அன்புள்ள ஜெமோ,
நீலம் பல அடுக்குகள் கொண்ட பெருமலராக வரிந்து கொண்டே செல்கிறது. அணிபுனைதலிலேயே கோடிட்டு காட்டி விட்டீர்கள், அஷ்ட நாயகியரும் வருவார்கள் என்பதை.வாசகஜஜ்ஜிதை என்று ஒரு வார்த்தை வந்ததுமே இணையத்தில் தேடி அஷ்டநாயிகா பாவம் என்ன என்று பார்த்துவிட்டேன். கண்ணனுக்கு எட்டு மனைவியர் என்பதையும் இங்கே சேர்த்துக்கொள்ளவேண்டும். ராதை என்ற ஒருத்தியில் வெளிப்பட்ட எட்டுபேரும்தான் பிறகு சத்யபாமை உள்ளிட்ட எட்டு துணைவியராக அவனுக்கு அமைந்தனர் என்று தோன்றுகிறது.
கண்ணனுக்காக அணிபுனைந்து வாசகஜஜ்ஜிதையாக நின்றாள். பொருள்வயின் பிரிந்தவனை எண்ணி விரகத்தில் விரகோதகண்டிதையாகக் காத்திருந்தாள். பிரிந்தவன் சொன்ன நேரத்தில் வரவில்லை என்பதால் புரோக்ஷித பத்ருகையாய் கருத்தழிந்தாள். பிரிவின் துயராற்றாமையால், அவனுடன் என்றென்றும் கூடியிருக்கும் பொருட்டு அவனிருக்குமிடம் தேடி தன் அனைத்து தளைகளையும் ஓர் அபிசாரிகையாய் கடந்தாள். ஒற்றை மனங்கொண்ட ஒரு கோடி உடல் வேண்டுபவனுக்காக தானே பல பேராக குவிந்ததைக் கண்டு, தன்னிரக்கம் கொணடு, பரத்தையோடு போகிறவனை எண்ணி கண்டிதையானாள்.
கண்டிதையாய்க் கடிந்தாலும் கலங்காத கல்நெஞ்சனை, ‘சுனை நீரை சேறாக்கி உண்பது தான் உன் சுவையா?’, என்று விப்ரலப்தையாய் மனங்குலைகிறாள். தோன்றிய அனைத்தும், தோன்றிய அனைவரும் தான் தான் என்பதையும், தோன்றிய அனைத்தும் தன்னைத் தான் வேண்டுகின்றன என்பதையும், அவரவர்க்கு ஏற்றவாறு தான் அளிக்கும் அனைத்து தோற்றங்களையும் விளக்கிக் காட்டியும், ‘நானறிந்த மெய்யெல்லாம் வழிந்தோடி பொய் வந்து குடியேறட்டும்’ என்றே வேண்டியதால், நெஞ்சூறிய தேனை நஞ்சாக்கி கண்ணனை சொல்லெடுத்து பலி கொள்ளும் நீலியாய், கலகாந்தரிதையானாள். மீண்டும் கண்ணனின் பேரன்பால் மெய்யுணர்ந்து, தானே அழிந்து, அதனாலேயே கண்ணனையாளும் ஸ்வாதீனபர்த்ருகையானாள்.
உண்மையில் நீலத்தின் இந்த ஒன்பது அத்தியாயங்களுமே தனியொரு நாவலாகலாம். பரத முனிவர் தந்த அஷ்ட நாயிகா பாவங்களை வைத்து இவ்வளவு சிறப்பாக ஒரு தனிக் கதையை எழுதுவதென்பது கனவிலும் நினையாதது. ஜெயதேவரின் முழு ஆசியும் உங்களுக்கு.
நீலத்தின் பிற பகுதிகளை விடவும் இந்த ஒன்பது அத்தியாயங்களுக்கும் ஒரு சிறப்பு உண்டு. நீலம் முழுக்க முழுக்க விசேஷ தளத்தில் வாசிக்க வேண்டிய நூல். அங்கு நம் சாமானிய தர்க்கங்கள் உதவாது. ஆனால் இவ்வொன்பது பகுதிகளும் சாமானிய தளத்தில் வைத்தும் வாசிக்கத் தகுந்தவை. ஆம், இந்த எட்டு நிலைகளும் சர்வ நிச்சயமாக இன்றைய ஆண் பெண் உறவின் வீச்சாகக் கருதி வாசிக்கலாம். இன்றைய பெண்ணும் தன் கணவனுக்காக அணிபுனைகிறாள். பொருள்வயின் பிரிந்த கொழுநனுக்காகக் காத்திருக்கிறாள்.
இக்காத்திருத்தல் என்பது நாட்கணக்காகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. காலையில் சென்று மாலையில் வருவதாகக் கூட இருக்கலாம். சொன்ன நேரத்தில் வராததை எண்ணி கருத்தழியவும் செய்கிறாள். அவள் கண்டிதையாகவும், விப்ரலப்தையாகவும் மாற அவன் பரத்தையரிடம் செல்ல வேண்டியதில்லை. வேலையையோ, திரைப்படத்தையோ, தொல்லைக்காட்சியையோ, நண்பர்களையோ நாடினால் போதும். அல்லது ஃபேஸ்புக் , வாட்ஸஅப் வகையறாக்கள் இருக்கவே இருக்கின்றன. அவ்வளவு ஏன், இலக்கியம் (வெண்முரசு) படித்தால் கூட போதும். கண்டிதை என்ன கலகாந்தரிதையாகக் கூட ஆவாள்.
இந்த ஒன்பது அத்தியாயங்களிலும் பெண் மனம் மிக மிக நுட்பமாக அணுகப் பட்டிருக்கிறது. அணிபுனைதல் முதல் கடத்தல் வரை பெண்ணால் மட்டுமே உணர முடிந்த காதலும், காமமும், விரகமும், அதனால் விளையும் உள விரைவும் எத்தடையையும் கடக்கும் திண்ணமும் வெகுநுட்பமாக, ஆனால் மிகக் காத்திரமாக படைக்கப்பட்டுள்ளது. அபிசாரிகையாய் ராதை உடைக்கும் தளைகளை எந்த ஆணாலும் அவ்வளவு எளிதாக உடைத்து கடக்க முடியாது.
பிறகு கண்டிதையாகவும், விப்ரலதையாகவும் அவள் புலம்புவது அவள் கடந்த தடைகளுக்கு, அவள் இழந்தவற்றுக்கு முழு நியாயம் கிட்டவில்லை என்பதால் தான். குவிதல் அத்தியாயத்தில் ராதை கொள்ளும் முதல் பிணக்கு ஆரம்பிக்குமிடம் பாருங்கள். ‘அவனேயானாலும் அவனுக்கான தாபத்தை அறிந்திடலாகுமா?’ இங்கே துவங்குகிறாள் ராதை. பெண்ணும் ஆணிடம் தன்னை ஒளிக்காமல் தந்த பிறகு தனக்கான முக்கியத்துவம் அவனிடம் குறைவதாக எண்ணுகிறாள். அவனுக்கு தன்னை விட வேலையும், அவனின் பொழுதுபோக்குகளும் தான் முக்கியம் என எண்ணுகிறாள்.
[விப்ரலப்தை]
இங்கே ஜெ வெகு நுட்பமாக ஒன்றை சொல்கிறார். கானகம் முழுவதும் ஓடுகிறாள் ராதா. கண்ணன் சொன்ன குறியிடம் என ஒன்றை தேர்ந்து மீண்டும் மீண்டும் அங்கேயே வருகிறாள். இந்த பகுதி எதிலும் கண்ணன் அவளிடம் எந்த ஒரு இடத்தையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால் ராதா இது தான் அவ்விடம் என்று தானாகவே அறிகிறாள். இங்கே பெண்ணும் தன் கணவனுக்கு பிடித்தது இது தான் என்று ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அவனுக்காக காத்திருக்கிறாள். ஆனால் பெரும்பாலும் அவளின் தேர்வு அவனுக்கு சம்பந்தமில்லாத ஒன்றாகத் தான் இருக்கும். ஆகவே அவன் அங்கு வருவதில்லை. இவள் விப்ரலப்தையாகிறாள்.
இத்தகைய தருணங்களில் ஆண் என்ன செய்கிறான்? அணிபுனைந்தவளையும், அவனுக்காக அனைத்தையும் கடந்தவளை மட்டுமே அவன் அறிகிறான். அவனுக்காக அவள் ஏங்கியதையோ, அவனை எண்ணி உலைந்ததையோ, அவனுக்காக அவள் இழந்ததையோ அவன் அறிவதேயில்லை. அப்படியே அறிந்தாலும் அந்த இழப்பின் வீச்சினை அவன் உணர்வதில்லை. அவள அனைத்தையும் அவனுக்காக இழந்ததால் அவளே அவனின் அனைத்தும் என்று அவன் உணர வேண்டும் என நினைக்கிறாள். பெண் மனம் எப்போதுமே ஒரு புள்ளி நோக்கி குவிவது. ஆண் மனம் அப்புள்ளியிலிருந்து விரிவது.
தான் நினைத்ததைப் போன்று தான் மட்டுமே போதும் என்று அவன் நினைக்கவில்லை என்றுணர்ந்ததுமே குவிந்த மனது குலைகிறது. அவனுக்காக குவிந்த மனது, குலைந்த பிறகு வெறுப்பில் அவள் மனம் குமிழ்கிறது. குவிவதற்கும் குமிழ்வதற்கும் சிறு வித்தியாசம் தான். நெகிழ்வாயிருப்பதைத் தான் குவிக்க முடியும். கெட்டியாயிருப்பதை ஓர் ஒழுங்கோடு குமிழ்க்க முடியும். குமிழ்த்த மனதின் ஆங்காரம் சொல்லவொண்ணாதது.
‘அக்கணமே அறிந்தேன் அவ்வரங்கில் நான் ஆடும் அடவுகளை. நெஞ்சூறும் தேனை நஞ்சாக்கி நாநிறைக்கும் தலைவி. சேணம் சுமக்காத இளம் காட்டுப்புரவி. ஆணை ஊசலாக்கி ஆடும் கன்னி. அவன் நின்றெரியும் வெளிச்சத்தில் தானொளிரும் காளி. பைரவியும் பூர்வியும் இசைமீட்ட நின்றாடும் தேவி. கண்சிவந்த கலகாந்தரிதை. கண்விழித்து எழுந்து கைதொட உறைந்த கற்சிலை. ஒரு சொல் பட்டு எரிந்து மறு சொல்பட்டு அணைந்த காட்டுத்தீ’, என்று மிகவும் விரிவாகவே சொல்கிறார் ஜெ.
ஆம் அவள் அப்போது குருதிப் பலி கேட்கும் காளி. அதுவும் சொல்லெடுத்து குருதி கொள்ளும் பெருங்கலையறிந்தவள்.அப்படிப் பட்டவளை எப்படித தான் சமாளிப்பது. அவளை அவள் அவ்வாறு ஏன் செய்கிறாள் என்பதை அறிந்து அவளைப் புரிந்து கொள்வதா? அது எக்காலத்திலும் யாராலும் முடியாதது. ஓர் ஆணின் அனைத்து அறிதலும் தோற்குமிடம் அது. அவள் சக்தி.
[அபிசாரிகை]
பெரும்பாலும் ஆண் தன் மனைவியை ஒரு பொருட்டாக பார்க்கத் துவங்குவது இந்த நிலையில் தான். முதலில் அதிர்ச்சி. பின்னர் தன்னிரக்கம். பின் காயப்பட்ட அகங்காரத்தை திரட்டி போரிடுதல். ஆனால் காலங்காலமாக இப்போரில் பெண்ணே எப்போதும் வெற்றி பெறுகிறாள். ஆணின் அகங்காரத்தை எங்கு தட்டினால் அவன் எப்படி வெடிப்பான் என்பதை நன்குணர்ந்தவள் பெண்.
அதையும் குமிழ்தல் அத்தியாயத்தில் மிக நுட்பமாக கண்ணனின் மூலம் காட்டுகிறார் ஜெ. தன்னைப் பார்த்து ‘இனி உன் கை தொட்டால் என் கழுத்தறுத்து மடிவேன்’ என்னும் ராதையைப் பார்த்து கண்ணனே திகைக்கிறான். அது வரை அவளைத் தொட்டு அவளின் அக மயக்கங்களை களைய முற்பட்டவன், எப்போதும் முகத்திலே புன்சிரிப்பைக் கொண்டவன் தளர்ந்தவனாக அவளருகே நிலத்திலமர்ந்து இரு கை நீட்டி அவளின் ஆடை நுனியைப் பற்றி சொல்கிறான், ‘விழி நோக்கி சொல் வருத்துகிறேன் என்று, அக்கணமே அகல்கிறேன்’. அவளும் செல், என் கண் முன்னர் நில்லாதே என்கிறாள்.
கலகாந்தரிதையான மனைவியைக் கண்ட எந்த ஆணும் முதலில் அடையும் அதிர்ச்சியும், தன்னிரக்கமும் கண்ணனுக்கும் வருகிறது. ஆனால் அதன் பிறகு அவன் செய்வது தான் ஆண்களாகிய நாம் கற்க வேண்டிய பாடம். ஆம் கண்ணன் ராதையின் முன் தன் அகங்காரத்தை வைக்கவில்லை. மாறாக திறந்த மனதுடன் தன்னையே வைக்கிறான். ஆணின் அகங்காரத்தை வதைக்கும் கலையறிந்த பெண்மை தன்னை முழுவதும் விரும்பும், தன்னை அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஆணை என்ன செய்வது எனத் தயங்குகிறது.
அந்த இடைவெளியில் கண்ணன் தன்னை முழுவதும் தொகுத்துக் கொள்கிறான். நோயினால் வாயுமிழும் குழந்தையை மீண்டும் மீண்டும் துடைத்து கொஞ்சும் அன்னையைப் போல அவள் முன் நின்று அவள் யாரென்பதை அவளுக்கே உரைக்கின்றான். தான் செய்வது என்ன என்பதை உணர்ந்தாலும் அகம் அமர்ந்த நீலியின் தாகத்துக்கு அவன் உடல் வேண்டுகிறாள். கண்ணன் அந்நீலிக்காகவே கொணர்ந்த ஓர் உடலைத்தந்து அது கொள்க என்கிறான். ‘ஆலமுண்ட காலனின் விரிசடை முடித்தலை. அன்னையே இது நீ நின்றாடும் பீடம்’ என பணிகிறான்.
இந்த தன் முனைப்பில்லாத அகங்காரமழிந்த சரணாகதியை ஆண் நிகழ்த்துவானென்றால், அவன் குருதி வேண்டிய நீலி மலையேறுவாள். இன்றைய பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் பெண் ஆணை சொல்லெடுத்து கொன்ற தருணங்களே ஆண்களிடையே திரும்பத் திரும்ப பேசப்படுகிறது. ‘அவ எப்படியெல்லாம் பேசினா தெரியுமா’ என்பததைத் தான் காயப் பட்ட அனைத்து ஆண்களும் விதவிதமாகச் சொல்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கண்ணன் தரும் பதில் காயப்பட்டது நீங்களில்லை, உங்கள் அகங்காரம். மனைவியிடமெதற்கு அந்த அகங்காரம்? முதலிரவில் முதலில் களையப்படும் உடையல்லவா அது.
[விரகோத்கண்டிதை]
ஒன்றை நன்றாக நோக்க வேண்டும். இங்கே கண்ணன் ராதையை எடை போடவில்லை. புரிந்து கொள்ள முயலவில்லை. அவளுக்காக மாறவில்லை. ஆனால் அவளை அப்படியே ஏற்றுக் கொள்கிறான். அவளுக்கு தன்னை முழுவதும் கொடுக்கிறான். அந்த ஒற்றை உலுக்கில் அவளின் அத்தனை மலர்களையும் உதிர்க்கிறான். அவளே கேட்கிறாள், ‘யார் சினந்தது? எவரை?’.
கண்ணன் இதன் பிறகும் அவளை அணி செய்கிறான். தேவியாக்குகிறான். மீண்டும் மீண்டும் அவள் தாளிணையில் பணிகிறான். அவளை ராதா ராணியாக்குகிறான். அவளை அவளாக்குகிறான். நீலம் 36 ல் மற்றொரு நுட்பமான பகுதி வருகிறது. கண்ணனுடன் ஒன்றான முதல் முறைக்கு பின் ராதை கொள்ளும் ஓர் நிறைத்தனிமை. ‘அங்கே இருந்தேன். நானன்றி யாருமில்லா நிறைத்தனிமையில். என்னுடன் நானுமில்லா எளிமையில். ஒரு காலடியும் இல்லாத மணல். ஒரு பறவையும் இல்லா வானம். ஒரு மீனும் துள்ளாத நீராழம். ஒருவருமே அறியாத என் இடம்’. இந்த தனிமையை, பயமில்லாது, எந்த இடையூறுமில்லாது அனுபவிப்பதாலேயே அவள் தன்னை ராணி என உணர்கிறாள். ஜெமோ முன்பு ஒரு முறை எழுதியிருந்தார், குளியலறையில் மட்டுமே பெண்கள் உணரும் ஒரு விடுதலை உண்டு என்று. அத்தகைய ஓர் விடுதலையைத் தான் கண்ணன் ராதைக்கு வழங்குகிறான். ராதையை ராணி ஆக்குவதால் தான் கண்ணன் ராஜாவாக எஞ்சுகிறான்.
அதியற்புதமான ஒன்பது அத்தியாயங்கள். அஷ்ட நாயிகா பாவங்களும், அவற்றுக்கான ராகங்களும் என ஓர் உன்னத உணர்வைத் தந்த அத்தியாயங்கள். என் மனதுக்கு நெருக்கமானவை, என்னவளை எனக்குணர்த்தியதால். மீண்டும் வாழ்த்துக்கள் ஜெ, உங்களை நீங்களே வெனறு கொண்டிருப்பதற்கு.
அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து
மோகினியாட்டம் அஷ்டநாயிகை பாவங்கள் [ஹரிதா ஹரிதாஸ்]
மறுபிரசுரம்-முதற்பிரசுரம்- Sep 27, 2014