பனிமனிதன்

பனிமனிதனை நான் 1999 ல் தினமணி நாளிதழின் சிறுவர் மணியில் எழுதினேன். பதினொன்று வருடங்களுக்கு முன்பு. அப்போது இந்தக்கதைக்கு இளம் வாசகர்கள் அளித்த வரவேற்பு எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. அனேகமாக எல்லா வாரமும் இரு வாசகர் கடிதங்களாவது அச்சாகும்.

நம்முடைய சிறுவர் சிறுமியர் தமிழில் நல்ல கதைகளை வாசிக்க ஆசைப்படுகிறார்கள்.ஆனால் அவர்களுக்கு அது கிடைப்பதில்லை. காரணம் நம்முடைய பெற்றோர் குழந்தைகளுக்குத் தமிழ் நூல்களை வாங்கி அளிப்பதில்லை. பாடப்புத்தகங்களையே கஷ்டப்பட்டு வாங்கக்கூடிய பெற்றோர் நூல்களை வாங்கிக் கொடுக்காதது இயல்புதான். வாங்கிக்கொடுக்கும் வசதி கொண்ட பெற்றோர் ஆங்கில நூல்களை மட்டுமே வாங்குவார்கள்.

நம்முடைய கிராமநூலகங்களில் குழந்தைகளுக்கான நூல்கள் அனேகமாக கிடையாது. பள்ளி நூலகங்களின் நூல்களை குழந்தைகளுக்குக் கொடுக்க மாட்டார்கள். ஆகவே பிள்ளைகளுக்கு நாளிதழ்களின் வார இணைப்புகளாக வரும் குழந்தைமலர்கள் மட்டுமே கிடைக்கின்றன. நான் ஒருமுறை ஒரு சவரக்கடையில் இரு குழந்தைகள் வந்து நாளிதழின் சிறுவர் இணைப்பை கெஞ்சி வாங்கிக்கொண்டு சென்றதைக் கண்டேன்.

ஆகவேதான் இதை எழுத ஒப்புக்கொண்டேன். சிறுவர் மணியில் ஆசிரியராக இருந்த மனோஜ் கேட்டுக்கொண்டதனால் எழுதினேன்.  இந்தக்கதை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆகவே இதை தொடர்ந்து எழுத எண்ணினேன். ஆனால் அதற்குள் மனோஜ் சிறுவர் மணி பொறுப்பில் இருந்து விலக நேர்ந்தது. எனக்கு அவ்விதழுடன் உள்ள தொடர்பு இல்லாமல் ஆகியது.

இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இந்த நாவலை வாசித்தான். இதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். என் குழந்தைகளுக்காக நான் எழுதிய நாவல் இது. எல்லா குழந்தைகளையும் இப்போது என் குழந்தைகளாகவே நினைக்கிறேன்.

இந்த நாவலை சிறுவர்களுக்கான நடையிலேயே எழுதியிருக்கிறேன். ஒரு சொற்றொடர் பத்து சொற்களுக்குள்தான் அமையும்.  மொத்தம் 3000 வார்த்தைகளுக்குள் இந்நாவல் இருக்கும். ஐந்தாம் வகுப்பு தேறிய ஒரு குழந்தை இதை வாசிக்க முடியும்

ஆனால் இந்த நாவல் வெறும் குழந்தைக்கதை அல்ல. இதில் தத்துவமும் ஆன்மீகமும் அறிவியலும் உள்ளன. இந்த பிரபஞ்சத்துக்கும் மனிதனுக்குமான உறவு என்ன என்ற கேள்வி உள்ளது. அந்தக்கேள்வி பெரியவர்களுக்கும் உரியது. அவர்களும் இந்நாவலை விரும்பி வாசிக்கலாம். அவர்களை அது சிந்திக்க வைக்கும்

முதல்பதிப்பை வெளியிட்ட கவிதா பதிப்பகத்துக்கும் இப்பதிப்பை வெளியிடும் கிழக்கு பதிப்பகத்துக்கும் என் நன்றி

ஜெயமோகன்
நாகர்கோயில்

சமர்ப்பணம்
நண்பர் பாவண்ணனுக்கு.

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஉலக இலக்கியச்சிமிழ்