ஐயா,
நான் பிறப்பால் சைவ உணவு பழக்கம் உடையவள்.அதனால் மட்டுமல்லாமல் சைவ உணவு பழக்கத்தை ஒரு சுயமான கொள்கையாகவும் கொண்டுள்ளேன்.உயிர்களை துன்புறுத்தி உண்பது பாவம் என்பதுதான் கொள்கையின் அடித்தளம்.(உயிர்களை எத்தனையோ விதங்களில் துன்புறுத்தி கொண்டு தான் இருக்கிறோம்.பட்டு சட்டைகள்,லெதர் பைகள் போன்றவை மூலம்.).
தங்களின் ‘நயத்தக்கோர்‘ பதிவை படித்தேன்.சுந்தர ராமசாமி அவர்களின் சைவ உணவு பழக்கம் கொள்கையா இல்லை வெறும் பழக்கமா என்று தெரியவில்லை.எதுவாக இருந்தாலும் அதை கடைப்பிடிப்பது என்பது எத்தனை கடினமான விஷயம் என்பது புரிகின்றது.அதை சார்ந்து பெருமிதம் நியாயமானதா என்பதை பற்றிய ஐயம் எழுகின்றது.
ஜி. பி.ஷா-வினுடைய மேற்கோள் ஒன்றை என் வாதமாக வைத்திருந்தேன்.
“A man of my spiritual intensity does not eat corpses”
செடிகளும் உயிர்கள் தானே, உணர்ச்சி உள்ள உயிர்தானே.அதை ஒரு சமண வகுப்பினரும் ஆதரிகிறார்கள் இல்லையா.அனால் அழுகிய பழங்களிலும் உயிர்கள் வாழ்கின்றனவே.உயிர்கள் உயிர்களைத் தானே உண்ண முடியும்? இன்றைய காலத்தில் காய்களானாலும், இறைச்சியானாலும் செயற்கையான உற்பத்தியால்தானே விளைகின்றன? இருந்தும் காந்தி போன்றோர் ஏன் சைவ உணவு பழக்கத்தை பிரசாரம் செய்தார்கள்? என் பழக்கத்தை கொள்கையாக்க ஏதேனும் பொதுவான அடித்தளம் உள்ளதா?இதை பற்றிய தங்களின் கருத்து என்ன?
அன்புடன்,
அனு. Anugraha Sankaranarayanan
அன்புள்ள அனு,
நாராயணகுருவிடம் ஒருவர் சொன்னார், குரு நாம் ஏன் செத்த பசுவைச் சாப்பிடக்கூடாது? அது செத்துவிட்டதே? அதன் பாலைக்குடிக்கிறோமே, அது பசுவின் குருதிதானே?”
குரு நியாயம்தான் என்று சொல்லிவிட்டார். ஆனால் கொஞ்ச நேரம் கழித்து கேட்டார். ”அம்மா இருக்காங்களா?” அவர்””போனவருஷம் போய்ட்டாங்க குரு”’ என்றார். ”தின்னுட்டீங்களா?” என்றார் குரு.
நான் என் மீது இருக்கும் கொசுவை சாதாரணமாக அடித்துக்கொல்வேன். அதேபோல ஓர் எருமையை மண்டையில் உலக்கையைப்போட்டு அடித்துக்கொல்வேனா? மாட்டேன். ஒரு நாயை கல்லால் அடிப்பதைப்பற்றிக்கூட என்னால் யோசிக்க முடியாது. எல்லாமே உயிர்தானே, கருணை என்றால் எல்லாவற்றுக்கும் தானே என்றெல்லாம் கேட்க முடியுமா என்ன?
அதாவது உயிர்கள் எல்லாம் நமக்கு ஒன்று அல்ல. அவற்றுக்குள் பேதம் உள்ளது. பெரிய உயிர் சின்ன உயிர் என உள்ளது. அரிய உயிர் எளிய உயிர் என உள்ளது . ஓர் உயிரின் நுண்ணறிவு, அதன் வாழ்நாள்… அனைத்துக்கும் மேலாக அதற்கும் நமக்குமான உறவு. அது நமக்குள் எவ்வகைப்பட்ட குறியீடாக உள்ளது என்பது. ஒரு மனிதன் நமக்கு மிக முக்கியமான உயிர். நாய் இன்னமும் குறைவான உயிர். ஓணான் இன்னும் கொஞ்சம் குறைந்தது. புழு இன்னமும் குறைந்தது.
ஆம், எல்லா உயிரும் நமக்கு ஒன்றல்ல. ஒரு நாயைக்கொன்றால் நம்மில் யாருமே இரவு தூங்க மாட்டோம். பூச்சிமருந்தடித்து ஒரேநாளில் ஆயிரக்கணக்கான பூச்சிகளைக் கொல்வோம்.இயற்கையே அந்த பேதத்துடன் தான் படைத்துள்ளது. கொசு கொல்லக்கொல்ல பெருகும். யானையை கொன்றால் அடுத்த குட்டி பிறக்க கால்நூற்றாண்டு ஆகும்.
உயிர்க்கொலை என்பது இந்த பூமியின் ஓர் இயற்கையான நிகழ்வு. அதற்கு எதிராக பண்பாடு உருவாக்கிக்கொண்ட விழுமியம்தான் கருணை என்பது. எல்லா விழுமியங்களும் ஓர் நடைமுறைத்தேவையில் இருந்து உருவானவையே. அவை ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புகின்றன. வீரம் என்பதும் கருணை என்பதும் ஒரே சமூகத்தால் உருவாக்கப்படுகின்றன.ஒரு இடத்தில் கொலை வீரமாக கருதப்படுகிறது. இன்னொரு இடத்தில் அது பாவமாக.
அதேபோலத்தான் கருணையும். அது முழுமுற்றான ஒன்றல்ல. எந்த விழுமியமும் முழுமுற்றானதல்ல. அவை சார்புநிலை உடையவை. செடியை பிடுங்கி நறுக்கி உண்பது கருணைக்கு மாறானதல்ல, கொசுவைக் கொல்வது போல. ஆனால் ஆட்டை வெட்டி உண்பது கருணைக்கு மாறானது.
எளிமையான பதிலே இதுதான், கீரையை நறுக்குபவர்கள் ஆட்டைக் கொல்வார்களா? ஆடு நம் மனதில் வெறும் உயிரல்ல. அது ஒரு குறியீடாக, நெருக்கமானதாக உள்ளது. அதன் பழக்கங்கள், அவற்றின் வழியாக வெளிப்படும் அதன் மனம் நாம் அறிந்ததாக உள்ளது. கொசுவைக் கொல்லும்போது நாம் வெறுமொரு உயிரைக் கொல்கிறோம். ஆட்டைக் கொல்லும்போது ஓரு மனதையும் சேர்த்தே கொல்கிறோம். நமக்கும் ஆட்டுக்கும் இடையே உள்ள உறவைக் கொல்கிறோம். அதன் மூலம் உருவான ஒரு குறியீட்டைக் கொல்கிறோம்.
விழுமியங்கள் என்பவை சமூகக் கட்டுமானங்கள்தான். உதாரணமாக சென்ற தலைமுறையினருக்கு மரங்களை வெட்டுவதில் குற்றவுணர்ச்சியே இல்லை. ஒரு காயைப்பறிப்பதுபோல வெட்டுவார்கள். நமக்கு இப்போது குற்றவுணர்ச்சி உள்ளது. நம் தேவைக்காக ஒரு மரத்தை வெட்ட நம்மால் முடியாது. வெட்டினால் நிம்மதி இழப்போம். இந்த விழுமியம் சமீபகாலமாக, கடந்த 50 வருடங்களில், மானுடகுலத்தில் உருவாக்கப்பட்டது.
கருணை என்ற விழுமியம் மனிதர்கள் சமூகமாக உயிர்வாழ ஆரம்பித்த காலத்தில் அவர்களுக்கு தேவையாக இருந்திருக்கலாம். இயற்கையை எதிர்மறைச் சக்தியாகக் காணாமலிருக்க சக உயிர்களுடன் ஒரு நல்லுறவை உருவாக்கிக்கொள்ள. அதற்கும் மேலாக சகமனிதன் மீதான வன்முறையின்மைக்கான குறியீடாக.
ஆகவே கொல்லாமை என்பதும் ஒரு முழுமுற்றான நடைமுறை அல்ல. அது ஒரு குறியீட்டு ரீதியான விழுமியமே. கொல்லாமையை கடைப்பிடிப்பவன் நெஞ்சில் கருணை அதிகரிக்கும், சகமனிதன் மீதும் அக்கருணை உருவாகும் என்ற நம்பிக்கை. முதலில் மனிதனைக் கொல்லாதீர்கல். அடுத்து நெருக்கமான மிருகங்கலைக் கொல்லாதிருங்கள். அடுத்து சுயலாபத்துக்காக உயிர்களை கொல்லாதிருங்கள். அடுத்து நமக்கு தீங்கு அளிக்காத உயிர்களைக் கொல்லாதிருங்கந்- இவ்வாறு அந்த விழுமியம் வளர்கிறது. அதுவே அதன் இயல்பான வளர்ச்சி
அதன் அடித்தட்டில் இருந்து திருப்பிக் கேட்பது அபத்தம். செடிகளைக் கொல்கிறாயே அப்படியானால் உயிர்களை ஏன் கொல்லக்கூடாது? உயிர்களை கொல்கிறாயே ஏன் மனிதனைக்கொல்லக்கூடாது என்று தான் அது செல்லும்.
புலால் உண்ணும் வழக்கம் நாம் குரங்குகளாக இருந்தபோதே இருந்திருக்கலாம். சிம்பன்ஸிக்கள் கர்ப்பமாக இருக்கும்போது மாமிசம் உண்கின்றன. உபரியான புரோட்டீனுக்காக உண்ண ஆரம்பித்து எளிய உணவு, கனமான உணவு என்பதனால் நீண்டு சுவைக்கு அடிமையாகி இன்று வரை நீள்கிறது.
நான் அசைவம் உண்பவன் . அந்த சுவைக்காக மட்டுமே. அசைவம் உண்பவன் என்பதனால் அதை நியாயப்படுத்த மாட்டேன். அது மனிதனுக்கு இயல்பான,நல்ல உணவு அல்ல. அசாதாரண உடலுழைப்புள்ளவர்களுக்கு மலிவான புரதமாக அது இருக்கலாம். ஆனால் தேவையானதோ தவிர்க்க முடியாததோ அல்ல.
இன்றைய உடலுழைப்பற்ற சூழலில் மாமிச உணவு கெடுதலானது. ஏன் பலசமயம் விஷம் போன்றது. ஆனால் பழகியபின் விடுவது கடினம். அதன் பின்னணியில் உள்ள கொலை என்பது நியாயப்படுத்த முடியாத ஒன்றுதான்
அடுத்த ஐம்பது வருடங்களில் செயற்கை புரோட்டின் வந்து மாமிச உணவே இல்லாமல் ஆகிவிடலாம். நம்முடைய வாரிசுகள் ‘அடாடா மிருகங்களை கொன்று தின்ற கொடூரர்களா நம் முன்னோர்’ என எண்ணலாம். இன்று நாம் நம் முன்னோர் இழைத்த சாதிக்கொடுமைகளை அறிந்து அதிர்வது போல!
வர்த்தமானர் முதல் காந்தி,நாராயணகுரு வரை கொல்லாமையை ஏன் சொன்னார்கள் என்றால் அது கருணைக்கான பயிற்சி என்பதனால்தான். ஒன்றில் இருந்து ஒன்றாக வன்முறையை கைவிடுவதற்கான பயணம் என்பதனால்தான்.
அது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் என் நாவின் பலவீனத்தால், என் ஆளுமையின் ஆழமின்மையால், என்னுடைய சிறுமையால் நான் அசைவன்
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்
அந்த உயிர்களிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம்
ஜெ