மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பற்றிய ஒரு நல்ல அஞ்சலிக்கட்டுரை. ஸ்ரீனிவாஸ் மறைந்த செய்தியை, குறிப்பாக ஈரல் பிரச்சினை என்று கேட்டபோது குடியோ என்றுதான் எனக்கும் தோன்றியது. ஏனென்றால் நான் வழிபடும் இரு இசைக்கலைஞர்களை பலமுறை நட்சத்திர விடுதிகளில் உச்சகட்ட போதையில் கண்டிருக்கிறேன். ஒருவர் என் அறைவாசலிலேயே விழுந்து கிடந்தார். இசைக்கலைஞர்கள் ஓர் உச்சத்தில் இருக்க விழைபவர்கள். இசை இல்லாதபோது குடி அங்கே நிறுத்தி வைக்கிறது. குடி இல்லாவிட்டால் கண்மூடித்தனமான பக்தி. அவர்களின் தர்க்கமனம் சற்று கூர்மழுங்கியதே. அதைப்புரிந்துகொள்ளமுடிகிறது.
ஆனால் முக்கியமான ஒருவரிடம் ஸ்ரீனிவாசுக்கு என்ன நோய் என்று கேட்டுத்தெரிந்துகொண்டேன். ஸ்ரீனிவாசுக்கு குடிகாரர் அல்ல. வாழ்க்கையின் முறைமைகள் தவறியவரும் அல்ல. ஈரல் நோய் என்பது பல காரணங்களால் வருகிறது.வைரஸ் தொற்று கூட காரணமாக இருக்கலாம் என்றார்கள். தொடர்ந்து சிகிழ்ச்சை எடுத்துவந்திருக்கிறார். ஆனால் குடி அல்லாத காரணத்தால் வரும் ஈரல்நோய் எளிதில் கண்டுபிடிக்கக்கூடியது அல்ல.
என் நண்பரும் மார்க்ஸிய சிந்தனையாளரும் தமிழ்த்தேசியருமான சோதிப்பிரகாசம் மறைந்ததும் ஈரல் தொற்றினால்தான். அவரும் குடிகாரர் அல்ல. முறையாகச் சாப்பிடுபவர். எப்போதும் உற்சாகமானவர். ஐம்பது வயது ஆகியிருந்தது. திடீரென நோய்த்தொற்று. அப்படியே உயிர் பிரிந்தது. சென்னையில் இது சமீபகாலமாக அதிகம் என்றனர் அன்று
ஸ்ரீனிவாசுடன் சேர்த்து சோதிப்பிரகாசத்தையும் எண்ணிக்கொள்கிறேன். துயருடன். வயதாகிச்செல்பவர்களுக்குரிய தவிர்க்கமுடியாத துயர் இது. நாம் பிறருக்குத் துயரச்செய்தியாகச் சென்றுசேரும் வரை நமக்குத் துயரச்செய்திகள் வந்தபடி இருக்கும். சோதிப்பிரகாசமும் ஸ்ரீனிவாஸும் என் வாழ்வின் ஒருகட்டத்தை ஒளிமயமாக்கியவர்கள்