அன்புள்ள ஜெமோ
தொடர்ச்சியாக நீலம் வாசித்துவந்தேன். எனக்கு இந்த மாதிரியான மன எழுச்சிகளிலே நம்பிக்கை இருந்தது கிடையாது. நான் வாசித்ததெல்லாம் வேறுவகையான எழுத்துக்கள் தான். தொடர்ந்து இதை வாசிப்பேனா என்றெல்லாம் சந்தேகம் இருந்தது.
கிருஷ்ணன் ராதை எல்லாம் எனக்கு பெரிசாக கவரவில்லை. மத அனுபவம் என்பது மூளையின் ஒரு தனிச்சிறப்பான ’சர்க்யூட்’ மட்டும்தான். ‘ செல்ஃப் ஹிப்னாட்டிசம்’ மாதிரி அது. நம்மை நாமே தூண்டிவிட்டுக்கொண்டு அதை அடையமுடியும். ஒரு ஊமத்தை வேர் இருந்தாலே போதும். ’ஹலூஸினேஷன்ஸ்’ என்பது ஒரு வகை தப்பித்தல்
ஆனால் அதன் விளைவாக உண்டான அந்த மன எழுச்சி உங்கள் தமிழில் ஒரு பெரிய பாய்ச்சலை தந்துவிட்டது. நீலத்தில் உள்ள ஏராளமான அபூர்வமான சொற்சேர்க்கைகளை குறித்து வைத்திருக்கிறேன். டைரி நிறையும் அளவுக்கு வரிகள் உள்ளன. அதையெல்லாம் நீங்கள் ‘நார்மலாக’ யோசித்திருக்கவே முடியாது
ரயிலிலே போகிறபோது அந்த தாளம் நம்மை மயக்கி ஒரு சந்தத்தை நம் அகமனதில் உண்டுபண்ணும். அப்போது நாம் சாதாரணமாக யோசிக்காத வரிகள் வந்துவிடும். இந்த சந்தம் அதைவிட ஆழமான ஒரு விஷயம்
இதை வாசிக்கும்போது தோன்றியது தமிழை சந்தம் இல்லாமல் எழுதவே கூடாது என்று. தமிழ் ஆயிரம் வருடமாக சந்தம் கொண்டுதான் எழுதப்படுகிறது. சந்தம் இல்லாத உரைநடை எல்லாம் நூறுவருடமாகத்தானே? அதெல்லாமே ஒரு மாதிரி செத்த உரைநடை என்று தோன்றியது
இது செய்யுள் இல்லை. செய்யுள் என்றால் அதில் சந்தம் மாறமுடியாது. அல்லது சந்தம் முன்னாடியே வகுக்கப்பட்டிருக்கும். இது நவீன உரைநடை. ஆகவே சந்தம் நடனமாடிக்கொண்டே உணர்ச்சிகளுக்கு ஏற்ப மாறுகிறது
வாடாமலர். வானில் பறக்கும் மலர்.
வாயுள்ள மலர். விழியுள்ள மலர்.
உன்பெயர்சொல்லி அழைக்கும் உவகை அறிந்த மலர்.
நீ என்றே நடிக்கும் நீலச்சிறுமலர்.
என்ற வரியில் ஒரு சந்தம் முடிந்துவிட்டது உடனே அது மாறுகிறது. கொஞ்சம் கீழிறங்கிய சந்தம்.
கைநீட்டி “வா” என்றேன்.
கருமணிக் கண்ணுருட்டி தலைசரித்தது.
“கண்ணா வா!” என்றேன்.
எழுந்தமர்ந்து பின் சிறகடித்து என்னருகே வந்தது.
அந்தச்சந்தம் முடிந்ததும் அடுத்த சந்தம் வந்தது. இது உடனே மேலேறுகிறது
சிறகசைத்த காற்றும்
சிற்றுகிர் கொத்தும்
என் மேல் பதிந்தன.
உடனே அடுத்த சந்தம். இது வேகமானது. இறங்குவதற்காக ஏறுவதும் ஏறுவதற்காக இறங்குவதும்…
முலையுண்ணும் குழந்தையின் முளைநகங்கள்.
மூச்சுக் காற்றிலாடும் இறகுப்பிசிர்கள்.
கண்ணென்றான நீர்த்துளிகள்
சந்தம் என்றால் அருணகிரிநாதர்தான். தமிழில் சந்தத்தின் உச்சம். குமரகுருபரர் அதற்கு அடுத்து.அல்
இப்படி மாறிக்கொண்டே போகிற சந்தம் உரைநடையில்தான் கூடும். செய்யுளில் இடமில்லை. இந்த சந்தம் வழியாக உரைநடை நிகழும்போது மற்றபடி உரைநடையில் எதிர்பார்க்கவேமுடியாத சொற்சேர்க்கைகள் வந்துவிடுகின்றன
இசைவென்ற வெளி
அணித்தூவல் குவைகள்
விழியருவி
புள்ளிசை வெள்ளம்
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அர்த்தமே இல்லாமல் வந்து விழுந்த சொல்லாட்சிகள்தான் அதிகம். நாம் அதன்மேல் அர்த்தங்களை ஏற்றமுடியும். ஏனென்றால் மொழியில் அர்த்தமில்லாமல் ஒன்றும் நிகழ்வது கிடையாது
நான் என்ன நினைத்தேன் என்றால் அர்த்தம் தான் மொழியை கட்டுப்படுத்தும் பெரிய தளை என்று. அதை கடந்தால் மொழி புதியதாக பிறந்துவரும். அர்த்தத்தை கடப்பது எளியது அதற்கு தர்க்கத்தை கடக்கவேண்டும்.
அதற்குத்தான் போதை வேண்டும். மூளையை களைக்கவைக்கும் போதை கவைக்குதவாது. மூளையை தட்டி எழுப்பும்போதை என்றால் அது அப்ஸெஷன், ஸ்கிஸோபிர்னியா மாதிரியான மனச்சிக்கல்கள்தான். பக்தி எழுச்சி, மத அனுபவத்தின் போதை எல்லாம் calculated madness. பத்திரமாக போய் ஆடித்திரும்புவது. அது நிகழ்ந்திருக்கிறது. அந்த அழகெல்லாம் மொழியில் இருக்கிறது
நன்றி ஜெ. திரும்ப வாருங்கள்
செம்மணி அருணாச்சலம்
வியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்