இருபத்திரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் காசர்கோடு தபால் தந்தி ஊழியர்சங்கத்தின் கம்யூனில் தங்கியிருந்த காலகட்டம் ஒருவகையில் கேரளத்தின் பொற்காலம். சொல்லப்போனால் பொற்காலத்தின் திரைவிழும் காலம் அது. நான் சென்றிறங்கியபோது கண்டது எல்லாருமே ஏதோ வாசிக்கிறார்கள் என்பதுதான்.
வட கேரளத்தில் அப்போது வேறு பொழுதுபோக்கே கிடையாது. சினிமா மீது பெரிய மோகம் அன்று மலையாளிகளுக்கு இல்லை. சினிமாவைப்பற்றிப் பேசுவது கொஞ்சம் குறைவான செயல் என்ற எண்ணம் சாதாரணமானவர்களிடம்கூட உண்டு. அரசியலும் இலக்கியமும்தான் விருப்பமான விஷயங்கள். அரசியல்கூட அன்றாட அரசியல் இல்லை, கோட்பாட்டு அரசியல். அது இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாடும் சி.அச்சுதமேனனும்,கெ.வேணுவும் ஓயாமல் கேரளத்தை நோக்கிப் பேசிக்கொண்டிருந்த யுகம். தீவிர இடதுசாரி எழுச்சி மறைந்திருந்தாலும் அதன் அறிவுத்தளப்பாதிப்பு அப்படியே வலுவாக நீடித்தது.
சி.அச்சுத மேனன்
‘வேதி’ [சபை] என்று முடியும் பெயர்களில் உள்ள எல்லா அமைப்புகளும் தீவிர இடதுசாரிகளால் நடத்தப்படுவனவாக இருக்கும். சம்ஸ்காரவேதிகள், [கலாச்சார சபை] பரிசரவேதிகள் [சுற்றுச்சூழல் சபை] ஊர் தோறும் இருந்தன. எல்லா ஊர்களிலும் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் கலாச்சார, இலக்கிய அமைப்புகள் இருக்கும். இவையெல்லாமே தீவிரமாகவும் தரமாகவும் இயங்கிவந்தன. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தொடக்ககாலம் ஆகையால் அவர்களும் ஏராளமான கலாச்சார அமைப்புகள் வழியாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். நாராயணகுருவின் இயக்கமும் அதே தீவிரத்துடன் நீடித்தது.
எங்கள் விடுதியில் ஒரு நல்ல நூலகம் இருந்தது. தொலைபேசி நிலையத்திலும் ஒரு நூலகம் இருந்தது. இதைத்தவிர கட்சிக்கு ஒன்றாக காசர்கோடு நகரில் பதினெட்டு நூலகங்கள் இருந்தன. மாதம் தோறும் முதல்வாரத்தில் புத்தக விற்பனையாளர்கள் அரசாங்க அலுவலக வராந்தாக்களில் புத்தக மூட்டைகளை கொண்டு வந்திறக்கி சரசரவென விற்றுத்தள்ளுவார்கள். எல்லாருமே தங்களுக்கென நூல்களை வாங்குவார்கள்.
எங்கள் அலுவலகத்தில் எந்நேரமும் இலக்கியமும் அரசியலும் சர்ச்சை செய்யப்படும். விடுதிகளில் இரவு ஒருமணி வரைகூட சர்ச்சைகள் நீளும். வாரம்தோறும் இரண்டுநாள் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கோட்பாட்டாளர்கள் வந்து வகுப்பெடுப்பார்கள். என் வாழ்க்கையின் துயரம் மிக்க நாட்களை நான் இலக்கியம் வழியாக தாண்டிவரச்செய்தவை அந்த இலக்கிய விவாதங்களே. அவையே என் ரசனையை உருவாக்கின. என் ஆளுமையை நிர்ணயித்தன.
அந்தக் காலகட்டம் சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது என்ற எண்ணம் இப்போது ஏற்படுகிறது. இலட்சியவாதம் மீதான நம்பிக்கை பெரும்பாலானவர்களின் உள்ளத்தில் இருந்து மறைந்தது. அதை வெளியே சொன்னவர்கள் குறைவு. ஆனால் இது என்றென்றும் இப்படித்தான் இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. இதை மாற்றுவதெல்லாம் அசாத்தியம் என்ற அவநம்பிக்கை உருவாகி விட்டது.
ஆகவே விரைவில், ஒரு மரம் சரிந்து நிலம் தொடும் வேகத்தில், கேரள சமூகம் நடைமுறைவாதம் நோக்கி திரும்பியது. தொழில்முறை மனநிலை கொண்டவர்களாக இளைஞர்கள் ஆனார்கள். உண்மையான ஊக்கமுள்ள அரசியலும் லௌகீகத்தேவைக்கு அப்பாற்பட்ட வாசிப்பும் இல்லாமலாகியது.
இன்றைய கேரளத்தில் மேலோட்டமான இதழியலுக்கு அப்பாலான வாசிப்பு மிகமிகக் குறைந்துவிட்டிருக்கிறது. நூலகங்கள் கைவிடப்பட்டு கிடக்கின்றன. ஒட்டுமொத்த பண்பாட்டியக்கமே சோர்ந்து மறைந்து விட்டது. நேற்று நூலகம் இருந்த இடத்தில் இன்று ‘பார்’ வந்துவிட்டிருக்கிறது என்று கேரள விமரிசகர் எம்.கங்காதரன் ஒருமுறை சொன்னார். தரமான படங்கள் வெளிவந்த மலையாள திரையரங்குகளில் அஜித், விஜய் படங்கள் சக்கைபோடு போடுகின்றன. இளைஞர்கள் எங்கும் தமிழ் குத்துப்பாட்டுகளுக்கு நடனமாடுகிறார்கள். எந்த தொலைக்காட்சியை திருப்பினாலும் அதுதான் தெரிகிறது.
இலக்கியத்தில் தரமான படைப்புகள் வருவது அனேகமாக நின்றுவிட்டிருக்கிறது. அரசியல் சிந்தனைகளிலும் கோட்பாட்டு விவாதங்களிலும் அந்த தேக்கம் நிலவுகிறது. அந்த பழையபொற்காலத்தில் உருவான அமைப்புகளும் இதழ்களும் அப்படியே உள்ளன. அவை இன்று பழைய நினைவுகளை மீட்டிக்கொண்டிருக்கின்றன. இன்று பாஷாபோஷினி, மாத்ருபூமி எதை எடுத்துப் பார்த்தாலும் எழுபது எண்பதுகளைப் பற்றிய நினைவுக்குறிப்புகள்தான் எழுதப்பட்டிருக்கின்றன.
ஒரு கோணத்தில் இ.எம்.எஸ்ஸின் மறைவை அந்த திருப்புமுனையாகச் சொல்லலாம் என்றும் படுகிறது. அவருக்கு முன்னரே அச்சுதமேனன் மறைந்தார். இ.எம்.எஸ்ஸின் மறைவுக்குப் பின் கம்யூனிஸ்டுக் கட்சியின் பேசும்தொனியே மாறிவிட்டிருப்பதை எவரும் காணலாம். அதன் எல்லா அறிவார்ந்த தருக்கமும் காணாமலாகியது. கோட்பாட்டுத்தோரணை மறைந்தது. அதுவும் பிற அரசியல்கட்சிகளைப்போல ‘லாவணி’ பாட ஆரம்பித்தது.
இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு
இ.எம்.எஸ், அச்சுதமேனன் இருவருமே தரமான தத்துவ-கோட்பாட்டு தர்க்கத்துடன் பிரபல ஊடகங்கள் வழியாக அரைநூற்றாண்டுக்காலம் கேரள சமூகத்தின் லட்சக்கணக்கான மக்களிடம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இரண்டு தலைமுறையினர் இளமையிலேயே அவர்களின் கட்டுரைகளை வாசித்து வளர்ந்து வந்திருக்கிறார்கள்.
இருவருமே மாபெரும் இலக்கிய அறிஞர்களும் கூட. இருவரும் எப்போதுமே இலக்கியத்தை ஆராய்ந்தும் விமரிசித்தும் விவாதித்தும் வந்திருக்கிறார்கள். அவர்களை எதிர்க்கும் தரப்பும் அதனாலேயே வலுவானதாக அமைந்தது. அரை நூற்றாண்டுக்காலம் கேரளச்சூழலில் இலக்கியம் சலிக்காத பேசுபொருளாக அமைந்தமைக்கு காரணம் இந்த அறிவார்ந்த சூழலே.
கேரளசமூகத்திடம் ஓயாமல் இலக்கியம்பேசிய மூத்த பேராசிரியர்களின் பெயர்கள் நினைவில் எழுகின்றன. எம்.கிருஷ்ணன்நாயர், எம்.என்.விஜயன், ஜி.குமாரபிள்ளை,சுகுமார் அழிக்கோடு. இவர்களெல்லாம் பெரும் நட்சத்திரங்களாக இருந்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மறைந்துவிட்டிருக்கிறார்கள். இன்று அப்படி பேசுபவர்களும் இல்லை, கேட்பதற்கு ஆளும் இல்லை.
ஆம், இலக்கியம் பேசப்படவேண்டும். சுவாரசியமான இலக்கிய அரட்டைகள் வழியாகவே இலக்கியம் ஒரு சமூக இயக்கமாக நீடிக்கிறது. உயர்ந்த தரத்திலான விவாதங்கள் முதல் நக்கலும் கிண்டலுமான அன்றாட அரட்டைகள் வரை அது நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும். அந்த பேச்சை உருவாக்கி நீடிக்கச் செய்ததே கேரளத்தின் அறிவுத்தள முன்னோடிகளுடைய சாதனையாக இருந்தது.
ஆனால் தமிழில் அத்தகைய ஓர் இலக்கிய இயக்கம் நிகழவே இல்லை. இங்கே மரபிலக்கியத்தில் அந்த இயக்கம் இருந்தது. கம்பராமாயணம் சிலப்பதிகாரம் திருக்குறள் குறித்து பேச அறிஞர்கள் இருந்தார்கள். அந்த தளத்தில் ஓர் அலை சென்ற நூற்றாண்டில் ஆரம்பித்தது.. ஞானியார் சுவாமிகள் முதல் குன்றக்குடி அடிகளார், கீரன் வரை அந்த அலை நீடித்து இன்றும் ஒருவகையில் தொடர்கிறது
ஆனால் நவீன இலக்கியம் குறித்து பேசும் பிரபல அறிஞர்கள் எவருமே இல்லை. தனிப்பேச்சில் சுந்தர ராமசாமி அற்புதமான ஒரு இலக்கிய அரட்டையாளர். அவரது சபையில் அமர்பவன் மிகச்சிலநாட்களிலேயே இலக்கியத்தின் சுழலுக்குள் ஈர்க்கப்பட்டுவிடுவான். அவனுடைய சிந்தனைகளை முழுக்க இலக்கிய நிகழ்வுகளும் மேற்கோள்களும் வேடிக்கைகளும் நிறைத்துவிடும். எதைச் சொன்னாலும் ஓர் இலக்கிய உதாரணம் அவன் வாயில் வரும். அவனுடைய ரசனை உருவாகி விட்டிருக்கும்.
சுந்தர ராமசாமிக்கு முன்னால் க.நா.சுவை அந்த இடத்தில் வைக்கலாம். க.நா.சு சுவாரசியமான உரையாடல்காரர் அல்ல என்றாலும் ஈர்ப்புள்ளவர் என்று சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். க.நா.சு ஒரு தனிநபர் இயக்கமாக சலிக்காமல் செயல்பட்டவர். மார்க்ஸிய தரப்பில் சமகாலத்தில் நா.வானமாமலை ஒரு வட்டத்தை உருவாக்கியிருந்தார். இலங்கையில் கைலாசபதியைச் சுற்றியும் மு.தளையசிங்கத்தைச் சுற்றியும் வட்டங்கள் இருந்தன.
சுந்தர ராமசாமி பரவலாக அறியப்பட்டவரல்ல. அவர் ஒரு சிறிய வட்டத்திற்குள்தான் இருந்தார், கூடத்து உரையாடல்தான் அவருடையது. அவரளவுக்கே தீவிரமான ஒரு சிறு வட்டங்கள் கோயில்பட்டி தேவதச்சன், கோவையில் ஞானி, தஞ்சை பிரகாஷ், சென்னையில் ஞானக்கூத்தன், டெல்லியில் வெங்கட்சாமிநாதன் ஆகியோரைச் சுற்றி இருந்தன. பிற்காலத்தைய பல இலக்கியவாதிகள் அந்த இன்குபேட்டரில் இருந்து ஓடு உடைத்து சிறகு காயவைத்து எழுந்து வந்தார்கள்.
*
தேவதச்சன்
எதற்காக இலக்கியத்தை அரட்டையாக ஆக்க வேண்டும்? இலக்கியத்தை நாம் அன்றாடப்பேச்சாக ஆக்கிக்கொள்ளாத வரை அதற்குள் நாம் தீவிரமாக இயங்கமுடியாது. அன்றாடப்பேச்சு என்பது அதி தீவிர தளத்திலேயே எப்போதும் இருந்துகொண்டிருக்க முடியாது. வேடிக்கையும் வியப்பும் வம்பும் எல்லாம் கலந்த ஒன்றாகவே அது இருக்க முடியும். எதில் நமக்கு தீவிரஆர்வம் இருந்துகொண்டிருக்கிறதோ அதை நாம் நா ஓயாமல் பேசுவோம். அந்தப்பேச்சு அரட்டையாகவே இருக்க முடியும்.
இரண்டாவதாக, பேசுவதன் மூலமே நாம் நம் வாசிப்பை முழுமையாக்கிக்கொள்ள முடியும். இலக்கியம் வாசித்து அதைப்பற்றி பேசவே பேசாத ஒருவர் காலப்போக்கில் இலக்கியத்தை இழந்துவிடுவார். பேசும்போது என்ன நடக்கிறது? நாம் நம்முடைய கருத்துக்களை கோர்வையாக ஆக்க முயல்கிறோம். ஓர் இலக்கிய படைப்பை வாசித்தபின்னர் அதைப்பற்றி பேச ஆரம்பிக்கும்போதுதான் அது எவ்வளவு கடினம் என்று உணர்வோம். நம்முடைய கருத்துக்கள் தர்க்கபூர்வமாக இருக்காது. நம் உணர்ச்சிகள் முழுமையாகவும் தெளிவாகவும் இருக்காது. பேசும்தோறும் அவை தெளிந்து வருவதைக் காணலாம். நம்முடன் பேசுபவர் நம் கருத்துக்கள் மேல் கேள்விகளை எழுப்புபவராக இருந்துவிட்டால் நம்முடைய தரப்பு மிக விரைவிலேயே துல்லியமாக ஆகிவிடும்
வெங்கட் சாமிநாதன்
நாம் வாசித்த நூலை வாசித்த இன்னொருவரிடம் பேசுவதென்பது மேலும் முக்கியமானது. நாம் காணாமல் போன பல தளங்களை அவர் கண்டிருப்பார். ஒரு நூலை வாசித்த இருவர் பேசிக்கொண்டார்கள் என்றால் இருவருடைய வாசிப்புமே பலமடங்கு மேம்பட ஆரம்பிக்கும் என்பதைக் காணலாம். முக்கியமான இலக்கிய ஆக்கங்களை பலமுறை வாசிக்க வேண்டும். ஆனால் வாசித்த சிலர் கூடிப் பேசுவதென்பது பலமுறை வாசிப்பதற்கு நிகரானது.
க.நா.சு
இத்தனைக்கும் மேலாக ஒன்றுண்டு, இலக்கிய உலகத்தையும் அறிவுலகத்தையும் கைப்பிடிக்குள் சிக்குவதாக ஆக்க இலக்கிய அரட்டையால்தான் முடியும். உலக இலக்கியம் தமிழிலக்கியம் என்றெல்லாம் சொல்கிறோம். அவை எவ்வளவு பெரிய பரப்புகள். எத்தனை ஆயிரம் எழுத்தாளர்கள், எத்தனை ஆயிரம் நூல்கள்! அனைத்தையும் வாசிப்பதோ வாசிப்பைப்பற்றி ஒரு சித்திரத்தை உருவாக்கி கொள்ளவோ மேதைகளால் கூட எளிதில் இயலாது. நாளெல்லாம் அதற்கென முயன்றால்கூட அது எளிய விஷயமல்ல.
ஆனால் இலக்கிய அரட்டைமூலம் அந்த உலகம் சுருங்கிச் சுருங்கி நம் கைக்குள் வரும் விந்தையைக் காணலாம். ஒரு நகரத்துச் சாலையை கைக்கண்ணாடியில் பிரதிபலித்துப் பார்த்துக்கொள்வதுபோல. எழுத்தாளர்களின் பெயர்கள், நூல்களின் சுருக்கங்கள், புதிய கருத்துக்கள், நுண்ணிய இலக்கிய அவதானிப்புகள் அரட்டைகளில் நம்மை நோக்கி வந்தபடியே இருக்கும். எல்லாம் செரிக்கப்பட்டு சுருக்கபப்ட்டு எளிய இறுக்கமான வடிவை அடைந்திருக்கும். நான் எம்.கோவிந்தன், ஆற்றூர் ரவிவர்மா,சுந்தர ராமசாமி, நித்ய சைதன்ய யதி ஆகியோருடனான அரட்டைகளில் இருந்து அறிந்தவை மொத்த வாசிப்பில் பெற்றவற்றுக்கு நிகரானவை.
ஞானக்கூத்தன்
பெரும் இலக்கிய அறிஞர்கள், திறனாய்வாளர்கள்,பேராசிரியர்கள் ஒரு அறிவுசூழலை நோக்கி இடைவிடாது உரையாடிக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் அச்சூழலில் இலக்கிய, தத்துவ அரட்டையை நிலைநிறுத்தும். துரதிருஷ்டவசமாக தமிழில் அப்படிப்பட்ட சுவாரசியமான அறிஞர்கள் எவரும் இல்லை. இங்கே இலக்கிய ஆசிரியனே அதையும் செய்ய வேண்டியிருக்கிறது. இன்று நாம் நவீன இலக்கியம் குறித்து என்னென்ன பேசுகிறோமோ அவையெல்லாம் க.நா.சு தமிழ்ச்சூழலை நோக்கி ஓயாது பேசியதில் இருந்து உருவாகி வந்தவை.
*
இன்று தமிழில் இலக்கியம் பற்றிய ஓர் ஆர்வம் கொஞ்சமாகவேனும் உருவாகி வந்திருக்கிறது. பரவலாக இலக்கியம் வாசிப்பவர்கள் சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இன்று நமக்கு தேவை இலக்கியம் குறித்த ஒரு பொது உரையாடல். காட்டில் சீவிடுகளின் பாடல்போல நம் சமூகத்தில் நிறைந்திருக்கும் ஒரு ரீங்காரமாக அது இருக்கவேண்டும். லட்சக்கணக்கான குரல்களின் இணைவால் உருவாகும் ஓசை அது. அதற்கான தேவை இருந்தும் மிகக்குறைவாகவே அது இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நூல்களை பற்றியும் கருத்துக்களைப் பற்றியுமான தொடர் உரைடாடல் தேவை. அதை நிகழ்த்தும் வல்லமை கொண்டவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.
அத்தகைய உரையாடல்கள் இல்லாத இடத்தில் இலக்கியப்பூசல்களே அந்த இடத்தை அடைத்துக்கொள்கின்றன. தமிழ்ச் சிற்றிதழ்களையோ இணைய தளங்களையோ பார்த்தால் இலக்கியப்பூசல் முக்கால் பங்கு இடத்தை அடைத்திருப்பதைக் காணலாம். இலக்கியப்பூசலை ஓர் இலக்கியச்சூழலில் இருந்து விலக்க முடியாது. ஏனென்றால் பெரும்பாலான இலக்கியப் பூசல்களின் உள்ளடக்கமாக மாறுபட்ட இலக்கிய மதிப்பீடுகள் அல்லது இலக்கிய ஒழுக்கங்கள் இருக்கும். அவை பூசல் மூலமே விவாதிக்கப்படும். ஆனால் அவை ஓர் எல்லைக்குமேல் சென்றால் இலக்கியச் சூழலே மனக்கசப்புகளால் நிறைந்துவிடும்
மாறாக இலக்கிய அரட்டை என்பது இனியது, உற்சாகமானது, கற்பிக்கக்கூடியது. உலகையே நம் பலகணிக்கு அருகே கொண்டுவந்து நிறுத்தக்கூடியது. அத்தகைய இலக்கிய அரட்டைகளை குறைவாகவே நம் இதழ்களில் காணமுடிகிறது. அதற்கு என்ன காரணம் என்றால் இலக்கியப்பூசல் செய்பவர்கள் தங்கள் அகந்தையை முதன்மைப்படுத்துகிறார்கள் என்பதே. இலக்கிய அரட்டையை முன்வைப்பவர்கள் தங்களை விட மேலாக இலக்கிய உலகை முன்வைப்பார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் எஸ்.ராமகிருஷ்ணன் அத்தகைய உரையாடலை தொடர்ச்சியாக நிகழ்த்தி வருகிறார். தமிழில் ஒரு சராசரி வாசகன் உலக இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் அறிவதற்கான சாளரமாக அவரது கட்டுரைகள் இருந்து வருகின்றன. உலக இலக்கியத்திலும் தமிழிலக்கியத்திலும் அவர் எடுத்துப்பேசியிருக்கும் ஆசிரியர்களின், நூல்களின் பெயர்ப்பட்டியலே வியப்பூட்டுவதாக உள்ளது. இன்றைய தமிழ்ச்சூழலில் இத்தகைய பல குரல்கள் எழுந்தாகவேண்டியிருக்கிறது. நமக்கு இன்றைய இன்றியமையாத தேவை இலக்கியஇதழியல். அதற்கான மிகச்சிறந்த முன்மாதிரிகள் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள். ஒருவேளை அவரே எண்ணியிருப்பதைவிட மிக முக்கியமானவை அவரது இக்கட்டுரைகள்.
ஆனால் இக்கட்டுரைகளின் முக்கியத்துவம் பொதுவாக நம் சூழலில் உணரப்படவில்லை. காரணம் சிற்றிதழ் ஆசாமிகள் பொதுவாக ‘சூப்பர்’ அறிவுஜீவிகளாக காட்டிக்கொள்ள விரும்புபவர்கள். ஆகவே இத்தகைய எழுத்து தங்கள் தகுதிக்கு ஒரு படி குறைவானது என்று நினைப்பார்கள். ஒரு சாதாரணமான கவிஞரிடம் நான் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய லோர்க்கா பற்றிய கட்டுரையை வாசித்தீர்களா என்று கேட்டேன். ”இல்லை, நான் லோர்க்காவைப்பற்றி வேறே புக்ஸ் படிச்சிருக்கேன்” என்றார். அத்துடன் ”அவரு என்ன சார், சாதாரணமா தெரிஞ்ச தகவல்களைத்தானே எழுதறார்” என்றார். எங்கோ அவரிடம் அப்படி யாரோ சொல்லியிருக்கிறார்கள்.
அவரது அந்த அசட்டுத்தனமான உதாசீனத்தை உடைக்க அவரை சீண்டுவதுதான் ஒரே வழி என்று எனக்குப் பட்டது. ”நான் முப்பது வருஷமா மூணுமொழிகளிலே ஒருநாளைக்கு ஆறுமணிநேரம் வரை வாசிக்கிறேன். நான் பொருட்படுத்தற அளவு வாசிக்கிற ஒரு சிலர்தான் தமிழ்நாட்டிலே இருக்கிறாங்க..” என்றேன் ”ஆனா நான் ராமகிருஷ்ணன் எழுதற எல்லா கட்டுரைகளையும் தவறாம வாசிச்சிருவேன். எனக்கு அதெல்லாமே ரொம்ப பிடிச்சவையாத்தான் இருக்கு….எனக்குத்தெரியாத முக்கியமான ஒரு தகவலாவது இல்லாத ஒரு கட்டுரையக்கூட அவரிட்ட நான் வாசிச்சதில்லை” என்றேன். அவர் பேசாமல் நின்றார்.
”எந்த முட்டாளோ சொன்னாங்கிறதுக்காக அதையே சொல்லிட்டு அலையாதீங்க. உங்க கிட்ட சொன்னது யார்?” என்றேன். ஓர் எழுத்தாளரின் பெயரைச் சொன்னார். ”அவருக்கு இந்தக்கட்டுரைகளிலே இருக்கிற எழுத்தாளர்களோட பேரே இப்பதான் தெரிஞ்சிருக்கும்” என்றார். ”அவரு இதெல்லாம் டவுன்லோடு எழுத்தூன்னு சொல்றார் சார்” என்றார். நானும் அதை பலமுறை கேட்டிருக்கிறேன்.
”ஏன் க.நா.சு எழுதினதை லைப்ரரி எழுத்துன்னு சொல்லமாட்டாரா?” என்றேன். எல்லா நூலுமே பிரிட்டிஷ்நூலகத்தில் இருப்பவைதானே? வாசிக்கிறவனுக்கு இணையத்தில் வாசித்தால் என்ன, நூலகத்தில் வாசித்தால் என்ன? நானும்தான் இணையத்தை நாளெல்லாம் வாசிக்கிறேன். எங்கே இவையெல்லாம் இணையத்தில் சமைத்துப் பரிமாறப்பட்டுள்ளன? இணையத்தில் ஒரு தகவலை எளிதில் தேடலாம். ஆனால் எதை தேடவேண்டும் என்று வாசித்தால்தானே தெரியும்?
ஒரு பங்களிப்பை எளிதில் நிராகரிக்கும் சிறுமை அன்றி இதில் வேறு ஏதுமில்லை. உண்மையில் இக்கட்டுரைகளைப்போல எல்லா சிற்றிதழ்களும் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டு ஓர் அலையை உருவாக்கினாலன்றி இனிமேல் நாம் முன்னால் செல்ல முடியாதென்ற நிலை உருவாகியிருக்கிறது. வருடத்துக்கு இருபதாயிரம் நூல்கள் தமிழில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவற்றை நாம் ‘செரித்து’ கொள்ளவேண்டியிருக்கிறது. அதற்கு நாம் இன்னும் விரிவாக அரட்டையடிக்க வேண்டியிருக்கிறது.
எஸ்.ராமகிருஷ்ணனின் இலக்கிய உரையாடல்கள் அடங்கிய எல்லா நூல்களுமே ஒரு இலக்கிய வாசகனுக்கு முக்கியமானவையே. அவை நூற்றுக்கணக்கான சுவாரசியமான தகவல்களை அளிக்கின்றன. இலக்கியநூல்களை அறிமுகம் செய்து அவைசார்ந்த மதிப்பீடுகளையும் முன்வைக்கின்றன. அவ்வாறாக உலக இலக்கியச் சூழல் நம் வீட்டு முற்றமாக மாறுகிறது.
*
எஸ்.ராமகிருஷ்ணனின் ‘விழித்திருப்பவனின் இரவு’ இவ்வகையில் முதன்மையான நூல் என்று நினைக்கிறேன். நேர்த்தியாக திட்டமிடப்பட்டு விரிவான ஆராய்ச்சிக்குப் பின் எளிமையான அரட்டையாக எழுதப்பட்டது இந்த நூல். இந்நூலில் ராமகிருஷ்ணன் எழுத்துக்குப் பின்னால் உள்ள எழுத்தாளர்களை தேடிச் செல்கிறார்.எழுத்துக்கு அப்பால் அவர்கள் யார் என்று ஆராய்கிறார். அவர்களின் பொழுதுபோக்குகள் அந்தரங்கமான கிறுக்குத்தனங்கள் தேடல்கள் ஆகியவற்றை கவனிக்கிறார்.
இத்தகைய ஓர் ஆராய்ச்சியின் பயன் என்ன? முதலில் எழுத்தாளர்கள் நமக்கு நெருக்கமானவர்களாக ஆகிறார்கள். அவர்களின் எழுத்துமூலம் நாம் பெற்றுக்கொண்ட ஆளுமைப்பிம்பத்துக்கு இன்னொரு பரிணாமம் கிடைக்கும்போது அவர்கள் மனிதர்களாக நம்மை மிக நெருங்கி வருகிறார்கள். அது அவர்களின் ஆக்கங்களை நாம் மேலும் நெருக்கமாக மேலும் நுட்பமாக அறிய உதவுகிறது
இரண்டாவதாக இலக்கிய சர்ச்சையை இது எளிமையான, சுவாரசியமான, ஒரு அரட்டையாக ஆக்கிவிடுகிறது. இந்த பேச்சிலும் நாம் இலக்கியத்தைத்தான் பேசுகிறோம். படைப்புகளைப்பற்றியும் அவற்றின் நுட்பங்களைப் பற்றியும்தான் விவாதிக்கிறோம். ஆனால் அது ஒரு விளையாட்டுபோல ஆகிவிட்டிருக்கிறது.
மலையாள சிறுகதையாசிரியரான டி.பத்மநாபன் எனக்கு மிகவும் பிடித்தமானவர். அவரை ஒருமுறை சந்திக்கச் சென்றேன். அவர் இல்லை. அவர் வீட்டைச்சுற்றி ரோஜாச்செடிகள். நான் அவரைப்பற்றி அந்த ஊர் நண்பரிடம் கேட்டேன். பத்மநாபன் ஒட்டு ரோஜாக்கள் பயறிடுவதில் நிபுணர் என்றும் பலமுறை தேசிய விருதுகளைப் பெற்றவர் என்றும் இந்தியா முழுக்க இருந்து தோட்டக்கலை நிபுணர்கள் தேடிவருவார்கள் என்றும் சொன்னார். ஒரு சில நிமிடங்கள் அவர் எழுதிய அத்தனை கதைகளும் என்னுடைய நினைவு வழியாகப் பாய்ந்து சென்றன.
சி.சு.செல்லப்பா காகிதப்பூக்கள் செய்வதில் நிபுணர். அதை கொஞ்சகாலம் தொழிலாகவேகூட செய்தார். சட்டென்று ‘சரசாவின் பொம்மை’ கதைக்கு ஒரு புதிய முகம் வருகிறதல்லவா? இன்னொரு காகிதப்பொம்மை நிபுணர் கன்னட எழுத்தாளரான சிவராம காரந்த். அவர் யட்சகானக் கலைஞரும் கூட. காலில் சலங்கை கட்டி சிறப்பாக ஆடுவார்.
உலக இலக்கிய மேதைகளைப்பற்றிய இத்தகைய தகவல்களால் ஆனவை இந்த தொகுதியில் உள்ள கட்டுரைகள். விளாடிமிர் நபக்கோவின் பட்டாம்பூச்சிகள் மீதான ஈடுபாடு அவரது தந்தையிடம் இருந்து வந்தது. ருஷ்யாவை விட்டு தப்பி ஐரோப்பாவில் அடைக்கலம் புகுந்தபோது தங்கள் வண்ணத்துப்பூச்சிகளை எல்லாம் விட்டுவிட்டு வருகிறார்கள். நபக்கோவ் அவரது புகலிட வாழ்விலும் வண்ணத்துப்பூச்சி தேடுவதை ஒரு பெரிய அந்தரங்க மோகமாகக் கொண்டிருந்தார். வட அமெரிக்காவில் உள்ள கெர்னர் வகை வண்ணத்துப்பூச்சிகளை தொடர்ச்சியாக சேகரித்து அட்டவணைப்படுத்திக்கொண்டே வந்தார் நபக்கோவ். அவற்றில் ஒரு வகைக்கு நபக்கோவியா என்று அவருடைய பெயரே போடப்பட்டது.
நபக்கோவை வாசிக்கும்போது அவர் மெல்ல மெல்ல திடமாக ருஷ்யாவை நிராகரிப்பவராக ஆவதை நாம் காணலாம். ருஷ்ய இலக்கிய மேதைகளை அவர் விமரிசித்து புறக்கணித்தார். தன்னை முழுமையாகவே அமெரிக்கனாக ஆக்கிக்கொண்டார். அவரைப்போலவே புலம்பெயர்ந்த அலக்ஸாண்டர் குப்ரின் புலம்பெயர்ந்த நாட்டில் இருக்கையில் பெரிதாக எதுவுமே எழுதவில்லை. ஸ்டாலினிடம் மன்னிப்பு கோரிக்கொண்டு ருஷ்யாவுக்கு மீண்டு அங்கும் சொல்லும்படி எதுவும் எழுதாமல் மாண்டார். ஆனால் நபக்கோவ் ஆங்கிலத்தை தன் தாய்மொழியளவுக்கே கையாண்டார். லோலிதா போன்ற புகழ்பெற்ற நாவல்களை எழுதினார்.
அந்த பொருத்திக்கொள்ளுதலுக்கு வண்ணத்துப்பூச்சிகள் உதவினவா என்ன? வட அமெரிக்க வண்ணத்துப்பூச்சிகள் அவரை அந்த மண்ணில் வேரூன்றச் செய்தனவா? நபக்கோவியா வண்ணத்துப்பூச்சிகளை ருஷ்யாவில் கொண்டுசென்று விட்டால் அவை குளிரில் செத்துப்போய்விடக்கூடும். இவை ஊகங்களாக இருக்கலாம். ஆனால் எழுத்தாளர்களின் வாழ்க்கையை பற்றி அறியும்தோறும் படைப்புலகம் துலக்கம் கொள்கிறது
ஹெமிங்வேயின் காளைச்சண்டை ஈடுபாடு அவரது நாவல்கள் மூலம் உலகமெங்கும் புகழ்பெற்றது ‘காளைச்சண்டை ஒரு விளையாட்டல்ல, அது மூன்று அங்கங்கள் கொண்ட ஒரு துன்பவியல்நாடகம்’ என்கிறார் அவர். ஹெமிங்வேயின் தனிவாழ்க்கை உள்ளூர ஆழமான சலிப்பு நிறைந்தது. ஆகவேதான் அவரது எழுத்தும் வாழ்க்கையும் சாகசங்களை நோக்கியே சென்றன என்று எனக்குப் படுவதுண்டு. ‘வாழ்க்கை முழுக்க காளையாகவும் அதை வெல்லும் வீரனாகவும் அவர் ஒருவரே நடித்திருக்கிறார்’ என்று எஸ்.ராமகிருஷ்ணன் சொல்கிறார். கடைசியில் அவர் ‘காளை’ தன்னை கொல்ல ஒப்புக்கொண்டார் போலும்.
போர்ஹேவுக்கு புலிகள் மீதான ஈடுபாட்டை அவரது கதைகள் வழியாகச் சித்தரிக்கும் எஸ். ராமகிருஷ்ணன் அவரது ‘தாந்தேயின் சிறுத்தை’ என்ற புகழ்பெற்ற உருவகத்தை அந்த மோகம் மூலம் புரிந்துகொள்ள முயல்கிறார். குறிப்பாக வங்க வேங்கைகள் மீது போர்ஹெ அபாரமான மோகம் கொண்டிருந்தார். புலியை மனிதர்கள் தங்கள் அச்சம் மற்றும் சிறுமையுணர்வு மூலம் எதிர்கொள்ளும் உளவியலை, அதை அவர்கள் எப்படி படிமமாக்கிக்கொள்கிறார்கள் என்ற நுட்பத்தை நோக்கியே போர்ஹெயின் கதைகள் செல்கின்றன.
தோரோவின் வால்டன் குளத்தைப் பற்றியும் யூஷியோ மிஷிமாவின் வாட்போர்க்கலை பற்றியும் கோபோ ஆபின் பூச்சியியல் ஆர்வம் குறித்தும் சொல்கிறது இந்த நூல். கலைடாஸ்கோப் போல பக்கங்கள் மாற மாற இலக்கிய மேதைகள் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். உள்ளடக்கம் சாராத ஒரு தளத்தில் சம்பந்தமே இல்லாத இலக்கியமேதைகளை ஒரேசமயம் காணும்போது உருவாகும் மனக்கிளர்ச்சியே இந்த நூலின் பலம். அவர்களை ஒப்பிடவும் இணைத்துப்பார்க்கவும் விசித்திரமான சாத்தியங்களை திறந்து கொடுத்தபடியே செல்கின்றன எஸ்.ராமகிருஷ்ணனின் சொற்கள்.
ஜோச·ப் கான்ராடு, ஹெர்மன் மெல்வில் இருவரையும் அவர்களின் கடற்சாகச வாழ்க்கையை வைத்து ஒப்பிடும் கட்டுரையும் சரி ; சில்வியா பிளாத், அன்னா அக்மத்தோவா , ஆன்னி கிரே செக்ஸ்டன் ஆகியோரை அவர்களின் தனிவாழ்க்கையின் துயரத்தை வைத்து மதிப்பிடும் கட்டுரையும் சரி ; நெரூதா, கார்லோஸ் புயன்டஸ், ஆக்டோவியோ பாஸ் ஆகியோரை அவர்களின் அரசியலை வைத்து ஒரு புள்ளிக்குக் கொண்டு வரும் கட்டுரையும் சரி வழக்கத்துக்கு மாறான மதிப்பீடுகளை நோக்கி நம்மைக் கொண்டு செல்லக்கூடியவை.
இந்நூல் முழுக்க பரவியிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் நுண்ணிய அவதானிப்புகள் நம்மை பல தளங்களுக்கு நகர்த்தி இந்த ஆசிரியர்களைப்பற்றிய பிம்பங்களை அளிக்கின்றன. பிராம் ஸ்டாக்கரின் டிராகுலாவை பற்றி பேசும்போது ‘புனைவு எழுத்தாளனுக்குள் மட்டும் அடங்குவதில்லை அது வாசகனால் மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதற்கு டிராகுலாவே சாட்சி’ என்கிறர் ராமகிருஷ்ணன். பிராம் ஸ்டாக்கர் கொடுத்தது ஒரு விதைதான். நூற்றாண்டு மானுடக் கற்பனைதான் அதை இன்றுள்ள பூதாகர வடிவமாக ஆக்கியது.
உலக இலக்கியம் என்பது நம் சூழலில் தற்பெருமைக்காக அல்லாமல் பேசப்படுவது மிக அரிது. உலக இலக்கியமேதைகளை ஒரு உற்சாகமான அரட்டைச்சூழலில் எளிதாகவும், ஆனால் வாசித்து ஆழத்துக்குச் செல்லக்கூடியவர்களுக்கு நுண்ணிய அகத்தெளிவுகளை அளிக்கும் படியாகவும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்நூல் உலக இலக்கியம் குறித்து தமிழில் எழுதப்பட்ட மிகச்சில சிறந்த நூல்களில் ஒன்று
(விழித்திருப்பவனின் இரவு, எஸ்.ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம், சென்னை)