அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களின் நீலம் மனநிலையை மாற்றும் எந்த உரையாடலும் வேண்டாம் என்ற நிலையில்தான் இருந்தேன். ஆனாலும் இந்த காஷ்மீர் பற்றி இராணுவ அவலங்களை பற்றி கடிதத்தை கண்டே இந்த கடிதம்.
எனக்கு சாதாரணமாகவே ஒரு கட்டுகோப்பான இயக்கங்கள் மீது ஒரு தனி மரியாதை உண்டு. அது கம்யூனிசமானாலும் ஆர்எஸ்எஸ் ஆனாலும் சரி. அதுவே இராணுவம் என்றால் சற்று அதிக்கப்படியான மரியாதைதான். அவற்றின் அங்கத்தினர்கள் சாமான்ய மனிதர்களின் உந்துதள்களை மீறிய வாழ்வை வாழ்வதனாலேயே அவர்களுக்கு சற்று சலுகைகள் தேவை என்பதே என் எண்ணம். அதிலும் இராணுவம் போன்ற தன உயிரை பணயம் வைக்கும் தனிமனித சுதந்திரங்களுக்கு அப்பால் உட்கட்டமைப்பு கொண்ட ஒரு இயக்கத்தின் மீது அதிகமான மரியாதைதான். அதனால் அவர்கள் சாமானியர்கள் போல் குற்றங்கள் புரிவதில்லையா என்று கேள்வி அபத்தமானது. உண்டு. எல்லா மனிதர்களை போல் அவர்களும் குற்றம் புரிகிறார்கள். ஆனால் எல்லா வகையிலும் சுதந்திரத்தை அனுபவிக்கும் எல்லாவிதங்களிலும் தன் மன அழுத்தங்களை இலகுவாக்கக்கூடிய சாந்தியங்க்களை கொண்ட வாழ்வில் வாழ்ந்துகொண்டு இக்கட்டான சூழலில் வாழ்பவர்களை விமர்சிக்ககூடாது. இராணுவத்தினரையும் சாமான்யர்களை சமன் சட்ட நிலையில் நிறுத்துவது உடன்பாடில்லை.
இங்கு இராணுவத்தை ஒரு இயக்கமாக பார்க்கிறோம். உடனே ஒரு தனி நிகழ்வை சுட்டிக்காட்டி அதை பொது படுத்துதல் ஏற்புடையதல்ல. சங்கடமான மன அழுத்தங்கொண்ட சூழலில் உயிரை பணயம் வைக்கும் வேளையில் ஈடுபடுவோரை சாமான்யனுக்குறிய சட்டங்கள் வழியே தண்டிக்க சொல்வது அபத்தத்தின் உச்சம்.
என்னத்தான் நினைக்கிறார்கள் இவர்கள்? இராணுவத்தை கலைத்துவிடலாம் என்றா? இல்லை எல்லா இராணுவ வீரரையும் புத்தர்களாக மாற்ற வேண்டும் என்றா?
என்னை நோக்கி ஒரு கூட்டம் கல்லெறிகிறது. நான் என் வேலை நிமித்தம் அங்கு நின்றேயாகவேண்டும். தடுத்துக்கொள்ள மட்டுமே வேண்டும். துரத்தக்கூட முடியாது. யாரோ எங்கோ தலைநகரில் குளிரறையில் அமர்ந்துக்கொண்டு என்னை ஒரு அடையாள எண் வழியாக மட்டுமே பார்த்துக்கொண்டு நான் என்ன செய்யவேண்டும் என்று கட்டளை இடுவார். நான் செய்ய வேண்டும். உண்மையில் இந்த நிலையின் கடுமையை உணர்ந்தால்தான் நம் பார்வை சரியாக இருக்கும். இங்கு என் நிலையை உணராத எனக்கு எதிராக கூச்சல் இடுபவர்களின் உயிரை குண்டுகளிலிருந்து காக்க நான் என் உயிரை பணயம் வைக்கவேண்டும். என்ன ஒரு நிலை இது? என் நிதர்சன வாழ்வில் என் உயிரை பணயம் வைக்கிறேன் என்பதை தினம் வரும் சடலங்களை பார்க்க பார்க்க என் உள்மனதை அது என்ன வேதனை கொடுக்கும்?
இங்கு நிதான உணர்வோடு சமன் பார்வையோடு வார்த்தைகளை முன்வைப்பதுபோல் பேசுபவர்கள் முன் ஜாக்கிரதையாக கல் எரியும் நபர்களை பற்றி பேசமாட்டார்கள் இல்லை ஒரு வரியில் கடந்துவிடுவார்கள். உண்மையில் அவர்கள் இவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. வேண்டுமாயின் அவர்கள் இவர்களை பயன்படுத்தலாம். அவ்வுளவே. அதுதான் நடக்கிறது. அதற்கு உதாரணம் இந்த வாக்கியம் “காஷ்மீரப் பிரச்சினையில், இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர மக்கள் தவிர, இரண்டு இராணுவங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன”. இந்திய இராணுவம் அரசியல் ரீதியாக எந்த வகையில் காஷ்மீர் பிரச்சனையில் ஈடுபடுகிறது? இந்திய இராணும் தன்னிச்சையாக காஷ்மீரில் அரசியல் செய்யமுடியுமா? இந்திய இராணுவத்திற்கு தனியான நம் அரசியல் சட்ட அமைப்புகளை மீறிய ஒரு செயக் திட்டம் உண்டா? பாகிஸ்தானின் இராணுவம் அரசியலில் நேரடியாக ஈடுபடுகிறது. வரலாற்றை பார்த்தாலே தெரியும். ஆனால் இந்திய இராணுவம் அப்படியா என்ன? இவர்கள் சமன் பார்வை கொண்டவர்களாம் அதனால் எல்லோரின் குற்றங்களையும் வெளியில் சொல்கிறார்களாம். இதுதான் அரசியல். இலட்ச ரூபாய் திருடினவனை பற்றி ஆர்ப்பாட்டம் செய்தால் பத்து ரூபாய் திருடியவனை பற்றி பேசி எல்லா திருடர்களையும் பற்றி பேசுங்கள் என்று சொல்வது. இந்திய இராணுவத்தை காஷ்மீரில் இருந்து வெளியேற்றினால் என்ன நடக்கும்? இங்கு எதிரி ஒரு மறைமுக விளையாட்டை யுத்தத்தை நடத்துகிறார்கள். நாம் என்ன செய்வது? நாம் பாகிஸ்தானில் உள்கிளர்ச்சிகளை தூண்டுகிறோமா? அது ஒரு பாகிஸ்தானிய பார்வை. நீங்கள் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு முழுமையாக கொடுத்தால் கூட வேறு பிரச்சனைகளை கிளப்புவார்கள்.
“கடந்த 20 ஆண்டுகளில் வலுவிழந்து வருகிறது.” என்ன வலுவிழந்துவிட்டது? அவர்கள் செய்யும் மற்றுமொரு அரசியல் இது. எதோ சிலர் மட்டுமே செய்கிறார்கள் என்று சொல்லுவது. ஏதோ சிலர் காஷ்மீரில் செய்தால் பொதுமை படுத்த கூடாது. ஆனால் அதுவே இந்திய பெருன்பான்மை மக்களில் ஏதோ சிலர் செய்தாலோ அல்லது இராணுவத்தில் உள்ள ஏதோ ஒரு சிலர் தவறு செய்தாலோ அதை போதுமைப்படுத்தவேண்டியது. வரலாற்றில் பெரும்பான்மை மக்கள் என்றுமே அராஜகத்தில் ஈடுபடுவதில்லை. ஒரு சிறு கூட்டம் மட்டுமே பிரிவினைவாதம் பேசும் அதை செயல்படுத்த துடிக்கும். அதற்கு மத மொழி இன என்று பல வர்ணங்களை பூசிக்கொள்ளும். உண்மையில் அவர்கள் பேசுவது அரசியலே அன்றி பேசும் பொருளான மதமோ மொழியோ இன்ன பிறவோ கிடையாது. அவர்கள் நாடுவது ஆட்சியை பிடிப்பது. பிடிக்கமுடியாவிட்டால் தன் எதிராளியை நிம்மதியிழக்க செய்வது கவனத்தை திசைதிருப்புவது செயளிழக்கசெய்வது. இவர்கள் சொல்லும் சொற்கள் – எதிர் குரல் என்று ஒன்று உண்டு அதற்கு ஒரு இடம் உண்டு. அவர்களுக்கு நாம் எதிர் குரல் கொடுத்தால் அடுப்படைவாதம். நாம் செய்வதிற்கு அவர்கள் எதிர்குரல் கொடுத்தல் அது ஜனநாயகம்.
அடுத்த கேலிக்கூத்து இது “கடந்த 20 ஆண்டுகளில், அரசின் திட்டங்களினால், கஷ்மீர சென்றடைந்த பொருளாதார முன்னேற்றம் ஒரு முக்கிய காரணம். அவரக்ளைப் பெரிது படுத்தி, ஒரு முக்கியத்துவம் கொடுப்பது, நாம் அவர்களுக்குத் தரும் ஒரு மிகப் பெரும் மறு வாழ்வு.” உண்மை சாம தான என்ற அடிப்படையில் பிரச்சனை செய்பவர்களை சிலபல பொருளாதார உதவிகள் செய்கிறது இந்திய அரசு. ஆனால் அவர்களின் மறு வாழ்வு மட்டும் பெரிதாக பார்க்கபடுவதற்கு என்ன காரணம். ஒரு அரசு எல்லா தரப்பினரின் மறுவாழ்விற்கும் தானே உழைக்கிறது, இன்றளவில் ஊடகங்களில் பெருமளவு சேதமடைந்த ஜம்மு பகுதியை பற்றி எவரும் பெரிதாக கண்டுகொண்டதாக தெரியவில்லை. ஏன்?
இந்த முழு கடிதமே ஒரு அரசியல் பார்வை. அதை கடைசி வரிகளில் மிகத்தேளிவாக உரைத்திருக்கிறார். “உத்ராக்கண்ட் பேரிடரில், குஜராத் முதல்வர் தனியாளாகச் சென்று 15000 மக்களைக் காப்பாற்றினார் என்று மட்டும் தான் செய்திகள் வர முடியும்.“ ஏனெனில் இந்த வரியில் இருந்துதான் பிற வாக்கியங்களுக்கும் அர்த்தங்கள் கிடைக்கின்றன.
அன்புடன்
திருச்சி வே விஜயகிருஷ்ணன்