அன்புள்ள ஜெயமோகன்,
நலம்தானே?. போன வாரம் வாங்கிய சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோணி” புத்தகத்தை நேற்று இரவுதான் படித்து முடித்தேன். நீங்கள் கூறியிருப்பது போல, கவிதை தன்மை கொண்ட வரிகள் நிறைய உள்ளன. ஒரு சில இடங்களில் நான் இரண்டு மூன்று முறை திரும்ப திரும்ப படித்தேன். இது உண்மை நாவலா என்ன, சில இடங்களில் நேதாஜி சர்வ சாதாரணமாக வந்து போகிறார். ஒரு தலைவர் என்பதற்காக எந்த ஒரு சிறப்பான வரியையும் வைக்கவில்லை. எத்தனை முகங்கள், எத்தனை கதைகள். கட்டுகோப்பான கதைகளையே வாசித்து பழகிய எனக்கு, கட்டுக்கள் அற்ற இந் நாவல் ஓர் புதிய அனுபவம்.
இனி, கடலுக்கு அப்பால் படிக்க வேண்டும்.
அன்புடன்
இளங்கோ
அன்புள்ள இளங்கோ
ப.சிங்காரத்தின் நாவலில் சுயசரிதை இல்லை. சுய அனுபவங்கள் சில உள்ளன. குறிப்பாக சிங்கப்பூர் மீது நிப்பன் படைகள் புகும் காட்சி. வெட்டி வைக்கப்பட்ட தலைகளுக்கு முடிசீவி விடும் ஜப்பானிய சிப்பாய்.
நேதாஜி உண்மையான கதாபாத்திரம். தேசிய ராணுவத்தின் ஊழல்களும் காமப்பிறழ்வுகளும் எல்லாம் சிங்காரம் அறிந்த உண்மைகள். நாமறிந்த வரலாற்றை அந்தக்கதைகள் ஊடுருவிச்செல்கின்றன இல்லையா
சிங்காரத்தின் நாவலின் சிறப்பே அங்கதம்தான். சங்க இலக்கிய, சிலப்பதிகார வரிகளை பகடிக்காக அவர் ஒடித்து வளைத்திருக்கும் விதம். கோவலை வியாபாரத்துக்கு வந்த செட்டியாராக பினாங்கு தெருவில் போதையில் சந்திக்கும் பாண்டியனின் நிலை.
கடலுக்கு அப்பால் நேரடியான உணர்ச்சிமிக்க ஒரு காதல்கதை. சினிமாவாகக்கூட எவராவது எடுக்கலாம். ‘எந்தக்கழுதையும் கண்ணகியாகலாம், காலை இறுக்கி மூடிக்கொண்டிருந்தால்போதும்’ போன்ற வசனங்களை சென்சார் அனுமதித்தால்
ஜெ