‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 30

பகுதி பத்து: 1. வழி 

யது, குரோத்ஸு, சத்வதர், விருஷ்ணி, யுதாஜித் என நீளும் குருதிவழியில் பிருஷ்ணியின் குலத்தில் ஸ்வபால்கரின் மைந்தனாகப் பிறந்தவன் நான். பிருஷ்ணிகுல மூத்தோன். என்னை அக்ரூரன் என்று அழைத்தார் எந்தை. ஆவோட்டும் கோலெடுக்கவோ அம்புடன் வில்லெடுக்கவோ என்னை அனுப்பவில்லை. நூலெடுத்து நாவலர் அருகமைய ஆணையிட்டார்.

எந்தையின் பன்னிரு மைந்தரில் நானே இளையோன். கற்பதெல்லாம் கற்றபின் என் மூத்தோர் பன்னிருவருக்கும் முற்றறிந்த அமைச்சனாக அமர்ந்தேன். நெறிவழுவாது எவர் நெஞ்சும் கனலாது குலம் காத்து நின்றேன். ஆகுகரின் புதல்வி சுதானுவை அறத்துணைவியென கைப்பிடித்தேன். ஆயன் என் குடி வாழ தேவகன் உபதேவகன் என இருமைந்தரையும் அடைந்தேன். என் இல்லத்தில் ஆ நிறைந்தது. என் சொல்லெல்லாம் சீர் விளைந்தது. என்னை ஆயர்குலத்து ஆசிரியன் என்றார்கள். என் சொல்லே நெறியென்று என் குலத்தோர் ஏற்றார்கள்.

மதுராபுரி ஆள்பவனின் மாண்பின்மை கண்டு அவனுக்கு நூல் ஒன்றை அனுப்பினேன். அவன் அதை உணராமை கண்டு கோல் ஒன்றை அனுப்பினேன். பின்னர் சினந்து குருதித் துளிகொண்ட வாள் ஒன்றை அனுப்பினேன். என் குலத்தோர் பன்னிருவரை யமுனைக்கரையில் சேர்த்து கம்சனையும் அவன் குலத்தோர் அனைவரையும் விலக்கி வைத்தேன். ”கோல் துறந்து வாளெடுங்கள். நம் குலம் மேல் விழுந்த குருதிப்பழி துடைத்து மேலெழுங்கள்” என்று சொல் கொடுத்தேன். எங்கள் குலம் செறிந்த நதிக்கரையில் கோல்தூக்கி ஆட்டி “ஆம் ஆம் ஆம்” என்றனர் ஆயர்.

ஆயர்படை திரளுவதை கம்சன் அறிந்து தானுமொரு படைதிரட்டினான். மகதத்தின் படைகளுடன் மதுரையை காத்து நின்றான். “வாள்வேலி சூழ்ந்துள்ளது வீணன் பெருநகரம். விருஷ்ணிகள் அதன் வாசலையும் அணுகமுடியாது” என்றான் நந்தகோபன். “காட்டு நெருப்பணைக்க நாம் கண்ட வழியொன்றுண்டு. எரியுண்ண உணவின்றி எண்திசையும் மூடுங்கள்” என்றேன். ஆயர் படகேதும் அத்துறை அணையவில்லை. நெய் வழிகள் சகடங்கள் ஓய்ந்து நிலைத்தன. சுங்கத் துறைகளெங்கும் செல்வம் ஒழிந்தது.

“மகதம் இருக்க அவன் மனம் கொள்ள ஏதுமில்லை” என்று நந்தகோபன் சொன்னான். “முதலையின் வாய்க்குள் அமர்ந்த சிறுகுருவி அவன். அதன் ஊன் வாயை அஞ்சி நாம் காத்திருக்கிறோம். பசியின்றி வாய்திறந்து அது இருக்கும் வரைதான் குருவி அங்கிருக்கும்” என்றேன்.

“மூத்தோரே, முடிவின்றி காத்திருத்தல் எங்கள் வாள்களில் துருசேர்க்கிறது. கம்சனின் கொலைவாளால் குழவிகள் இறந்ததுமே வாள்கொண்டு நாம் சென்று நின்றிருந்தோம் என்றால் வானவர்க்கு உகந்த வாழ்க்கை கொண்டிருப்போம். அறம்பிழைத்த அம்மண்ணில் அங்கம் சிதறி வீழ்ந்திருந்தோம் என்றாலும் நம் இளமைந்தர் முன் தலைதூக்கி நின்றிருப்போம். இன்று வாளாவிருக்கிறோம். வீணரென பழிகொண்டோம். இனியும் பொறுத்திருந்தால் அச்சமே நம் இயல்பாகும். ஆண்மையற்றோர் ஆயர்குலத்தோர் என்று நூலுரைக்கும். ஒருபோதும் அழியாத பேர்நிலைக்கும்” என்று நந்தன் சினந்தான்.

“மன்றில் பேசும் மொழியேதும் நில்லாது மண்ணாளும் விளையாட்டில்” என்றேன். “நாம் ஆயர்குடிகள். இன்று நிலம் வென்று நாடாகி நகர் நிறுவி முடிகொண்டிருக்கிறோம். இனி வாள் செல்லும் வழியொன்றே நம் கால் தேரவேண்டும். விருஷ்ணிகளே, பிருஷ்ணிகளே, போஜர்களே, கோபர்களே கேளுங்கள். வெற்றி ஒன்றே அறத்தின் தெய்வங்கள் விரும்பும் கொடையாகும். அறம் வீற்றிருக்கும் கோயில்முன் குருதி வழிய வீழ்பவன் விண்ணுலகை அடைகிறான். அங்கே வெற்றிகொண்ட உதிரவாளை வைப்பவனோ விண்ணுலகை ஆள்கிறான்.”

“காத்திருப்போம், அது ஒன்றே இன்று நம் வழி. மகதம் ஒரு மாபெரும் யானை. இப்பாரதத்தின் காடெல்லாம் மேய்ந்தாலும் அதன் பசி அடங்காது. அது நெடுநாள் காத்திருக்காது” என்றேன். நெடுமூச்சுடன் “அங்கே கோட்டைமேல் காற்றில் துடிதுடிப்பது குங்குமக் கொடிகள் அல்ல. என் குலத்து குழந்தைகளின் குருதி” என்றான் நந்தகோபன். “மூத்தோரே, அச்சிந்தை ஒன்றே என்னை அனல்மேல் அமர்த்தியிருக்கிறது. துயில விடாமால் துரத்துகிறது. கண் நிறைந்த மைந்தன் வந்தபின்னரும் கை நிறைந்து அவனை தழுவ விடாமல் செய்கிறது” என்றான். “அவன் கொழுங்குருதி என் கைகளில் விழாமல் நான் கண்துஞ்ச மாட்டேன். அந்நகரின் தெருக்களில் வீணர் நெஞ்சுபிளந்து கிடப்பதைக் காணாமல் என் சிதையில் எரி ஏறாது.”

“ஆம், அந்நாள் வரும், உறுதி” என்றேன். ஆயர் குடிகள் அன்று என் சொல்லில் அகம் முழுதாக அமையாமலேயே சென்றார்கள். இளையோர் சிலர் திரும்புகையில் வாளை உருவி மண்ணை ஓங்கி வெட்டி வெறி தீர்ப்பதைக் கண்டேன். நான் கடந்து செல்கையில் ஒருவன் “வெளியே குருதியை காணவேண்டுமென்றால் நம் உடலுக்குள்ளும் குருதி நிறைந்திருக்கவேண்டும்” என்றான். புன்னகையுடன் திரும்பி “மைந்தா, என் உடல்குருதி வற்றி விட்டது உண்மையே. நெஞ்சகத்தில் நிறைந்த குருதி வெம்மையுடனேயே இருக்கிறது. அதை நீ காண்பாய்” என்றேன்.

அவ்வேளையும் வந்தது. மகதத்துக்கு அழைக்கப்பட்ட கம்சனை மாமன்னர் ஜராசந்தர் மந்தண அறை சேர்த்து கடுஞ்சொல் சொன்னார் என்று அறிந்தேன். கப்பம் தவறிவிட்டிருந்தது. மகதப்படைகள் மதுரையில் நிற்பதற்குரிய ஒப்புதல்பணமும் நின்றுவிட்டிருந்தது. “என் குலத்தோர் என்னை ஏற்பதில்லை. என் நகருக்கு எவர் படகும் வருவதில்லை” என்றான் கம்சன். “அவர்களை படைகொண்டு பணியச்செய். அவர்களின் படகுகளை வென்று அழியச்செய்” என்று ஜராசந்தர் ஆணையிட்டார்.

“பேரரசே, என் குலம் காடெங்கும் பரவி கன்று மேய்ப்போர். அவர்களை வெல்ல அவர் இருக்கும் அளவுக்கே ஆள்கொண்ட படைதேவை. ஆயிரம் காடுகளை அவற்றைச்சூழ்ந்த மலைகளை எப்படி வளைக்கும் என் சிறுநகர் சேர்ந்த காவலர் படை? என் நகரைக் கைவிட்டு நான் சென்றால் அதை போஜனோ கோபனோ கொண்டால் நான் என்ன செய்வேன்?” என்று கம்சன் சொன்னான். “தோணிகளில் நெய் என் துறைகடந்தே செல்கிறது. அவற்றில் எல்லாம் அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடிபறக்கிறது. படகுகளைத் தாக்குகிறேன். பீஷ்மருடன் களம்நின்று போர்செய்ய தாங்கள் சித்தமென்றால்.”

சினந்து தொடைதட்டி கூவி எழுந்தார் ஜராசந்தர் “இனி ஏதும் நானறியவேண்டாம். உன் குலம் கூட்டி பொருள்கொண்டு என் கடன் தீர்த்து வா. இல்லையேல் என் படைகள் நகர் நீங்கி இங்கு மீளும். உன் விதியை நீ நடத்து. நான் செய்வதற்கொன்றும் இல்லை” என்றார். சோர்ந்தும் சினந்தும் தொடைதட்டி கூவியும் தலைகுனிந்து அமர்ந்தும் மதுரை மீண்டான் கம்சன். நானறிந்தேன், எனக்கு அழைப்புவரும் தருணம் அது என்று. அவன் தூதுவந்ததும் என் குடி சூழ்ந்து வருவேன் என்று செய்தி அனுப்பினேன்.

பன்னிரு குலத்தையும் அழைத்து சொல்கேட்டு மதுராபுரிக்கு நானே சென்றேன். கோட்டை வாயிலில் கொடியெழ வாழ்த்தி தேர்கொண்டு வந்து ஊர்தொழச் செய்து அரண்மனை அணையச்செய்தான். இருக்கை அளித்து இருகை கூப்பி நின்றான். “என்ன வேண்டும் சொல்க!” என்றேன். “செய்பிழை பொறுத்து என்னை சேர்த்தளுள வேண்டும் என் குலம்” என்றான். “இயல்வதேதும் இயற்றுவேன். என்ன தண்டம் என்றாலும் என் தலையெனக் கொள்வேன்” என்றான்.

“பன்னிருகுலமும் உன்மேல் சினந்தன. குருதியின் பூச்சுடன் குலத்தோர் அனைவரும் வாள் ஒன்றை உன் முன் வைத்ததும் அறிவாய்” என்றேன். “அந்த வாளுடன் குலங்கள் வந்து என் நகர் புகட்டும். அவர் முன் என் முடி அகற்றி தலை காட்டி நிற்கின்றேன். அவர் சொல்லும் சொல்லெதற்கும் என் கோல் தாழ்த்துகின்றேன்” என்றான். ”இந்நகரும் இதன் முடியும் அன்னைவழியில் நந்தன் மைந்தனுக்கு உரியவை. அவன் அணைவான், நீ அரியணை விட்டு நீங்கு. அது ஒன்றே ஆயர் குலத்தோர் அறிந்துள நீதி” என்றேன்.

“அதுவே சொல் எனில் அவ்வண்ணமே ஆகுக” என்றான் கம்சன். “வேனில் முதிர்ந்தது. வில் வணங்கும் விழவணைந்தது. என் நகர்கொள்ளும் விழவுகூட நம் குலத்தோர் வரவேண்டும். நந்தன் இளமைந்தனும் அவன் மூத்தோனும் வரட்டும். அவன் முன் என் மணிமுடி வைத்து பிழைசொல்லி அகல்வேன்” என்றான். “அவ்வண்ணமே ஆகுக” என்றுரைத்து மீண்டேன். அவன் சொற்களுக்குள் நெளிந்த நாகங்களைக் கண்டேன். என்னை அவன் வாயில் வரை வந்து வணங்கி விடைதந்தான்.

“ஐயமே வேண்டாம், அவன் சூழ்வதென்ன என்று அறிவோம்” என்றனர் ஆயர். “பொய்யன், நெறியேதும் இல்லா வீணன். நெஞ்சறிந்து ஏய்க்கும் சழக்கன். குருதி படிந்த கையன்” என்று கூவினர். ”ஆம், நானும் அதையே உணர்கிறேன். வில்வணக்க விழா என்பது இளையோர் கூடி எடுப்பது. அவன் நம் கரியோனை அங்கே கொண்டு வரவழைக்க வழிவகுக்கிறான்” என்றேன்.

நந்தன் தலைதாழ்த்தி குரல்தாழ்த்தி “வரவழைத்து என்ன செய்வான்?” என்றான். நான் கசந்து “எளியது அவன் திட்டம். படைகொண்டோ பழிகொண்டோ நம் பாலகனை அவன் கொல்ல முடியாது. ஆனால் நிகழலாகாதது நிகழலாம். நாகம் வந்து தீண்டலாம். நிலைமறந்த யானை வந்து மோதலாம். நஞ்சுகொண்ட உணவு கை சேரலாம்” என்றேன். “மறைந்தான் நம் மைந்தன் என்றால் பின் அவன் மண்ணுக்கு உரிமை கொண்டோர் எவருண்டு?” “ஆம் ஆம், அதுவே அவன் எண்ணம். அது நிகழலாகாது” என்றனர் ஆயர்.

நந்தன் நெடுமூச்செறிந்து “வில்விழவில் கரியோனை கம்சன் அறைகூவலாகுமோ?” என்றான். “ஆம், அதையும் அவன் செய்யலாம். ஆயர் நெறிகள் அறிவுறுத்தும் வழி அதுவே. கம்சன் முன் நம் மைந்தன் களம் நிற்கவேண்டும். வென்றபின்னரே நிலம் கோரவேண்டும்” என்றேன். சினந்தெழுந்த ஆயர் மூத்தார் “கண்ணனோ இளம் சிறுவன். கம்சன் தோள் பெருத்த மல்லன். இதென்ன நெறி?” என்று கூவ “ஆம் ஆம்” என்றது ஆயர் அவை. “ஆம், நம் மைந்தன் நாள் கோர முடியும். அவன் தோள் பெற்று வந்து களம் நிற்கும் நாள் வரைக்கும் கம்சன் அவ்வரியணை அமர முடியும். தாய்மாமன் என்போன் தந்தைக்கு நிகரென்று நம் தொல்நெறிகள் அவனுக்கு துணைநிற்கும்” என்றேன்.

“ஒன்றே வழி இதற்கு. கம்சனின் அடைக்கலத்தை நாம் ஏற்கவில்லை என்று சொல்விடுப்போம். அவன் முடியொழிந்து நகர் கொடியவிழ்த்து செல்லவேண்டும் என்போம். அரியணை நீங்கி வெறும் ஆயனாக வந்து நம் முன் அமரட்டும், அதன் பின்னே ஆகட்டும் சொல்லெல்லாம் என்போம்” என்றேன். “அவ்வண்ணமே ஆகுக” என்றது அவை. நந்தன் கைதூக்கி “நான் ஒன்று சொல்லவேண்டும் மூத்தோரே. என் மைந்தன் மதுரை புகட்டும். கம்சனை களம் காணட்டும்” என்றான். மூச்சொலியும் இதழ்பிரியும் ஒலியும் எஞ்சிய அவையை விழிகளால் சுற்றி நோக்கி மீண்டு “நீ சொல்வதென்ன என்று சூழ்ந்துளாயா?” என்றேன். “ஆம், சொல் எண்ணி பொருள் எண்ணி காலம் கருதி இதை உரைக்கின்றேன். கரியோன் களம் காணட்டும்” என்றான்.

நூறு குரல்கள் எழுந்து மன்றாடின. கைவீசி எழுந்து நந்தன் முன்நின்று கூவினர். நான் அவன் கண்களில் கண் தைத்து அமர்ந்திருந்தேன். வைர ஒளிகொண்ட விழிகளை நோக்கி “உன் நெஞ்சம் உறுதிகொண்டிருக்கிறது என்றால் அவ்வண்ணமே ஆகுக” என்றேன். “ஆம், இது ஊழின் வழி. வருவதெல்லாம் வகுத்த வல்லோனின் நெறி” என்றான் நந்தன். “ஆயர்களே, மைந்தன் மேல் தந்தைக்கு மட்டுமே உரிமை. கரியோன் இவன் குடியோன். இவன் சொல் நிற்கும் விதியுள்ளோன். அன்னைக்கோ ஆயர்குடிக்கோ தெய்வங்களுக்கோ ஆளல்ல அவன் என்றே நம் தொல்நெறி சொல்லும்” என்றேன். மெல்லிய கலைந்த குரலில் “அவ்வண்ணமே ஆகுக” என்றது ஆயர்ப்பெருஞ்சபை.

அன்றழிந்தது என் துயில். அகம் நிறைந்தது அழியாத குளிரச்சம். என்ன செய்துவிட்டேன், ஏது நெறியாயினும் என்ன? கன்னங்கருமணி. அன்னையின் அருமணி. இன்னும் அவன் குழவி. இன்னிசைக் குழலன். அரக்க வடிவோன், அகமொன்றிலாதான், இரக்கமென்றறியான், இழிவில் எல்லையில்லான் அவன் முன் களம் நிற்கும் ஆற்றலுண்டா மைந்தனுக்கு? ஆனால் சொன்ன சொல் தவற என்னகம் அறியாது. மதுராவுக்குச் சென்று மந்தணம் அறிவித்தேன். “மைந்தனை மதுரா சேர்த்தல் என்பணி” என்றேன். அக்கணம் அவுணன் சிறுவிழிகளில் மின்னிச் சென்ற கூர்முனை வேலின் கொலையொளி கண்டேன். நெஞ்சுநடுங்கி என் அகம் சோர்ந்தேன். நெறியென ஒன்றுண்டேல் நிலைபெறச்செய்யட்டும் விண்ணாளும் தெய்வங்கள் என்றேன். குலம் வாழ வந்த குழவியர் ஆயிரம் குருதியில் வீழ்கையில் எங்குசென்றன அவை என்றது மண் இருந்தாளும் என் அன்னைக் குலதெய்வம்.

வில்விழவெழும் சொல்கொண்டு வந்தனர் சூதர். கொடியெழுந்தது கோட்டை முகத்தில். படகேறி முழங்கிச்சென்றது பெருமுரசம். விழவெனில் மகிழும் இளையோர் எழுந்தனர். வாயில்கள் தோறும் வண்ணக்கோலங்கள் விரிந்தன. விழவுக்கு வில்லேந்த மைந்தரை பயிற்றுவித்தனர் மூத்தோர். மதுராபுரியின் பெயர் ஒன்றே மாதர் இதழ்தோறும் விளங்கக் கண்டேன். நாள் எண்ணி பொழுதெண்ணி தாள் தளர்ந்து என் இல்லத்தில் இருந்தேன். வாள் கொண்ட விழியர் மைந்தர் தோள் தழுவிச்செல்லக் கண்டு நெடுமூச்செறிந்தேன். வேளை வந்தது விழவெழ. நாளை அவர் நகர்புகவேண்டும் என்றார் ஆயர். சால்வை எடுத்தணிந்து வளை கோலை கைகொண்டு நடந்தேன். என் தோளில் குடிகொண்டன இவ்வுலகறிந்த சுமையனைத்தும்.

விருந்தாவனம் வந்தேன். யமுனையில் படகணைந்து துறை ஏறி நந்தன் இல்லம் தேரும் போது நீராடி ஈரத்துளி சூடிச்சென்ற பெண்களை வழியில் கண்டேன். முகம் நிறைந்த மகிழ்வுடன் “கோவிந்தனை மதுரைக்கு கொண்டு செல்வோர் நீங்கள்தானா? அவன் நகர்வென்று கொடியூன்றி முடிகொண்டபின்னர் நாங்கள் அவன் குடியென்று ஆவோமா?” என்றனர். ஓடிவந்து என் ஆடைபற்றிய அழகி ஒருத்தி “அவன் கம்சனின் தோள் பிளந்து ஆயர்குடிகொண்ட பழிதீர்த்த பின்னர் இங்கு மீள்வான் அல்லவா?” என்றாள். பேதையர். குருதியின் வழியறியா குதலை மொழிச் சிறுமியர். அவன் தந்தையும் இப்பெண்களின் தரத்தவன்தானா? தன் மைந்தன் சென்று சேரும் களமென்ன என்று அவன் அறிந்திருக்கின்றானா?

ஊர் நடுவே உயர்ந்து நின்ற நந்தனின் இல்லம் அடைந்தேன். என்னை அவன் மனைமகள் வரவேற்றாள். கால்கழுவி அமரச்செய்தாள். குளிர்மோரும் கனியும் கொண்டுவந்து வைத்தாள். நந்தன் வர நேரமாகும் என்றாள். நுரையணிந்த பால்குடம்போல் நிறைவெழுந்த முகம் கொண்டோள். இனியேதும் எய்தவுண்டோ இவ்வுலகில் என்னும் அன்னையரின் ஆணவத்தை அணியெனப் பூண்டோள். “அன்னையே உன் மகனை அழைத்துச்செல்ல வந்தவன் நான். இன்னும் இளஞ்சிறுவன். அவன் எதிர்கொள்ளும் மன்னனோ பெருவலியன். நான் ஏதும் செய்யவொண்ணேன். நெறியேதோ அதில் நிற்பேன். என் மேல் உன் சொல்விழலாகாது’ என்றேன்.

யசோதை புன்னகைத்தாள். “கண்ணன் அங்கு வந்து கம்சனின் சிரம் கொள்வான். அவன் ஆற்றவொண்ணாத செயலேதும் இல்லை இப்புவிமீதில்” என்றாள். “என் மகன் என வந்தான். இம்மடியில் தவழ்ந்தான். இப்புவி எண்ணும் கதையுளான். என்றும் அழியா சொல்லுளான்.” ஈதென்ன பித்து என்றெண்ணி மயங்கினேன். ஒருமைந்தன் ஒருகுலத்தை பேதையராக ஆக்கலெங்ஙனம் என்று எண்ணினேன். பேரழகன் என்றாலும் பெருவீரன் என்றாலும் பெற்றெடுத்த பிள்ளையைத்தான் பெண்கள் வியப்பார்கள். இவனை அன்னையரெல்லாம் நயக்கும் நெறியென்ன என்று குழம்பினேன். நானறிந்த வாழ்வெல்லாம் பொருளிழந்து நின்றது. தேனைச்சூழும் எறும்பைப்போல் கோபர் குடியே அவனைச் சூழ்ந்திருந்தது.

“கண்ணனைக் கண்டாயா மூத்தவனே?” என்றாள் யசோதை. வெண்ணிறத்தான் “கானகத்தின் உள்ளே குழலோசை கேட்டேன். ஆநிரைகள் எல்லாம் அத்திசை செல்லக்கண்டேன்” என்றான். நான் எழுந்து “நான் சென்று அவனை கூட்டி வருகின்றேன்” என்று சொல்லி எழுந்தேன். “நற்சொற்கள் சில சொல்வேன். நந்தன் வந்தபின்னே நால்வரும் புறப்படுவோம்” என்றேன்.

வாடாத பேரெழிலே விருந்தாவனம் என்று கண்டேன். இலையுதிர்க்கும் மரமேதும் அங்கில்லை. கிளை செறிந்து காற்றிலாடும் பசுமையே மரங்களென நின்றது. கொன்றையும் வேங்கையும் கோங்கும் கடம்பும் புன்னையும் ஞாழலும் மருதமும் மாவும் பூத்துச் செறிந்து நிற்கக் கண்டேன். வேர்விரல்கள் எழுந்த மண். கொடிநரம்புகள் படர்ந்த பச்சை இருள். மணம் சுமந்த காற்றின் அலை. மலர் உதிர்ந்த பாதையில் நடந்தேன். என்மேல் மலருதிர்க்கும் தேன்துளிகள் மழையெனச் சொட்டக் குளிர்ந்தேன்.

வேராய் தடியாய் கிளையாய் இலையாய் தளிராய் மலராய் நிறைந்த மண். சாறாய் தேனாய் ஊறிய நீர். காற்றாய் எழுந்த மணம். அனலாய் எழுந்த நிறம். வானாய் நிறைந்த நடனம். ஆக்களும் மரங்களும் புட்களும் பூச்சிகளும் புழுக்களும் எனச்சூழ்ந்த உயிர்ப்பெருக்கு. உயிரென வந்த இறைப்பெருக்கு. இறையின் சாரமென எழுந்த இசைப்பெருக்கு. கானகத்தில் பிறந்தேன். கன்றோட்டி வாழ்ந்தேன். இன்றொருகணமே காடாகி நின்றதென்ன என்று கண்களால் அறிந்தேன்.

விருந்தாவனத்தின் நெற்றிப்பொட்டென எழுந்த சிறுமேட்டில் நின்றது நீலக்கடம்பு. வனத்தின் வேந்தன் நானே என. வந்து என் தாள்பணிந்து செல்க என. வாழ்த்துரைக்க நீட்டிய கிளைகள். வண்ண மலர் கொழுத்த கரங்கள். காலடியில் மலர்மெத்தையிட்டு மைந்தனை அமரச்செய்திருந்தது. அவன் கையில் அமர்ந்த குழல் கனிந்தூறியது. இசையெழுந்து கானகம் நனைந்து சொட்டியது. முதற் சொல் உதிர்க்கும் மகவின் செங்கனிவாய் என தேன் துளித்து நின்றது. முத்தம் முத்தம் முத்தமென்றே அங்குள ஒவ்வொன்றும் இதழ்குவித்து நின்றன. இங்கிலை என்றே இமைகூட்டி நின்றன. எங்குளோம் என்றே விரல் மலர்ந்திருந்தன. ஆயரே, என் குருதி வரியே, கானகம் இசைகேட்பதை கனவிலும் கண்டதில்லை. தேனகம் புகுந்த ஈபோல் காலமும் கருத்தழியக் கேட்டதில்லை.

யாழென்றேயான கருவண்டு, குழலென்றேயான குயில். இசையென்றே ஆகி அங்கிருந்தான் இளையோன். பண்ணொன்றே ஆகி பரந்திருந்தது வானம். பாழென்றே ஆகி நிறைந்திருந்தது காலம். பூவென்றே ஆகி சூழ்ந்திருந்தது காடு. அங்கே நானென்ற ஒன்றிலாது நின்றிருந்தேன். அக்கணம் நானறிந்தேன் நம் உடலாகி வந்தது ஒரு சுரமென்று. வானத்து கங்கையென வழிந்தோடும் பெரும்பெருக்கில் சுழித்த ஒரு சுருதியில் தெறித்த ஒரு சிறு துளியென அங்கிருந்தேன். குழல் மீது நடமிட்டன இப்புடவியைத் தொட்டாடும் கைகள். துளைமோதி எழுந்தது காலத்தை ஆளும் மூச்சு. பெரும்புயலில் கொடித்துணிபோல் நெளிந்தன மலைமுடிகள். அலையெழுந்து அமைந்தது திசைவரை நீண்ட நிலம். தொடுவான் சுவர் விளிம்பில் வந்தமர்ந்தது ஒரு நீலமணிப்பறவை.

பெருங்கருணை ஒரு விரலாய் மீட்டும் பேரியாழ் இப்புடவி. கண்ணீர் துளிகனிந்து நிற்கும் கருவிழி. காமம் எரியும் கன்னங்கள். காதல் சுழித்த செவ்வுதடு. ஒன்றையொன்று தழுவி உறங்கின மண்புழுக்கள். பின்னி ஒன்றாயின புற்றுறைந்த பாம்புகள். வேர்கவ்வி கிளைபிணைத்து வேறில்லை எனநின்றன மரங்கள். மொட்டு அலகு தொட்டு குலவின பறவைகள். பட்டு நூலால் பிணைந்தன பூச்சிகள். நீரும் நிலமும் ஆகி நின்றது உரு. மேலே காற்றும் ஒளியும் வானும் ஒன்றாகி நின்றது அரு. நடுவே கைக்குழல் கொண்டு ககனம் அளந்தது திரு தழுவும் தரு.

பெருவெள்ளமெனச் சுழித்தோடிய என் காலடி நிலம் எழுந்து வானாகி வானவெளியின் கால்வைத்தோடி குனிந்து நிலம் சுழன்று என் கால்நோக்கி வரக்கண்டேன். நாலாயிரம் கோடி காதம் நான்கு நொடியில் கடந்து செல்லும் கனவின் கடுவிரைவு. நடுவே வாய் விரித்த அகழியைத் தாவி மறுபக்கம் சென்று அதைவிடப்பெரிய அகழியைக் கண்டு அதைத்தாவி மற்றொரு தாவலுக்கு அதையே விசையாக்கி தாவித்தாவி கடந்து கடந்து சென்று ஒருகணத்தில் காலுணர்ந்த வெறுமையில் அடியிலா விழுதலை அறிந்து அகம் நடுங்கி அமைந்தேன். இதழ்போல இறகுபோல நான் சென்றிறங்கிய கரும்பாறை மேட்டைச் சூழ்ந்து கருவானம் விரிந்திருக்க ஒளிவிண்மீன்கள் செறிந்திருக்கக் கண்டேன். விண்மீன்கள் அல்ல விரித்த படம்கொண்ட பெருநாக விழிகள் அவை என்று அறிந்தேன். இமையாவிழிகள் இல்லாத காலத்தில் என்றென்றும் என அமைந்திருந்த எல்லையற்ற வெளி. அங்கே நானும் இரு விழியானேன். இருத்தலின்றி இருந்தேன்.

என்னை பின் உணர்ந்தேன். விருந்தாவனத்தில் குழல்கேட்டு நின்றேன். என் கால்கள் கனத்து காரிரும்புச் சிலையென்றானேன். மாமழை வழியும் மலைமுடி போல குளிர்கொண்டு நின்றேன். விழிமணி மட்டும் உயிர்த்துளி கொள்ள என்னைச்சூழ்ந்து நிகழ்வதைக் கண்டேன். தணல் குழம்பு கொந்தளிக்கும் தரையாழம். மேலே கைபின்னி தசைதெறிக்க மல்லிட்ட மரவேர்கள். விழியின்மை என்னுமொரு வரம் கொண்டு பெரும்பசி என்னுமொரு பழி கொண்டு ஒன்றை ஒன்று தின்றன கோடானுகோடி புழுக்கள். பெருங்களமொன்றின் போர்த்தருணம் ஒன்றை ஒருகணமென்று கண்டேன். கையோங்கிச் சினந்த மரங்கள். அவற்றை தடிசுற்றி கிளைசுற்றி இறுக்கும் கொடிகள். ஒன்றின்மேல் ஒன்றேறிய செடிகள். பின்னி உயிர் நெரிக்கும் உயிர்கள்.

ஒவ்வொன்றும் பிறிதொன்றை உண்ணக்கண்டேன். பறவைகள் புழுக்களை உண்டன. பறவைகளை விலங்குகள் உண்டன. விலங்குகளை விலங்குகள் உண்டன. விலங்குகளை மானுடர் உண்டனர். அனைவரையும் புழுக்கள் உண்டன. உணவு உணவு என வெறித்த முடிவிலா வாய்களின் வெளி இப்புடவி என்றறிந்தேன். அவற்றில் பசியென்றும் ருசியென்றும் கொலைவெறியென்றும் கோரநினைவென்றும் எஞ்சுவது ஒன்றே என உணர்ந்தேன். குருதி வழிய இறந்தன உடல்கள். அவற்றில் அச்சமென்றும் ஆசையென்றும் துயரென்றும் தனிமையென்றும் கெஞ்சுவதும் அதுவே என்று அறிந்தேன்.கொன்றுண்டது அன்னம். கொலையுண்டது அன்னம். உண்டு வளர்ந்தது அன்னம். உணவாகி வளர்ந்தது அன்னம். அன்னமயம் இப்பிரபஞ்சம். அன்னமே பரம்பொருள்.

கொலைவெறி கொண்டு குழைந்தது குழல். வாள்முனையெனச் சுழன்றது.வில்லென வளைந்து தொடுத்தது. விஷமென கோப்பை நிறைந்து காத்திருந்தது. வஞ்சமென விழியில் ஒளிர்ந்தது. வைரமென நெஞ்சில் கனத்தது. வெல்லும் குழல். வலியுணரா குழல். கொல்லும் குழல். கருணையிலா குழல். கண்ணன் குழல். கருஞ்சுழியெனச் விழிக்கும் கரியோன் கைக்குழல். அழிக்கும் குழல். அனைத்தையும் உண்டு சிரிக்கும் தழல்.

வேட்டைவரிப்புலியின் கால்களில் அமைந்த மென்மை. சுழலும் மலைக்கழுகின் சிறகசையும் ஒலியின்மை. மதயானைத் துதிக்கையின் குழைவு. நஞ்சோடும் நாகஉடலின் வழிவு. காத்திருந்து கொத்தும் கொக்கின் கழுத்து வளைவு. தவளை நாவின் விரைவு. வாய் விரித்து விழுங்க வரும் மீனின் வாலசைவு. யமுனை வெள்ளத்தின் ஒளிச் சுழிப்பு. காடிறங்கும் வனநெருப்பின் ஓசைப்பெருக்கு.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

குருதிப்பெருவெள்ளம். பசுங்குருதிப்பெருவெள்ளம். காலப்பெருவெள்ளம். ஆம், கண்ணீர்ப்பெருவெள்ளம். குருதிப்பெருமழை. செங்குருதிப்பெருமழை. வெளிநிறைக்கும் மழை. ஆம், வலிப்பெருமழை. கொன்று தோலுரிக்கப்பட்ட கன்றின் உடலென வானம். உரித்து பரப்பப்பட்ட தோலென பூமி. இரக்கமற்றது இசை. இரக்கமேயற்றவன் அதிலாடும் இளையோன்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஅறிவியலும் அறிவியக்கமும்- தமிழ், சம்ஸ்கிருதம்
அடுத்த கட்டுரைபடித்துத் தீராத கதை