வீழ்ச்சியின் அழகியல் – எம்.டி.வாசுதேவன் நாயர் -3

எம்.டி.யின் புனைவுலகத்தில் வெளியே நிற்பவர்களின் குரல்களில் இருக்கும் அனலை காட்டும் இன்னொரு குறிப்பிடத்தகுந்த நாவல் பாதிராவும் பகல் வெளிச்சமும். முஸ்லிமுக்கும் இந்துவுக்கும் பிறந்த மைந்தனுடைய பண்பாட்டுத் தனிமையைப்  பேசும் நாவல் அது. முஸ்லிம் பெண் இந்து ஆண் ஒருவனிடம் திருமணமாகாமல் உறவு கொண்டு பெற்ற மைந்தன் சுலைமான். அவன் மொத்த முஸ்லிம் சமூகத்தாலும் காஃபிரிண்டேகுட்டி [காஃபிரின் மகன்] என்று ஒதுக்கப்படுகிறான். காஃபிரின்ட குட்டி என்ற வார்த்தை கிட்டத்தட்ட பாஸ்டார்ட் என்ற வார்த்தைக்கு இணையாக அங்கே பயன்படுத்தபடுகிறது.

தொடர்ந்து அவனுக்கு வரும் இழிவுகள் வழியாக வளரும் அந்த நாவல் இயல்பான ஒரு முடிவுக்கு வருகிறது. ஒரு நாள் தன் மனைவியை நிராதரவாக கைவிட்டுச் சென்ற அந்த இந்து அப்பா களைத்து சோர்ந்து நோயுற்று திரும்பி வருகிறான். தன் மைந்தனைப் பார்ப்பதற்காக. அப்போது சுலைமான் தன்னுடைய தந்தையை இழிவுபடுத்தி அவமதிக்கிறான். ‘எனது அப்பா என்று சொல்லஉனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?’ என்று எந்த மைந்தனும் கேட்கக்கூடிய கேள்வியைக் கேட்கிறான். மனமுடைந்த தந்தை திரும்பிச்சென்றுவிடுகிறார்.

எம்டியின் படைப்புகளில் முக்கியமான ஒரு தருணம் இந்நாவலின் உச்சம்.அந்த அம்மா சொல்கிறாள் ‘சுலைமானே நீ ஒரு மனுஷனா? ’. சுலைமானே ஜ்ஜு ஒரு மன்ஜனா?” என்ற வரி கேரளத்தில் மிகப்பிரபலம்– சினிமா வழியாக.முஸ்லீம் கொச்சையுடன் அந்த வரி நம் கண் முன் நின்று ஒரு பீபி சொல்வதுபோலவே ஒலிப்பது. அந்த வரியுடன் அந்த நாவல் முற்றுப்பெறுகிறது. முஸ்லிமாக இரு, இந்துவாக இரு ஆனால் நீ ஒரு மனிதனா?. அந்த இடத்தில் இந்துவாவோ முஸ்லிமோ செய்யும் செயல் நீ செய்தது, ஆனால் ஒரு மனிதனாக அல்லவா அங்கே நின்றிருக்க வேண்டும் என்கிறாள் அன்னை

இச்சிறுநாவல் எம்.டியின் புனைவுலகில் கலையளவில் முக்கியமானது அல்ல. ஆனால் அதன் தரிசனம் அவரது புனைவுலகில் முக்கியமான ஒரு சமன் எடை. அவரது மற்ற நாவல்களில் இல்லாத ஒரு இடம் இந்த நாவலில் இருக்கிறது. இந்த நாவலில் துயரமடைந்தவனின் கைவிடப்பட்டவனின், புறக்கணிக்கப்பட்டவனின் கசப்பையும் தனிமையையும் சொல்லும் எம்.டி. கூடவே பெரும் கருணை வழியாக ,மனிதாபிமானம் வழியாக, அதை கடந்து செல்லக்கூடிய ஒரு இடத்தையும் சுட்டுகிறார். அவ்வகையில் எம்டியை மீறிய எம்டி வெளிப்படும் நாவலாக பாதிராவும் பகல்வெளிச்சமும் நாவல் இருக்கிறது.

எம்.டி.யின் புகழ் பெற்ற பல குணச்சித்திரங்கள் திரைவடிவில் வரும்போது அவை ஏதோ ஒரு வகையில் பெண்கள் மீது அவருடைய கசப்பு மிகுந்த பார்வையை முன்வைப்பவையாக இருக்கின்றன என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் உண்டு. எம்.டி.யின் புனைவுலகத்தில் இரண்டுவகையான பெண்கள் இருக்கிறார்கள். இரண்டு ‘புரோடோடைப்ஸ்’ என்று சொல்லலாம். ஒன்று படித்த, நவநாகரிகமான, அறிவுத்திமிர் கொண்ட அதே காரணத்தினாலேயே ஆணை அலட்சியம் செய்து கடந்துபோகும் ஒரு பெண். இன்னொன்று கிராமம் சார்ந்த, எளிமையான அன்பை மட்டுமே தனது ஆற்றலாக கொண்ட,ஓர் இனிய பெண்.

இரண்டு சித்திரங்கள் வழியாகவும் எம்.டி. மாறி மாறி சென்றுகொண்டே இருக்கிறார். குறைந்தது பதினைந்து திரைப்படங்களில் இந்த இரண்டு வகையான கதாபாத்திரங்களுக்கான உதாரண வடிவங்கள் இருக்கின்றன. எம்.டி.யின் அந்த எளிமையான இனிய கிராமத்துப் பெண் கதாபாத்திரங்களில் நடித்த பல கதாநாயகிகள் பெரும் புகழ் பெற்றிருக்கின்றனர். அந்தக் கால சாரதாவிலிருந்து கடைசியாக பார்வதி வரை. பெண்ணில் உள்ள ஓரு கொல்லும் யட்சியையும் ஒரு இனிய அன்னையை ஒரே சமயம் பார்க்கும் பார்வை எம்.டி.யில் உண்டு..

எம்.டி.யின் நாவல்களிலும் இந்த வகையான கதாபாத்திரங்கள் வருகின்றன. அவருடைய புகழ்பெற்ற சிறுகதையான இருட்டின்றே ஆத்மாவு பிறகு திரைப்படமாக வந்திருக்கிறது. அதிலே ஒரு வயோதிகனுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் கதாநாயகி தான் மனம் வளராமல் அந்த வீட்டில் இருக்கும் வேலாயுதனுக்கு அன்னையாகவும், துணையாகவும் இருக்கிறாள். ஆனால் அவள் கிளம்பி போய்விட்டாள் என்று தெரிந்து வேலாயுதன் ஒரு பெரிய கொந்தளிப்போடு தேடி வரும்போது மிக இயல்பாக அதிலிருந்து இன்னொரு முகத்திற்கு செல்கிறாள். ‘பைத்தியம் பைத்தியம்!’ என்று அவனை கைசுட்டி நிராகரிக்கிறாள். தன் வாழ்க்கையை அழித்துவிடுவான் என்று நிலை வரும்போது கருணைகொண்ட அன்னை வெறும் பெண்ணாக மாறிவிடுகிறாள். அன்னைக்குள் உள்ள பெண்ணை உணர்ந்துகொண்டு ‘ஆம் நான் பைத்தியம்தான். எனக்கு விலங்கு போடுங்கள்’ என்று வேலாயுதனே கை நீட்டும் இடத்தில் அந்த கதை முடியும்.

நஞ்சு நிறைந்த பெண் கருணை நிறைந்த பெண்ணாக மாறுவதும், கருணை நிறைந்த பெண் நஞ்சு நிறைந்த முகத்தைக் காட்டுவதும் எம்டியின் பல கதைகளில் நடந்திருக்கிறது. எம்டியின் புனைவுலகைப் புரிந்துகொள்ள, அவரது உணர்வுநிலைகளை அளக்க, ஒரு சட்டகமாகவே இதைப் பயன்படுத்தலாம். கதைகளைவிடப் பெரும்புகழ்பெற்ற அவரது படங்களைப்பார்த்தவர்கள் இந்த சட்டகத்தை இன்னும் தெளிவாக அடையாளம் காண்பார்கள்

asuravith

பெண்கள் மீதான எம்.டி.யின் இந்த வஞ்சத்துக்கும், அவருடைய தனி ஆளுமை உருவாக்கத்துக்கும் ஒரு தொடர்பை நாம் யோசிக்க முடியும் ஒரு பலவீனமான சிறுவனை பொறுத்தவரையில் அவன் பார்ப்பது இரண்டு பெண்களை. அவனது பலவீனத்தினாலேயே அவனைப் புறக்கணிக்கக்கூடிய சிறுமைப்படுத்தக்கூடிய ஒரு பெண், அப்பலவீனம் காரணமாகவே அவனை அணைத்து அவனுடன் தாய்மையை பகிர்ந்து கொள்ளும் இன்னொரு பெண். எம்.டி.யின் அனைத்து புனைகதைகளிலும் இந்த இரண்டு வகையான பெண்களும் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறார்கள். முதல் வகையான பெண் அவனை சீண்டுகிறாள். வெல்லும்படி அறைகூவுகிறாள். வென்றதுமே வெறுக்கச்செய்கிறாள். அவள் ஒரு சிகரமுனை. அங்கே அவன் சென்று வெற்றியை அனுபவிக்கலாம். வாழமுடியாது

இரண்டாவது வகை பெண் அவனை அடைக்கல உணர்வை அடையச் செய்கிறாள். பலவீனாக இருப்பதையே ஒரு தகுதியாக உணரச்செய்கிறாள். அவள் கைகளில் மட்டுமே அவன் நிறைவாக வாழ முடியும். தன்னை முற்றிலும் வெளிக்காட்டமுடியும். மறைத்துவைத்த ஆயுதங்களில்லாமல் இருக்க முடியும். முதல்வகைப் பெண் ஒரு சின்ன சுழிப்பு வழியாக அவனது பலவீனத்தை அவனிடம் காட்டி அவனை தோற்கடித்து சென்றுகொண்டேயிருக்கிறாள்.

திரும்பிப் பார்க்கும்போது எம்.டி.யின் புனைவுலகில் உணர்ச்சிகரமான, பரவசம் நிறைந்த காதல் என்று எதுவும் இல்லை என்ற எண்ணம் வருகிறது. அவருடைய புனைவுலகத்தில் இருப்பது வலி நிறைந்த ஒரு காதல். காதல் என்பது ஒரு உறவாக அல்ல ஒரு அங்கீகாரத் தேடலாக மட்டும்தான் அங்கு வருகிறது. ‘நீ எனக்கு அன்னையைத் தரப்போகிறாயா, ஒரு யக்‌ஷியைத் தரப்போகிறாயா? தாய்ப்பாலைத் தரப்போகிறாயா, நஞ்சை தரப்போகிறாயா?’ என்ற கேள்வியுடன்தான் எம்.டி.யின் கதாபாத்திரங்கள் பெண்ணை அணுகுகிறார்கள். அவனுடைய விதியின் படியோ, அவனுடைய தகுதியின் படியோ அது அவனுக்கு அளிக்கப்படுகிறது.

எம்.டி.யின் வாழ்க்கையின் நெருக்கமான சித்திரம் என்று சொல்லப்படும் படம் அக்ஷரங்கள். ஐவி சசி இயக்கத்தில், மம்முட்டி நடிப்பில் வந்தது. படித்த, உயர்குடி சார்ந்த, தன்னகங்காரம் மிக்க ஒரு பெண்ணால் புறக்கணிக்கப்டும் ஒரு கலைஞன் கலைமனம் கொண்ட, எளிமையான, தாய்மை கொண்ட ஒரு பெண்ணிடம் தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் ஒரு சித்திரம் அந்த திரைப்படத்தில் இருக்கிறது. அந்த இரண்டு கதாபாத்திரங்களையும் வலுவாக எம்.டி. சித்தரித்திருக்கிறார்.

எம்.டியின் வாழ்க்கையிலே அவரது முதல் மனைவி அவருடைய படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர், உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர், பெரிய படிப்பு படித்தவர், எம்.டி. அவரை விரும்பி திருமணம் செய்துகொண்டார். அந்த உறவு கசந்து மதுவுக்கு அடிமையாகி, வாழ்வினுடைய மிக இக்கட்டான தருணங்களுக்குச் சென்ற எம்.டி. விவாகரத்துக்கு பிறகு கலாமண்டலம் சரஸ்வதி அம்மா அவர்களைத் திருமணம் செய்து கொண்டு மீண்டுவந்தார். இரண்டு பெண்களுக்கு தந்தையாகி இன்னொரு வாழ்க்கையை ஆரம்பித்தார்.

ஒரு கலைஞனின் வாழ்க்கையும் அவனுடைய புனைவுலகமூம் அவ்வளவு சரிசமமாக ஒத்துப் போகுமா . அதை அப்படிப் பார்க்கலாமா என்ற கேள்வி எப்பொழுதும் இருக்கிறது. சரியான கலை என்றால் ஒருபோதும் இணைகோடுகளாக புனைவையும் எழுத்தாளனுடைய சுய சரிதையையும் காணமுடியாது. அந்த இணைப்புக் கோடு ஊடும் பாவுமாக சென்று மிக சிடுக்கும் சிக்கலுமாக இருக்கமே ஒழிய எளிமையான ஒன்றாக ஒருபோதும் இருக்காது. ஆனால் எப்போது அந்த தொடக்கப்புள்ளி அங்கிருப்பதினால் அதை புரிந்துகொள்ளுவதற்கான முகாந்திரமாக அல்லது புரிதலின் ஒரு காரணங்களில் ஒன்றாக அதை எப்பொழுதும் எடுத்தக்கொள்ளலாம். புனைவு என்னும் ஆட்டத்தைப் புரிந்துகொள்ள, ஆசிரியனின் ஆளுமை புனைவிலிருந்து எந்த அளவுக்கு மாறியிருக்கிறது என்பதை பார்ப்பதற்கு அது உதவும்.

எம்.டி. அளவுக்கு மலையாள இலக்கியத்திலும் திரையிலும் வெற்றிகளை ஈட்டிய இன்னொரு கலைஞன் கிடையாது. ‘தொட்டதையெல்லாம் பொன்னாக்கிய கலைஞன்’ என்று அவரை சொல்வார்கள். ஒரு கட்டத்தில் மலையாள திரையுலகின் தலையெழுத்தை தீர்மானிக்கக்கூடியவராக இருந்தார். நிறைய பொருளீட்டினார், மோகன்லால், மம்மூட்டி போன்ற நட்சத்திரங்களை உருவாக்கிய பிதாமகனாக அறியப்பட்டார், இலக்கியத்தில் அவருடைய இடம் மறுதலிக்கப்படாத ஒன்றாக இருந்தது. ஞானபீட விருது வென்றார். அதற்கு பிறகும்கூட அவர் எழுதிய வாரணாசியில் வஞ்சத்துடன், கசப்புடன், சுய நிந்தனையுடன் அடிபட்ட மிருகம்போல குகைக்குள் பதுங்கி இருக்கும் கதாபாத்திரத்தைத்தான் நாம் பார்க்கிறோம். அந்த புண்பட்ட ஆளுமை, துரத்தப்பட்ட ஆளுமை, தனிமைப்படுத்தப்பட்ட ஆளுமை எம்.டி.யிடமிருந்து விலகவே இல்லை என்பதைத்தான் காட்டியது வாரணாசி.

ஆக எம்.டி. அவருக்குள் இருக்கும் அந்த கசப்பின் வலிமையாலே செயல்பட்ட ஒரு படைப்பாளியாக இருந்தார். அந்த வன்மத்தை வெளிப்படுத்துவதாலேயே ஆற்றல் கொண்டவராக இருந்தார். நூலன் வாசு கட்டாரி வாசுவாக மாறும் பரிணாமத்திலேயேதான் அவரது அனைத்துப் படைப்புகளும் நிகழ்ந்துகொண்டிருந்தன. எம்.டி.யின் படைப்புகளை புரிந்துகொள்வதற்கான ஒரு குறைந்த பட்ச சூத்திரம் என்று இதைச் சொல்லலாம்
.
Asuravithu_novel

மலையாளத்தில் ஞானபீட விருது பெற்ற படைப்பாளிகளில் ஒருவர் எம்.டி. கவிஞர்களான ஜி. சங்கர குருப்பு, ஓ.என்.வி., புனைவு எழுத்தாளர்களான எஸ்.கே.பொற்றேக்காடு, தகழி ஆகியோருக்குப் பிறகு ஞானபீட விருது எம்.டி.க்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் முதன்மையான பெரும் படைப்பாளிகளின் பட்டியலில் இடம்பெறும் தகுதி, ஞானபீடம் மூலம் ஒரு படைப்பாளிக்கு வருகிறது. எம்.டி.யை கறாராக மதிப்பிடும்போது அவரை இந்தியாவினுடைய முதன்மையான பெரும் படைப்பாளிகளின் பட்டியலில் எந்த அளவுக்குச் சேர்க்க முடியும்? அதாவது தாராசங்கர் பானர்ஜி, விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய, பிரேம்சந்த், சிவராம காரந்த், எஸ்.எ.பைரப்பா,மாஸ்தி வெங்கடேச அய்யய்ங்கார் ,அசோகமித்திரன், கி. ராஜநாராயணன், ஜெயகாந்தன் போன்ற பெரிய படைப்பாளிகளின் வரிசையில் நாம் அவரை எப்படி மதிப்பிட முடியும்.?

ஒன்று எம்.டியின் மாறாத அழகு கொண்ட நடை அவரை இன்றும் ஒரு முக்கியமான படைப்பாளியாக ஆக்குகிறது. நடை என்பது வெறும் அழகு சமாச்சாரம் அல்ல. ஒரு வரியில் சொல்லப்போனால் ஒரு பண்பாட்டின் சாராம்சமாக வெளிப்படக்கூடிய ஒரு வெளிச்சம்தான் அது. மொழித்திறன் அல்ல நடை. நடை என்பது உருவாக்கப்படுவது அல்ல. மொழியின் உள்ளார்ந்த அழகு ஒரு கலைஞனில் இயல்பாக, அவன் அகமொழியின் புறவெளிப்பாடாக, பதிவாகும்போதுதான் அது நடையாக ஆகிறது. சிறந்த நடையியலாளர்கள் தன்னுடைய மொழியின் கூறுமுறையின் அமைப்பை மட்டும் மாற்றுவதில்லை. அந்த மொழியின் மனநிலையையே, அந்த மொழியின் தத்துவார்த்த உள் அர்த்தத்தையும் ஆழத்தையும்கூட மாற்றியிருக்கிறார்கள் என்பதைக் காணலாம். இதை ஜானகிராமனைப்பற்றியோ, சுந்தரராமசாமியைப் பற்றியோ பேசும்போது சொல்லலாம். எம்டியும் சிறந்த நடையாளர்

எம்.டியின் சிறந்த புனைகதைகளில் வெளிப்படும் பாவியல்பு கூடிய மொழி நடை மலையாள மனதின் மெல்லுணர்ச்சியின் முகமாகவே மாறியது. எம்.டி.யின் துயரச்சாயல் [melancholy] மலையாளத்தின் பொதுபோக்கிலிருந்து உருவாகிவந்ததல்ல, அதுதான் மலையாளத்திற்கு அதை உருவாக்கியளித்தது என்று சொல்லலாம். ஒரு கால கட்டத்தின் கசப்பையும், கோபத்தையும் அந்த நடை தன் சொல்லாட்சிகளால் பொதுமொழியாக ஆக்கியது. சொல்லி அழவும் குமுறவும் எம்.டி. மலையாளிக்கு மொழியை உருவாக்கி அளித்தார்

எம்.டியின் நிர்மால்யம் என்ற சிறுகதை திரைப்படமாக வந்தது. அதில் கடைசியாக பகவதியின் முகத்திலே தன் சொந்த குருதிக்கலந்த எச்சிலைக் காறித் துப்பும் வெளிச்சப்பாடின் முகமாக எம்.டி.யின் முகம் தெரிகிறது. மரபின்மீது, சென்றகாலத்தின் மீது, காறித்துப்பிய ஒரு தலைமுறையின் முகமாகவும் குரலாகவும் ஒலிக்க எம்.டி.யால் முடிந்திருக்கிறது. எம்.டி. உருவாக்கிய வலுவான கதாபாத்திரங்கள் இன்றும் மலையாள மனதில் நிற்கின்றன. அதன் தொலைதூர வடிவங்களைத்தான் மலையாளத்திரைப்படங்கள் இன்றும்கூட மறுபடியும் உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. பின்னால் திரும்பி பார்க்க ஏதுமற்றவற்றனாக, முன்னால் நிச்சயமின்மைகளைமட்டுமே கொண்டவனாக, பகைமையாலும் கசப்பாலும் தன்னுடைய ஆற்றலைத் திரட்டிக்கொண்டவனாக, வேட்டியைத் தூக்கி மடித்துக் கட்டிக்கொண்டு இறங்கி சாலையில் தலை நிமிர்ந்து நடந்துசெல்லும் ஒரு எம்.டி கதாபாத்திரம் எல்லா மலையாளிகளின் மனதிலும் இருக்கிறது.

மலையாளிகளின் ஆண்மையை எழுதிக்காட்டிய எழுத்தாளர்களில் ஒருவர் எம்.டி. இன்னொரு கோணத்தில் மலையாளிகளின் ஆண்மையை வரையறுத்த படைப்பாளிகளில் ஒருவர் . இவை எம்.டி.யின் எழுத்தின் குணாதிசியங்கள் என்று சொல்லாம். மலையாள இலக்கியத்துக்கும், பண்பாட்டுக்கும் அவரது கொடைகள் அவை. அவரது இலக்கியச் சாதனைகள்.

ஆனால் இந்தியாவின் மகத்தான படைப்பாளிகளில் அவரை வைக்கும்போது குறைவுபடுவது என்ன? ஆழ்ந்த தத்துவ -வரலாற்றுத் தரிசனம் என்று அதைச் சொல்லலாம். அல்லது ஒட்டுமொத்த பண்பாட்டையும் கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த மானுடக் குலத்தை நோக்கி சொல்லப்படும் ஒரு முழுமைப் பார்வை என்று சொல்லலாம். இந்த அம்சத்தின் குறைவுதான் எம்.டி.யை இந்தியாவின் மகத்தான படைப்பாளிகளின் வரிசையில் ஒரு படி கீழேநிறுத்தியது என்று நினைக்கிறேன். எம்,டி. அவருடைய கதாபாத்திரங்களில் வன்மத்தையும் கோபத்தையும் கசப்பையும் ஆற்றாமையையும் வெளிப்படுத்தினார். ஆனால் அவருடைய கதாபாத்திரங்கள் எதையுமே கண்டடைவதில்லை. அவர்கள் வெட்டவெளி நோக்கி எறியப்பட்ட அம்புகளாக இருக்கிறார்களே ஓழிய ஒருபோதும் சென்றடைவதில்லை.

எம்.டி.யின் இந்த குறுகலின் காரணம் என்ன? ஒரு படைப்பாளி அவனுடைய முதன்மையான கதாபாத்திரங்கள் வழியாக எப்படிப்பட்ட ஆளுமையை வரையறுத்துக்கொள்கிறான் என்பது மிக முக்கியமானது. தன்னை பிரபஞ்ச மனிதனாக வரையறுத்துக்கொள்ளும் டால்ஸ்டாயினுடைய கதாபாத்திரங்கள் அடையக்கூடிய சிக்கல்களும், கண்டடைதலும் பிரபஞ்சத்தன்மை கொண்டவை. முழு மானிடத்திற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளும் தஸ்தோவஸ்கியின் கதாபாத்திரங்கள் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் மூலம் அடையும் ஞானமும் மானுட குலத்திற்கே சொந்தமானது. மாறாக எம்.டி.யின் கதாபாத்திரங்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட காலச்சூழலை, வாழ்க்கை சூழலை, ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி களத்தில் மட்டுமே வைத்து பார்க்கின்றன. எம்.டி. கதாபாத்திரங்களின் பகைமை சக கதாபாத்திரங்களிடம்தான். அவனை அப்படியே நிறுத்தியிருக்கக்கூடிய அந்தக் களத்திடம்தான். மனிதகுல வரலாற்றையோ, பிரபஞ்சத்தையோ எதிர்கொள்ளும் எம்.டி. கதாபாத்திரம் எதுவுமில்லை.

ஆகவேதான் எம்.டி.யின் கதாபாத்திரங்கள் நம்மில் ஆழமான ஒரு ரணத்தை உருவாக்கி ஒருபோதும் நாம் மறக்கமுடியாதவர்களாக இருக்கின்றன. ஆனால் நாம் வளரும்போது கூடவே வளரக்கூடிய ஆற்றல் கொண்டவையாக இல்லை. இந்தியாவின் முதன்மையான பல படைப்புகள் ஐம்பதாண்டுகளுக்கு பிறகும் மறுபிறவி எடுக்கும் தன்மைகொண்டிருக்கின்றன. ஆரோக்கிய நிகேதனத்தையோ, மண்ணும் மனிதரையோ இன்றும் படிக்கும்போது அவை எழுதப்பட்ட காலத்தில் ஏற்பட்ட அழுத்தத்தை விட பலமடங்கு அழுத்தத்தை அவை அளிப்பதை காணலாம். அந்த அழுத்தம் எம்.டியின் படைப்புகளில் குறைவு பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.

சுருதி சுத்தமான ஒரு ஊடகமாக தன்னை ஆக்கிக்கொள்ளுதல் வழியாக கலைஞன் தன் காலத்தை மொழிக்கு கொண்டு வருகிறான். எம்.டி. கேரள பண்பாட்டை, இந்திய பண்பாட்டை அறுபது எழுபதுகளின் அனலை மொழிக்கு கடத்தின முதல்தர கலைஞர்களில் ஒருவர். அதற்கப்பால் சென்று மானுடத்தின் குரலாக ஒலிப்பதற்கு சற்று முன்னரே நின்றுவிட்டவர்

[முழுமை]

நாலுகெட்டு விமர்ச்னம்

[திருவனந்தபுரம் நூலகத்தில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம்]

முந்தைய கட்டுரைஇருமுகம்
அடுத்த கட்டுரைமழை இசையும் மழை ஓவியமும்