமே சாலமனின் பாடலில் உள்ளவையே. இந்தச் சமயத்தில்தான் கார்மலைட் பிரிவில் அவிலாவின் புனித தெரஸா செல்வாக்கு செலுத்தத் தொடங்கியிருந்தார். புனித ஜான் அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். இதனால் கார்மலைட் மதத் தலைவர்களுக்கு ஜானின்மீது துவேஷம் ஏற்பட்டது.

1577இல் அவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று டோலிடா என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைத்து சித்ரவதை செய்தது. தரையில் அவர் மண்டியிட்டிருக்க அவரைச் சுற்றி பாதிரிகள் அவரது வெற்று முதுகில் சவுக்கால் அடித்துக்கொண்டே நடப்பார்கள். இதனால் அவரது முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் முடவனாகவே இருக்க நேர்ந்தது.

1578இல் சிறையிலிருந்து தப்பினார். வெளியில் தலைமறைவாக வாழத் தொடங்கிய அவர் இக்காலகட்டத்தில் அழுத்தமான ஆன்மீகத்திறப்புகளுக்கு ஆளாகி கவிதைகள் எழுதத் தொடங்கினார்.  ஸ்பெயினின் கிராமங்களுக்குச் சென்று சிறிய மடாலயங்களை அமைத்தார். இவரது எதிரிகள் பல்வேறு சதிவேலைகளில் இறங்கினார்கள். ஒரு கன்னியாஸ்திரியை ஜன்னல் கிராதிகளின் வழியே முத்தமிட்டார் என்று குற்றம் சாட்டினார்கள். அவரை காமத்தில் அறிவிழந்தவர் என்று சொல்லி வேட்டையாடினார்கள். பொதுமக்களும் அவரை பித்தன் என்றும் காமுகன் என்றும் எண்ணினார்கள்.

இறுதிநாள்வரை அவரை வெறுப்பை மட்டுமே சந்தித்து வாழ்ந்தார் புனித ஜான். குடல் புற்றுநோய் உடலின் பெரும்பகுதியை சிதைக்க 1590 டிசம்பர் 14இல் மரணமடைந்தார். இறந்த பிறகும்கூட அவரது உடலுக்கு சாந்தி கிட்டவில்லை. உபேடா என்ற ஊரில் மக்கள் அவரை துறவி என்று எண்ணி அவரது உடலை ஒரு பள்ளியில் கிடத்தியிருக்க கும்பலொன்று நுழைந்து அவரது உடைகளையும், காயங்கலைக் கட்டியிருந்த துணிகளையும், தசைகளையும்கூட கிழித்தெடுத்துச் சென்றது.  அவர் அவரசரமாக மேலோட்டமாக புதைக்கப்பட்டார். இருமுறை சடலம் மேலெழவே மீண்டும் புதைக்கப்பட்டார்

ஆறு மாதங்களுக்குப்பிறகு அவரை காமக்குற்றவாளி என்று தீர்ப்பளித்த சகோலியா நகர மன்றம் அவரது உடலுக்கு உரிமை கொண்டாடியது. எனவே அது தோண்டியெடுக்கப்பட்டது.   அவரது உடல் பீரங்கி வாயில் வைத்து வெடிக்கப்பட்டு மீண்டும் துண்டு துண்டாக்கப்பட்டது. ஆனால் மரணத்திற்கு பின்னர் புனித ஜான் பொதுமக்களால் புனிதராக அடையாளம் காணப்பட்டு வழிபடப்பட்டார். 1618ல் அவரது கவிதைகள் வெளியிடப்பட்டன.

1726 ல் பாப்பரசர் பதிமூன்றாம் பெனடிக்ட் புனித ஜானை கத்தோலிக்க மதத்தின் புனிதர்களில் ஒருவராக அறிவித்தார். அவரது சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு உபேவாவுக்கு ஒரு காலும், மேட்ரிட் நகருக்கு ஒரு காலும் தரப்பட்டது. விரல்கள் பல புனித இடங்களில் வைக்கப்பட்டன.

எத்தனை மகத்தான அனுபவம். அவனது அன்பின் கரம் கூரிய வாளாக மாறும் பொற்கணம். அவள் கழுத்தை அது வெட்டிச்செல்கிறது மிக மிக இனிமையாக குருதி வழிய அவள் அங்கே இறக்கிறாள். மிச்சமில்லாமலாகிறாள். அவனை தீர்க்கதரிசிகளின் சொற்கள் ஒரு வாள் என்றுதானே சொல்கின்றன. லில்லி மலர் வெளியில் அவளை மிச்சமின்றி கொண்டு உண்டு செல்கிறது அது.

”புனிதஜானை அக்காலகட்டம் புரிந்துகொள்ளாததில் வியப்பில்லை” என்றார் நித்யா ‘நம்முடைய கால்கள் லௌகீகத்தில் ஊன்றியிருக்கும்வரை நாம் ஒருபோதும் அவரை உள்வாங்கிக்கொள்ள முடிவதில்லை.  அவரது ஆன்மா எதற்காக தவிக்கிறதோ அதை நாம் மண்ணில் வைத்துப் புரிந்துகொள்கிறோம். இடுப்புக்குக் கீழே இருக்கும் சில தசைநார்களின் தினவுக்காகவா இத்தனை சொற்கள்? இத்தனை கண்ணீர் ? இத்தனை கனவுகள்? மனித ஆத்மா என்றும் ஏங்கும் ஒரு புனிதமான கூடல் உண்டு. எங்கிருந்து வந்ததோ அங்கே செல்வது. எதுவாக இருந்ததோ அதுவாக ஆவது. எது பிரபஞ்சத்தை நிகழ்த்துகிறதோ அதனால் ஆளப்படுவது. அந்த உத்வேகத்தை காமத்தின் கணங்களினூடாக அடையாளம் காண்கிறது ஞானியர் உள்ளம்”

இந்த மலைச்சரிவுக்கு

ஆடுகளை மேய்க்க வந்தவள்நான்

என் ஆடுகளெல்லாம் சென்றுவிட்டன

நானே மந்தையைப்பிரிந்து தவிக்கும்

ஆடானேன்

என் மேய்ப்பனை தேடுகின்றேன்

என் பழைய உலகம் இன்று விலகிச்சென்றுவிட்டது

என் தலைவனுக்காக மட்டுமே

தவமிருப்பவளானேன்

அவனது நினைவெனும் மணிகளை

என் காதல்சரடால் கோர்த்துக்கொண்டிருக்கிறேன்

 

புனித ஜானின் பாடல்களில் தேடப்படும் அந்த மேய்ப்பனை எத்தனை காலமாக எத்தனை ஆத்மாக்கள் வழியாக மானுடம் தேடிக்கொண்டிருக்கிறது. இந்தவரிகளை ஒரு கோபிகை பாடியிருக்க முடியும். ஜெயதேவரின் அஷ்டபதியில் அல்லது சைதன்யரின் பகுள் பாடல்களில் இவ்வரிகளை நாம் காண முடியும்.

எது தேடப்படுகிறதோ அந்த அளவுக்கே பெரிதாகிறது தேடல். கடலை தேடும் தாகமும் முடிவின்மை கொண்டதே. இந்த மலர்வனத்தில் தனித்த இரவில்  தன் அனைத்தையும் உதறியவளாக வந்து நின்று  வந்து நின்று அவனுக்காக ஏங்கும் இக்காதலியின் காதல் அவனளவுக்கே பியது, அவனளவுக்கே மகத்தானது, அவனைப்போலவே அழிவற்றது” என்றார் நித்யா.

”இன்று  நவம்பர் இருபத்துநான்காம் நாள். இன்று புனிதஜானுக்கான தினம் இது என்கிறது கத்தோலிக்க தேவாலயம். என் நண்பர் பௌலோஸ் மார் கிரிகரியோஸ¤க்கு அளிப்பதற்காக நான் இன்று புனித ஜானின் பதினைந்து பாடல்களை மலையாளத்துக்கு மொழியாக்கம் செய்தேன். உஸ்தாத் அதை வாசிக்கட்டும்”

உஸ்தாதின் குரல் மிகவும் கனத்தது. அவரது முன்னோர்கள் எவரோ இந்துஸ்தானிபாடகர்கள். நித்யாவின் மலையாளம் சம்ஸ்கிருத ஆதிக்கம் கொண்டது. அவரது முன்னோர் சம்ஸ்கிருதபண்டிதர்கள் என்பதனால். சம்ஸ்கிருத உச்சரிப்பை  உஸ்தாத் ஷௌகத் அலி அளவுக்கு துல்லியமாக குறைவானவர்களிடமே கண்டிருக்கிறேன். புனித ஜானின் காதல் அவரது குரல் வழியாக உருகி வழிய ஆரம்பித்தது

வெளியே மழை ஓய்ந்துவிட்டது. லீலை முடிந்த மயக்கம்

ஓர் எளிய கூழாங்கல்

கடவுளின் மைந்தன்

இருவர்

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Jan 15, 2010

முந்தைய கட்டுரைநற்றுணை’ கலந்துரையாடல் -4
அடுத்த கட்டுரைஎழுதுவதை பயில்தல்-கடிதம்